அத்து மீறுதல்
attu mīṟutal
அத்து மீறுதல் என்பது சட்டத்தை மீறுதல்; அதாவது பிறர் நில எல்லையை மீறுதலாகும்.
அத்து மீறுதல் என்பது சட்டத்தை மீறுதல்; அதாவது பிறர் நில எல்லையை மீறுதலாகும். இந்தியத் தண்டனைச் சட்டப்படி அத்து மீறுதல் குற்றமாகவும் உரிமையியற் சட்டப்படி தீங்காகவும் கருதப்படுகிறது.
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 441–இன் படி, மற்றவர் உடைமையில் உள்ள நிலத்தில் நுழைதலும், சட்டப்படி நுழைந்த பின்னர்ச் சட்ட முரணான வகையில் அங்குத் தங்கியிருத்தலும் குற்றமாகும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நுழைதலும் தங்கியிருத்தலும், ஒரு குற்றத்தைப் புரியவோ அந்நிலத்தில் உடைமை பெற்றவர்களை அச்சுறுத்தவோ அவமதிப்பு அல்லது தொந்தரவு செய்யும் கருத்துடனோ செய்யப்பட்டிருக்கலாம்.
வீட்டினுள் அத்து மீறி நுழைதல், பதுங்கி வீட்டினுள் அத்து மீறி நுழைதல், இரவு நேரத்தில் பதுங்கி வீட்டில் அத்து மீறுதல், மற்றும் கன்னம் வைத்து வீட்டில் நுழைதல் ஆகியன இக்குற்றத்தின் கடுமையான வகைகளாகக் கருதப்படுகின்றன. சிறைத் தண்டனை, ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை பெறத்தக்க குற்றத்தைச் செய்யும் நோக்கத்தோடு வீட்டில் அத்து மீறி நுழைதல், குற்றத்தை மேலும் கடுமையாக்கும்.
சட்டப்படியான காரணமோ முறையோ இல்லாமல் ஒருவருடைய உடைமையில் உள்ள நிலத்தில் அனுமதி இன்றி நுழைதலும், அங்கு ஒரு பொருளை வைத்தலும், தங்கியிருத்தலும், நிலத்தின் மேல் ஒரு பொருளை நீட்டிக் கொண்டிருக்குமாறு செய்தலும் அத்து மீறுதல் ஆகும். ஒருவர் உடைமையில் உள்ள நிலத்தில் மற்றொருவர் தாமே நுழையாமல் பிறரைப் புகச் செய்தலும் அத்து மீறலேயாகும். ஒருவருடைய நிலத்தின் எல்லையைச் சிறிது கடந்து சென்றாலே அது அத்து மீறலாகும். அத்து மீறலினால் ஒருவருக்கு உண்மையில் பொருட்சேதமோ இழப்போ ஏற்பட்டிருக்க வேண்டுமென்பதில்லை. அத்து மீறலாகும் செயல்களால் பொது அமைதி குலைவதைத் தடுக்கும் கருத்துடன் இச்சட்டம் தோன்றியிருக்கக் கூடும். அத்து மீறலுக்கு எடுத்துக்காட்டுகளாக, ஒருவரின் நிலத்தின் மீது கல்லெறிதல், குதிரையோட்டுதல், கார் ஓட்டுதல், அங்குள்ள பொருள்களைச் சேதப்படுத்துதல், வீட்டுச் சுவரில் ஆணி அடித்தல், நில எல்லைக்குள் செடி கொடிகள் பரவிப்படருமாறு செய்தல், வீட்டுச் சுவரில் ஏணியைச் சாய்த்து வைத்தல், காற்று போன்ற இயற்கைச் சக்திகளால் மற்றொருவருடைய நிலத்திற்கு அடித்துச் செல்லுமாறு நிலத்தருகில் வேண்டுமென்றே குப்பை கூளங்களைக் கொட்டி வைத்தல் முதலியவற்றைக் கூறலாம். ஒருவருக்குச் சொந்தமான விலங்குகள், கால்நடைகள் அடுத்தவர் நிலத்தில் நுழைந்தால், அவர் அத்து மீறல் என்ற தீங்கினைச் செய்தவராகக் கருதப்படுவார். இவை யாவும் தீங்கியற் சட்டப்படி, தீங்குகளாகக் கருதப்படுகின்றன.
அத்து மீறலாகிய தீங்கினைக் கண்ணுக்குப் புலனாகக் கூடிய ஒரு பொருள் மூலமாகவோ தொட்ட- றிய முடியாத, கண்ணுக்குப் புலனாகாத ஒன்றின் மூலமாகவோ செய்யலாம்.
சட்டத்தின் பார்வையில், ஒவ்வொரு மனிதனின் நிலமும் மற்றவர் நிலத்திலிருந்து தனித்தனியே பிரித்து வைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இரு நிலங்களுக்கு இடையே வேலியோ தடுப்போ இல்லாத போதும், கண்ணுக்குப் புலனாகாத ஓர் எல்லை இருப்பதாகக் கருத வேண்டும். நெடுஞ்சாலையை ஒருவன் கடந்து செல்வதற்கு மட்டும் பயன்படுத்தாமல், அதில் முறையின்றிக் கால்நடைகளை மேய விடுதலும் அதன்மீது முறையின்றி அமர்ந்திருந்தலும் அடுத்துள்ள நிலங்களில் நடப்பதைக் கண்காணிக்கும் நோக்கத்துடன் இங்கும் அங்கும் அதில் போய் வருதலும், அத்து மீறல்களேயாகும்.
நிலத்தின் மேலுள்ள காற்று மண்டலத்தை உரிமை கொண்டாலும் அத்து மீறுதலாகும். ஆயினும் ஒருவரது நிலத்தின் மேலுள்ள வானவெளியில் விமானம் முறையாகப் பறந்து செல்வது அத்து மீறல் ஆகாது. ஆனால், ஒருவருக்கு இடையூறு கொடுக்கும் வகையில் வான ஊர்தியைப் பறக்கச் செய்தலும் இறக்குதலும் அதில் இருந்து பொருள்களை விழச் செய்தலும் அத்து மீறலாகக் கருதப்படும்.
ஒரு நிலப்பரப்பு யாருக்கு உடைமையானதாக உள்ளதோ அவருக்கே அந்நிலத்தின் கீழுள்ள அடித்தளமும் உடைமையானதாக எண்ணப்படும். எனவே நில மட்டத்தின் கீழ் உள்ள மண்ணுக்கடியில் உரிமை கொண்டாடுதல் நிலத்தின் மேற்பரப்பில் அத்து மீறுதல் போன்றதேயாகும். ஆதலால் ஒருவர், மற்றவர் நிலத்திற்குக் கீழே உள்ள நிலக்கரியை, அவருடைய இசைவின்றி எடுத்தால், அது அத்து மீறல் என்ற தீங்காகும்.
சட்டப்படியான காரணம் இல்லாமல், ஒருவர் மற்றவரது உடலைத் தாக்குவதும், மற்றவர் தன்னை உடனடியாகத் தாக்கக்கூடும் என்ற அச்சத்தை உள்ளத்தில் தோற்றுவிப்பதும் அத்துமீறல் என்ற குற்றத்தின் பாற்படும். எனவே, ஒருவர் தனக்குச் சேதம் அல்லது ஊறு ஏற்பட்டது என்று மெய்ப்பிக்காமலேயே அவரது தனித்த உரிமையில் நேரடியாகவும் உடனடியாகவும் குறுக்கிடும் பொழுது வழக்கிடலாம்.
ஒருவருடைய உடைமையான அசையும் சொத்தில் மற்றவர் முறையின்றிக் குறுக்கிடலும் அத்து மீறுதல் ஆகும். ஒருவர் உடைமையில் உள்ள பொருளை முறையின்றி நகர்த்தலும், தொடலும் அத்து மீறுதல் ஆகும். எடுத்துக்காட்டாக, காரில் உள்ள சக்கரத்தை அகற்றல், ஒருவருடைய விலங்குகளை அடித்தல், கொல்லுதல், அவற்றிற்கு நோய் தொற்றச் செய்தல், சிற்பங்களைக் சிதைத்தல், ஓவியங்களில் கிறுக்குதல் முதலியவற்றைக் கூறலாம்.
அத்து மீறலுக்காக வழக்கிட்டுத் தீங்கீடு பெற, ஒருவர் தமக்கு ஏற்பட்ட இழப்பை அல்லது சேதத்தை நேரடியானது என்று மெய்ப்பிக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, ஒருவர் மற்றவர் கட்டிடத்தின் மீது கல்லை எறிந்து சேதப்படுத்துவது நேரடியானதாகும். ஆனால், பாழடைந்த நிலையில் உள்ள ஒருவரது வீட்டுப் புகைக் கூண்டிலிருந்து கற்கள், பெயர்ந்து தானாக மற்றொருவர் கட்டடத்தில் அல்லது நிலத்தில் விழுதல் தொல்லை எனும் தீங்கேயன்றி அத்து மீறல் என்னும் தீங்காகாது.
ஒருவர் மற்றொருவரிடம் அனுமதி அல்லது உரிமம் பெற்று நிலத்தில் நுழைவது அத்து மீறல் அன்று. அனுமதி வெளிப்படையாகவோ உட்கிடையாகவோ வழங்கப்படலாம். அவ்வாறு வழங்கப்பட்ட அனுமதியை ஒருவர் தம் விருப்பப்படி விலக்கிக் கொள்ளலாம். கொடுத்த அனுமதி விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர், அனுமதியின் அடிப்படையில் எந்தச் செயல் செய்வதும் முறையாகாது. அனுமதி பெற்றுச் செய்யப்பட்ட செயல்கள் தீங்குகளாகக் கருதப்பட மாட்டா. ஒரு செயலைச் செய்யக் கொடுக்கப்பட்ட அனுமதி, வேறு எந்த உரிமையையும் அந்நிலத்தின் மீது வழங்குவதில்லை. அனுமதி பெற்றவர். அத்து மீறியவர் அல்லர் என்பதை மட்டுமே அது குறிக்கிறது.
வெளிப்படையாகக் கொடுக்கப்படும் அனுமதிக்கு எடுத்துக் காட்டுகளாகப் பின் வருவனவற்றைக் கூறலாம்; மற்றவர் நிலத்தில் மரம் வெட்டும் உரிமை, திரைப்பட, நாடக அரங்குகளில் திரைப்படம், நாடகம் பார்த்தல் ஆகிய இவற்றில் அனுமதி வெளிப்படையாகக் கொடுக்கப்படுகிறது. இவை தவிர, அனுமதி உட்கிடையாகவும் வழங்கப்படலாம். இதை, அனுமதி கொடுப்பவரின் நடத்தையில் இருந்து ஊகித்து அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, ஒருவர், தமது நிலத்தில் மற்தொருவர் ஆடு மாடுகள் மேய்ப்பதைப் பார்த்துக்கொண்டு வாளாவிருந்தால், அச்செயலை அவர் அனுமதித்துள்ளதாக உட்கிடையாகக் கொள்ளலாம்.
அனுமதி பெற்றவர், அதை வேறு ஒருவருக்கு உரிமை மாற்றம் செய்ய இயலாது. அனுமதி என்பது, ஒருவர் மற்றொருவருக்குத் தனிப்பட்ட முறையில் அளிக்கும் உரிமையாகும். எனவே, அனுமதி பெற்றவர், அச்சொத்தைப் பயன்படுத்துவதற்கு பயன்படுத்துவதற்கு இடையூறாக இருக்கும் வேறு ஒருவர் மீது வழக்கிட முடியாது. ஆனால் அனுமதி கொடுத்தவர் மீது ஒப்பந்த மீறலுக்காக வழக்கிடலாம்.
ஒருவர் மற்றொருவரிடம் அனுமதி அல்லது உரிமம் பெற்ற நிலத்தில் நுழைவது அத்து மீறல் ஆவதில்லை என்று மேலே பார்த்தோம். ஆயினும் அவர், அனுமதி அல்லது உரிமம் பெற்றுச் சட்டப்படியான அதிகாரத்துடன் நுழைந்து, பின்னர்த் தீங்கான செயலைச் செய்து, அவர் தம் அதிகாரத்தை முறையின்றிப் பயன்படுத்தினால், அவர் தம் அதிகாரத்தை முறையின்றிப் பயன்படுத்திய அக்கணம் முதலே அந்நிலத்தில் அத்து மீறி நுழைந்தவராகக் கருதப்படுவார்.
உண்பதற்காக உணவு விடுதியில் நுழைந்த ஒருவர், அங்குள்ள பண்டங்களையும் பாத்திரங்களையும் திருடினால், அவர் அவ்விடுதியில் நுழைந்த நேரத்தில் இருந்தே அத்து மீறல் செய்ததாகக் கருதப்படுவார். அதாவது அவருடைய செயல், தொடக்கத்திலிருந்தே அத்து மீறலாகக் கருதப்படும். இது அடி முதலே அத்து மீறல் என்றும் கூறப்படும் (Trespass ab initio). ஒருவருடைய புறச்செயல் அவரது மறைவான உட்கருத்தைப் புலப்படுத்தும் எனச் சட்டம் கருதுகிறது. சட்டப்படி, நுழைந்தவரின் முறையற்ற செயல் அவர் அங்கு நுழையக் காரணமோ நியாயமோ சிறிதும் கிடையாது என்று கூறத்தக்க முறையில் அமைகிறது.
அத்து மீறல், உடைமைக்கு எதிராகச் செய்யப்படும் தீங்காகுமே தவிர உரிமைக்கு எதிராகச் செய்யப்படும் தீங்கன்று. அத்து மீறல் நிகழும் பொழுது, நிலம் யாருடைய உடைமையில் இருக்கிறதோ அவர் தாம் அத்து மீறறுக்காக வழக்கிட முடியும். எடுத்துக் காட்டாக, ஒரு நிலச் சொந்தக்காரர், தம் நிலத்தைக் குத்தகைக்கு விட்டிருக்கின்றார்; அந்நிலத்தில் அத்து மீறல் நிகழ்ந்தால், அவர் வழக்கிட முடியாது. குத்தகை பெற்றவர்தாம் அத்து மீறலுக்காக வழக்கிடலாம். ஆனால், மரத்தை வெட்டுதல், கட்டிடங்களை இடித்தல் போன்ற நிரந்தர நலன்கனைப் பாதிக்கும் தீமைகள் செய்யப்படும் பொழுது நிலத்தின் சொந்தக்காரர் வழக்கிடலாம்.
மற்றவர் நிலத்தில் புகுந்து அத்து மீறல் செய்கின்றவர், அங்கிருக்கும்வரை தொடர்ந்து அத்து மீறிக் கொண்டிருப்பவராகவே கருதப்படுவார். இவ்வாறே, ஒரு பொருளை மற்றவர் நிலத்தில் வைப்பதின் மூலம் அத்து மீறல் செய்பவர், அப்பொருள் அங்கிருந்து நீக்கப்படும் வரை தொடர்ந்து அத்து மீறல் செய்து கொண்டிருப்பவராகக் கருதப்படுவார். அத்து மீறி இன்னொருவர் நிலத்தில் புகுந்தவர், தொடர்ந்து அங்கிருக்கும் ஒவ்வொரு நாளும் தனித்தனியாக அத்து மீறல் செய்தவராகக் கொள்ளப்படுவர், ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே வழக்கிடலாம், அவ்வாறே, அத்து மீறல் செய்த பொருள் அங்குள்ள வரை, ஒவ்வொரு நாளும் தனித்தனியாக அத்து மீறல் நிகழ்ந்ததாகக் கருதப்படும். அப்பொருள் அங்கிருந்து அகற்றப்படும் வரை, ஒவ்வொரு நாளும் வழக்கிடும் உரிமை, பாதிக்கப்பட்டவருக்கு இருக்கிறது. இவ்வகை அத்து மீறல்கள் தொடர்ந்து நிகழும் அத்து மீறல்கள் எனப்படும்.
சட்டப்படி செய்யப்படும் செயல்கள் அத்து மீறல் ஆவதில்லை. தன் கடமையைச் செய்வற்காகக், காவல் துறை அதிகாரி, மற்றவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் அல்லது கட்டிடத்தில் நுழைவது அத்து மீறல் ஆகாது. அவ்வாறே நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்றும் கடமை கொண்டவர்கள், நிலத்தினுள் நுழைதலும் அங்குள்ள பொருள்களை அங்குள்ளவர்களைக் கைது செய்யலும் அத்து மீறல்கள் ஆகா, ஏனெனில் இவை சட்டப்படியான செயல்களாகும்.
அத்து மீறலுக்காகத் தீங்கீடு, நிலச்சொத்தை மீட்டுப் பெறல், உரிமை பற்றி விளம்பல், உறுத்துக் கட்டளை ஆகிய தீர்வுகளை நாடி ஒருவர் உரிமை வழக்கிடலாம். இவை தவிரக் குற்றமாகும் அத்து மீறலுக்காகவும் வழக்கிடலாம். தவிர, குற்ற விசாரணைச் சட்டத்தின் (Criminal Procedure Code) 145–ஆம் பிரிவின் கீழ், அமைதியைக் குலைக்கக்கூடிய வகையில் நிலத்தைப் பற்றிய தகராறு இருப்பதாகக் குற்றத்துறை நீதிபதி தகவல் அறிந்தால், நிலம் யாருடைய உடைமை என்று தீர்ப்பு வழங்கி, உடைமையை இழந்தவர் மீண்டும் பெற அத்து மீறி நுழைந்தவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றலாம். ஆயினும் அளவு மீறி வன்முறையைப் பயன்படுத்தக் கூடாது. நிலத்தில் சட்டமுரணாகக் குடியேறியவரை 1963–ஆம் ஆண்டு குறித்த தீர்வுச் சட்டப்படி வெளியேற்ற நீதிமன்றத்தில் வழக்கிடலாம். இதன்படி ஒருவர் நிலத்தில் தமக்கு உள்ள உரிமையை நிலை நாட்டாமலேயே, நாம் இழந்து விட்ட உரிமையை மீட்டுப் பெறமுடியும். மற்றொருவர் தம் நிலத்தில் அத்துமீறி நுழைந்த போது, நில உடைமை தம்மிடம் இருந்ததாக அத்து மீறப்பட்டவர் மெய்ப்பித்தால் போதும். அத்து மீறி நுழைந்தவர் மீது வழக்கிடப்படும்போது எவரும் அத்து மீறப்பட்டவர் உடைமையில் உள்ள நிலம் மூன்றாமவருக்குச் சொந்தமானது என்று எதிர்வாதிட முடியாது. ஒருவருக்கு ஒரு நிலத்தில், உரிமை இருப்பினும், நீதிமன்றத்தின் துணையின்றி அந்நிலத்திற்கு உடைமை கொண்டவரிடம் இருந்து உடைமையைப் பறிக்க முடியாது. அத்துமீறிச் செய்தால் அவர் மேல் வழக்கிட்டு, உடைமையை மீண்டும் பெறமுடியும். ஆனால் உடைமையிலிருந்து அகற்றப்பட்ட ஆறு மாதங்களுக்குள் வழக்கிட வேண்டும். அத்து மீறி நுழைந்து உடைமையைக் கைப்பற்றியவர் இச்சட்டப் பிரிவின் துணையை நாட முடியாது.எஸ்.எம்.தே.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 317)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gjqx4ruz/
தமிழ்“அத்து மீறுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gjqx4ruz/APA
Oliyon Research. (2026). அத்து மீறுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gjqx4ruz/MLA
"அத்து மீறுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gjqx4ruz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment