அல்பேனியா
alpēṉiyā
மலைவளம் நிறைந்த ஒரு சிறிய நாடு.
மலைவளம் நிறைந்த ஒரு சிறிய நாடு. ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பால்கன் முந்நீரகத்தைச் சேர்ந்தது. இது ஐரோப்பாவிலேயே மிகவும் ஏழ்மை நிலவும் நாடுகளுள் ஒன்றாகும். இரண்டாம் உலகப் போரிலிருந்து இது உருசியாவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு ஒரு பொதுவுடைமை நாடாக இருந்து வந்தது. 1961–ஆம் ஆண்டிலிருந்து இது உருசியாவுடன் தொடர்பை அறுத்துக்
அல்பேனியா
கொண்டு சீனாவுடன் தொடர்பு கொண்டுள்ளது. 400 ஆண்டுகளுக்கு மேலாக இது உதுமானியப் பேரரசின் கீழ் இருந்து வந்தது. 1912–இல் இந்நாடு தன்னாட்சி பெற்றது.
நாட்டின் ஒரே கட்சியான பொதுவுடைமைத் தொழிலாளர்கள் கட்சியே நாட்டை ஆள்கிறது. அரசு அலுவலர்கள் அனைவரும் கட்சி உறுப்பினர்களே. அரசுத் தலைமை ஆட்சிக் குழுவின் ஆணையின்படி இவர்கள் இயங்குகின்றனர். அல்பேனியாவின் (Al–bania) சட்டதிட்டங்கள் மக்கள் சட்ட மன்றத்தாலேயே வகுக்கப்படுகின்றன. மக்கள் நான்காண்டுக்கு ஒருமுறை 214 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அவ்வவைக்கு அனுப்புகின்றனர். கட்சி குறிப்பிடும் ஒரு பட்டியலிலிருந்து அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆண்டுக்கு ஒருமுறை ஒரு சில நாட்களே சட்டமன்றம் கூடி ஆட்சி மன்றக் குழுவின் செயல் திட்டங்களை ஏற்கும். ஆட்சி மன்றத்தின் தலைவரே நாட்டின் தலைவராவார். 18 வயது வந்த அனைவரும் வாக்குரிமை பெற்றுள்ளனர். அல்பேனியா 27 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அல்பேனியர், பேசும் மொழியினால் இருபெரும் பிரிவினராய்க் ‘கெகசு’ என்றும் ‘டோகசு’ என்றும் அழைக்கப்பெறுகின்றார். இவர்கள் இசுகூம்பன் ஆற்றின் வடக்குக் கரையிலும் தெற்குக் கரையிலும் வாழ்கின்றனர். கிரீசை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் சிறுபான்மை கிரேக்கர்கள் வாழ்கின்றனர். 11 நகரங்களின் ஒவ்வொன்றிலும் 15,000 மக்களுக்குமேல் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்க்கைத்தரம் மிகவும் தாழ்ந்த நிலையிலேயே உள்ளது. அல்பேனியக் குடியானவனொருவனின் மாத வருமானம் ஏறத்தாழ 320 உரூபாய் ஆகும். இந்நாட்டில் பலரும் தொளதொளவென்ற காற்சட்டையையும் வெள்ளைத் துருக்கித் தொப்பிகளையும் அணிகின்றனர். பெண்கள் பூவேலைப்பாடு நிறைந்த பாவாடைகளையும் மேலங்கிகளையும் அணிகிறார்கள்.
அல்பேனியா அரசு சமய நடவடிக்கைகளை எதிர்க்கிறது. 1967–இல் இது அனைத்துச் சமயச் சட்டங்களைப் பொருட்படுத்தாமல் அவற்றின் சொத்துகளையும் கைப்பற்றிக் கொண்டது. அப்படித் தடைவிதித்த போது 70 விழுக்காட்டு மக்கள் முகம்மதியர்களாகவும் மற்றவர்கள் கிறித்தவர்களாகவும் இருந்தனர். 1945–இல் அந்நாட்டின் கல்வியறிவு 30 விழுக்காடாக இருந்தது. இப்போது அவர்களுள் பெரும்பான்மையினர் கல்வியறிவு பெற்றிருக்கின்றனர். எல்லாக் குழந்தைகளும் கட்டாயமாக எட்டாண்டுகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். திரானா இந்நாட்டின் தலைநகரம். இங்கே ஒரு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
அல்பேனியாவை மலைகளே மூடியுள்ளன. அந்நாட்டின் ஆல்பசு மலை 2833 மீட்டர் உயரம் இருக்கின்றது. மிக உயர்ந்த மலைமுடி கோனாப்பு. இது 3007 மீட்டர் உயரமுள்ளது. ஏடியாட்டிரிக்குக் கடற்கரையோரமாகச் சமவெளி காணப்படுகிறது. நாட்டின் பரப்பில் முப்பது விழுக்காடு புதர்க் காடுகள் உள்ளன. இந்நாட்டு ஆறுகளுள் புயூனேவில் மட்டும் கப்பல்கள் செல்லும். நாட்டின் மழையளவு 100 முதல் 150 செ.மீ. ஆகும்.
மக்களுள் முக்கால் பங்கினர் வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர். பொதுவுடைமைக் கூட்டுறவுப் பண்ணைகள் நாட்டின் பரப்பில் 9/10 பாகம் உள்ளன. கோதுமையும் தானியங்களும் விளைபயிர்களாகும். இவற்றோடு பருத்தி, பீட், கரும்பு, புகையிலை ஆகியவற்றையும் பயிர் செய்கிறார்கள். கால்நடைகளான ஆடுமாடுகளையும் வளர்க்கிறார்கள்.
அல்பேனியச் சுரங்கங்களில் குரோமைட்டும் செம்பும் வெட்டியெடுக்கிறார்கள். எண்ணெய் வயல்களும் உள்ளன. கிடைக்கும் பொருள்கள் ஆசுபால்டு, நிலக்கரி, நாப்தா, இலிக்னைட்டு, இரும்பு, நிக்கல் ஆகியவை.
இந்நாட்டில் 3200 கிலோ மீட்டர் நீளத்திற்குச் சாலைகள் அமைந்திருக்கின்றன. ஏறத்தாழ 104 கி.மீ நீளத்திற்கு இருப்புப்பாதைத் தொடர் உள்ளது. அல்பேனியாலின் முக்கியத் துறைமுகம் தூரசு, தந்தி, தொலைபேசி அமைப்பு வசதிகளும் உள்ளன. திரானியில் ஒரு தொலைக்காட்சி நிலையம் உள்ளது.
கிறித்து பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் அல்பேனியா இலுரியன் அரசாங்கத்தின்கீழ் இருந்தது. கி.மு. 167–இல் உரோமானியர்கள் அல்பேனியாவை வென்றார்கள். பின்னர்க் கி.பி. 300–1000 வரை அல்பேனியாவின்மீது கோத்துகள், பல்கேரியர்கள், இசுலாவுகள், நார்மானியர் போன்றோர் படையெடுத்தனர். கி.பி. 1014–இலிருந்து 1204 வரையுள்ள இடைக் காலத்தில் இது பைசாண்டியப் (Byzantine) பேரரசின் கீழ் இருந்துவந்தது. பின்னர்க் கி.பி. 1300–ஆம் ஆண்டளவில் இது சைபீரியப் பேரரசின் கீழ் இருந்தது. அதன்பின்னர் 1400–ஆம் ஆண்டளவில் அல்பேனிய
அல்பேனியாவின் தலைநகர் திரானே நாட்டின் வீரன் இசுகந்தர் பெக்கு துருக்கியர்களை எதிர்த்தான். அவன் கி.பி. 1468–இல் இறந்த பின்னர்த் துருக்கியர்கள் அந்நாட்டை வென்றனர். அதன் பிறகு 400 ஆண்டுகளுக்கு மேலாக அது உதுமானியப் பேரரசின்கீழ் இருந்து வந்தது. இந்த நேரத்தில் இசுலாம் சமயம் பரவியது. இந்நாடு முதல் பால்கன் போரின்போது 1912–இல் தன்னுரிமை பெற்றது. இதனைச் செருமனி நாட்டு இளவரசர் வில்லியம் சில மாதங்கள் ஆட்சி புரிந்தார். இந்நாடு 1920 வரையிலும் இத்தாலிக்கு அடங்கியிருந்தது. அகமது பைக் சோகு 1925–இல் ஆட்சியைக் கைப்பற்றி இந்நாட்டை ஒரு குடியரசு நாடாக அறிவித்துத் தாம் அக்குடியரரின் தலைவராகவும் மன்னராகவும் 1939 வரை வல்லாட்சி புரிந்தார்.
இரண்டாம் உலகப் போரில் இந்நாடு முதலில் இத்தாலி நாட்டிற்கும் பின்னர்ச் செருமானிய நாட்டிற்கும் உட்பட்டு இருந்தது. இந்நாட்டில் 1944–இல் உள்நாட்டுப்போர் மூண்டது. இப்போரில் பொதுவுடைமைத் தளபதி என்வர்கீர் வெற்றி பெற்றார். அவர் 1944–இல் நாட்டைப் பொதுவுடைமை ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தார். இப்போரில் யூகோசுலாவியர் உதவினர். பின்னர் 1948–இல் உருசியாவுக்கும் யூகோசுலாவியாவுக்கும் பிளவு ஏற்பட்ட போது இவர்கள் உருசியாவையே ஆதரித்தனர்.
அல்பேனியர்கள் 1960-ஆம் ஆண்டளவில் சீனாவை ஆதரிக்கத் தொடங்கினார்கள். அல்பேனியப் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் அவையில் எடுத்துக்கொண்ட முயற்சிகள்தாம், சீனாவுக்கு ஐக்கிய நாடுகள் அவையில் 1971–இல் இடம் கிடைக்க உதவின.
பின்னர் 1970க்குப் பிந்திய ஆண்டுகளில் அல்பேனியாவுக்கும் சீனாவுக்கும் இருந்த உறவுகள் நலியத் தொடங்கிப் பின் 1978–இல் சீனா அல்பேனியாவுக்கு அளித்த அனைத்து உதவிகளையும் நிறுத்திவிட்டது.
அல்பேனியாவின் பரப்பு 28748 ச.கி.மீ. 1982–ஆம் ஆண்டுப்படி மக்கள் தொகை 27,50,000 ஆகும்.த.கோ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 849)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hhbhdhwr/
தமிழ்“அல்பேனியா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hhbhdhwr/APA
Oliyon Research. (2026). அல்பேனியா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hhbhdhwr/MLA
"அல்பேனியா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hhbhdhwr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment