முதன் முதலில் தயாரிக்கப்பட்ட செயற்கை நெகிழிப் பொருள் செல்லுலாய்டு (celluloid) ஆகும். இது செயற்கைத் தந்தம் அல்லது சைலோனைட் என்றும் குறிப்பிடப்படும். ஜெ. டபிள்யு. ஹயாத், ஐ.எஸ். ஹயாத் என்போரால் 1870ஆம் ஆண்டில் அமெரிக்காவில் செல்லுலாய்டு கண்டு பிடிக்கப் பட்டது. செல்லுலாய்டு என்பது அமெரிக்காலின் வணிகப் பெயராகும். இச்சேர்மம் செல்லுலோஸ் நைட்ரேட்டும், கற்பூரமும் கலந்த ஒருபடித்தான கூழ்மமாகும். இது விறைப்புத் தன்மை மிக்கது. இதன் அடர்த்தி 1.4. மிகவும் கடினமானது; பளபளப்பானது; சீரானது. மிகக் குறைந்த செலவில் இதைத் தயாரிக்கலாம். நீர், எண்ணெய், அமிலம் இவற்றால் செல்லுலாய்டு பாதிக்கப் படுவதில்லை. இதை எளிதில் கையாளலாம். பல நிறங்களிலும் பெறலாம். ஏறத் தாழ 200–220°F வரையில் பல வார்ப்புகளில் தயாரிக்கச் செல்லுலாய்டுகள் பயன் படுகின்றன. -70°F இல் இது பொடியாகும் தன்மையுடையது. அறை வெப்ப நிலையில் இதை ரம்பம் கொண்டு அறுக்கலாம்; துளையிடலாம்; நன்கு மெருகூட்டலாம். சூரிய ஒளி அல்லது 120°Fக்கு மேல் செல்லுலாய்டுகள் நிறமிழக்கின்றன. 365°Fக்கு மேல் சிதைவடைகின்றன. செல்லுலாய்டுகள் எளிதில் தீப்பிடிப்பதில்லை. எனவே, எளிதில் வெப்பத்தைச் சிதற அடிக்கக் கூடிய சேர்மங்களைச் செல்லுலாய்டு கொண்டு பாதுகாக்கலாம். தற்போது செல்லுலாய்டுகளுக்கு மாற்றாக, செயற்கைப் பல்லுறுப்பிகள் கண்டு பிடிக்கப் பட்டிருப்பினும், செல்லுலாய்டு 1970ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்துள்ளது. —கோ. கோவிந்தராஜு <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->