புள்ளியியலில், செய்முறை வடிவமைப்பு (experimental design) முறை முதன் முதலில் வேளாண் ஆய்வில்தான் பயன்பட்டது. ஆய்வுகள் செய்து, பாகுபாடற்ற முடிவுகளை அடைவதற்குச் செய்முறை வடிவமைப்பே ஏற்ற முறை என்பதை ஆர். ஏ. ஃஷா் என்பார் 1923இல் கண்டு பிடித்தார். பாகுபாட்டை அகற்றவும். திட்டப் பிழையைப் பற்றிய முறையான முடிவுகளை அடையவும், சம வாய்ப்பு தன்மை தேவைப் படுகிறது. இந்த ஆய்வில், எண்ணற்ற ஐயங்கள் உருவாகி, அவற்றை போக்கப் புதுப் புது முயற்சிகளும், திட்டங்களும் உருப் பெற்றன. அவற்றில், சம வாய்ப்புக் கட்ட வடிவமைப்பும் (randomised block design), லத்தீன் சதுரத் திட்ட அமைப்பும் (latin square design) முக்கியமானவை. செய்முறை வடிவமைப்பில், சம வாய்ப்புக் கட்ட வடிவமைப்பு மிகுதியாகப் பயன் படுகிறது. இதை அமைப்பது மிக எளிது. மேலும், இது சம வாய்ப்பைக் கொடுக்க வல்லதாகும். மூன்று வகைக் கோதுமையை உரமிட்டுப் பராமரிக்கும் 5 முறைகளைக் கொண்டு சோதிக்க விரும்பினால், நில வளத்தைப் பொறுத்து, ஒரு படித்தான தன்மை வாய்ந்த ஒரு பெரிய நிலப் பகுதியிலிருந்து சதுரமான அல்லது நீள் சதுரமான ஒரு நிலப் பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதை, மூன்று சம வரிசைகளாகவும், ஒவ்வொரு வரிசையிலும் 5 சம பகுதிகள் வருமாறும், 15 சம அளவு கொண்ட நிலப் பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். குலுக்கல் முறையாலோ, சம வாய்ப்பெண்கள் முறையிலோ தேர்ந்தெடுக்கப்பட்ட கோதுமையின் மூன்று வகைகள் வரிசைக்கு ஒன்றாகச் சம வாய்ப்பு முறையில் பயிரிடப்படுகின்றன. அதன் பிறகு, ஒவ்வொரு வரிசையிலுமுள்ள ஐந்து சம பிரிவுகள், ஒவ்வொன்றிலும் ஒரு பராமரிக்கும் முறை சம வாய்ப்பு முறையில் தீர்மானித்த பிறகு, ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வுக்குப் பிறகு, நிரைகள் (rows) வகைகளையும், நிரல்கள் (coloumn) வெவ்வேறு பராமரிக்கும் முறைகளையும் குறிக்கும் பட்டியல் தரப் படுவதால், கொடுத்த விவரம் ஆராயப்பட்டு, பராமரிக்கும் முறைகளுக்கிடையே காணும் வேறுபாடு முறையாகக் கணிக்கப்படுகிறது. இரண்டாம் வடிவமைப்பான லத்தீன் சதுரத் திட்ட அமைப்பு வேளாண் ஆய்வில் பெரிதும் பயன் படுகிறது. இதைக் கொண்டு இரு வழிப் பாகுபாட்டிற்குத் தேவையான நிலப் பகுதியைக் கொண்டே மூவழிப் பாகுபாட்டு ஆய்வை நடத்தலாம். சான்றாகக் கீழ்க் காணும் சதுரத் திட்ட அமைப்பைக் காணலாம். இது போன்று 576 நான்கு வரிசை லத்தீன் சதுரத் திட்ட அமைப்புகளும், 161280 ஐந்து வரிசைத் திட்ட அமைப்புகளும், 812851200 ஆறு வரிசைத் திட்ட அமைப்புகளும் உள்ளன. இம்முறையில், ஒவ்வோர் ஆய்வுக்குரிய மாறியால் எழும் பிரிவுகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டும். எனவே, ஒரு நிரையில் n கட்டங்களும், ஒரு நிரலில் n கட்டங்களும் இருக்கும். ஏட்ஸ் (yates) நூலிலிருந்து, சம வாய்ப்பு முறையில் n வரிசை லத்தீன் சதுரத் திட்ட அமைப்பு ஒன்று தேர்ந்தெடுக்கப் பட்டு, நிரை, நிரல்கள் பலவாறு மாற்றிய பின் கிடைக்கும் சதுரத் திட்ட அமைப்பிற்கேற்ப A, B,C எழுத்துகள் n² பிரிவுகளுக்கு வழங்கப் படுகின்றன. ஒவ்வொரு நிரையிலும் அதற்குரிய பராமரிக்கும் முறை சம வாய்ப்பு முறையில் தீர்மானிக்கப்படுகிறது. அதே போன்று, நிரல்கள் வெவ்வேறு வகைகளைச் சம வாய்ப்பு முறையில் பெறுகின்றன. A, B, C,…… என்பவை கொடுக்கப் படும் உரத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். A எழுத்து இடம் பெற்ற நிலப் பகுதியில் 10 நாளுக்கொரு முறையும், B இடம் பெற்ற நிலப் பகுதியில் 15 நாளுக்கொரு முறையும், C இடம் பெற்ற நிலப் பகுதியில் 20 நாளுக்கொரு முறையும் உரம் இடம் பெறலாம். விளைச்சலின் அளவு கணக்கிட்டுத் தேர்ந்தெடுத்த சதுரத் திட்ட அமைப்பிலுள்ள எழுத்துகளுடன், அந்தந்தக் கட்டங்கள் குறிக்கும் நிலப் பகுதி விளைச்சலளவு குறிக்கப்படுகிறது. பரவற்படிப் பகுப்பாய்வு (analysis of variance) முறையைப் பயன் படுத்தி, மாறிகளில் ஏற்பட்ட விளைச்சலின் வேறுபாடு எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததென ஆராயப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நிலப் பகுதியின் நில வளம் ஒன்று போல் அமையா விடில், ஒரு மாறியால் ஏற்படும் பலனை ஆய்வு செய்ய இவ்வமைப்புப் பயன்படுகிறது. இவ்வமைப்பை விடச் சம வாய்ப்புக் கட்டத் திட்ட அமைப்பு பல வகையிலும் சிறந்தது. —எம். அரவாண்டி