அத்தான் பாட்டு என்பது அத்தானை நையாண்டி செய்து பாடும் பாடல், அத்தை மகன் அத்தான் என்று அழைக்கப்படுகிறான். தமக்கையின் கணவனும் அவ்வாறு அழைக்கப்படுவதுண்டு. திருமண விழாக்களில் பாடப்படும் பாடல்களுள் அத்தான் பாட்டும் உண்டு. பெண்ணின் தங்கை முறையினர் மாப்பிள்ளையை நையாண்டி செய்து பாடும்போது, “தஞ்சாவூர் மாப்பிள்ளை தாசில்தாருன்னு சொன்னாங்க தஞ்சாவூர் போயி பாத்தேன்–அவரு தவிலடிக்கக் கண்டேனே” என்று குறிப்பிடுவர். அத்தை மகன், அம்மான் மகன் உறவு மிக நெருக்கமானது. பெண்ணை மணம் செய்து கொள்வதில் இவர்களுக்கே முதல் உரிமை. இவர்களை அடிக்கடி ஏளனம் செய்து பாடுவதுண்டு. இத்தகைய உறவினை மானிடவியலாளர் கேலி உறவு (Joking relations) என்று குறிப்பிடுவர். “பூ! பூ! புளியம்பூ பொன்னத்தான் கொண்டைக்குத் தாழம்பூ” என்று பெண்கள் அத்தானை நையாண்டி செய்வது கிராமிய வழக்கம். புதுமாப்பிள்ளை மாமனார் வீட்டிற்கு விருந்துக்கு வரும்போது பெண்ணின் உடன் பிறந்தவர்கள் நையாண்டி செய்வர். “அத்தானே அத்தானே வாருங்கள் அமரிக்கையாய் உக்காருங்கள் ஆறுபணம் தாருங்கள் அக்காள் அழகைப் பாருங்கள்” என அத்தானின் ஆசைப் பார்வையை அம்பலமாக்குவர்.சு.சு.