இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தமிழறிஞர்களுள் ஒருவர். இவர் செந்தமிழ்ப் பத்திரிகையின் துணைப் பதிப்பாசிரியராக இருந்தார். அப்போது 1922 முதல் 1925 வரை பல திங்கள் ஐயம்பெருமாள் இயற்றிய புரூரவ சரிதையைப் படலம் படலமாக இதழ்களில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். புரூரவ சரிதை புரூரவ உற்பத்திப்படலம் என்றே தொடங்குகிறது. இந்நூலுக்குப் பாயிரம், நாட்டுப்படலம், நகரப்படலம் ஆகியவை இல்லை. இவர் பழனிக்கோவை என்னும் நூலினையும் செந்தமிழ்ப் பத்திரிகையில் 1938 சூலைத் திங்கள் முதல் எட்டு இதழ்களில் வெளியிட்டுள்ளார். மேலுமிவர் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் தோன்றிய பாப்பாவினம் என்றும் இலக்கண நூலினை நன்கு ஆராய்ந்து இலக்கணக் குறிப்புகள், பொருளகராதி ஆகியவற்றோடு பதிப்பித்துள்ளார். இந்நூலை மாறனலங்கார உரையாசிரியர் காரி இரத்தினக் கவிராயர் இயற்றினார் என்று சடகோப ராமானுசாச்சாரியார் தம் மாறனலங்கார வரலாற்றில் எழுதியுள்ளார். இவர் இதனைப் பல சான்றுகள் காட்டி மறுத்துத் திருக்குருகைப் பெருமாள் கவிராயரே பாப்பாவினம் என்னும் நூலை எழுதியவர் என்று தமது பதிப்புரையில் நிறுவியுள்ளார்.