வறட்சி காலங்களில் கால்நடைகளுக்குத் தேவையான தீவன வகைத் தாவரங்களின் உற்பத்தி பாதிக்கப் பட்டுத் தீவனப் பஞ்சம் ஏற்படுகிறது. இத்தகைய காலங்களில், பல்வேறு பஞ்ச காலத் தீவனங்கள் கால்நடைகளுக்குக் கொடுக்கப் படுவதில்லை. கடுமையான பஞ்சம் நேரிடுகையில் பனை, வேம்பு, வாகை, புளி போன்ற மரங்களின் இலை தழை, கருவேல் மரக்காய், திருகு கள்ளி போன்றவற்றைக் கால்நடைகளுக்குக் கொடுப்பர். பொதுவாகக் கால்நடை வளர்ப்போர் இத்தகைய பற்றாக்குறை நேரத்திற்காகவே, அறுவடைக் காலங்களில் வைக்கோல், சோளத் தட்டை, கடலைக் கொடி போன்றவற்றை உலர் தீவனமாகச் சேமித்து வைக்கும் பழக்கத்தினைக் கொண்டுள்ளனர். எனினும், கால்நடைகளுக்கு மிகவும் தேவையான பசுந் தீவனத்திற்குப் பஞ்சம் ஏற்படவே செய்கிறது. வறட்சியைத் தாங்கக் கூடிய தீவன வகைகளைப் பயிரிடுவதாலும், பசுந் தீவனங்களைப் பாதுகாப்பதாலும், இந்நிலையைத் தவிர்த்து ஆண்டு முழுவதும் பசுந் தீவனம் கிடைக்கச் செய்து, பயனடைய முடியும். பஞ்சக் காலத்தில் விளையும் கேடுகள். மாட்டினங்களுக்கு அன்றாடம் 25–40 கி.கி. பசுந் தீவனமும், 3–5கி.கி. உலர் தீவனமும், உற்பத்திக்கேற்ற அடர் தீவனமும் கொடுக்க வேண்டும். பஞ்சக் காலங்களில் தரமற்ற தீவனங்களை மிகக் குறைந்த அளவில் கொடுத்து விட்டு, அடர் தீவனத்தின் அளவை அதிகரிப்பதால் பயன் இல்லை. எக்காலத்திலும், அடர் தீவனங்களைப் போதுமான அளவில் வழங்க வேண்டும். மேலும், தரமாக பசுந் தீவனம் கொடுப்பதைப் பொறுத்தே, பால் உற்பத்தி இருக்கும். பஞ்சக் காலங்களில், பசுந் தீவனப் பற்றாக் குறையினால், பால் உற்பத்தி குறைந்து இழப்பை உண்டாக்கும். வறட்சிக் காலங்களில், கால்நடைகளுக்குத் தேவையான தீவன வகைத் தாவரங்களின் வளர்ச்சி குன்றி விடுவதோடு, தேவையற்ற நச்சுத் தாவரங்களின் வளர்ச்சி அதிகரித்து விடுவதுமுண்டு. இந்த நச்சுத் தாவரங்கள், ஏனைய பச்சைத் தாவரங்களுடன் சேர்ந்தே வளர்கின்றன. பொதுவாகக் கால்நடைகள், நச்சுத் தாவரங்களை ஒதுக்கி விட்டு மற்ற பயிர் வகைகளை மட்டும் உண்ணக் கூடிய இயல்பைக் கொண்டுள்ளன. எனினும், போதிய பசுந் தீவனம் கிடைக்காத நேரங்களிலும், மிகுந்த பசியுடன் இருக்கும் நேரங்களிலும், இத்தகைய தாவரங்களையும் சேர்த்துத் தின்று, கால்நடைகள் இறந்து விடுவதுமுண்டு. பஞ்சக் காலங்களில் தரமற்ற தீவனங்களைக் கொடுப்பதாலும், பசுந் தீவனக் குறைபாட்டினாலும், வைட்டமின், தாது உப்பு போன்றவை கால்நடைகளுக்குப் போதிய அளவில் கிடைப்பதில்லை. இதனால், பற்றாக் குறை நோய்கள் உருவாவதற்கு வாய்ப்பிருக்கிறது. மேலும், சில நச்சுத் தாவரங்களின் வீரியம் சில தாது உப்புகள் போதிய அளவில் கிடைக்கும் போது, முறியடிக்கப் பட்டு விடுவதுண்டு. பற்றாக்குறையினால், இந்நிலையும் தவிர்க்கப் படுகிறது. சான்றாக, சில கிழங்குகளில் உள்ள ஆக்சலேட் என்னும் நச்சு கால்நடைகளைப் பெரிதும் பாதிப்பதுண்டு. ஆனால், தீவனத்தில் போதுமான கால்சியம் கிடைக்குமாயின், இந்த நச்சு முறியடிக்கப் பட்டு விடும். பஞ்சக் காலத்திற்கேற்ற தீவன வகைகள். கால்நடைகளுக்குத் தேவையான 80% சத்துப் பொருள்கள் பசுந் தீனத்திலிருந்தே கிடைக்கின்றன. இத்தகைய பசுந் தீவனப் பற்றாக்குறையைக் கீழ்க் காணும் வறட்சியைத் தாங்கக் கூடிய தீவன வகைகளைப் பயிரிடுவதின் மூலம் தவிர்க்கலாம். மேலும், ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்குப் பசுந் தீவனம் வழங்கிப் பயனடையலாம். பல் வகைத் தீவனங்கள் நீலக் கொழுக்கட்டைப் புல். பெரிய இலைகளைக் கொண்ட கூடுதல் விளைச்சல் தரக் கூடிய இப்புல், வறட்சியை நன்கு தாங்கக் கூடியதாகும். இப்பல்லாண்டுப் பயிர், மேய்ச்சல் நிலத்திற்கு மிகவும் ஏற்றதாகும். வடகிழக்குப் பருவக் காற்றுக் காலத்தில் இதை விதைக்கலாம். விதைத்த 70–75 நாள்களில், முதல் அறுவடைக்கு ஆயத்தமாகி விடும். ஆண்டிற்கு ஒரு ஹெக்டேருக்கு, 40 டன் பசுந் தீவனம் கிடைக்கும். தீனா நாத் புல். மானாவாரிக்கும், இறவைக்கும் ஏற்ற இப்புல், கரடு முரடான வளம் குன்றிய நிலத்திலும், கடும் வறட்சியிலும் வளரக் கூடியதாகும். மானாவாரிப் பயிராகப் பருவ காலத்திலும், இறவைப் பயிராக ஆண்டு முழுவதிலும் இதைப் பயிரிடலாம். 54% செரிக்கும் தன்மை கொண்ட இப்புல், விதைத்த 55–60 நாள்களில் அறுவடைக்கு ஆயத்தமாகி விடும். ஒரு ஹெக்டேருக்கு 40–50 டன் விளைச்சல் கிடைக்கும். ஈட்டிப் புல். வேகமாக வளரும் தன்மை கொண்ட இப்புல் கரடு முரடான இடங்களுக்கு ஏற்றதாகும். வறட்சியை நன்கு தாங்க வல்ல இது, மேய்ச்சல் நிலங்களுக்குச் சிறந்ததாகும். ஆண்டு முழுவதும் பயிரிடலாமெனினும், மானாவாரியில் சூன், சூலை மாதங்களில் விதைப்பது சிறந்ததாகும். மார்வல் புல். இது ஒரு பல்லாண்டுப் புல்லாகும். இதன் இலைகள் மஞ்சள் நிற நரம்புடன், நீலப் பச்சை நிறத்தில் காணப் படும். வறட்சியை நன்கு தாங்கக் கூடிய, மிகவும் உயரமாக வளரக் கூடிய இப்புல் பல தரப் பட்ட மண் வகைகளுக்கும் ஏற்றதாகும். ரோட்டீஸ் புல். அகன்ற மடிப்புடைய இலைகளைக் கொண்ட இப்புல் வெப்பப் பகுதிகளுக்கு ஏற்றதாகும். வறட்சியை நன்றாகத் தாங்கக் கூடிய இதில் 10% புரதச் சத்து இருக்கிறது. இது ஒரு பல்லாண்டு வாழ் புல்லாகும். இது ஒரு ஹெக்டேருக்கு 20–25 டன் விளைச்சல் கொடுக்கும். ஏனைய புல் வகைகள். ஆஸ்திரேலியாப் புல், சூடான் புல், நேப்பியர் புல், தினைப் புல் ஆகிய வகைகளும் வறட்சியைத் தாங்கக் கூடியவையாகும். பயறு வகைத் தீவனங்கள் முயல் மசால். இது ஒரு புரதச் சத்து மிக்க தீவனப் பயிராகும். கடும் வறட்சியைத் தாங்கக் கூடிய இது, பல வகையான மண் வகைகளுக்கும் ஏற்ற பயிராகும். அமிலத் தன்மை கொண்ட நிலங்களில் கூட, இதைப் பயிரிடலாம். இது ஒரு பல்லாண்டு வகைத் தீவனமாகும். மேய்ச்சல் நிலங்களில், கொழுக்கட்டைப் புல்லுடன் சேர்த்து, இதை விதைக்கலாம். மானாவாரியில் சூன், சூலை முதல் செப்டம்பர், அக்டோபர் வரை விதைக்கலாம். விதைத்த 75 நாள்களில், முதல் அறுவடை செய்யலாம். இதன் விதையின் மேலுறை கடினமாக இருப்பதால், சுடுநீரில் நான்கு நிமிடங்கள் வைத்திருந்து, பின் குளிர்ந்த நீரில் ஓர் இரவு முழுவதும் அமிழ்த்தி, அதன் பின்னர் விதைத்தால், முளைப்புத் திறன் சிறப்பாக இருக்கும். சங்குப் பூ . இது சத்து மிக்க பயறு வகைக் கொடியாகும். இதில் வெள்ளை மற்றும் நீல நீறச் சங்கு வடிவப் பூக்கள் கொண்ட இரண்டு வகைகள் உள்ளன. இது மிக அதிகமான வறட்சிகளையும் தாங்கி, பல்லாண்டு வாழக் கூடியதாகும். நிழலுக்கு அடியில் கூட நன்கு வளரும். இதில் புரதச் சத்து 16–18% உள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 40 டன் பசுந் தீவனம் கிடைக்கும். மர வகைத் தீவனங்கள் சுபாப் புல். இது ஒரு நீண்ட காலத் தீவன மரமாகும். கடுமையான வறட்சியைக் கொண்ட காலங்களைத் தாங்கக் கூடிய இதை அனைத்து வகை நிலங்களிலும் பயிரிடலாம். இதில் 25% புரதம் அடங்கியுள்ளது. இதன் இலைகளும், காய்களும் சத்து மிகுந்தவையாகும். குறைந்த நார்ப் பொருளே கொண்ட இது நன்கு செரிக்கும் இயல்புடையது. மாடுகளுக்கு, மொத்த தீவனத்தில் 30%, ஆடுகளுக்கு 7–10% எனச் சுபாப் புல்லைக் கொடுக்கலாம். கறவை மாடுகளுக்கு, இந்தத் தீவனம் கொடுப்பதால் 10% பால் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.இதை வேலி ஓரங்களிலும், மேய்ச்சல் நிலங்களிலும், பாதை ஓரங்களிலும் கூடப் பயிரிடலாம். மைமோசின் என்னும் நச்சுப் பொருள் உள்ளமையால், இத்தீவனத்தை அளவுக்கு மேல் கொடுக்கக் கூடாது. கிளிரிசிடியா தீவன மரம். இது நீண்ட கால வறட்சியைத் தாங்கிப் பல ஆண்டுகளுக்குப் பயன் தரக் கூடிய தீவன மரமாகும். இம்மரத்தை வீடு, தோட்டம், மேய்ச்சல் தரிசு நிலங்களில் நடலாம். கலப்புத் தீவனம், பிண்ணாக்கு, தவிடு ஆகியவற்றில் உள்ள ஊட்டச் சத்துக்கு இணையாக, இதன் இலைகளில் சத்துப் பொருள்கள் உள்ளன. இதில் புரதச் சத்து மிகுந்திருப்பதால், பால் உற்பத்தியையும், இறைச்சி உற்பத்தியையும், அதிகரிக்கும். இதனைக் கறவை மாடுகளுக்கு 5–15 கி.கிராமும் ஆடுகளுக்கு 1–3 கி.கிராமும் கொடுக்கலாம். புங்கம் விதைகள், புளியங்கொட்டை, வாழைத் தாள்கள், பலாப் பழத் தோல், மாங்கொட்டை போன்றவையும், பஞ்சக் கால தீவனமாக விளங்குகின்றன. பசுந் தீவனத்தைப் பாதுகாத்தல். எத்தகைய பஞ்சத்திலும் பசுந் தீவனம் கிடைப்பதற்குச் சிறந்த வழி பசுந் தீவனத்தைப் பாதுகாத்தலாகும். இதற்குச் சைலேஜ் தயாரித்தல் என்று பெயர். அதாவது, பசுந் தீவனம் மிகுந்திருக்கும் காலங்களில், தீவனச் சோளம், ஆப்பிரிக்க நெட்டை மக்காச் சோளம், தீவனக் கம்பு, குதிரை மசால் போன்ற மிகுந்த ஈரப் பதமுள்ள பசுந் தீவனங்களை இம்முறையில் பாதுகாக்கலாம். இதற்காகத் தோண்டப் பட்ட சைலோ குழிக்குள், பாலித்தீன் விரிப்பைப் பரப்பி, அதன் மீது யூரியா கலந்த மொலாசன் தெளிக்கப் பட்ட பசுந் தீவனங்களைப் போட்டு மூடி விட வேண்டும். மேலும், பாலித்தீன் உறைகளில், இத்தகைய தீவனத்தைப் போட்டுக் காற்றுப் புகாமல் கட்டியும் வைக்காலம். இவ்வாறு பதப் படுத்திப் பாதுகாக்கப் பட்ட தீவனத்தைப் பஞ்ச காலங்களில் எடுத்துப் பயன் படுத்தலாம். இத்தீவனம் பசுமையுடனும், நறுமணத்துடனும், சுவையுடனும் இருக்கும். சத்து மிகுந்த இத்தீவனத்தைக் கால்நடைகள் ஆர்வத்துடன் விரும்பி உண்ணும். —ஆர். கோவிந்தராஜு