கணுக்காலிகள் தொகுதியில் உள்ள அரக்னிடா வகுப்பைச் சேர்ந்த இந்த வரிசை மட்டுமே கடல் வாழ் விலங்கைத் தன்னுள் கொண்டுள்ளது. செவுள்களைப் பெற்றுள்ளமையும், மால்பீஜியன் நுண் குழாய்கள் இல்லாமையும், பிற அரக்னிடா உயிரிகளினின்றும் இவற்றை வேறுபடுத்துகின்றன. சிஃபோசுரா உயிரிகள் முதன் முதலில் டிரையாசிக் காலத்தில் தோன்றின; பின் ஜூராசிக் காலத்தில், பெருமளவிலும், கிரிட்டேசியஸ், ஒலிகோசின் காலங்களில் பரவலாகவும் காணப்பட்டன. ஆனால் மீசோசோயிக், டெர்சியரிக் காலங்களில் காணப்படவில்லை. இவ்வரிசையைச் சார்ந்த லிமுலஸ் அல்லது அரச நண்டு என்ற உயிரி மட்டுமே இன்று உலகில் காணப்படுகிறது. இதைச் சார்ந்த பிற உயிரிகள் அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டன. எனவேதான் லிமுலசை உயிருள்ள புதை படிவம் (living fossil) எனக் குறிப்பிடுகிறார்கள். இது மிகப் பெரிய நண்டின் உருவத்தையும், குதிரை லாட வடிவத்தையும் கொண்டுள்ளமையால், இதற்கு அரச நண்டு, குதிரை லாட நண்டு என்ற பெயர்கள் உண்டு. இது ஒரு தொன்மையான கடல் வாழ் உயிரியாகும். இது வட அட்லாண்டிக் கடற்கரை, மெக்சிகோ, ஜப்பான், கொரியா, ஃபிலிப்பைன்ஸ், இந்தியா முதலான நாடுகளின் கடற்கரைகளில் காணப்படுகிறது. கடற்கரைக்கு அருகில் மணலில் குழி பறித்து வாழும் இது, ஏறக் குறைய 60 செ.மீ. வளரக் கூடிய ஓர் ஊன் உண்ணியாகும். உருவத்தில் தேளையும், எட்டுக்கால் பூச்சியையும் ஒத்திருக்கும். உடலில் முன்னுடல் (prosoma), பின்னுடல் (opisthosoma) என இரு பகுதிகளைக் கொண்டது. உடலின் முதுகுப் பக்கத்தில் குவிந்த, குதிரை லாட வடிவில் மேல் ஓடு (carapace) காணப்படுகிறது. அவ்வோட்டின் நடுவில் ஒரு பள்ளமும், மருங்கில் இரு பள்ளங்களும் உள்ளன. ஓரிணையான எளிய கண்களும், ஓரிணையான கூட்டுக் கண்களும், முன்னுடலின் மேற்புறத்தில் உள்ளன. குழிவான வயிற்றுப் பகுதியில் வாயும், ஓரிணையான இடுக்கிக் கால்களும், நான்கு இணையான கவட்டுக் கால்களும், தட்டையான அடிப் பகுதிகளையுடைய ஓரிணையான இடுக்கியற்ற கால்களும் உள்ளன. இக்கால்கள் மணலில் குழி பறிக்கவும், மணலில் உள்ள புழுக்களைத் தோண்டி எடுக்கவும் பயன்படுகின்றன. உடலின் பின்பகுதி ஒன்பது கண்டங்களைக் கொண்டது. இதை நடுவுடல், கடையுடல் என்று பிரிக்கலாம். நடுவுடல் 6 கண்டங்களைக் கொண்டு, முன் பகுதியுடன் அசையும் வண்ணம் இணைந்துள்ளது. இதன் வயிற்றுப் புறத்தில் ஓரிணையான இள உறுப்பு மூடியும், புத்தக வடிவிலான ஐந்து இணைச் செவுள்களும் உள்ளன. மூச்சு விடுதல் இச்செவுள்கள் மூலம் நடைபெறும். மருங்கில் அசையக் கூடிய ஆறு இணை முள்கள் உள்ளன. கடையுடல் கண்டங்கள் அற்றது. அதன் பின் முனையில் நீண்ட வால் முள் (telson) காணப்படும். மருங்கு முள்கள் பாதுகாப்புக்கும், பின் முனை முள்கள் உயிரி மேலும், கீழுமாக விழும் போது, சமமாக்கிக் கொள்வதற்கும், முன்னோக்கிக் கடல் நீரில் நீந்துவதற்கும் பயன்படுகின்றன. உடலினுள் காணப்படும் சிவப்புச் சுரப்பிகள் கழிவு நீக்க உறுப்புகளாகச் செயல்படுகின்றன. ஆண் லிமுலஸ், பெண் லிமுலசை விடச் சிறியதாக இருக்கும். பெண் லிமுலஸ் இளவேனிற் காலங்களில் கடற்கரைப் பகுதிகளில் மணலைப் பறித்து முட்டைகளிடும். பொறித்த முட்டைகளிலிருந்து டிரைலோபைட் இள உயிரிகள் (larvae) வெளி வருகின்றன. பின்னர், அவை வளர் உருமாற்றமடைந்து முதிர் உயிரி ஆகின்றன. லிமுலஸ் கோழிகளுக்கும், பன்றிகளுக்கும் உணவாகப் பயன்படும். —ம.அ. சுப்பிரமணியன்