சூ சூட்டிளக்க இணைப்பு சூடுபடுத்துவதன் மூலமாகவும், 427°C ஐ விடக் குறைந்த உருகு நிலை உள்ள ஏதேனும் ஓர் உலோகத்தை இணைப்பு (coalescence) நிரப்புதற்குப் (fill) பயன்படுத்தியும், இணைப்பை உருவாக்குகிற பல்வேறு முறைகள் சூட்டிளக்க இணைப்பு (soldering) எனும் பெயரில் வழங்கப்படுகின்றன. சூட்டிளக்க இணைப்பு முறையின் கட்டங்கள். இணைக்கப்பட வேண்டிய உலோகங்களின் தேர்வு, தகுந்த தளை (bond) உருவாகும் விதமாக இணைப்பை வடிவமைத்தல், இணைப்பு உலோகம் நன்றாக நனைக்கும்படி இணைக்கப்பட வேண்டிய உலோகத்தின் பரப்பை நன்கு தூய்மையாக்கல், இணைக்கப்படும் பரப்பில் ஆக்சைடுகள் உருவாகாமல் காக்கும் பொருட்டு, இளக்கிச் (flux) சேர்த்தல், இணைப்பிற்குப் பிறகு தேவைப்படும் தன்மைகளுக்குத் தக்கவாறு சரியான இணைப்புலோகத்தைத் தேர்ந்தெடுத்தல், சூடுபடுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்தல், இணக்கப்பட வேண்டிய உலோகங்கள் சூடு படுத்தப்படும் போது, விலகி விடாதபடி ஒன்றோடு ஒன்று சரியாகப் பொருந்தும் வண்ணம் பொருத்துதல் ஆகியன இம்முறையின் படி நிலைகளாகும். சூட்டிளக்க இணைப்பின் உலோகவியல் தன்மைகள். இம்முறையில் பயன்படும் இணைப்புலோகக் கலவை, இணைக்கப்பட வேண்டிய உலோகப் பரப்புகளை நனைத்து, பரவி இணையும் பகுதிகளை அடைகிறது. இணைப்பில் தந்துகிச் (capillary) செயல்பாட்டால் உள்ளிழுக்கப்படுகிறது. நன்றாகப் பற்றிப் படர்ந்தபடியே இறுகி விடுகிறது. நனைத்தலும் பரவலும். இணைப்புலோகக் கலவை, பரப்பில் நன்கு படர்ந்தால் முழுமையான நனைத்தல் எனலாம். முழுமையாகப் படரும் முன்பே உறைந்து விடுமேயானால், பகுதி நனைத்தல் எனலாம். பரப்பை நனைக்காமல், உலோகத் துளியாகவே இருக்குமாயின் நனையாத் தன்மை எனலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பொதுவாக, நீர்ம நிலையில் உள்ள இணைப்புலோகக் கலவைகள் மிகத் தூய்மையான உலோகப் பரப்புகளை நனைப்பதில்லை. எடுத்துக் காட்டாக, ஈயம்—வெள்ளீயம் உலோகக் கலவை எஃகின் பரப்பை முழுமையாக நனைப்பதில்லை. ஆனால், தகரம் எஃகுடன் சேர்ந்து உலோகக் கலவையாக மாறி விடுமேயானால், பரப்பை முழுமையாக நனைக்கும். எனவே, இணைப்புலோகத்திற்கும், இணைக்கப்படும் பரப்புக்கும் இடையே உலோகக் கலவை உருவானால், இணைப்பு மிகுதியாகும். முழுமையான நனைத்தல் நிகழ வேண்டுமேயானால், இணைப்புலோகம் இணைக்கப்படும் பரப்போடு, ஏதேனும் ஓர் உலோகத்திற்கு இடைப்பட்ட பொருளை உருவாக்க வல்லதாக இருக்க வேண்டும் அல்லது இணைப்பு உலோகம் பரப்பில் கரையக் கூடியதாக இருக்க வேண்டும். பரவும் தன்மை, இணைக்கப்படும் பரப்புகளின் தன்மை, வெப்ப நிலை, இளக்கியின் சேர்க்கை, பரப்பு ஆக்சிஜனேற்றமடையும் அளவு ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடுகிறது. பரப்பில் இருக்கும் ஆக்சைடுகள் நனைத்தலையும், பரவலையும் பாதிப்பதால், இவற்றை நீக்க இளக்கிகளைச் சேர்க்க வேண்டியுள்ளது. அம்மோனியம் குளோரைடும், துத்தநாகக் குளாரைடும் இணைந்த கலவை போன்றவை பெரிதும் பயனுறும் இளக்கிகளாகும். இணைப்பை நிரப்பும் செயல் தந்துகி ஈர்ப்பால் ஏற்படுகிறது. இத்தன்மை, இணைமுகங்களுக்கு இடையேயான தொலைவு, வெப்ப நிலை, சூடேற்றும் முறை, சீரான சூடேற்றம் போன்றவற்றிற்கு ஏற்ப வேறுபடுகிறது. பரப்பின் மேல் உலோகக் கரைசல் மூலம், ஓர் உலோகவியல் தளை உண்டாகிறது. இணைப்புலோகம் பரப்பின் உலோகத்தில் சிறிதளவைக் கரைத்து, உலோகங்களுக்கு இடைப்பட்ட பொருளை உருவாக்குகிறது. இச்செயல் எவ்வளவு எளிதாக நிகழ்கிறதோ, அதே அளவு எளிதாகப் பரவுதலும், நனைத்தலும் நிகழ்கின்றன. இக்கரைசல் கெட்டியாகித் திண்ம நிலையை அடையும் நேரத்தில், மூலக் கூறுகளுக்கு இடையேயான அதே பற்று விசையின் மூலம் இணைப்பின் இரு பகுதிகளும் ஈர்க்கப் படுகின்றன. பற்றவைப்பு, பற்றாசிடல், சூட்டிளக்க இணைப்பு—வேறுபாடுகள். பற்றவைப்பில் இணைக்கப்பட வேண்டிய உலோகங்கள் உருக்கியே இணைக்கப்படுகின்றன, ஏனைய இரு முறைகளிலும் உருக்குதல் நிகழ்வதில்லை. மாறாக, இணைக்கப் பயன்படுத்தப் படும் உலோகக் கலவை, தான் உருகி இணைக்கப்பட வேண்டிய இரு பரப்புகளின் மீதுமாகப் பரவி இறுகுகிறது. சூட்டிளக்க இணைப்பில், இந்த இணைப்புலோகக் கலவை 427”Cக்கும் கீழ் உருகு நிலை உடையதாகவும், பற்ற வைத்தலில் (welding) 427°Cக்கு மேல் உருகு நிலை உடையதாகவும் இருக்கும். சூட்டிளக்க இணைப்பு வடிவமைப்பு. இவ்வகை இணைப்புகள் வலிவற்றவை. எனவே பாரம் முழுதும் இணைக்கப்படும் உலோகங்களில் மட்டும் வருமாறும், இணைப்பில் வாராதவாறும் வடிவமைக்க வேண்டும். இணைமுகங்கள் ஒன்றையொன்று கொக்கி போல் பற்றும்படியாக வடிவமைப்பதன் மூலம் இணைப்பின் வலிமையை உயர்த்தலாம். இத்தகைய இணைப்புகளில் இணைப்புலோகக் கலவை, இணைப்பை நிரப்பி அடைக்க மட்டுமே தேவைப்படுகிறது. எளிய முட்டு இணைப்பு, மூலை இணைப்பு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும், தவிர்க்க இயலா விடில், அடித் தகடிட்ட முட்டு இணைப்பை வடிவமைக்கவாம். இதற்கு, படிவு இணைப்பு பெரிதும் பயன்படுகிறது. படிவுத் தொலைவை உயர்த்துவதன் மூலம் இணைப்பின் வலிமையை உயர்த்தலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இணைப்பு உலோகக் கலவைகள். வெள்ளீயம்—ஈயம் கலவையில் நல்ல அரிப்பு எதிர்ப்புத் தன்மை உள்ளது. வெள்ளீயம்—ஆன்ட்டிமனி—ஈயம் உலோகக் கலவையில் ஆன்ட்டிமனியால் இணைப்புலோகக் கலவையின் வலிமை கூடுகிறது. வெள்ளீயம்—துத்தநாக இணைப்புலோகக் கலவை அலுமினியத்தை இணைக்கப் பயன்படுகிறது. ஈயம்—வெள்ளி இணைப்பு உலோகக் கலவை தாமிரப் பரப்பையும், எஃகுப் பரப்பையும் நன்றாக நனைக்க வல்லது, கேட்மியம்—வெள்ளி கலவை அலுமினியத்தை, அலுமினியத்துடனும், பிற உலோகங்களுடனும் இணைக்கப் பயன்படுகிறது. துத்தநாக—அலுமினிய உலோகக் கலவை, இளக்கிகளின் உதவியின்றித் தானாகவே அலுமினியப் பரப்பை நனைக்க வல்லது. 50% இண்டியம், 50% வெள்ளீயம் கொண்ட உலோகக் கலவை கண்ணாடியைக் கண்ணாடியுடனும், பிற உலோகங்களுடனும் இணைக்க வல்லது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இணைப்பு உலோகக் கலவை, பின் வரும் குறிப்புகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அவை நனைக்கும் தன்மை, பரவும் தன்மை, இணையும் உலோகங்களின் வலிவோடு ஒப்புடைய உலோகக் கலவைத் தன்மை, இணையும் உலோகங்களோடு ஒப்புடைய மின் தன்மை ஆகியன. இளக்கிகள். சூடாக்கப்படும் போது, உலோகப் பரப்புகளின் மேல் இடப்பட்ட இணைப்புலோகக் கலவையின் நனைக்கும் தன்மையை உயர்த்த வல்ல பொருள், இளக்கி (flux) எனப்படும். இளக்கிகள் திண்ம, நீர்ம, வளிம நிலைகளில் இருக்கலாம். சூட்டிளக்க இணைப்பு நிகழ்கையில் பரப்பின் மீது உண்டாகும் ஆக்சைடுகளை நீக்கி மீண்டும் ஆக்சிஜனேற்றம் நிகழாமல் தடுப்பதே, இளக்கிகளின் இன்றியமையாப் பண்பாகும். இளக்கிகள் பொதுவாக, அரிப்புத் தன்மை உள்ளவை, மிதமானவை, அரிப்புத் தன்மையற்றவை என மூவகைப்படுகின்றன. அரிப்புத் தன்மையுள்ள இணைப்புலோகக் கலவைகள் துத்தநாகக் குளோரைடும், அம்மோனியம் குளோரைடும் உடையவை. சில வகைகளில் சோடியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு ஆகியவை இருப்பதுண்டு. இவ்வகைக் கலவைகள் ஆக்சைடுகளை முழுமையாகக் கரைப்பதன் மூலமோ, ஆக்சைடுகளின் ஒரு பகுதியைப் பரப்பிலிருந்து விடுவித்து, இளக்கியில் மிதக்கச் செய்வதன் மூலமோ செயல்படும். இணைப்புக்குப் பிறகு, பரப்பில் எஞ்சியிருக்கும் இளக்கியை அகற்றி விடவேண்டும். இல்லையேல், அரிப்புத் தன்மையுடைய இந்த இளக்கி இணைப்பையே அரித்து வலிமையைக் குறைத்து விடும். இது இவ்வகை இளக்கிகளின் பெருங்குறைபாடாகும். மிதமான இளக்கிகள் லாக்டிக் அமிலம், பென்சோயிக் அமிலம், ஸ்டியரிக் அமிலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இளக்கிகளின் அளவைக் கட்டுப் படுத்தவும், எஞ்சியுள்ள இளக்கியை வெப்பத்தின் மூலம் ஆவியாக்கவும் வாய்ப்புள்ள முறைகளில் இவ்வகை இளக்கிகள் பெரிதும் பயன்படுகின்றன. புரோமைடு உப்புகளை உடைய ஹைட்ரசைன் இளக்கிகள் இணைப்புலோகத்தின் நனைக்கும் திறனைப் பன்மடங்கு உயர்த்தச் செய்கின்றன. சூடு படுத்தும் போது, பயனற்றுப் போகும் எஞ்சிய இளக்கி ஆவியாகி விடுகிறது. சிறிதளவு இளக்கி எஞ்சினாலும், அரிக்கும் தன்மையற்றுள்ளமையால், இணைப்பிற்குக் கேடு விளைவதில்லை. அரிப்புத் தன்மையற்ற இளக்கிகள் பெரும்பாலும் பைன் மரங்களின் பிசினைக் கொண்டவை. இவற்றின் மின் பண்புகள் மிகச் சிறப்பாக உள்ளமையால், மின் இணைப்புகளில் மிகுதியாகப் பயன்படுகின்றன. இவை செம்பு, செம்பு உலோகக் கலவைகளின் இணைப்பிற்கும் பயன்படுகின்றன. இணைப்பு உலோகக் கலவையின் தன்மை, இணைப்பு வடிவமைப்பு, இணைக்கப்படும் பரப்புகளின் தூய்மை நிலை, இணைப்பு முறை, இணைப்புக்குப் பிறகு எஞ்சியுள்ள இளக்கியை எளிதில் நீக்க இயலும் தன்மை, இளக்கியின் விலை ஆகியவற்றின் அடிப்படையில் இளக்கி தேர்ந்தெடுக்கப்படும். இணைக்கப்படும் உலோகங்களின் பரப்புத் தூய்மை. இணைக்கப்படும் உலோகங்களின் பரப்பு, ஆக்சைடு, தூசி, எண்ணெய்ப் பசை போன்றவை ஏதுமின்றித் தூய்மையாக இருத்தல் வேண்டும். இவை நீக்கப்படா விட்டால், இணைப்புலோகத்தின் நனைக்கும் தன்மை பெரிதும் பாதிக்கப்படுகிறது. மட்டை கொண்டு தேய்த்தல், சாணை பிடித்தல் முதலிய எந்திரவியல் முறைகளாலும், கார முறை எண்ணெய்ப் பிரிப்பு, அமில முறை ஆக்சைடு நீக்கம் முதலிய வேதி முறைகளாலும் பரப்பு, தூய்மையாக்கப்படும். சூட்டிளக்க இணைப்பு முறைகள். இவை சூட்டுக் கோல் முறை, வளிமக் கற்றை முறை, முழுக்கு மற்றும் அலை முறை, மின் தூண்டல் முறை, மின் தடை முறை, உலை முறை, தெளிப்பு முறை, வெப்பம் நீக்கு முறை எனப் பல வகைப்படும். சூட்டுக் கோல் முறை. இம்முறையில் இரும்பாலான ஒரு கோலின் நுனியில் செம்பு முனை பொருத்தப்பட்டிருக்கும். இக்கோலை மின்சாரம், கரி, எண்ணெய், வளிமம் போன்ற ஏதேனும் ஒன்றால் சூடேற்ற முடிகிறது. இக்கோலின் முனைப் பகுதி சூட்டைத் தேக்கி வைத்து, இணைப்பில் வெப்பத்தை வெளியிடுகிறது. அத்துடன் இளக்கியையும் வைத்திருந்து, இணைப்பில் இடுகிறது. நேரடியான தீச்சுடர் முறைச் சூடேற்றத்தில் பயன்படும் இளக்கி தெறித்துச் சிதறும் தீமை உள்ள சூழ்நிலைகளில் சூட்டுக் கோல் முறை பின்பற்றப்படுகிறது. வளிமக்கற்றை முறை. ஒரு குழாயின் வழியே செலுத்தப்படும் வளிமம், குழாயின் முனையில் எரியூட்டப்பட்டு, வெப்பம் பெறப்படும், எரி வளிமம், ஆக்சிஜன், காற்று ஆகியவை பயன்படும் வளிமங்களின் கலவை விகிதத்தை மாற்றுவதன் மூலம், அவற்றின் வெப்ப நிலை மாற்றப்படுகிறது. சூட்டுக் கோல் முறை பயன்படாத மிகப் பெரிய பரப்புகளுக்கு இம்முறை ஏற்றது. முழுக்கு மற்றும் அலை முறை. இம்முறையில் இளக்கி இடப்பட்ட இணைக்கப்பட வேண்டிய பரப்புகள் ஒன்றோடு ஒன்று பொருத்தப்பட்ட நிலையில், பெரிய தொட்டியிலுள்ள உருகிய நிலை இணைப்பு உலோகக் கலவையில் முழுகுமாறு அமிழ்த்தப்படும். கலவை உருகிய நிலையில் உள்ளமையால், இணைப்பிற்குத் தேவையான வெப்பமும், இணைப்பு உலோகக் கலவையிலிருந்தே கிடைக்கிறது. இம்முறையில், பல இணைப்புகளை ஓரே நேரத்தில் உருவாக்க முடிவதால், நேரம் வீணாவதில்லை. இரு பகுதிகளையும் பொருத்திப் பிடிக்கப் பொருத்திகள் தேவைப்படுகின்றன. இம்முறையில், உருகிய நிலையில் உள்ள இணைப்பு உலோகக் கலவைக்குள் பரப்புகள் முழுகுவதால், தேவைக்கதிகமான வெப்பம் தாக்கி இணைப்பு வலுவிழக்க வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்கும் பொருட்டு, இணைக்கப்படும் பரப்புகள் ஒரு நகரும் வார்ப்பட்டை மேல் வைக்கப்பட்டு, நகர்த்தப்படுகின்றன. ஒரு சிறிய துளை வழியே ஏற்றப்படும் உருகிய நிலை இணைப்பு உலோகக் கலவையில் உருவாகும் அலைகள், இணைப்பின் மீது படும்படியாக நகரும் வார்ப்பட்டை அமைக்கப்படுகிறது. இதுவே, அலை முறை இணைப்பு எனப்படுகிறது. அலை வேகம் நொடிக்கு ஏறத்தாழ 30 செ.மீ. ஆகும். மின் தூண்டல் முறை. இணைக்கப்பட வேண்டிய பரப்புகள் பொருத்தப்பட்டு இளக்கி, இணைப்பு உலோகக் கலவை அனைத்தும் இடப்பட்டு, ஆயத்த நிலையில் நகரும் வார்ப்பட்டையின் மீதோ, சுழலும் மேசை மீதோ அடுக்கப்படும். பிறகு, ஒன்றன் பின் ஒன்றாக, மின் தூண்டல் சுருளின் மூலம் சூடாக்கப் பட்டு இணைக்கப்படும். இது மிகவும் தூய்மையான, விரைவான முறையாகும். மின் தடை முறை. இளக்கியும், இணைப்பு உலோகக் கலவையும் இடப்பட்ட இணைக்கப்பட வேண்டிய பரப்புகள், இரண்டு மின் முனைகளுக்கு இடையே அழுத்திப் பிடிக்கப்படுகின்றன. குறைந்த அழுத்தமுள்ள உயர் மின்சாரம் பாய்ச்சப்படும் போது, இணைப்பு நிகழத் தேவையான வெப்பம் மின் தடையால் உருவாகிறது. உலை முறை. இளக்கியும், இணைப்புலோகக் கலவையும் இடப்பட்ட, இணைக்கப்பட வேண்டிய பரப்புகள் பொருத்தப்பட்டு, உலைகளில் இணைப்பு உலோகக் கலவையின் உருகு நிலையை விட 50°C உயர் வெப்ப நிலை வரை சூடாக்கப்படுகின்றன. இணைப்பு உருவானதும், உலோகக் கலவை திண்ம நிலையை அடையும் வரை குளிர்விக்கப்படும். தெளிப்பு முறை. இம்முறையில் இணைப்பு உலோகக் கலவை தெளிப்பான் மூலம் தெளிக்கப் படுகிறது. வெப்பம் நீக்கு முறை. இம்முறையில் கொதிக்கும் பாத்திரத்தில் உள்ள தெவிட்டிய வளிமத்தில், இணைப்புப் பரப்பு வைக்கப்படும் போது, வளிமம் வெப்பம் நீங்கி, நீர்ம நிலையை அடையும். அப்போது வெளியிடப்படும் உள்ளுறை வெப்பம் இணைப்புக்குத் தேவையான வெப்பமாகப் பயன்படுகிறது. பல்வேறு உலோகங்களின் சூட்டிளக்க இணைப்பு. செம்பும், செம்பு உலோகக் கலவைகளும், இம்முறையில் எளிதில் இணைக்கப்படக் கூடியவை. 30–40% வரை வெள்ளீயம் கொண்ட உலோகக் கலவையே இணைப்புலோகக் கலவையாக மிகுதியாகப் பயன்படுகிறது. அலுமினியம் மற்றும் அதன் உலோகக் கலவைகளின் இணைப்பில், உயர் வெப்பம் கடத்தும் தன்மை, ஆக்சைடு படலத்தை நீக்குவதில் கடினம், அரிப்பை எதிர்க்க இயலாத் தன்மை போன்றவை ஏற்படுகின்றன. 60–70% வரை வெள்ளீயமும், எஞ்சியது துத்தநாகமும் உடைய கலவையே இதற்கு மிகவும் ஏற்ற இணைப்பு உலோகக் கலவையாகும். அனைத்து வகைக் கரியடங்கிய எஃகும், சூட்டிளக்க இணைப்பில் இணைகின்றன. கரியின் அளவு உயர உயர, நனைக்கும் தன்மை குறையத் தொடங்குகிறது. இதற்கான இணைப்புஉலோகக் கலவை. வெள்ளீயமும், ஈயமும் கொண்டது. வார்ப்பு இரும்பைச் சூட்டிளக்க முறையில் இணைத்தல் கடினம். வார்ப்பிரும்பில் உள்ள கிராஃபைட் எனும் கரிப் படலம் நனைக்கும் தன்மையை அழித்து விடுகிறது. எனவே, இவற்றை முதலில் உருகிய நிலையிலுள்ள உப்புகளோடு செயல்படுத்தி, சிலிக்கான், கரியைக் கரைத்துப் பிரிக்க வேண்டும். பின்பு, வெள்ளீயம், ஈயம் கொண்ட. இணைப்பு உலோகக் கலவையைப் பயன்படுத்தி இணைக்கலாம், எஃகில். உள்ள குரோமியம் ஆக்சைடின் காரணமாக, நனைக்கும் தன்மை குறைவதால், எஃகைச் சூட்டிளக்க முறையில் இணைத்தல் கடினமாகிறது. எனவே, எஃடின் மேற்பரப்பு முதலில், எந்திரவியல் முறைப்படி தூய்மையாக்கப்பட்டு, 50% மிகுதியான வெள்ளீயம் உள்ள இணைப்புஉலோகக் கலவை பூசப்பட்டு, துத்த நாக குளோரைடு, அம்மோனியம் குளோரைடு போன்றவை அடங்கிய இளக்கிகள் இடப்பட்டு, இணைக்கப்படுன்றன. இணைப்பிற்கான வெப்பம் 370°­­C ஐத் தாண்டக் கூடாது. 370°C க்கு மேலானால், எஃகு தெறிக்கும் தன்மையை எய்துகிறது. இணைப்பிற்குப் பின், எஞ்சியுள்ள இளக்கி நீக்கப்படா விடில், அரிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. —வயி. அண்ணாமலை நூலோதி. M.M.Schwartz, Metals Joining Manual, McGraw-Hill Book Company, London, 1979.