கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசை ஆண்ட முதல் மரபாகும். அதனால் அப்பாரசீகப் பேரரசை அக்குமீனியப் பேரரசு (Achaemean Dynasty) என்றும் கூறுவர். அவர்தம் ஆட்சிக் காலத்தில் பாரசீகப் பேரரசு நைல் ஆற்றிலிருந்து தான்யூப் ஆறு வரை பரவியிருந்தது. அக்குமினியப் பேரரசை நிலை நாட்டியவர் மாமன்னர் சைரசு (Cyrus, the Great) என்பவர். இவர் கி.மு. 559-529 வரை ஆட்சி செய்தார். அக்குமெனசு என்பவர் சைரசின் மூதாதையருள் ஒருவர். சைரசின் மகன் இரண்டாம் காம்பைசசு (Campyses II) கி.மு. 529 முதல் 522 வரை ஆண்டவர். இவர் எகிப்து நாட்டைத் தம் பேரரசுடன் இணைத்தார். இவருக்குப் பின் முதலாம் தேரியசு (Darius I) என்பவர் பேரரசரானார். பெர்சிபாலிசு (Persepolis) என்னும் நகரத்தை உருவாக்கியவர் தேரியசேயாவார். இவரது காலத்தில்தான் பாரசீகப் பேரரசுக்கும் கிரீசு நாட்டிற்கும் இடையே நீண்டதொரு போர் மூண்டது. தேரியசின் மகன் செருசசு (Xerxes) கி.மு. 486 முதல் 465 வரை அரசாண்டவர். இவர்தாம் தருமபைலே (Thermopylae) போரில் வெற்றி பெற்று ஆதென்சு நகரைத் தீக்கிரையாக்கியவர். மூன்றாம் தேரியசு கி.மு. 336 முதல் 330 வரை அரசாண்டவர். இவரே அக்குமீனிய மரபின் இறுதி அரசர். இவரை மகா அலெக்சாந்தர் தோற்கடித்தார்.