இறுதித் தணிக்கை
iṟutit taṇikkai
நிறுவனக் கணக்குகளின் தணிக்கை அது தொடங்கியது முதல் முடியும் வரை விடாமல் தொடர்ந்து செய்யப்படுகிறது.
நிறுவனக் கணக்குகளின் தணிக்கை அது தொடங்கியது முதல் முடியும் வரை விடாமல் தொடர்ந்து செய்யப்படுகிறது. கணக்கு ஆண்டு முடிவு பெற்ற பின் தணிக்கை பெரும்பாலும் தொடங்கப்படும். நிதியாண்டு முடிவுற்றவுடன் நிறுவனக்கணக்குகளின் இருப்புகள் சரி கட்டப்பட்டு, இருப்புச் சோதனை, இலாப நட்டக் கணக்கு, இருப்புநிலைக் குறிப்புப் போன்றவை தயாரிக்கப்படும். இக்கணக்குகள் தயாரிக்கப்பட்டவுடன் இறுதித் தணிக்கை (Final Audit) தொடங்குகிறது. சில நேரங்களில், இவ்வகைக் கணக்குகள் முழுவதுமாகத் தயாரிக்கப்படுவதற்கு முன்பும் கூட நிதியாண்டு முடிந்தவுடன் இறுதித் தணிக்கை தொடங்கப்படுவதுண்டு.
பொதுவாக, இறுதித் தணிக்கை ஒரு முழுமையான விளக்கமிக்கதோர் ஆய்வாக அமைகிறது. ஆகவே, இதனை முழுமையான தணிக்கை (Complete Audit) என்றும் கருதுவர். ஒவ்வோர் ஆண்டும் கணக்கு ஆண்டு முடிந்தவுடன் இத்தணிக்கை தொடங்கப்பெற்று நடைபெறுவதால், இதனைக் ‘காலத் தணிக்கை’ (Periodical Audit) என்றும் கூறுவர். இத்தணிக்கை ஒரே மூச்சில் தொடங்கப்பெற்று முடியும் வரை நடைபெறுகிறது. அதுதான் இறுதித் தணிக்கையின் சிறப்பு. அதன் காரணமாகத் தணிக்கையர் எல்லாக் கணக்கு ஏடுகளையும் ஒருங்கே பெற்று நன்றாக ஆய்ந்திட முடிகிறது. தணிக்கையாண்டின் எல்லா விவரங்களும் தணிக்கையருக்கு ஒரு கோவையாகத் தங்கு தடையின்றிக் கிடைக்கிறது. இவ்வகைத் தணிக்கையில் தணிக்கையர் நிறுவனத்திற்குச் சென்று, தணிக்கையைத் தொடங்கி முடியும் வரை தங்கிச் செயற்படுகிறார்.
தணிக்கையருக்குத் தொடர்ச்சித் தணிக்கையில் (Continuous Audit) உள்ள வசதிகள் இறுதித் தணிக்கையில் இல்லை. ஒரு தணிக்கையருக்குப் பல வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். எல்லா நிறுவனங்களுக்கும் அவரால் முடிந்தபொழுது, அவர்தம் உதவியாளர்களைக் கொண்டு நிறுவனங்களின் தணிக்கையைப் பகுதி பகுதியாகச் செய்து முடிப்பார். அவ்வுதவியாளர்களுக்கு ஆண்டுமுழுவதும் வேலை கொடுத்திடவும், அனைத்து நிறுவனங்களின் தணிக்கையைச் செய்து முடித்திடவும் தொடர்ச்சித் தணிக்கை பெரிதும் உதவும்.
ஆனால், இறுதித் தணிக்கையில் தணிக்கை தொடங்கினால், அது முடியும் வரை தொடர்ந்து நடைபெற வேண்டும். கணக்குகளை மாற்றி எழுதுதல், திருத்தி மோசடி செய்தல் போன்ற வாய்ப்புகள் இத்தணிக்கையில் மிகவும் குறைவு. அவ்வகையில் தணிக்கையர் தம் வேலைகளைச் செவ்வனே செய்து முடிக்க இறுதித் தணிக்கை பெரிதும் உதவுகிறது. மேலும், இறுதித் தணிக்கை மேற்கொள்ளும் தணிக்கையர் பெருமளவில் உதவியாளர்களை வைத்திருக்க வேண்டிய தேவையில்லை.
இறுதித் தணிக்கையை முழுமையான தணிக்கை என்றும் கருதுவதுண்டு. ஆனால், இத்தணிக்கையில் அனைத்து நடவடிக்கைகளும் விடுபடாமல் ஆய்வு செய்யப்படுகின்றன என்று சொல்ல முடியாது. ஆகையால், முழுமையான தணிக்கை என்று இதனைக் கூறுவது அவ்வளவு பொருந்தாது.
பொதுவாக, இறுதித் தணிக்கை சிறிய நிறுவனங்களில் மட்டில் திறம்படச் செயற்பட முடிகிறது. பெரிய நிறுவனங்களுக்கு இவ்வகைத் தணிக்கை அவ்வளவு சிறப்புடன் அமையாது. ஏனெனில், தணிக்கை முடிய காலம் மிகுதியாகும். முக்கியமாகக் கம்பெனித் தணிக்கையில் தணிக்கை முடிந்து ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் (Annual General Meeting) மட்டிலுமே பங்குதாரர்களுக்கு எவ்வளவு பங்காதாயம் (Dividend) என்பது முடிவு செய்யப்படுகிறது. தணிக்கை முடிய அதிக நாள் பிடித்தால், பங்குதாரர்கள் (Share–Holders) பங்காதாயம் அடைய நீண்ட நாள் காக்க வேண்டி வரும். அது கம்பெனியின் வளர்ச்சிக்கு அவ்வளவு நல்லதன்று. ஆகையால், இறுதித் தணிக்கை சிறிய நிறுவனங்களுக்குப் பொருந்தும் அளவுக்குப் பெரிய நிறுவனங்களுக்குப் பொருந்தாது. பி.இரா.
துணை நூல்கள்
Tandon, B.N., A Hand Book of Practical Auditing, S. Chand and Company, Madras, 1970.
Kamal Gupta, Contemporary Auditing, Tata Mc Graw Hill Publishing Company Limited, New Delhi, 1977.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 520)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gk5b73xk/
தமிழ்“இறுதித் தணிக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gk5b73xk/APA
Oliyon Research. (2026). இறுதித் தணிக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gk5b73xk/MLA
"இறுதித் தணிக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gk5b73xk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment