நுணா
nuṇā
இதற்கு மஞ்சணத்தி, மஞ்ச நாவல், மஞ்சள் நுணா, மஞ்ச வட்டி, மஞ்ச நதி, பொன் தூரிகம், மஞ்ச நீராட்டி, தணவு என்னும் பெயர்களும் உண்டு.
இதற்கு மஞ்சணத்தி, மஞ்ச நாவல், மஞ்சள் நுணா, மஞ்ச வட்டி, மஞ்ச நதி, பொன் தூரிகம், மஞ்ச நீராட்டி, தணவு என்னும் பெயர்களும் உண்டு. இதன் தாவரப் பெயர் மொரிண்டா கொரியா (Morinda coreia) ஆகும். மொரிண்டா டிங்க்டோரியா (Morinda tinctoria), மொரிண்டா எக்ஸ்செர்ட்டா (Morinda exserta) என்பன இதன் இணை தாவரப் பெயர்கள். ரூபியேசிக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மரத்தை இலங்கை, இந்தியா, மலாய், ஆர்ச்பெலகோ ஆகிய நாடுகளில் 500–800 மீ. உயரம் வரையுள்ள சம வெளிப் பகுதிகளில் பொதுவாகக் காணலாம். இதன் பூக்கள் மல்லிகை மணத்தை ஒத்திருக்கும். இம்மரத்தின் பட்டையை நீக்கிய பின் பார்த்தால், மரக் கட்டை மஞ்சளாக உள்ளமை குறிப்பிடத் தக்கது. வறள் காடுகளில் இம்மரம் மிகுதியாகக் காணப் படுகிறது. இம்மரத்தின் கிளைகளை வெட்டி விட, நன்கு துளிர் விடும். இம்மரத்தின் வேர்ப் பட்டையில் உள்ள குளுக்கோசைடிற்கு மொரிண்டின் என்று பெயர். வைரக் கட்டையில் ஆந்த்ரகுவினோன் நிறமிகள் அடங்கிய மொரிண்டோன், டாம்னகேந்தால் நார்–டாம்னகேந்தால் முதலிய வேதிப் பொருள்கள் உள்ளன.
அமைப்பு. நுணா மரம் 6 மீ. உயரம் வளர்கிறது. செழிப்பான பகுதிகளில், 10மீ. உயரம் வரை வளரும். அடி மரம் 1 மீ. குறுக்களவில் இருக்கும். இம்மரத்தின் கிளைகள் முண்டு முடிச்சுகளுடனோ, உருண்டையாகவோ, கோணங்களுடனோ உள்ளன. இம்மரத்தின் உட்பகுதியில் மஞ்சள் நிறம் மிகுந்திருக்கும். இலைகள் முட்டை வடிவிலோ, நீள் சதுரமாகவோ, ஈட்டி வடிவிலோ இருக்கும். இலை நுனி கூரானது. இலைக் காம்பு 2 செ.மீ. நீளமானது. கொப்புகளில் இலைகள் குறுக்குமறுக்காக அமைந்துள்ளன. இலை மேல் பகுதி பளபளப்பான தோற்றமுடையது. கூர்மையான இலையடிச் செதில்கள் முக்கோண வடிவமானவை; மஞ்சரிக் கொப்புகளின் நுனியிலோ, இலைக் காம்புகளிலோ உண்டாகும். சில சமயங்களில், பூக்களை இலைக்கெதிராகவும் காணலாம். மார்ச்–ஜுன் மாதங்களில் இவை மிகுதியாக உண்டாகின்றன.
அல்லி வட்டம் 2 செ.மீ. குறுக்களவிலும், வெள்ளையாகவும், புனல் வடிவாகவும் இருக்கும். அல்லிக் குழல் 1.5 செ.மீ. நீளமானது. இதன் உள்பக்கம் பளபளப்பாக இருக்கும். 1 செ.மீ. அளவுடைய இதன் கதுப்புகள் ஐந்தும், நீள் சதுரமானவை. மகரந்தக் கேசரங்கள் ஐந்தும், நன்கு வெளியே தெரியும். மகரந்தக் கம்பிகள் 4.5 மி.மீ. நீளமானவை. மகரந்தப் பை 5.5 மி.மீ. அளவானது. சூல் பை 3 மி.மீ. அளவானது. கனி 2.செ.மீ. குறுக்களவுள்ளது. நுணாக் கனி இணைச் சூலக இலைகளையுடைய கூட்டுக் கனியாகும். இக்கனி பல பூக்கள் இணைந்தமையால், உண்டாகியது. பூக்களின் கனிகள் கீழ் மட்டச் சூல் பைகளிலிருந்து தோன்றியவை.
கனியின் மேற்பரப்பில். பல அறு பட்டை வடிவமான பகுதிகளைக் காணலாம். ஒவ்வொரு பகுதியும், ஒரு தனிச் சூல் பையிலிருந்து உண்டாகிறது. இச்சூல் பைகள் யாவும் இணைந்து, கூட்டுக் கனி உண்டாகிறது. இவற்றில் உள்ள அறுபட்டைப் பகுதிகளின் மையங்களில் உள்ள சிறு வட்டங்கள் புல்லி வட்டங்களின் வடுக்களாகும். இச்சிறு வட்டங்களின் மையங்களில் உள்ள சிறு புள்ளிகள் பூக்களின் சூலகத் தண்டின் எஞ்சியுள்ள பகுதிகளைக் குறிக்கும். விதைகள் நீள் சதுரம் அல்லது தலை கீழ் முட்டை வடிவானவை. விதை வெளியுறை சவ்வுப் போன்றது. நுணா மரத்தில் உண்டாகி, கனிகள் கறுப்பாக நீண்ட நாள்களுக்கு உதிராமல், ஒட்டிக் கொண்டுள்ளன.
பயன். நுணா மரத்தை வெட்டியவுடன் பார்த்தால், உள் கட்டை இளஞ் சிவப்பு நிறமாக இருக்கும். பின்பு, காற்றில் உலர்ந்து, அழுக்கடைந்த சிவப்பு நிறமாக மாறி விடும். மரக் கட்டை வழவழப்பானது. ஓரளவு பளபளப்பும், கடினத் தன்மையும் கொண்டது. மரத்தை வெட்டியவுடன், பலகைகளாக அறுத்து விடவேண்டும். உலர்ந்த மரத்தை அறுத்தால், பலகைகள் வெடித்து விடுகின்றன. நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்ட இம்மரத்தைக் கொண்டு வேளாண் கருவி, சீப்பு, பொம்மை, பேனாத் தாங்கி, எழுது பலகைச் சட்டங்கள், சுவர் முகட்டு உத்திரங்கள் போன்றவை செய்யலாம். இதன் இலைகளைக் கால் நடைகள் உண்கின்றன. தழைகளை வெட்டி, நிலத்திற்குப் பசுந்தழை உரமாக இடலாம் அல்லது மக்கு உரம் தயாரிக்கலாம். வேர், சாயம் ஏற்றுவதற்குப் பயனாகிறது. பருத்தி ஆடைகளுக்கு, நுணா மரப் பட்டைச் சாயத்தை ஏற்றலாம். இதன் இலை, காய், பட்டை, வேர் முதலியவை மருந்துக்கு உதவுகின்றன. நுணா இலைச் சாறு ஒரு பங்குடன், உத்தாமணி இலைச் சாறு, நொச்சியிலைச் சாறு, பொடுதலைச் சாறு ஆகியவற்றை ஒரு பங்கு சேர்த்து, ஒன்றாகக் கலக்கி, 6 மாதம் முதல் 2 ஆண்டு வயதுடைய குழந்தைகளுக்கு வேளை ஒன்றுக்கு 40–60 துளியும், 3 ஆண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 80–120 துளிகளும் என, 2 அல்லது 3 நாள்களுக்குத் தர, மாந்தம் நீங்கும்.
கருக்குக் குடிநீர். மாந்தத்திற்கு நுணாயிலை, நொச்சியிலை, வேலிப் பருத்தியிலை, கழற்சிக் கொடியிலை வகைக்கு 35 கிராம் எடுத்துச் வறுத்துக் கருக்கி, நீர் விட்டு ஓமம், வசம்பு, சுக்கு, மிளகு, பொடுதலை, பெருங்காயம், திப்பிலி ஆகியவற்றை நல்லெண்ணெயில் சிவக்க வறுத்து, அந்நீரில் போட்டுக் காய்ச்சித் தரலாம். நுணா இலை, ஓமம், பொடுதலை இலை, நொச்சி பாலை, வேளை வேர், பூண்டு, வசம்பு ஆகியவற்றை நறுக்கி, வறுத்துக் குடிநீர் செய்து தர, மாந்தம் நீங்கும். இலையைக் குடி நீர் செய்து தர, சூதகத்தைச் சீராக்கும். நுணா இலைச் சாறு 500 மி.லிட்டருடன், ஆமணக்கெண்ணெய் 1000 மி.லி., வெங்காயச் சாறு 400 மி.லி. வெந்தயம் 20 கிராம் எடுத்துக் காய்ச்சி, பதத்தில் வடித்துக் கொண்டு, 10 கிராம் வீதம் தர மாந்தக் காய்ச்சல் நீங்கும். நுணா இலையை மை போல் அரைத்துத் தேங்காயளவு எடுத்து, அத்துடன் 35 கிராம் காட்டுச் சீரகத்தைச் சேர்த்து, இரும்பு வாணலியில் நல்லெண்ணெய் 1 லி. விட்டு மேற்கூறியவற்றைச் சேர்த்துச் சிறு தீயாக எரிக்க வேண்டும். அடியில் தங்கும் ‘கற்கம்’ எனப் படும் அடி அண்டல் மெழுகு போல் கையில் ஒட்டும் பருவத்தில், அடுப்பிலிருந்து இறக்கி, எண்ணெயை ஊற்றிச் சேமித்துக் வைத்துக் கொண்டு, வெண் குட்டத்தின் புள்ளிகளில் தடவி வர வேண்டும். இதில் கிடைத்த கற்கத்தைச் சுண்டைக்காயளவு எடுத்து, பாலுடன் கலந்து, காலை, மாலை சாப்பிட வேண்டும்.
நுணாப் பல்பொடி. நுணாக் காய், உப்பு சம அளவு எடுத்து, ஒரு குடுவைக்குள் வைத்து, வரட்டியில் புடம் போட்டு எடுத்துப் பொடித்துப் பல் துலக்கி வர, பல் சொத்தை, பல்லரணை முதலியவை நீங்கும். காயைப் பிழிந்து, சாறெடுத்துத் தொண்டையில் பூசத் தொண்டை நோய் நீங்கும் அல்லது பாகு செய்தும் குடிக்கலாம். நுணாப் பட்டைத் தைலம் காய்ச்சல், முறைக் காய்ச்சல், குன்மம், மண், அரையாப்பு, கழலை முதலியவற்றை நீங்கும்.
தைலத்தைத் தயாரிக்கும் முறை. நுணாப் பட்டையை எடுத்து, நீர் சேர்த்து அடுப்பிலிட்டு எரித்து, எட்டில் ஒன்றாய்ச் சுண்டக் காய்ச்சி, இளநீர் பழச் சாறு நல்லெண்ணெய் சேர்த்துத் தைலமாகத் தயாரிக்க வேண்டும்.
இந்தத் தைலத்தை வாரம் இரு முறை தலையில் தேய்த்துக் குளிக்க, மேற்கூறிய நோய்கள் தீரும். நுணா மர வேர் எடுத்து அடித்து, அளவுடன் நீரில் போட்டுக் காய்ச்சி, சாற்றை மட்டும் குடிக்க, இரண்டொரு தடவை பேதியாகி, மலத்தை வெளியே தள்ளும். —கோ.அர்ச்சுனன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 103)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gypvyz3g/
தமிழ்“நுணா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gypvyz3g/APA
Oliyon Research. (2026). நுணா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gypvyz3g/MLA
"நுணா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gypvyz3g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment