பொருளியலின் பல்வேறுபட்ட சிக்கல்களுக்கு முடிவு காண உகந்த அளவடைதல் (Optimisation) சிறந்த கருவியாகப் பயன்படுகிறது. இதன் பயன்களைப் புரிந்துகொள்ள உகந்த அளவடைதலின் கோட்பாடுகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாதது. சிக்கனமான முறையில் செயற்படுவது உகந்த அளவடைவதற்கு வழிகாட்டியாக உள்ளது. பொருளியலில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாகக் கணக்கியல் கோட்பாடான ‘உகந்த அளவடைதல்’ அதன் பல்வேறு பிரிவுகளிலும் புகுத்தப்பட்டுள்ளது. உகந்த அளவடைதல் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளின் அளவையோ அதன் மதிப்பையோ மிகுதியாக்குவது அல்லது உயர்த்துவது ஆகும். இது பொருளியலின் பலவகையான கருத்துக்களுக்குத் துணையாக இருப்பதால், இதனைப் பொதுவான முறையில் விளக்குவது கடினமானது. உகந்த அளவடைதல் என்பது நடைமுறைப் பொருளியலில் ஒரு குறிப்பிட்ட அணுகுமுறை. இது பலவகையான பொருள் வளங்களைக் கொண்டு மனிதனின் பல தரப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றும் வழிகளை எடுத்துக்காட்டும். பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மனித நடவடிக்கைகளைப் பற்றியே பொருளியல் ஆராய்கிறது. பொருள் வளங்கள் பற்றாக்குறையாக இருப்பதால் மக்கள் அதனைச் சிக்கனமான முறையில் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே, உகந்த அளவடைதல் பல்வேறுபட்ட பயன்களில் பயன்படுத்தக் கூடிய, கிடைத்தற்கரிய பொருள் வளங்களையும், பொருள்கள், பணிகள், உற்பத்திக் காரணிகள் ஆகியவற்றைச் சமுதாயம் தன் தேவைகளைச் சமாளிக்கும் வகையிலும் பெரும்பயன் அடையும் வகையிலும் செயற்படுவதாகும். வளங்கள் கிடைத்தற்கருமையாகவும் மனிதனின் விருப்பங்கள் கணக்கிலடங்காதவையாகவும் இருப்பதால் ஒவ்வொருவகும் எல்லாப் பொருள்களையும் அடையமுடிவதில்லை. இதன் காரணமாகச் சிக்கல் பல உருவாகின்றன. எடுத்துக்காட்டாக, மின்சாரப் பற்றாக்குறை, வேலையின்மை, வீட்டு நெருக்கடி ஆகிய பொருளியல் இன்னல்களுக்குச் சிறந்த முறையில் முடிவு காண வேண்டியுள்ளது. திறமையான பொருளியல் முடிவுகள் (Economic Decisions) என்பது பின்வரும் வினாக்களின் விடையிலும் உகந்த அளவடைதலிலும் அடங்கியுள்ளது. பொருளியல் வல்லுநர் சாமுவேல்சன் பொருளியலின் அடிப்படையில் பொருளியல் முடிவுகள் எடுக்க வேண்டும் என்கிறார். அதாவது, (1) எந்தப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும்? (2) எம்முறையில் அவை உற்பத்தி செய்யப்பட வேண்டும்? (3) எவ்வளவு பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும்? (4) உற்பத்தியான பொருள்கள் எவ்வாறு மாற்றம் செய்யப்பட வேண்டும்? (5) உற்பத்திப் பொருள்களை யாருக்கு, எவ்வளவு பகிர்ந்து அளிக்க வேண்டும்? (6) எப்படிப் பொருள்களின் உற்பத்தியை உகந்த அளவில் வைத்து வேலைவாய்ப்பை நழுவ விடாமல் வைத்திருக்க வேண்டும்? பொருள் வளங்கள் திறமைக் கண்ணோட்டத்தில் உயர் உகந்த முறையில் ஒதுக்கப்படுவதற்குச் சரியான பொருள்களைத், தேவையான அளவு சிறந்த முறையில் உற்பத்தி செய்ய வேண்டும். மேலும், உற்பத்திக் காரணிகளைப் பயன்படுத்தி உகந்த அளவில் உற்பத்தி செய்வதுடன், உற்பத்திப் பொருள்களின் பங்கீட்டில் ஏற்படும் மாற்றங்களினால் சில பாதக நிலைக்குத் தள்ளப்பட்டுச் சிலர் சாதக நிலையை அடையாத சூழ்நிலை உருவாக வேண்டும். இது தொழில் நுணுக்க அறிவு, இயற்கை வளங்கள், சமுதாயத்தில் உள்ள உழைப்பு வளம் ஆகியவற்றையும் சமுதாய மதிப்புகளான பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றையும் சார்ந்துள்ளது. சில காலங்களில் சமுதாய மதிப்புகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அமையாமல் இருக்கலாம். மேற்கூறப்பட்ட விளக்கங்களிலிருந்து உகந்த அளவு உச்ச அளவெனக் கருதப்படக்கூடாது. பல சூழ்நிலைகளில் உச்ச அளவை எட்டுவது மட்டுமே பொருளியல் நடவடிக்கைகளில் அடிப்படை நோக்கமாக இருப்பதில்லை. புகழ், பெயர், பாதுகாப்பு, விருப்பம், உடல்நலம், ஏனையோரின் நலத்தில் அக்கறை ஆகியவையும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தனி மனிதன் அல்லது ஒரு குடும்பத்திற்கு நேரம், பணம் மற்றும் பல பொருள்கள் கிடைத்தலருமை வளங்களாக இருக்கின்றமையால், கடற்கரையில் உல்லாசமாக விடுமுறையைக் கழிப்பது என்பது உழைப்பின் மூலம் கிடைக்கும் பயன்களைத் தியாகம் செய்வதாகும். தொழில் நிறுவனத்திற்குப் புதுக் கருவியை நிறுவுவது என்பது புது நிருவாகக் கட்டடத்திற்குப் பதிலாக அமைவதாக இருக்கலாம். ஒரு நாடு போர்க்கருவிகளைப் பெருக்குவது என்பது இறந்த கல்வியமைப்பைக் கைவிடுவதாக இருக்கலாம். எல்லாச் சமுதாயத்திலும் எல்லாக் காலத்திலும் கிடைத்தலருமை காரணமாக மனித நடவடிக்கைகளில் தனிப்பட்ட சிக்கன முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது வரலாற்று நிகழ்ச்சிகளால் தெரியவருகின்றது. நுகர்வோர் பொருள்களை வாங்கும்பொழுது நிலவுகிற அங்காடி விலையில் கையிருப்புப் பணத்திற்கேற்பத் தங்கள் தேவையினை மாற்றிக் கொள்வர். உச்ச அளவு பயன்பாட்டைத் தருகிற அளவு பொருளை நுகர்ச்சிக்காகப் பயன்படுத்துவதில்லை. உகந்த அளவடைதல் என்ற கோட்பாட்டின்படி, பொருளின் நுகர்ச்சியின் மூலம் கிடைக்கிற இறுதி நிலைப் பயன்பாடும் அதன் விலையும் சமமாக இருக்கிற அளவுப் பொருளை வாங்குவர். பொருளின் விற்பனையில் உகந்த அளவு என்பது அதன் தேவையும் அளிப்பும் சமமாக உள்ள நிலையாகக் கருதப்படுகிறது. என்.மா. துணை நூல்கள் Chiang, A.C., Fundamental Methods of Mathematical Economics, Mc–Graw Hill Limited, London, 1974. John E. Maher, What is Economics? John Wiley and Sons, New York, 1969. Norman F. Keiser, Introductory Economics, John Wiley and Sons, London, 1963. William, A., Kovisto, Principles and Problems of Modern Economics, John Wiley and Sons, New Delhi, 1957.