சுத்த சன்மார்க்கம் எனச் சுருக்கமாக வழங்கும் ‘சடாந்த சமரச சுத்த சன்மார்க்கம்’ என்ற வாழ்க்கை நெறியைத் தமிழகத்தில், கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பரப்பியவர், திருவருட்பிரகாச வள்ளலார் எனச் சிறப்பிக்கப் பெறும் இராமலிங்க அடிகள் ஆவார். இவர் சாதி, குலம், இனம், மொழி, சமயம் என்ற எல்லைக்குட்பட்ட மாந்தர் கூட்டங்களை, அவற்றினின்றும் விடுவித்து ‘அகிலச் சகோதரர்கள்’ ஆக்கி, ‘மறுமை’ என்று இதுவரை எண்ணப்பட்டு வந்த வாழ்வை, இம்மையிலேயே அடைய வழிகாட்டினார். பின்னர் வந்த எச்.ஜி. வெல்சு (H.G. Wells) போல இவர் ‘ஓருலகக் கொள்கை’ உடையவர். மாந்தர், தமக்குள் மட்டுமன்றி, மற்ற உயிரினங்களுடனும் உடன்பிறப்பு உணர்வு கொண்டு வாழவேண்டும் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி, அதற்கு ‘ஆன்ம நேய ஒருமைப்பாடு’ எனப் பெயரிட்டு, அதை அடைதலே சுத்த சன்மார்க்கத்தின் தலைமைக் குறிக்கோள் என வகுத்தார். மனிதன் இறப்பினை வெல்லலாம் என்றும், மனிதப் பிறப்பின் அடுத்த பரிணாமம் வளர்ச்சி, சீவகாருணிய விளக்கமுடைய உயர் மனித நிலை என்றும் கூறி, அதனைத் தாம் அடைந்து வழிகாட்டியுள்ளார். இராமலிங்க அடிகள் இராமலிங்க அடிகள் தமிழகத்தில், தென்னார்க்காடு மாவட்டம் சிதம்பரத்திற்குத் தென்மேற்கில் உள்ள மருதூரில், 5.10.1823 சுபானு ஆண்டு புரட்டாசித் திங்கள் 21–ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமையன்று தோன்றினார். தந்தையார் இராமையாபிள்ளை; தாயார் சின்னம்மை, உடன் தோன்றிய சபாபதிப்பிள்ளை, பரசுராமப் பிள்ளை, உண்ணாமுலை, சுந்தரம்மாள் ஆகிய நால்வரும் இராமலிங்கர்க்கு மூத்தோராவர். இவர் மழவிளங்குழவியாயிருந்த பொழுதே தந்தையார் காலமானதால் மூத்தவரான சபாபதிப் பிள்ளை இக்குடும்பத்தைச் சென்னைக்கு அழைத்துச் சென்றார். இராமலிங்கர் பள்ளியில் மிகுதியாகக் கல்வி கற்கவில்லை. திருவருள் துணையுடன் தாமாகவே தமிழ், வடமொழிகளில் உள்ள பல நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். இவரது கல்வியின் ஆழத்தை இவர்தம் உரைநடை நூல்கள் நன்கு உணர்த்தும். காழிக் கண்ணுடைய வள்ளல் இயற்றிய ஒழிவிலொடுக்கத்தின் பாயிரத்திற்கு இராமலிங்கர் வரைந்த விருத்தியுரை இவரது கல்வியின் அகலத்தை உணர்த்தும். திருவருளால் இவர் கற்றார் என்பதனை. ‘என்னுடைய துரையே நின்னுடைய அருளால், கற்றதும் நின்னிடத்தே பின் கேட்டதும் நின்னிடத்தே’ என்னும் இவரது வாக்கால் அறியலாம். இளமை தொட்டே பாமாலை புனைந்து இறைவனுக்குச் சாத்தி வரலானார். இளமைப் பருவத்தே இவர் உள்ளம் கவர்ந்த தெய்வம் முருகன். திருத்தணிகை மலையிலும் சென்னைக் கந்தகோட்டத்திலும் எழுந்தருளியுள்ள முருகன்மீது பாமாலைகள் பாடினார். சென்னையை அடுத்துள்ள திருவொற்றியூரில் எழுந்தருளியுள்ள சிவபிரானை வணங்கிவரும் வழக்கத்தை மேற்கொண்டு. அப்பெருமான் மீதும் வடிவுடை மாணிக்கம் என்ற அம்பிகைமீதும் பனுவல்கள் பாடினார். ஒழிவிலொடுக்கம், தொண்டைமண்டல சதகம், சின்மய தீபிகை ஆகிய நூல்களைப் பதிப்பித்தார். மனுமுறை கண்ட வாசகம் என்னும் உரைநடை நூலைச் சிறுவர்க்குரிய பாட நூலாக இயற்றினார். இராமலிங்கர்க்குத் தனக்கோடியம்மை என்ற பெண்ணை மணம் செய்வித்தனர். எனினும், இவர் உள்ளம் இல்லறவின்பத்தில் செல்லவில்லை. மனைவியார் சில்லாண்டுகளிற் காலமானார். இவர் பொருட் செல்வத்தில் நாட்டமின்றி அருள் நாட்டம் உடையவராய் வாழ்ந்தார். பல மாணவர்கட்குப் பாடம் சொல்லியும், நூலாய்ந்தும், ஒற்றியூர் வழிபாடு செய்தும் வந்த இவர் ‘சமரச வேத சன்மார்க்க’ சங்கத்தை நிறுவினார். தம் 35–ஆம் வயது வரை சென்னையில் வாழ்ந்த இராமலிங்கர், பின்னர்ச் சிதம்பரத்தில் நடராசப் பெருமானிடம் பேரீடுபாடு கொண்டு, அங்குச் சென்று வழிபட்டார். இவர் கருங்குழி என்னும் சிற்றூரில் வேங்கடேசரெட்டியார் வீட்டில் தங்கிச் சிதம்பரத்திற்கு அடிக்கடி சென்று வழிபட்டார்; கருங்குழியில் பல்லாண்டுகள் தங்கியிருந்தார். அப்போது இவர் பல தலங்களுக்கும் சென்று வழிபட்டுப் பாமாலைகள் புனைந்தார். இவர்தம் பாடல்களை அன்பர் அருட்பா என வழங்கி அன்புடன் ஓதினர். அங்ஙனம் அருட்பாவென வழங்கக் கூடாதென்று சிதம்பரத்தில் அந்நாளில் புலமையொளி வீசித் திகழ்ந்த ஆறுமுகநாவலர் இராமலிங்கர் மீது வழக்குத் தொடர்ந்தார். நாவலர் இராமலிங்கரிடம் வைத்த மதிப்பைக் கண்ட நீதிபதி அவ்வழக்கினைத் தள்ளுபடி செய்தார். இவர் கி.பி. 1865–ஆம் ஆண்டு ‘சுத்த சன்மார்க்க சங்கத்தை’ நிறுவினார். வள்ளலார் வடலூரில் வாழ்ந்த காலத்தில் சென்னையில் இருந்த இவர்தம் மாணவர் இறுக்கம் இரத்தின முதலியார், புதுவை வேலுமுதலியார் ஆகியோர் இவரது இசைவினைப் பெற்று, இவர்தம் பாடல்களைத் தொகுத்து, தொழுவூர் வேலாயுத முதலியாரைக் கொண்டு, ஐந்து திருமுறைகளாக வகுத்துப் பதிப்பிக்கச் செய்து கி.பி. 1867–ஆம் ஆண்டு வெளியிட்டனர். இராமலிங்கர் தென்னார்க்காடு மாவட்டம் பார்வதிபுரம் என்ற ஊரை வடலூர் என்றும், ‘உத்தர ஞான புரம்’ என்றும் வழங்கி, அங்கு 23—5—1867–ஆம் நாள் ‘சத்திய தருமச் சாலை’யை நிறுவினார். சுத்த சன்மார்க்கத்தில் இறைவழிபாடு சீவகாருணியத்தை அடிப்படையாகக் கொண்டமையால் சீவகாருணியப் பணிகளுள் தலையாய பசி நீக்கும் தருமத்தைச் செய்வதற்கு இராமலிங்கர் நிறுவிய நிறுவனம் சத்திய தருமச் சாலை. அக்காலத்தில் சீவகாருணிய ஒழுக்கம் என்ற பெயரில் இவர் கட்டுரைகள் வரைந்து வெளியிட்டார். வடலூர்க்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பம் என்னும் சிற்றூரில் கி.பி. 1870–ஆம் ஆண்டு சித்தி வளாகம் என்ற ஆசிரமத்தை நிறுவி அங்குத் தவம் இயற்றினார். இறைவனைச் சோதி வடிவில் வழிபடுவதற்காக வடலூரில் சத்திய தருமச் சாலையை அடுத்து, கி.பி. 1872–ஆம் ஆண்டு சுத்த சன்மார்க்க சங்க அன்பர்களைக் கொண்டு சத்திய ஞான சபையை நிறுவினார். இச்சபை எண்கோண வடிவில் தென் முகமாக அமைக்கப் பெற்றது. அதனைச் சூழப் பெருவெளி விடப்பெற்றுள்ளது. வடலூர்ப் பெருவெளி என்று இராமலிங்க அடிகள் இதனை வழங்குவர். வடலூர் வழிபாட்டுக் காலத்தில் இவர் தம் ஆன்மிகப் பெருவெளியில் அருட்பெருஞ்சோதியைக் கண்டமைக்கு இந்தப் பெயரும் இடமும் ஞான சபையும் குறியீடுகள் ஆகும். சுத்த சன்மார்கத்தில் நிற்பவரும் இவ்வான்மிக அனுபவத்தை எய்தலாம். சத்திய ஞான சபையின் நடுவில் ஒரு விளக்கும், அதன் முன்னே ஒரு பெரிய கண்ணாடியும் உள்ளன. அதன் முன்னர் ஏழு வண்ணத் திரைகள் உள்ளன. ஆன்மாவை மறைக்கும் ஏழு சக்திகளின் குறியீடே இத்திரைகள். இத்திரைகள் விலக்கப் பெற்றுக் கண்ணாடியில் பெரிதுபடுத்திக் காட்டப்படும் விளக்கொளி தரிசனம் செய்விக்கப் பெறுகிறது. கண்ணாடி தூய மனத்திற்கும், ஒளி ஆன்ம சோதிக்கும் குறியீடாகும். ஆன்மாவிற்குள் ஒளிரும் இறைவன் ஞான ஒளியை உண்டாக்கித் திகழ்கிறான் என்பதை இக்குறியீடு உணர்த்தும், இக்காட்சியைப் பெறுவதற்கென இராமலிங்கர் தைத்திங்கள் பூசநாளைத் தேர்ந்தெடுத்தார். அன்று முழுநிலா நாள் ஆகும். ஞாயிறு, திங்கள் ஆகிய இரண்டு கதிர்களையும் ஒரே நேரத்தில் முறையே மேற்கிலும் கிழக்கிலும் கண்டு நடுவில், ஞானசபையில் சோதிக் காட்சி காண்பதற்குரிய நாள் இது. இந்தச் சோதி அக்கினியின் சோதி. அண்டத்தில் ஞாயிறு, திங்கள், அக்கினி ஆகிய மூன்று சுடர்களின் சோதியையும் ஒரே நேரத்தில் காண்பது, பிண்டத்தில் (உடலில்) சீவஒளி, மனஒளி, ஆன்மஒளி ஆகிய மூன்றையும் ஒருங்கே, ஒரே சோதியாகக் காண்பதற்குக் குறியீடாகும். இந்தச் சோதிக்குள் இறைவன் அருட்பெருஞ்சோதியாக அசைந்தாடுகிறான் என்று சோதிக் காட்சியினை வள்ளலார் விளக்கியுள்ளார். சத்தியஞான சபையின் தொடக்கத்தில் 25—1—1872–ஆம் நாள் விளம்பரம் ஒன்றினை வெளியிட்டார். அதில், “இனி இச்சீவர்கள் விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல், உண்மையறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய நற்குணங்களைப் பெற்று, நற்செய்கை உடையராய். எல்லாச் சமயங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று, பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு, மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுள்ளம் கொண்டு சுத்த சன்மார்க்கமாகிய உண்மை விளக்கம் செய்கிற ஒரு ஞானசபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம், அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி, அருட்பெருஞ்சோதியராய் வீற்றிருக்கின்றார்” என்று குறித்திருக்கிறார். வள்ளலார் கருங்குழி, வடலூர் ஆகிய இடங்களில் வாழ்ந்தபொழுது தம்மை நாடிவந்த நோயாளிகள் பலருக்கும் மருந்தளித்து நோய் தீர்த்து அற்புதங்கள் பலவற்றைச் செய்தார். சிறப்பாக, ஞான சபைத் திருப்பணிக்காகச் சென்னையில் மரம் வாங்க ஓர் அன்பரை வள்ளலார் அனுப்பினார். அந்த அன்பர் கடைக்குச் சென்றபோது, வள்ளலார் அங்கு முன்னதாகவே சென்று, மரங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அதே நாளில் அவர் மேட்டுக் குப்பத்தில் இருந்தார் என்றும் அன்பர்கள் கூறினார்கள். வள்ளலாரை நிழற்படம் எடுக்க அன்பர்கள் பன்முறை முயன்றும், அவர் உருவம் படத்தில் பதியவில்லை இவர் சித்தி வளாகத் திருமாளிகையில் அருள் யோகத்தில் வீற்றிருந்தார். அங்கு கி.பி. 1873–ஆம் ஆண்டு சுத்த சன்மார்க்கக் கொடியை ஏற்றி வைத்து, ஒளி விளக்கு ஏற்றி, அதை எந்நாளும் அணையாமல் காக்குமாறு அன்பர்களுக்கு அறிவுறுத்தி அருட்பேருரை ஆற்றினார். மாளிகையின் ஓர் அறையினுள் தாம் புகுந்த பின்னர், அவ்வறையைத் திருக்காப்பிடச் செய்தார். யாரும் திறந்து பார்க்க வேண்டாம் என ஆணையிட்டார். தைமாதம் வெள்ளிக்கிழமை பூச நட்சத்திரத்தன்று (30–1–1874) அவர் உடம்பு ஞான உடம்பாக மாறியது. அது புறத்தில் யார் கண்ணுக்கும் தோன்றாததாயிற்று. வள்ளலாரின் பருவுடல் மறைந்த பின்பு, கி.பி. 1885–ஆம் ஆண்டு அவர் பாடல்களுள் முன்பு வெளியிடப்பட்டவை தவிர எஞ்சியவை ஆறாம் திருமுறையாக வெளியிடப்பட்டன. திருவருட்பா, மனுமுறை கண்ட வாசகம், சீவகாருணிய ஒழுக்கம், சுத்த சன்மார்க்க விண்ணப்பங்கள், உபதேசங்கள், வியாக்கியானங்கள், திருமுகங்கள் ஆகியன வள்ளலார் இயற்றிய நூல்களாகும். சுத்த சன்மார்க்கம் வள்ளலார் சமயங்களை ஏற்றுக் கொள்ளாத இறை நெறியாளர். இவரது இறைநெறியாகிய சுத்த சன்மார்க்கம், சமுதாயச் சிந்தனையை உள்ளடக்கியது. சமுதாய முன்னேற்றத்திற்கான சேவையே இறைவனை அடைந்து நுகரும் வழி; எல்லையற்ற சமுதாயச் சேவையின் வழியாகப் பெறும் அருங்காட்சி வாயிலாக இறைவனை அறிந்து நுகரலாம் என்பது இவர்தம் இறைக்கோட்பாடு. சாதி, சமய, கோத்திர, குல, இன, மொழி, நிறவேறுபாடுகள் உள்ளிட்ட எவ்வகை வேறுபாடும் இல்லாத உலகச் சமுதாய அமைப்பே இவரது சமுதாயக் கோட்பாடு (Universal Religion and Universal Society). இங்ஙனம் இறைநெறியும் சமுதாயச் சிந்தனையும் இணைந்த புதுநெறியாளர் வள்ளலார். சமயங்கள் வெற்றுச் சடங்காய்ப் போன நிலை இவர் கண்ட சமுதாயத்தில் இருந்தது. சாதி வளர்ப்பவரின் கைப்பாவையாக அவரால் பாதுகாக்கப்பட்ட சாதி வேறுபாடுகளுக்கு அரண் செய்யும் பொய்ம்மைக் கொள்கையாகச் சமயம் இருந்தது. சாதி உயர்வு தாழ்வுகள் தலைவிரித்தாடின. சாதிச் சண்டைகளும் தீண்டாமையும் பெருகிய அளவில் இருந்தன. சாதிக்குள்ளும் கோத்திர, குலப் பிரிவுகள் மக்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தின. இவற்றால் அலைவுதான் இருந்ததே தவிர வாழ்க்கை இல்லை; ஒற்றுமை இல்லை; மனப்பான்மை இல்லை; ஆதலின் முன்னேற்றம் இல்லை; மாறாகக் கலகமும் சண்டையும் பகைமையும் காழ்ப்பும் வளர்ந்தன. சமயமோ இதைத் தடுக்க வழியின்றி, வெறும் சடங்குக்குள் சிறைப்பட்டுத் தத்துவ வாதங்களுக்குள் முடங்கிக் கிடந்தது. வெறும் சடங்கு மூட்டையாகவும் தத்துவ வாதக் குப்பையாகவும் இருக்கும்வரை சமயம் மக்களுக்குப் பயன்படாது என்பதை வள்ளலார் உணர்ந்தார். இவர் சமயம் வாழ்க்கை நெறியாக, செயல் நெறியாக, செயலூக்கமாக இருக்கவேண்டும் என்பதை உணர்ந்தார். சமயம் சடங்கு செய்யும் அல்லது செய்விக்கும் குருக்களின் அல்லது பூசாரியின் சொந்தச் சொத்தன்று. சடங்கைச் செய்துவிட்டு, சமயக்கடமை முடிந்துவிட்டது என்று எண்ணி, விருப்பம்போல் வாழ்வது குருட்டுத்தனம். படித்தவர் நிலையில் ஏதோ தத்துவ வாதங்களைச் சாத்திரப் பிடிப்பின் அழுத்தத்தோடு செய்துவிட்டால். ஆன்மாவின் தேவை முடிந்துவிட்டது என்று எண்ணி, தத்துவத்தின் நிழல் ஒன்றுகூடப் படியாமல் விருப்பம் போல் வாழ்வதும் குருட்டுத்தனமாகும். இவ்விரண்டாலும் பொருள் முதல் வாதந்தான் (Materialism) வளருமே அன்றி, உயிர் முதல் வாதம் (Spiritualism) நன்மை அடையாது; வளராது. சமயம் என்னும் சிறிய அளவுக்கு உள்ளே அடைபட்டிருக்கும் இறைநெறி, தத்துவம் என்ற இருட்டறைக்குள்ளே முடங்கிக் கிடக்கும் இறைநெறி அப்பெயருக்கே தகுதியில்லாததாய்ப் போய்விட்டது. அது மக்களுக்கு வாழ்க்கை நெறியாக வரவேண்டும். வத்தால் பேயாட்டம் ஆடுகிற சாதி, சமய, இன, குல, கோத்திர வேறுபாடுகள் எல்லாம் மறையும் என்னும் நோக்குடன் வள்ளலார் அக்காலச் சமுதாயத்தைச் சிந்தித்தார். பன்னெடுங்காலமாகக் கூறிவரும் வறுமை தம் காலத்திலும் அகலாமல் இருப்பதையும், சமயங்களும் சாதிகளும் வறுமையுடன் போராடி அதை ஒழிக்க முற்படாமல் தமக்குள்ளேயே போராடி ஒன்றை ஒன்று ஒழிப்பதற்குச் கச்சை கட்டிக் கொண்டு இருப்பதையும் வள்ளலார் கண்டார். ‘வறுமையாம் சங்கடப் பாவி’யின் கொடிய பிடிக்குள் சிக்கிக் காற்றினிற் சருகாய்ச் சீவனற்று நெளியும் மனிதப் புழுக்களோ இறைவனை அறிவார்கள்? அவர்களிடம் இறைவனைப் பற்றிக் கூறுவதும் பாவம் என்றார் விவேகானந்தர். அந்த ஏழைகளைப் பொருள் உடையவரின் உடன்பிறந்தார் என்று கூறினார் வள்ளலார். மேலுமிவர் அந்த உடன்பிறந்தோர்க்கு இரக்கம் காட்டி, பசி துடைத்துக் கண்ணீரை மாற்றுவதே உண்மையான இறை வழிபாடு என்றார். வறுமை தீர்ப்பது, பசி தீர்ப்பது மட்டும் அன்று. வளமாக வாழச் செய்வதேயாகும். பசி தீர்த்தல் முன்பு அறமாகக் கருதப்பட்டது. சமய நெறியில், ஒரே சமயத்தைச் சார்ந்த அடியார்க்கு அன்னம் இடுதல் சமய ஒழுக்கமாகக் கருதப்பட்டது. ஆனால் வள்ளலார், நாடு, பண்பாடு, சமயம், குலம் முதலிய எவ்வகை வேறுபாடும் பாராமல், கேளாமல் அனைவருக்கும். அவர் துன்பம் உறும்போது பசிதீர்க்க வேண்டும் என்கிறார். இந்த உடன்பிறப்பு உணர்விற்குத் தடையாய் இருந்து வரும் பழைய அமைப்புகளாகிய சாதி, சமய, கோத்திர அமைப்புகளை எதிர்க்கிறார். அன்பு மனிதருக்கு இயற்கைக் குணம். அது தடையின்றிப் பரவவேண்டும். ஆனால் இந்தப் பழைய அமைப்புகள் அன்புக்கு வேலி கட்டிவிட்டன. அன்பு வளர்ந்து, உலகம் முழுவதையும் அன்பால் நோக்கும் பார்வை வந்தால்தான், அதன்வாயிலாக இறைவனை உணரமுடியும். அதற்காக வள்ளலார் ‘அகிலமாம் சகோதரத்துவம்’ என்ற கொள்கையை எடுத்துக்கூறி, அதைப் பழைய அமைப்புகளுக்கு மாற்றாக, மக்கள் முன்பு வைத்தார். சாதியை விட்டவனே சன்மார்க்கன் என்றார். நம் குலம் எல்லாம் புழுக் குலம் என்றார். ‘சாதிப் பேச்சும் குலப் பூச்சும் இறவாமையைத் தருமா?’ என்று கேட்டார். உயர் குலம் என்று இறுமாந்தவரும் இறக்கிறார். தாழ்குலம் என்று தள்ளப்பட்டவரும் இறக்கிறார். ‘இறவாமைதான் வாழ்வில் அடுத்து நாம் எட்டிப்பிடிக்க வேண்டிய படி; அதனை அடைவதற்கு உங்கள் சாதியும் குலமும் சமயமும் மதமும் என்ன செய்யும்?’ என்று வினவினார் வள்ளலார். சாதிகளற்ற சமுதாயம் உருவாக்கவும், சமுதாயச் சீர்திருத்தம் செய்யவும் வழி கூறியுள்ளார். அதன் நோக்கம், மனிதன் உயர் மனம் படைப்பது என்பதே ஆகும். அந்த உயர் மனம் யாது? ஆன்ம நேயம் கொள்வதே ஆகும். அந்த நேயம், அவனது இயற்கைப் பண்பாம் அன்பின் விளக்கம்; விரிவு; மலர்ச்சி; பெருக்கம் ஆகும். இறைவன் தந்த அந்த இயல்பு வளர வேண்டும். மனிதன் அமைத்துக் கொண்ட சாதி சமய எல்லைக்கோடுகள், தடையாகி அந்த இயல்பை வளரவிடாது தடுத்து வருகையில், இறைவனை அறிவது எவ்வாறு? அடைவது எவ்வாறு? ஆதலால், இயற்கைப் பண்பிற்குச் செயல் வடிவம் கொடுத்துச் சீவகாருணியச் சேவை செய்வதே இறைவனை அறிய, உணர ஒரே வழி ஆகும் என்றார் வள்ளலார். சாதி வேறுபாடு கருதும் திரை விலகினால்தான் சமுதாயத்தில் பரவியிருக்கும் பொல்லா வறுமையுடன் போராட்டம் தொடுக்க முடியும். சாதிச் சங்கம் சாதி வறுமையை நீக்கும்; சமுதாய வறுமையை நீக்காது. சாதி பொய், சமுதாயம் உண்மை. சாதியால் தடை செய்யப்படாத கருணை வேண்டும். ‘எங்கே கருணை இயற்கையில் உள்ளது அங்கே என்றருள் அருட்பெருஞ்சோதி’ என்று வள்ளலார், தடையற்ற அருட்கருணையின் பெருக்கிற்கு–எல்லோர்க்கும் துன்பம் துடைக்க ஓடும் செயலுக்கு–முதன்மை கொடுத்துக் கூறியுள்ளார். வறுமையற்ற சமுதாயத்தை நோயற்ற சமுதாயத்தை உருவாக்க மனிதர்கள் உழைக்க வேண்டும். அதுவே இன்று தேவையான இறைநெறி. அதையே சுத்த சன்மார்க்கத்தின் முதன்மைப் படி என்று வகுத்தார் வள்ளலார். இச்சேவையின் விளைகனியாகக் கிடைப்பது ஆன்ம நேயம். நேயத்தால் விளைவது ஒருமைப்பாடு. இது நாடுகளிடையே வந்தால் உலகப் போர்கள் நிகழா; அணு ஆயுதங்கள் வளரா; வணிகச் சந்தைக்குப் போட்டிகள் வரமாட்டா. இறைக் காட்சியை வெறும் சமயச் சடங்குகளால் பெறமுடியாது என்று உறுதியாகக் கூறுகிறார் வள்ளலார். அவை கலை உரைத்த கற்பனைகள், அவற்றிற்குப் பயன் இருக்கலாம். ஆனால் அவை முடிந்த பயனைத் தாரா. அவற்றைக் கடந்து செல்ல வேண்டும். அவற்றுள்ளேயே உழலுதல் கண்மூடி வழக்கம். இறையுருவத்தை வழிபாட்டின் முதற்படியாக வள்ளலார் கொண்டாலும் அதைக் கடந்து செல்ல வேண்டும் என்கிறார். இவர் காட்டிய இறை அருட்பெருஞ்சோதி ஆகும். அருள்வெளியில், அதாவது உயிர் அருள் மயமாகி நிற்கும்போது, அதில் இறைவன், சோதியாகக் காட்சி தருகிறான். இது அகமுகக் காட்சி, வெளியே உள்ள சடங்கு, கோயில், பூசை, பொருள்கள் எல்லாம் புறக்காட்சி, இவற்றைக் கடந்து அகமுகமாகப் பார்க்கும் பார்வை வளர வேண்டும் என்றார் வள்ளலார். பூசை, திருவிழா, தேங்காய் உடைத்தல், கற்பூரம் காட்டல் எல்லாவற்றையும் ஒதுக்குகிறார். காவியுடை அணிவதை மறுக்கிறார். அது போராட்டத்தின் அறிகுறி என்றும், வெள்ளாடையே வெற்றியின் அறிகுறி என்றும் கூறுகிறார். புராணங்கள், கலை வடிவங்கள் எவற்றையும் இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவை எல்லாம் புறக்காட்சி, அகமுகக் காட்சி என்ற ஆன்மிக அனுபவத்தையே இவர் வற்புறுத்துகிறார். அந்த அகமுகக் காட்சி இறையருளால்தான் வாய்க்கும். அந்த அருளை, அதன் இனமாகிய மானுடக் கருணையால் தான் பெறமுடியும். கருணையால் சமுதாயச் சேவை செய்தால் இறையருள் கிடைக்கும். அது கிடைத்தால் இறை அன்பு பிறக்கும். அன்பால் அகமுகக் காட்சி, சிறிது முயற்சியிலேயே வாய்க்கும். அக்காட்சியால் ‘அருள் வல்லமை’ பெறலாம். அவ்வல்லமையால் பின்னும் பெருகிய அளவில் சீவகாருணியத் தொண்டு செய்தல் வேண்டும். இதற்கு எல்லையே இல்லை. செயல், செயல், செயல்–இதுவே என்றும் மனிதனின் நெறியாக இருக்க வேண்டும். அச்செயலால் மேலும் இறையருள் வாய்க்கும். இறைக் காட்சியும் இறைக் கலப்பும் வாய்க்கும். அதனால் மேலும் செயல் செய்தல் வேண்டும். அதனை வள்ளலார் கரும சித்தி முதலிய சித்திகள் என்று கூறுகிறார். இறைவனோடு ஒன்றிக் கலந்து நிற்கும் முத்தியின் பின்னும், சித்தி வாய்க்கும். அதாவது செயல் வல்லமை வாய்க்கும் என்கிறார். அவ்வல்லமையால் உலகம் எங்கும் சென்று, யாவருக்கும் தேவைப்பட்ட உதவிகளைச் செய்து, இறைவனையும் கலந்து, நுகர்ந்து, அந்நுகர்வும் செயலுமாக வாழ்வதே சன்மார்க்கம் என்கிறார் வள்ளலார். இறைவனுக்கும் எல்லை இல்லை. அவன் தரும் இன்பத்திற்கும் எல்லை இல்லை, அவனது கலப்பால் கிடைக்கும் வல்லமையால் செய்யும் செயலுக்கும் முடிவில்லை. இதுவே இறவாப் பெரு வாழ்வு என்பது சுத்த சன்மார்க்கக் கோட்பாடு. சுப.அ