அல்–அக்காபா
al–akkāpā
சோர்டான் நாட்டின் துறைமுகப்பட்டணம்.
சோர்டான் நாட்டின் துறைமுகப்பட்டணம். சோர்டான் நாட்டுத் தென்மேற்கு முனையில் சோர்டான், இசுரேல், எகிப்து, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. அக்காபா விரிகுடாவின் நுழைவாயிலில் உள்ளது.
பொது மக்கள் பெரிதும் விரும்பும் குளிர்காலத்து வாழுமிடமான அல்–அக்காபா (Al–Aqabah) பாலை நிலத் தட்பவெப்ப நிலையைக் கொண்டது. இங்கு ஆண்டொன்றுக்கு 50 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. கோடை தட்பவெப்ப நிலையிலும் குளிர்காலத் தட்பவெப்ப நிலையிலும் ஏற்றத்தாழ்வுண்டு, அக்காபாவில் செடி கொடிகள் வளருவது அருமை; பாலை நிலப் பசுஞ்சோலைகள் உள்ள அக்காபா நகரில் பேரீச்ச மரங்கள் பல, கிணறுகளைச் சுற்றித் தென்படுகின்றன.
உரோமானிய ஆட்சிக் காலத்தில் பேரரசர் திரேசன் (Trajan), அக்காபாவை தெமாசுகசு (Damascus) நகருடனும் எகிப்துடனும் இணைத்தார். கி.பி. 634–இல் அராபிய வெற்றி ஏற்பட்ட காலத்தில், இங்குக் கிறித்தவப் பிசப்பு ஒருவர் ஆட்சி செய்தார். கி.பி. 1115-இல் அக்காபாவைச் சிலுவைப் போர் வீரர்கள் கைப்பற்றி இங்குக் கோட்டையொன்றையும் கட்டினர். ஆனால், இதைக் கி.பி. 1187–இல் சலாடின் மன்னர் மீண்டும் கைப்பற்றினார். கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் மெக்காவிற்கு வந்த பயணியர் தங்கிச் செல்லும் வழியில் அக்காபா அமைந்தது. முதல் உலகப் போரின் போது நேசப்படையினர் இந்நகரைக் கைப்பற்றினர். 1924 வரை இந்நகர் ஏசாசின் (Hejaz) ஒரு பகுதியாகவே இருந்து. பின்னர்ச் சோர்டானுக்குக் கொடையாக வழங்கப்பெற்றது. 1949–இல் இசுரேலுடன் போர் நிறுத்த எல்லைக்கோட்டிற்கு 5 கி.மீ. மேற்கில் அக்காபா இருந்தது.
அக்காபா விவிலிய நூலில் சாலமன் அரசரின் துறைமுகப் பட்டணமெனக் குறிப்பிடப்பெற்றுள்ளது. 1917–18–ஆம் ஆண்டுகளில் பாலத்தீன முன்னணிக்கு உதவும் வகையாகப் பிரிட்டிசுக் கப்பல்கள் அக்காபாவைப் பயன்படுத்திக் கொண்டன. 1930–ஆம் ஆண்டிலும், மீண்டும் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோதும் சோர்டானுக்குப் பொருள்களை அக்காபாவின் வழியாகவே அனுப்பினர். இசுரேல் உருவானபின் பொருள்கள் இலெபனானின் பேரூட்டு நகரிலிருந்து கரைவழியாகச் சோர்டான் சென்றடைகின்றன. 1952 இலிருந்து சோர்டான் அரசு அக்காபாவை வளர்க்கும் பொருட்டு அதற்காக ஒரு நிறுவனத்தையும் அமைத்துள்ளது. 1959–இல் அக்காபா துறைமுகத்திற்கும் சோர்டானின் தலைநகரான அம்மானுக்கும் (Amman) 336 கி.மீ. நீளப்பாதை அமைத்துள்ளார்கள். மேற்குறிப்பிடப்பட்ட வளர்ச்சிப் பணிகளால் இத்துறைமுகம் ஏற்றுமதி, இறக்குமதியில் சிறப்பிடம் பெற்றுள்ளது. 1967–இல் இசுரேலுடன் நடைபெற்ற போரின் விளைவாகச் சோர்டான் மத்திய தரைக் கடலுடன் கொண்ட தொடர்பு அறுபட்டு விட்டது. 1969–இல் மாபெருஞ் சேமிப்புக் கிடங்குகளைக் கட்டி முடித்துள்ளனர். சூயசுக் கால்வாய் மூடப்பட்டதாலும் இத்துறைமுகத்திற்கு வந்து போகும் பொருள்கள் குறைந்துள்ளன. மக்கள்தொகை 15,000 (1973 மதிப்பீடு).
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 837)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hhpgwe65/
தமிழ்“அல்–அக்காபா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hhpgwe65/APA
Oliyon Research. (2026). அல்–அக்காபா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hhpgwe65/MLA
"அல்–அக்காபா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hhpgwe65/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment