இயற்பியல் நிகழ்வுகளை ஆய்வு செய்யும் போது, பல வகையான செயல் முறைகள் நிகழவோ, சூழ்நிலைகள் தோன்றவோ வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனாலும், சில சமயங்களில் உண்மையாகவே நிகழ்கின்ற செயல் முறைகளுக்கும், தோன்றுகின்ற சூழ்நிலைகளுக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை இருப்பதைக் காண முடிகிறது. அவற்றோடு தொடர்புள்ள ஏதாவது ஓர் இயற்பியல் அளவு சிறும நிலை அடைவதே அந்த ஒற்றுமையாகும். ஆகவே, ஏதாவது ஓர் இயற்பியல் அளவு சிறுமமாகிற வகையில் நிகழ்கின்ற செயல் முறைகளே உண்மையில் நிகழ முடியும் என்றோ, அத்தகைய சூழ்நிலைகளே உண்மையில் தோன்ற முடியும் என்றோ, சில சமயங்களில் காட்ட முடிகிறது. இந்தச் செயல்முறைகளுக்கும், சூழ்நிலைகளுக்கும் சிறும அளவு கோட்பாடுகள் (minimal principles) என்று பெயர். தொடக்க கொள்கைகளிலிருந்து நேரடியாக அணுகினால், தீர்வு காண முடியாதவையாகக் காட்சி அளிக்கிற சில குறிப்பிட்ட சிக்கல்களைச் சிறும அளவு கோட்பாட்டின் மூலம் தீர்த்து விட முடிறெது என்னும் வகையில், இக்கோட்பாடு வலிமை பெற்று விளங்குகிறது. எந்த ஓர் எந்திரவியல் அமைப்பும், திடச் சம நிலையில் இருப்பதற்கு அதன் நிலை ஆற்றல் சிறுமமாக இருக்க வேண்டும் என்னும் நிபந்தனையை இக்கோட்பாட்டுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஹாமில்டன் தத்துவம், சிறும செயல் தத்துவம் ஆகியவற்றையும் சிறும அளவு கோட்பாட்டுடன் தொடர்புள்ள, பழங்கொள்கை எந்திரவியலின் பொதுத் தோற்றங்களாக எடுத்துக் காட்டலாம். எந்திரவியலைத் தவிர, இயற்பியலின் பிற கிளைகளிலும் சிறும அளவுக் கோட்பாடுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒளியியலில் ஃபெர்மாட் கொள்கை இரு புள்ளிகளுக்கு இடையில் பயண நேரம் சிறுமமாக இருக்கக் கூடிய ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தே ஒளி பாய்கிறது என்று கூறுகிறது. வெப்ப இயக்கவியலிலும், சிறும அளவுக் கோட்பாடுகள் விரிவான பயன்பாடு கொண்டுள்ளன. —கே. என். ராமச்சந்திரன்