சுழல் விசிறி
cuḻal viciṟi
விமானச் சுழற்சியில் உந்தத்தை ஏற்படுத்தக் கூடிய சுழல் விசிறி போன்ற அமைப்பு சுழலி விசிறி எனப் படும்.
விமானச் சுழற்சியில் உந்தத்தை ஏற்படுத்தக் கூடிய சுழல் விசிறி போன்ற அமைப்பு சுழலி விசிறி எனப் படும். சுழல் தாரைக்கும் (turbojet) சுழல் செலுத்திக்கும் (turbo prop) இடைப்பட்ட வழித் தோன்றல் வடிவத்தில் சுழல் விசிறி (turbo fan) அமைக்கப் பட்டிருக்கும்.
சுழலியின் எந்திர அமைப்பு சுழலி தாரையின் அமைப்பை ஒத்திருக்கும். சுழலியில் (turbine) இருக்கும் பீற்று வழிக் குழாய் (nozzle) போன்ற முனை வழியாக வெளியிடப்படும் ஆற்றலைப் பொறுத்தே சுழலி இயங்குகிறது. மிகு ஓட்டு திறன் தேவைப்பட்டால், காற்று அழுத்தியைப் (compressor) பயன்படுத்தலாம். அதனால், சிறிதளவு வெளிப்படும் ஆற்றல் காற்றழுத்திக்குப் பயன்பட்டு எந்திரத் திறன் (mechanical efficiency) குறையக் கூடும். இந்தச் சுழலியின் அமைப்பு, கப்பலின் இயக்க அமைப்பு அல்லது விமான செலுத்தியை (propeller) விடச் சிறியதாகவே இருக்கும். இந்தச் சுழலி மிகக் குறைவான வேகத்தில் செல்லும் போது, சுழலி தாரையின் திறனை விட மிகுதியாக இருக்கும். மேலும், சுழலி செலுத்தியை விட எடை குறைவாகவும், மிகக் குறைந்த இட வசதி கொண்டும் இருக்கும். சுழலி செலுத்தியை ஒப்பிடும் போது, இதன் செலவீடு மிகக் குறைவு. சில சமயம் ஒலியலைகளை ஒட்டிய (sonic) திசை வேகத்தில் சுழலியின் வேகம் மாற்றி அமைக்கப்பட நேரிடும். ஆனால், இதில் சில சிக்கல்கள் ஏற்படக் கூடும்.
சுழலி தாரை, சுழலி செலுத்தி இவை இரண்டின் செயல்பாட்டுக்கும் இடைப்பட்ட செயல்பாடுடைய, காற்றை உள்ளிழுக்கும் தாரை எந்திரம் சுழலி விசிறி எனப்படுகிறது. இதில், காற்றழுத்தி, எரிப்பி, சுழலி ஆகியன உண்டு.
இயங்கும் தத்துவம். காற்றழுத்தி, எரிப்பி இவற்றின் துணை கொண்டு இயங்கும் சுழலி, வளிம உருவாக்கி (gas generator) எனப்படுகிறது. வளிம உருவாக்கி, அழுத்தம் மிகுந்த சூடான வளிமத்தை உருவாக்குகிறது. இந்த ஆற்றலின் ஒரு பகுதி சுழலியின் மூலமும், சுழலியால் சுழற்றப்படுகிற விசிறியின் மூலமும், விசிறியின் வழியே நகரும் காற்றுப் பாய்வின் அழுத்தத்தை உயர்த்தப் பயன்படுகிறது. இந்த அழுத்தம் ஏறிய காற்றை விசிறி மூக்குக் குழாய் வழியே விரிவடையச் செய்வதன் மூலம், இயக்க ஆற்றல் (kinetic energy) பெறப்படுகிறது. சூடான வளிமத்தின் எஞ்சிய ஆற்றலைத் தாரை மூக்குக் குழாய் (jet nozzle) வழியே விரிவடையச் செய்வதன் மூலம் இயங்கு ஆற்றல் மாற்றப்படுகிறது. இவ்வாறாக, வளிம உருவாக்கியின் பாய்வு, விசிறியின் பாய்வு இவை இரண்டின் மூலமாகவும், சுழலி விசிறி பயனுள்ள உந்தத்தை (thrust) உருவாக்குகிறது. இந்த இரண்டு பாய்வுகளுக்கும் இடையே பறப்பு வேகம், வெப்ப நிலை விகிதங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆற்றல் பகிர்ந்து கொள்ளப் படும். இவ்விருபாய்வுகளையும் ஒரே மையம் கொண்ட (வேறுபட்ட விட்டமுள்ள) இரு மூக்குக் குழாய்களின் வழியே விரிவடையச் செய்யலாம். அல்லது இரு பாய்வுகளையும் கலக்கச் செய்து, பின்னர் ஒரே மூக்குக் குழாய் வழியே செலுத்தலாம். இரண்டாம் வகையில் திறன் மிகுதியாகிறது.
வடிவமைப்புத் தன்மைகள். விசிறிப் பாய்வின் எடைக்கும், வளிம உருவாக்கிப் பாய்வின் எடைக்கும் உள்ள விகிதம் மாற்று வழி விகிதம் (bypass ratio) எனப்படும். மாற்று வழி விகிதம் ஏறத் தாழ 0.5—8 வரை இருப்பது உண்டு.
சுழல் செலுத்தி (turbo prop) விடச் சுழல் விசிறி குறை ஒலி வேகப் பறப்பில் திறன் மிகுந்து விளங்குகிறது. எம்பல் நிகழ்கையில் மிக உயர்வான உந்தம் சுழலி விசிறியால் உருவாக்கப்படும். சுழலி விசிறியால் மிகக் குறைவான ஆற்றல் செலவிடப்பட்டு, மிக உயர்வான காற்றுப் பாய்வில் சிறிய அளவு முடுக்கம் உயர்த்தப் படுகிறது. இதனால், போதுமான உந்தத்தை மிகக் குறைவான ஆற்றல் இழப்பின் மூலமே பெற்று விட முடிகிறது. இதன் எந்திரவியல் கட்டுமானத்திலும் சிக்கல் ஏதுமில்லை. சுழலி உந்தியை விட மிகு வேகத்தை ஊட்ட வல்லதாக இருப்பதால், சுழலி விசிறியே குறை ஒலி வேகப் பரப்பின் தாரை வகை விமானங்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
காற்று உள் நுழையும் வெப்ப நிலையை உயர்த்துவதன் மூலமும், மிகு அழுத்த விகிதங்கள் மூலமும் மாற்று வழி விகிதம் உயர்த்தப்படலாம். இதன் மூலம் சுழலி விசிறியின் பொதுவான திறன் உயர்கிறது.
வகைகள். சுழலி விசிறிகள் பல வகைகளில் அமைக்கப்படுகின்றன. விசிறியின் நுனி, அழுத்தி மற்றும் சுழலி இவற்றின் சுழல் வேகத்தை ஒன்றிணைக்க, ஒவ்வொன்றும் தனித் தனியே வேகம் கட்டுப்படுத்த வல்லவையாக இருத்தல் இன்றியமையாதது. எனவே, விசிறியின் சுழலி வளிம உருவாக்கியின் சுழலியோடு எந்திரவியல் தொடர்பற்றதாகத் தனியாக அமைக்கப்படுகிறது. சில வகைகளில் விசிறி முன் புறமும், வேறு சில வகைகளில் விசிறி பின் புறமும் அமைக்கப்படுவதுண்டு. மிகு மாற்று வழி விகிதம் கொண்ட சுழலி விசிறிகள் நேர் செங்குத்தாக (ஓடு பாதைகளின் உதவியின்றி) எம்பவும், இறங்கவும் வல்ல விமானங்களில் பெரிதும் பயன்படுகின்றன. —கே. ஆர். கோவிந்தன் நூலோதி. Harold. A. Rothbart, Mechanical Design and Systems Handbook, McGraw-Hill Book Company, London, 1964.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 572)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gy9x8yzk/
தமிழ்“சுழல் விசிறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gy9x8yzk/APA
Oliyon Research. (2026). சுழல் விசிறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gy9x8yzk/MLA
"சுழல் விசிறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gy9x8yzk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment