சூழல் பொறியியல்
cūḻal poṟiyiyal
வாழுமிடங்களில், சுற்றுப்புறங்களில் ஏற்படும் விளைவுகளை மதிப்பீடு செய்து சுற்றுப்புறம் கெடுவதை இயன்ற வரை குறைப்பதற்கு உருவாகும் கல்வி, சுற்றுச் சூழல் பொறியியல் (environmental engineering) எனப்படும்.
வாழுமிடங்களில், சுற்றுப்புறங்களில் ஏற்படும் விளைவுகளை மதிப்பீடு செய்து சுற்றுப்புறம் கெடுவதை இயன்ற வரை குறைப்பதற்கு உருவாகும் கல்வி, சுற்றுச் சூழல் பொறியியல் (environmental engineering) எனப்படும். சமூகத்தின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்து, ஆடம்பர வாழ்விற்கு வழி வகுத்த தொழில் நுட்பத்தால், சுற்றுப்புறச் சீர் கேடு வாராமல் தடுக்க, சுற்றுச் சூழற் பொறியாளர்கள் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும், மாசுகளைத் திறமையாகக் கட்டுப் படுத்தும் தூய்மை முறைகளையும், அனைத்துக் கழிவுகளையும் தூய்மை செய்து, மீண்டும் பயன்படுத்த வகை செய்யும் சுழற்சி முறைகளையும் வடிவமைப்பதே தொழிற்சாலை மற்றும் அரசுச் செயலமைப்புகளின் குறிக்கோளாகும்.
மாசுபடுத்தும் பொருள்களைச் சுற்றுப் புறங்களில் கொட்டுவதை முறைப்படுத்தும் செந்தரங்களும், வரைமுறைகளும் தொழிற்சாலைப் பணிகளின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. நாட்டுச் சுற்றுச் சூழற் சட்டம் அரசு ஒழுங்கு முறைச் சட்டத்தின் ஒருங்கமைவிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். இச்சட்டம், அரசுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தொடர்புடைய தொழில் மற்றும் அரசு நடவடிக்கை ஒவ்வொன்றுக்கும் முன்பாகச் சுற்றுப்புறத்தின் மீதான தாக்கங்களை நுணுக்கமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறது. இதே போன்று, இந்தக் கூட்டரசின் சட்டத்திற்குப் பிறகு, உருவாக்கப்பட்ட மாநிலச் சுற்றுப்புறக் கொள்கைச் சட்டங்களும், மிக விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிடுகின்றன. இந்த ஆய்வுகள் பின் வரும் நடவடிக்கைகளுக்கு முன்னர்ச் செய்யப் பட வேண்டும்.
மின் நிலையம் மற்றும் செலுத்தத் தொடர்கள் (transmission lines), எரி வளிமத் துளைகள், இருப்புப் பாதைகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள், அணுவாற்றல் வசதிகள், விமான தளங்கள், சுரங்க வசதிகள் ஆகியன அமைத்தல்; போக்குவரத்துக்குப் பயன்படும் நீர் நிலைகளிலும், அவற்றின் கிளை நதிகளிலும், கழிவுகள் நிறைந்த நீர்மங்களைக் கலந்து விடும் தொழில் நிறுவனங்கள்; சாலை முன்னுரிமைகள், ஆழ் துளை அனுமதிகள், தாதுப் பொருள் வெட்டிக் கொள்ள குத்தகை மற்றும் பொது நிலத்தைப் பயன்படுத்தல்.
1970 டிசம்பரில், குடியரசுத் தலைவரின் ஆணையின் படி, சுற்றுப் புறப் பாதுகாப்பு நிறுவனம் (Environmental Protection Agency–EPA) உருவாக்கப்பட்டது. தூய்மையான காற்று மற்றும் காற்றின் தூய நிலைச் சட்டங்களை மேலும், நீட்டிப்புச் செய்யும் பொதுச் சட்டம் 91–604இன் படி ஓர் ஆணையரைக் கொண்ட இந்நிறுவனத்திற்குச் செந்தரங்களை முடிவு செய்வதும், நீர், காற்று இவற்றின் பண்புகளை உயர்த்துவதற்குக் கால அட்டவணை தயாரிப்பதும், முக்கிய கடமைகளாகும். இரைச்சல் கட்டுப்பாட்டுச் சட்டம், இயற்கை வளங்களை மீளப் பெறும் பாதுகாப்புச் சட்டம், நச்சுப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவற்றையும் இந்நிறுவனமே செயல் படுத்துகிறது. மாநில மற்றும் உள்ளூர் அரசுகளுக்கு நீர், காற்று ஆகியவற்றால், மாசுகளைக் கட்டுப்படுத்தவும், கழிவு நீரைத் தூய்மை செய்யும் வசதிகளை ஏற்படுத்தவும், நல்கைகள் வழங்குகிறது.
தொழில் கொள்கை. தொழில் துறைச் சுற்றுச் சூழல் குழுக்களின் மூலமாகப் பெருந் தொகையையும், தொழில் நுட்ப வளத்தையும் சுற்றுப்புறச் சீர் கேடுகளைக் கண்டு பிடித்து அகற்றுவதற்காகப் பயன்படுத்துகிறது. பல சுற்றுப்புறச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, நல வாழ்வு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வணிகவியல், பொறியியல் போன்ற பல துறை வல்லுநர்களின் கருத்துத் தேவைப்படுகிறது. நீர், காற்று ஆகியவற்றின் சிக்கல்கள் அவற்றிற்கே உரிய அணுகு முறையையும், தீர்வையும் கொண்டுள்ளன. வரைமுறைப்படுத்தும் செந்தரங்கள் (restricting standard) கடுமையாக உள்ளமையால், அனைத்துக் கட்டுப்பாட்டுக் கருவிகளும் தூய்மை மிகுந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும், தனித்தனிக் கட்டுப்பாடு (control) அமைக்கப்பட வேண்டும். வேதியியல் அல்லது இயற்பியல் முறைகளாலோ, இவ்விரண்டும் இணைந்த முறைகளாலோ, தூய்மையைக் கெடுக்கும் பொருள்களை அகற்றித் தூய்மை செய்யலாம். இம்முறைகளால், நீரை மீண்டும் பயன்படுத்தலாமெனக் கருதப் படுகிறது. காற்று அல்லது வளிம நிலையிலுள்ள மாசுகளை வடி கட்டல், உறிஞ்சல் ஆகிய முறைகளால் அகற்றி விட்டுத் தூய்மையான வளிமத்தை, வளி மண்டலத்திற்கு அனுப்பி விடலாம். பிரித்து அகற்றப் பட்ட மாசு உலர்ந்ததாக இருப்பினும், மிகக் கவனமாக அழித்திட வேண்டும். இல்லையேல், வேறு ஒரு புது, நீர் அல்லது காற்று மாசுச் சிக்கல் எழும்.
இயற்கை வளங்களைப் பிரித்தெடுக்கும் தொழில்கள் நிலப் பரப்பைச் சீர் குலைக்கின்றன. எனவே, சுரங்கத் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களிடம் நிலத்தைச் சீர் திருத்தி, முன்பிருந்த நிலைக்குக் கொண்டு வரும் பொறுப்பு வழங்கப் படுகிறது. மேற்பரப்பில் தாது வெட்டலின் மீதான கட்டுப்பாடு மற்றும் சீர் திருத்தச் சட்டம் தற்போது, நிலக்கரி வெட்டுவதை மட்டுமே தன் வரம்புக்கு உட்படுத்துகிறது. மேற்பரப்புத் தாதுக்களை வெட்டி எடுக்கும் பணிகளைக் கட்டுப் படுத்துவதற்கும் தாது எடுக்கப்பட்ட பின்னர்க் கை விடப்பட்ட நிலங்களைச் சீர் திருத்தி, முன்பிருந்த நிலைக்குக் கொணரவும், ஒப்புக் கொள்ளப்பட்ட செயல் திட்டங்களை உருவாக்கும்படி மாநிலங்களுக்கு, மைய அரசு ஆணையிடுகிறது. அனைத்துத் தாது வெட்டு நடவடிக்கைகளும், அந்தந்த மாநிலங்களில் உள்ளன. இச்சட்டங்கள் பல ஒப்புக் கொள்ளப் பட்ட செப்பனிடும் திட்டத்தையும், செப்பனிடும் பணி நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தையும், கட்டாயமாக்குகின்றன.
காற்றுத் தூய்மையைப் பராமரித்தல். வளிம நிலையிலுள்ள மாசு, பல ஆதார நிலைகளிலிருந்து வருகிறது. இம்மாசின் ஒரு குறிப்பிட்ட பகுதி இயற்கையாலேயே உருவாக்கப்படுகிறது. இதற்குத் தாவரங்களால் ஏற்படும் ஹைட்ரோ கார்பன்கள், மகரந்தம், தூசிகளைச் சுமந்து வரும் பெருங்காற்று, கந்தக டைஆக்சைடு, ஹைட்ரஜன் ஆகியவற்றை வெளி விடும் எரிமலைகள், தாவரங்களின் அழிவுகள், விலங்குகளின் கழிவுகள் ஆகியவை காரணமாகின்றன. மனிதனால் ஏற்படும் வளி மண்டல மாசுகளில், கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோ கார்பன் துகள்கள், கந்தக ஆக்சைடுகள், நைட்ரஜன் ஆக்சைடுகள் ஆகியவை பேரளவிலுள்ளன.
உட்கனற் பொறியைப் பயன்படுத்தும் அரசு மற்றும் தனியார் ஊர்திகள் இந்த மாசைத் தோற்றுவிக்கின்றன. அமெரிக்காவில், பெருமளவிலுள்ள மாசுகளில் 50% உட்கனற் பொறியிலிருந்து வருகிறதுஎன்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு வெளியேறும் பொருள்களைக் கட்டுப்படுத்த, EPA ஒரு தடுப்பு ஒழுங்கு சட்டத்தை இயற்றித் தானோடித் தொழில் நிறுவனங்கள் அதைப் பின்பற்ற வலியுறுத்துகிறது. தானோடிகள் வெளியிடும் கழிவுகளைக் கட்டுப் படுத்த வகை செய்யும் 1970ஆம் ஆண்டு தூய காற்றுச் சட்டம் வினையூக்கி மாற்றிகள் (catalitic converters) காரியக் கலப்பற்ற பெட்ரோலைப் பயன்படுத்துதல் போன்ற செலவு மிகுந்த புகையைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பின்பற்றும்படி விதிக்கிறது.
தொழிலகங்களும், எரி பொருளைப் பயன்படுத்தும் இடங்களும் முக்கிய மாசுகளில் 30% அளவிற்கு வெளி விடுகின்றன. நியூயார்க் நகரில் கந்தக டை ஆக்சைடு மற்றும் மிதக்கும் துகள்களின் அளவு 1965இலிருந்து 90% குறைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. எனினும், மூச்சுப் பாதை நோய்களால் ஏற்படும் சரிவு, துன்பம் ஆகியன குறையவில்லை.
சுற்றுப்புறக் காற்று, வெளியிடும் புகை ஆகியவற்றிற்கு எல்லா மாநிலங்களிலும், செந்தரங்கள் உள்ளன. இவை தொழிற்சாலைகள், வளிம நிலையம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப் பட்டுள்ளன. புகை போக்கி ஒன்றிலிருந்து வெளி வரும் புகையைக் குறிப்பிட்ட வரம்புக்கு உட்படுத்துவதே, வளிம மற்றும் துகள் கட்டுப்பாட்டிலுள்ள பொதுவான முனைப்பு ஆகும். பயன்படுத்தும் மூலப் பொருளின் எடையை அடிப்படையாகக் கொண்டு, வெளிவரும் புகை, வரம்புக்கு உட்படுத்தப்படுகிறது. மூலப் பொருள்களின் எடை (process weight), எஃகு மற்றும் கற்காரை ஆலைகளிலும், இரும்பல்லாத உலோக உருக்கு உலைகளிலும் மிகவும் அதிகமாக இருக்கும். இத்தகைய ஆலைகளில், புகை போக்கியில் புகும் எல்லாப் பொருள்களுக்கும் முழுமையாகக் கட்டுப்பாடு விதிக்க வேண்டியிருக்கும். இப்பொருள்- களைச் சேர்த்து வைக்கும் கருவிகள் அமைப்பளவிலும், பணச் செலவிலும் மிகுதியாக இருக்கும். சேமிப்புக் சுருவிகளில் மிகுந்த ஆற்றலுள்ள இழையாலான வடி கட்டும் அமைப்புகள், நிலை மின்சாரப் படிவிப்பான்கள் ஆகியன குறிப்பிடத் தக்கவை. ஒவ்வொரு கருவிக்கும் ஆகும் செலவு மதிப்பீடு செய்யப்பட்டுத் தேவையான சேமிப்புத் திறன் உள்ள கருவி தெரிவு செய்யப் படும்.
கந்தகத்தின் ஆக்சைடுகளைப் பிடித்து வைப்பதும், கட்டுப்படுத்துவதும், சுற்றுப் புறச் சூழல் பொறியாளர்களுக்குக் கடினமளிக்கின்றன. சுற்றுப் புறக் காற்றின் தரம் மிகவும் குறைவாக உள்ளது. இத்தரத்திற்குத் தக்கதாகக் கணக்கிடப்பட்ட செந்தரங்கள் மிகவும் வலிவிழந்த தொழில்களின் மீது பெரும் பளுவைச் சுமத்துகின்றன. பல தாமிர உருக்காலைகளும், நிலக்கரி எரிக்கப்படும் பயனீட்டு மின் நிலையங்களும் (utility power plant) வலிமையற்ற கந்தக டை ஆக்சைடை வெளி விடுகின்றன. கந்தக டை ஆக்சைடைச் சுண்ணக் கல் கழிவு அல்லது காஸ்டிக் கரைசல்களால் கழுவுவது மிகவும் செலவு பிடிக்கக் கூடியது. கழுவுவதற்கு மிகப் பெரிய கருவி தேவைப் படுவதோடு, கழிவு நீர் மற்றும் திண்மப் பொருள்களை அழிப்பதும் சிக்கலாகிறது. எனினும், அடர்வு மிகுந்துள்ள சுந்தக டைஆக்சைடு வளிமத்தைக் குறைந்த பணச் செலவில், தூய்மை செய்து கந்தகம், கந்தக அமிலம், கால்சியம் சல்பேட், அம்மோனியம் சல்பேட் ஆகிய துணை உற்பத்திப் பொருள்களையும் பெறலாம். உருக்கு உலையிலிருந்து வெளி வரும் வளிமங்களின் அடர்வை உயர்த்தி, உற்பத்திப் பொருள்களைப் பெறுவதற்கு எடுத்த முயற்சி தாமிரம் உற்பத்தி செய்வதற்கு, மாற்று முறைகளை விரிவாக ஆய்வு செய்ய வழி வகுத்தது. —கு. உதயபாலன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 707)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gghegaz2/
தமிழ்“சூழல் பொறியியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gghegaz2/APA
Oliyon Research. (2026). சூழல் பொறியியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gghegaz2/MLA
"சூழல் பொறியியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gghegaz2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment