நெட்டைக் காலிப் பறவை
neṭṭaik kālip paṟavai
வீட்டுக் குருவி அளவுள்ள நெட்டைக் காலிப் பறவை கரும் பழுப்பு நிறமுடையது.
வீட்டுக் குருவி அளவுள்ள நெட்டைக் காலிப் பறவை கரும் பழுப்பு நிறமுடையது. இதன் மார்பு பழுப்புப் பட்டைகளால் ஆனது. அலகு வலிமையற்றதும், வால் நீளமாகவும் காணப் படும். உடல் வெள்ளை இறகுகளால் போர்த்தப் பட்டிருக்கிறது. இணை இணையாகவும், தனித்தும், வெற்று நிலங்களில் சுற்றித் திரிகிறது. இந்தியாவிற்குப் பனிக் காலத்தில், நெட்டைக் காலிப் பறவை வலசை வருகிறது. ஒவ்வொன்றும், உருவ அமைப்பிலும், பழக்க வழக்கங்களிலும் ஒரே மாதிரியாகக் காணப் படும். இந்தியா முழுவதிலும், பாகிஸ்தானிலும், இலங்கையிலும், மியான்மரிலும் இது பரவியிருக்கிறது. நிறங்களின் அடிப்படையில் மூன்று இனங்களாக இதைப் பிரிக்கலாம். நான்காம் இனமொன்று பனிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகிறது. வறள் நிலங்களிலேயே வாழும் இது, பொட்டல் காடுகளிலிருந்து 2 கி.மீ. உயரம் வரை கூடச் செல்லும். உழப் பட்ட நிலங்களிலும், கால் நடை மேய்க்கின்ற இடங்களிலும், புல் நிறைந்த மலை அடிவாரங்களிலும் இப்பறவை காணப் படும். வண்டுகளையும், சிறு பூச்சிகளையும் பெருமளவில் உண்ணும். பூச்சிகளைப் பிடிக்கும் போது, வாலை மேலும், கீழும், வாலாட்டிப் பறவையைப் போல ஆட்டிக் கொண்டே இருக்கும். பறக்கும் போது, ஆண் பறவை மெதுவாக ‘ட்சீப், ட்சீப்’ எனக் கத்திக் கொண்டே இருக்கும். இனப் பெருக்கக் காலத்தில், ஆண் பறவை வானில் பறந்து பாடிக் கொண்டே நிலத்தை நோக்கி வரும். பிப்ரவரி– அக்டோபர், மார்ச்–ஜுன் காலங்களில், இனப் பெருக்கம் செய்யும். புல், வேர்த் தூவி போன்றவற்றைக் கொண்டு கிண்ண வடிவில் கூடமைக்கும். மஞ்சளும், பழுப்பு கலந்த வெண்மை நிறத்தையும், பழுப்புப் புள்ளிகளையும் கொண்ட 3 அல்லது 4 முட்டைகளை இடுகிறது. ஆண், பெண், பறவைகள் கூடு கட்டுவதிலும், இளம் பறவைகளைப் பேணுவதிலும் பெரும் கவனம் செலுத்துகின்றன.
மர நெட்டைக் காலிப் பறவை (Anthus trivialis tririalis) . இதன் உடலமைப்பு 16.5 செ.மீ. அளவும், இறகு 7–9 செ.மீ. பின் கால் நகம் 7.6 செ.மீ. அளவும் உடையன. இதன் அலகு கறுப்பு கலந்த பழுப்பு நிறமானது. கால்கள் இறைச்சி நிறம் உடையன. மேல் பகுதி மண் நிறமாகப் பெரிய கறுப்புப் பட்டைகளைக் கொண்டுள்ளது. வெளி நாட்டிலிருந்து பனிக் காலத்தில், இப்பறவை இந்தியாவிற்கு வலசை வருகிறது. வட மேற்கு இந்தியாவிலும், காஷ்மீரிலும் இனப் பெருக்கம் செய்கிறது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> இந்திய மர நெட்டைக் காலி. இதன் உடல் 15–16.5 செ.மீ. அளவும், இறகு 8.5–8.9 செ.மீ. அளவும், வால் 6.9 செ.மீ அளவும், கணுக்கால் 2.1 செ.மீ அளவும் உடையன. உறுதியாகவும், அடியில் சதைப் பற்றுடனும் உள்ளது. தலையிலும், கழுத்திலும், பழுப்பு கலந்த கறுப்பு வரிகள் உண்டு. வயிற்றுப் புறம் வெண்மையானது; இப்பறவை, மலைகளில் வசித்து வருகிறது. காடுகளுக்கு அருகில் மரங்களுக்கு அடியே கூட்டங் கூட்டமாகப் புல் வெளிகளில் மேயும். இடர் வரும் போது, மரங்களுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும். இமய மலைப் பகுதியில், இது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறது.
நீலகிரி நெட்டைக்காலி (Anthus nilghiriensis). இதன் உடல் 17.8 செ.மீ. அளவும், இறகு 7.8 செ.மீ அளவும், வால் 5–15 செ.மீ அளவும், கணுக்கால் 2.50 செ.மீ. அளவும் உடையன. இதன் கீழ்த் தாடை கறுப்பாகவும், நிறப் படலம் ஆழ்ந்த பழுப்பு நிறமாகவும் காணப் படும். கால்களும், பாதங்களும், சதை நிறைந்தவை. மலைகளிலும், புல் வெளிகளிலும் மேயும். இதன் இனப் பெருக்கம் மார்ச்–ஜுன் ஆகும். புற்களால், புற்களுக்கு அடியிலேயே கூடு கட்டுகிறது. அதில் 3–4 முட்டைகள் இடுகிறது.
பாறை நெட்டைக்காலி(Anthus sordidus similis) நீலகிரி, திருவாங்கூர் மலைகளில் இது பரவியிருக்கிறது. கற்களும், பாறைகளும் நிறைந்த புல்வெளிகளில் நன்கு மேய்கிறது. மார்ச்–மே இதன் இனப் பெருக்கக் காலமாகும். இதன் முட்டைகள் மஞ்கள் கலந்த பழுப்பு நிறமானவை.
ரிச்சர்ட் நெட்டைக்காலி(Anthus richardi vieill). இதன் அலகு பழுப்பு நிறத்திலும், வாய் மஞ்சள் நிறத்திலும் காணப் படும். கால்கள் சதைப் பற்றுள்ளவை. விழிப் படலம் பழுப்பு நிறமானது. பனிக் காலத்தில் இந்தியாவிற்கு வரும். இது மேற்குக் கடற்கரையின் திறந்த வெளி நிலங்களில் மேய்கிறது. சைபீரியாவிலும், மைய ஆசியாவிலும், இனப் பெருக்கம் செய்கிறது. ஆன்தஸ்ரிச்சார்டி கோடெல்ஸ்கி (Anthus richardi godlavskilacz) என்னும் பறவை, ரிச்சர்ட் பறவையைப் போன்றே இருந்தாலும், பின்னங்கால் நகம் மட்டும்: குட்டையானது. நெல் அறுவடைக்குப் பின்பு, அந்த நிலங்களில் மேய்வதற்காகப் பனிக் காலத்தில் இங்கு வருகிறது. காசி மலைகளில் இனப் பெருக்கம் செய்கிறது.
இந்திய நெட்டைக்காலி (Anthus richardi rafulus vieill) இதன் அலகு பெரியது. பின் கால் நகம் குட்டையானது. மலைகளிலேயே எப்போதும் வசிக்கும் இது, சில நேரங்களில், சம வெளிகளுக்கும் வரும். நெல் வயல்களில் அடிக்கடி தென் படும். மார்ச்–ஜுனில் இனப் பெருக்கம் செய்யும். தரைக்குக் கீழ், புற்களைக் கொண்டு கூடுகளை அமைத்துக் கொள்கிறது.
கபில நிற நெட்டைக் காலி (Anthus campestries compestries linn). இதன் மேல் புறம் பழுப்பு நிறமானது. விழிப் படலம் கரும் பழுப்பு நிறத்தில் உள்ளது. இதன் கால்களும், பாதங்களும் மஞ்சள் நிறச் சதைப் பற்று கொண்டவை. பனிக் காலத்தில், தென்னிந்தியாவிற்கு வலசை வரும் இது ஐரோப்பாவில், இனப்பெருக்கம் செய்கிறது. —ஜி. எம். நடராஜன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 168)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h94b8jv7/
தமிழ்“நெட்டைக் காலிப் பறவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/h94b8jv7/APA
Oliyon Research. (2026). நெட்டைக் காலிப் பறவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h94b8jv7/MLA
"நெட்டைக் காலிப் பறவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/h94b8jv7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment