இலெமார்க்கு
ilemārkku
பிரெஞ்சு நாட்டு இயற்கையியலாருள் முதன்மையானவர்.
பிரெஞ்சு நாட்டு இயற்கையியலாருள் முதன்மையானவர். உயிரினங்களின் வளர்ச்சியை விளக்கும் படிமலர்ச்சிக் கோட்பாடுகள் வலுப்பெறத் துணை நின்ற கோட்பாடிகளுள், செவிலியர் தி சீன் பாப்திசுது பியரி அண்டாய்னி மோனெட்டு இலெமார்க்கு (Chevalier De Jean Baptiste Pierre Antoine De Monet Lamark) கொள்கைகள் முதன்மையானவையாகும்.
இலெமார்க்கு பிரெஞ்சு நாட்டில் பிக்கார்டி (Picardy) என்னுமிடத்தில் கி.பி. 1744–ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பெற்றோரின் 11 குழந்தைகளுள் இவரே இளையவர். கத்தோலிக்கப் பள்ளியில் பயின்று கொண்டிருந்த இவர் தந்தையின் மறைவிற்குப்பின் இராணுவத்தில் கி.பி. 1761–68 வரை பணிபுரிந்தார். உடல் நலமின்மையால் இராணுவத்திலிருந்து விலகிப் பாரிசுக்குச் சென்று மருத்துவம், தாவரவியல் ஆகியவற்றைப் பயின்றார். இங்குப் பயின்று கொண்டிருந்தபோது பிரெஞ்சுத் தாவரவியல் அறிஞர் சார்டின் து இராய் (Jardin du Roi) அவர்களுடன் தொடர்பு கொண்டு ‘இராயல்’ தாவரவியல் பூங்காவில் பணியாற்றினார். இவர், தம் களஆய்வுப் பட்டறிவினைக் தொகுத்து கி.பி. 1278–ஆம் ஆண்டு ‘பிரெஞ்சு நாட்டின் தாவரங்கள்’ (French Flora) என்னும் தலைப்பில் மூன்று தொகுதிகளை வெளியிட்டார். இந்த வெளியீடு தாவரலியலுக்கு மிகுந்த பயனுடைய கையேடாக அமைந்தது. இதன் பின்னர், இலெமார்க்கு ஐரோப்பாவின் பல்வேறு அருங்காட்சியகங்களுக்கும் பூங்காக்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். திதரோத்து (Diderot) தொடங்கிய முறையியற் கலைக் களஞ்சியப் (Methodic Encyclopaedia) பணியினை அவரது மறைவிற்குப்பின் தொடர்ந்து பல தொகுதிகளை வெளியிடும் பொறுப்பையும், அரசு உலர்தாவரக் கூடத்தின் (Royal Herbarium) காப்பாட்சியர் பொறுப்பையும் ஏற்றார்.
அருங்காட்சியகச் சீரமைப்பில் இவரது பங்கு கலையானது. ‘இயற்கை வரலாற்றில் அருங்காட்சியகம்’ (Museum d Historic Naturelle) தொடங்கப்பட்டபோது முதுகெலும்பில்லாப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்று அரிய விலங்கினங்களைச் சேகரித்து வகைப்படுத்தி வைத்தார். இதன் பயனாய் விலங்கினங்களையும் தாவரங்களையும் வகைப்படுத்தும் அறிவியல் துறையில் ஈடுபட்டார். படிமலர்ச்சி பற்றிய இலெமார்க்கின் ‘பயனுண்மை–பயனின்மை விதி’ (Law of Use and Disuse), ‘முயன்று பெற்ற பண்புகள் மாபுவழியிலமைவதாகும்’ (Inheritance of Acquired Characters) என்னும் இரண்டு கொள்கைகளுமே படிமலர்ச்சியியலில் குறிப்பிடத்தக்க வாதத்தைத் தொடங்கின. இவர் செருமானிய மொழியில் எழுதி கி.பி. 1809–ஆம் ஆண்டு வெளியிட்ட ‘விலங்கியல்தத்துவம்’ (Zoological Philosophy) என்னும் நூலில் இக்கோட்பாடுகளைக் குறிப்பிட்டார்.
விலங்குகளும் தாவரங்களும் தாம் வாழும் சூழ்நிலைகளின் அமைப்பிற்கேற்றவாறு தகவமைந்து அச்சூழலின் பண்புகளை ஏற்று வாழ்கின்றன. இவ்வாறு ஒரு புதிய சூழலின் பண்பினை ஏற்று வாழும் போது பழைய சூழலில் தான் கொண்டிருந்த தகவமைப்பை மாற்றிக் கொள்கிறது. இதனால் உறுப்புகளும் அதன் தன்மைகளுக்கேற்ப மாற்றம் பெறுகின்றன. தேவையுள்ள உறுப்புகள் வளம் பெற்றும் தேவையற்ற உறுப்புகள் வலுவிழந்தும்விடுகிறது என்பதே இலெமார்க்கின் ‘பயனுண்மை விதியாகும்’, இந்த விதியினை நிலைநிறுத்த இலெமார்க்கு பல எடுத்துக்காட்டுகளைக் காட்டியுள்ளார். முற்காலத்திய ஒட்டகச் சிவிங்கி குட்டையான முன்னங்கால்களையும் குட்டையான கழுத்தினையும் கொண்டிருந்தது. அப்போது இவ்விலங்கு புற்களையும் தாழ்ந்த இடத்திலுள்ள செடிகொடிகளையுமே உண்டுகொண்டிருந்தது. காலப் போக்கில் இவ்விலங்கின் வாழிடச் சூழலில் புற்களும் தாழ்வுஇடச் செடிகொடிகளும் குறைந்து விட்டதால் ஒட்டகச்சிவிங்கி மரக்கிளைகளை நாடிச் சென்றது, உயரத்திலிருந்த தழைகளை மேயக் கழுத்தை நீட்டியும், முன்னங்கால்களை தூக்கியும் செயற்பட்டு வந்ததால் காலப்போக்கில் மிக நீண்ட கழுத்தினையும் நீண்ட முன்னங்கால்களையும் பெற்றுவிட்டது.
இலெமார்க்கின் இரண்டாம் கொள்கை ‘முயன்று பெற்ற பண்புகள் மரபுவழியமைவதாகும்’ என்பது உயிரிகளின் வாழிடச் சூழலில் மாற்றம் ஏற்படும் போது அப்புதிய சூழ்நிலையில் வாழ வேண்டிய தேவை ஏற்படுகிறது. இப்புதிய சூழலில் வாழ்க்கை அமைப்பை மேற்கொள்ளப் புதிய தகவமைப்புத் தேவையாகும் போது அதனால் எற்படும் மாற்றங்கள் மரபுவழி அமையப் பெறுகின்றன என்பது இலெமார்க்கின் வாதமாகும். முன்கூறப்பட்ட எடுத்துக்காட்டின் படி, நீண்ட கழுத்தையும் நீண்ட முன்னங்கால்களையும் பெற்ற ஒட்டகச் சிவிங்கியின் வழிக் தோன்றல்களிடத்திலும் இப்பண்பு காணப்படும் என்றார்.
இலெமார்க்கின் கொள்கைகளை ஆதரித்தவர்களுள் கோப்ரே செயிண்ட் இலேயர் (Geoffroy Saint Hilaire), குவியர் (Cuvier) ஆகியோர் முதன்மையானவர். இவர்கள் இருவரும் இலெமார்க்கின் கருத்துகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. விலங்குகளின் உறுப்புகளில் ஏற்படும் மாற்றம் சூழ்நிலைத் தாக்குதலினாலேயன்றிப் பயனுண்மை – பயனின்மை விதியைப் பொறுத்து அன்று என்பார் இலேரி, குவியர் இலெமார்க்கின் கொள்கையை ஆதரித்தாலும் சில மாற்றுக் கருத்துக்களையும் கொண்டுள்ளார். சிறப்பினங்கள் (Species) புதிய சூழலில் முதலில் மாறும் தன்மையைக் கொண்டாலும், பின்னர் எதிர்த்து நிற்கும் தன்மையைப் பெற்றுவிடுகின்றன என்பார் இவர்.
இலெமார்க்குக் கொள்கையை எதிர்த்தவருள் ஆகசுட்டு வீசுமான் (August Wcisman) முதன்மையானவர். இவர் கருத் திசு ஊன்நீர்மத் தொடர்ச்சிக் கோட்பாடு (Theory of Continuity of Germplasm) என்னும் தம் கோட்பாட்டை முன்வைத்து உயிரினங்களிடையே ‘முயன்று பெற்ற பண்புகள் மரபுவழி அமையா’ என வாதிட்டார். உயிரியின் ஒவ்வோர் உட்கருவிலும் (Nucleus) மரபுப் பொருள் உள்ளது. இதனை உயிரிகள் புதிதாக உருவாக்க இயலாது. புறச் சூழலின் மாற்றம் ஒவ்வோர் உயிரியின் கருத் திசு ஊன்நீரின் தன்மையை மாற்றுவதில்லை. ஆகவே உட்கருவிலுள்ள கருத் திசு ஊன்நீரின் தொடர்ச்சி மாற்றமின்றி மரபுவழியாகச் செல்லும் தன்மையது.
இலெமார்க்கின் உயிரியல் ஆய்வுகள் இத்துறையில் பெருந்திருப்பத்தினை உண்டாக்க வித்திட்டது. இவர் இயற்பியல் செயல்முறைகளுக்கும் (Physical Process) வேதியியல், மண்ணியல், காலநிலை வாழ்க்கை முதலானவற்றிற்கும் உள்ள தொடர்பினை ஆழ்ந்தறிந்து இரண்டு தொகுதிகளை வெளியிட்டார். இவரது படைப்புகளுள் ‘முதுகெலும்பற்ற உயிரிகளின் அமைப்பு’ (System of Invertebrate–Animals, 1801), ‘நீரகமண்ணியல்’ (Hydrogeology, 1802), ‘முதுகெலும்பற்ற உயிரிகளின் இயற்கை வரலாற்றியல்’ (Natural History of Invertebrate-Animals, 1815-1822) முதலானவையும் குறிப்பிடத்தக்கனவாம்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 444)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gmrfnxpc/
தமிழ்“இலெமார்க்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gmrfnxpc/APA
Oliyon Research. (2026). இலெமார்க்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gmrfnxpc/MLA
"இலெமார்க்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gmrfnxpc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment