தனித்த இழைகள், இழை முறுக்கு, நெய்யப்பட்ட அல்லது நெய்யப்படாத துணிகளைச் செருகி வலிவூட்டிய நெகிழிகள், செருகு வலிவூட்டிய நெகிழிகள் (reinforced plastics) எனப்படும். பாலிஎஸ்ட்டர் ரெசின்களும் நீண்ட, மெலிந்த, நொறுங்காத இழைகளும் கண்டு பிடிக்கப்பட்ட பின், செருகு வலிவூட்டிய நெகிழிகளின் தொடக்கமும், வளர்ச்சியும் அறியப் பட்டன. பொதுவாக FRP (Fibre Reinforced Plastics) அல்லது GRP (Glass Reinforced Plastics) என்னும் சொற்கள், கண்ணாடியால் வலிவூட்டப்பட்ட பாலிஎஸ்ட்டரையும், பீச்சி வார்க்கும் இயல்புடைய கண்ணாடிச் செருகு வலிவூட்டப்பட்ட வெப்ப மீள் (thermoplastics) நெகிழிகளையும் குறிக்கும். மெலமின், ஃபீனாலிக்ஸ் போன்ற வெப்ப மீளா ரெசின்களைக் கண்ணாடி இழைகளால் வலிவூட்டிய நெகிழிகளை FRP என்னும் சொல் குறிக்காது. செருகு வலிவூட்டிய நெகிழிகளில், கண்ணாடியால் வலிவூட்டப்பட்ட பாலிஎஸ்ட்டர் சிறப்பிடம் பெறுகிறது. இந்நெகிழியை, அழுத்தமற்ற நிலை அல்லது குறைவழுத்தத்தில் (0–50 Psi) எளிதில் வடிவமைக்க முடியும். எப்பாக்சி ரெசின்களின் கண்டு பிடிப்பு செருகு வலிவூட்டிய நெகிழிகளில் புதுமை செய்தது. எப்பாக்சி ரெசினுக்கெனப் போரான், கிராஃபைட், சிலிக்கான் கார்பைடு, கெல்லர் எனப்படும் அரோமாட்டிக் பாலி அமைடு போன்ற தனிப்பட்ட இழைகள் தயாரிக்கப்பட்டன. தற்போது, போரான், கிராஃபைட், கண்ணாடி அல்லது கெல்லர் இழைகளால் வலிவூட்டப்பட்ட எப்பாக்சி அல்லது பாலி அமைடு நெகிழிகளைக் கூட்டுமம் (composite) எனக் குறிப்பிடுகின்றனர். சிக்கலான அமைப்புடைய மற்றும் முப்பரிமாணப் பகுதிகளைக் குறைந்த அழுத்தத்தில் செருகு வலிவூட்டிய நெகிழிகளைக் கொண்டு வடிவாக்கலாம். சாதாரண முறையில், இது போன்ற பகுதிகளைத் தயாரிக்க உயர் அழுத்த அச்சு (high pressure press) பெரிய வார்ப்பு அச்சு ஆகியன தேவை. ஆனால், எளிய மர அல்லது அலுமினிய அச்சைக் கொண்டு செருகி வலிவூட்டிய நெகிழிகளை வடிவமைக்கலாம். இவ்வாறு, தயாரிக்கப்படும் பகுதிகள் உயர் அழுத்தத் தொழில் நுட்பத்தில் கிடைக்கும் பகுதிகளுக்கு இணையானவை அல்லது மேம்பட்டவை. பெரிய கட்டுமானப் பொருள்களை எளிதில் இந்நெகிழிகளிலிருந்து தயாரிக்கலாம்; எளிதில் பழுது பார்க்கலாம்: எனவே, விமானம், கப்பல், தானியங்கு ஊர்திகளின் கட்டுமானத்தில் இந்நெகிழிகளின் பங்கு குறிப்பிடத் தக்கது, மேலும், இந்நெகிழிகளை வடிவமைக்க, எளிய கை வடிவமைப்பிலிருந்து (hand moulding) மிகவும் சிறந்த அழுத்த வார்ப்பு (compression moulding) அல்லது மாற்று வார்ப்பு (transfer moulding) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட செயல் முறையைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரே பகுதியை ஒன்றுக்கு மேற்பட்ட செயல் முறையிலும் தயாரிக்கலாம். பகுதியின் பயன்பாட்டுக்கேற்ப ஒரே பகுதியைப் பல நெகிழிகளைக் கொண்டும், செருகு வலுவூட்டியை வேறு படுத்தியும் தயாரிக்கலாம். இந்நெகிழியில் அடங்கும் பொருள்களாவன: ரெசின்கள், செருகு வலிவூட்டி (reinforcement), ஒட்டு விடுவிப்பி (release agent), களிப் பூச்சு (gel coat) ஆகியன. ரெசின்கள் செருகு வலிவூட்டிய நெகிழிகளில் ரெசின்கள், செருகு இழைகளைப் பிடித்துக் கொள்ளும். பளுவை, ஓர் இழையிலிருந்து மற் றொன்றுக்கு மாற்ற உதவும். இந்த ரெசின்கள் பக்குவப் படுத்துதலுக்கு (curing) முன்னரும், பின்னரும் இழைகளோடு நன்கு ஒட்டிக் கொள்ள வேண்டும். அறை வெப்ப நிலையிலிருந்து 150°C வரை எளிதில் கட்டுப்படுத்தும் திறனை இந்த ரெசின்கள் பெற்றி ருக்க வேண்டும். உரிய பாகுத் தன்மையுடன் நிரப்பி கள் (fillers), நிறமிகள் ஆகியவற்றுடன் இணக்கமாக இருக்க வேண்டும். ரெசின்களில் குறிப்பிடத் தக்கவை பாலிஎஸ்ட்டரும், எப்பாக்சியும் ஆகும். பாலிஎஸ்ட்டர் பாகுத் தன்மையில் பெரிதும் வேறுபட்ட நீர்மமாக கிடைக்கும். பல வினை வேக மாற்றிகளின் துணை யோடு, இந்த ரெசினை அறை வெப்ப நிலையிலோ, சூடேற்றியோ, புற ஊதாக் கதிர்களைப் பாய்ச்சியோ, கட்டுப் படுத்தலாம். எனவே நாள் முழுவதும் தேவை- யான பகுதிகளைத் தயாரித்து, இரவில் கட்டுப் படுத்தலாம். பாலிஎஸ்ட்டர் பொருள்கள் உயரிய வேதி, மின்னாற் பண்புகளைப் பெற்றுள்ளன. இந்நெகிழிகள் சுருங்கும் தன்மையன. ஈரப் பதச் சூழலில், கண்ணாடி இழைகளோடு எளிதில் ஒட்டாதவை. எப்பாக்சி ரெசின், பாலிஎஸ்ட்டரின் அனைத்து நல்லியல்புகளையும் பெற்றுள்ளது. மேலும், இது சுருங்காது; பெரும்பாலான பொருள்களோடு நன்கு ஒட்டும்; எனவே, இது செருகு வலிவூட்டிய நெகிழிகள் தயாரிப்பில் முதலிடம் வகிக்கிறது. ஃபீனாலிக்ஸ், சிலிக்கோன்கள், மெலமின்கள், பாலி இமைடுகள் ஆகிய வெப்ப மீள் ரெசின்களும் செருகு வலிவூட்டிய நெகிழிகள் தயாரிக்கப் பயன் படுகின்றன. செருகு வலிவூட்டிகள். கண்ணாடி இழை, பெருமளவில் பயன்படும் செருகு வலிவூட்டியாகும். இதைப் பின்னிய பாய், பின்னாத தகடு, வெட்டப் பட்ட இழை (chopperd fibres), குறு இழை (milled fibres) ஆகியவையாகப் பயன்படுத்தலாம். தேவைக்கேற்பக் கண்ணாடி இழைகளைத் தேர்ந்தெடுக்கலாம். E–கண்ணாடி இழைகள் மின் வேலைக்கும், S–கண்ணாடி இழைகள் உயர் வலிமைக்கும் ஏற்றவை. கண்ணாடி இழைகள் இழுக்கப் பயன் படும் மசகை முதலில் பொதுவாக வெப்பமூட்டி நீக்க வேண்டும். பெரும்பாலான கண்ணாடி இழைகளை இம்முதல் கட்டப் பக்குவத்திற்குப் பின், செருகு வலிவூட்டிகளாகப் பயன் படுத்தலாம். சில குறிப்பிட்ட ரெசின்களுக்கு, குறிப்பாக ஈரப் பதனுடைய சூழ்நிலையில் பிடிப்புத் திறனைக் கொடுக்க, இணைப்புச் சேர்மங்கள் (coupling agents) எனப் படும் பூச்சை, கண்ணாடி இழைகளின் மேல் பூச வேண்டும். குரோம் அணைவுகள் (chroma complexes), சிலேன்கள் ஆகியன இப்பூச்சுகளில் அடங்கும். வேதி எதிர்ப்புத் திறனுடைய வெப்பம் தாங்க வல்ல கல் நார் இழைகளும், சிறந்த செருகு வலிவூட்டிகளாகும். கட்டு மரங்கள் தயாரிக்கப் போரான், கிராஃபைட், கெல்லர் இழைகள் உதவும். இவற்றில் கிராஃபைட் இழைகளின் விலை குறைவு; விறைப்புத் தன்மை மிகுதி; அடர்த்தி குறைவு. எனவே, குறுகிய வளைவுள்ள முப்பரிமாண வடிவங்கள் தயாரிக்க, இது பெரிதும் உதவும். மேலும், இதன் வெப்ப விரிவு குணகம் மிகவும் தாழ்ந்துள்ளமையால், துல்லிய அளவுள்ள பகுதிகளை எளிதில் தயாரிக்கலாம். பாலி அரமிட் எனப்படும் கெல்லர் இழைகள், கண்ணாடி இழைகளைப் போல் இரு மடங்கு விறைப்புத் தன்மையும், 25% கூடுதலான இழு வலியும் பெற்றுள்ளன. ஒட்டு விடுவிப்பி. அனைத்துச் செருகு வலிவூட்டி நெகிழிகளும் வார்க்கப் படும் போது, வார்ப்பச்சில் ஒட்டிக் கொள்ளும். இதைத் தடுக்க ஒட்டு விடுவிப்பித் தேவை. இது வார்ப்புப் பகுதிக்கும், வார்ப்பு அச்சுக்கும் இடையே தடுப்பாக அமைந்து, ஒட்டுதலைத் தவிர்க்கும். ஒட்டு விடுவிப்பியை, வெளி ஒட்டு விடுவிப்பி (external release agent), உள் ஒட்டு விடுவிப்பி (internal release agent) என இரு வகையாகப் பிரிக்கலாம். வெளி ஒட்டுவிப்பியில் செல்லோஃபேன், பாலி வினைல் அசெட்டேட், பாலிஅமைடு (நைலான்), பாலிஎஸ்ட்டர் (மைலார்) போன்ற படலங்களும், படலம் உருவாக்கும் பொருள்களான நைலான் பாலி வினைல் அசெட்டேட் கரைசல்கள் ஆகியனவும் அடங்கும். இதே வகையில், துடைப்புப் பொருளான மெழுகுகளும், சிலிக்கோனின் காற்றுக் கரைசலும் (aerosol) அடங்கும். துடைப்புப் பொருள்களை வார்ப்பச்சின் உட்புறத்தில் தடவி அல்லது தெளிந்த பின்னர், துணியால் துடைக்க வேண்டும். உள் ஒட்டு விடுவிப்பியில், சில வேதிச் சேர்மங்கள் ரெசினில் கலக்கப் பட்டு, அச்சேர்மங்கள் நெகிழியைப் பக்குவப் படுத்தும் போது, பிதுங்கி வெளி வந்து வார்ப்பச்சில் ஒட்டாமல் தடுக்கும். துத்தநாக ஸ்டீரேட், கால்சியம் ஸ்டீரேட், கரிம பாஸ்ஃபேட்டுகள், சிலிக்கோன் எண்ணெய் ஆகியன உள் ஒட்டு விடுவிப்பிகளுக்கான எடுத்துக் காட்டுகள். களிப் பூச்சு. கண்ணாடி அல்லது ஏனைய இழைகளால் செருகி வலிவூட்டப்பட்ட பாலிஎஸ்ட்டர் நெகிழியை 0–15 psi அழுத்தத்தில் வார்க்கும் போது, அந்நெகிழியில் இழைகள் முப்பரிமாணத்தில் தனித்து வெளியே தெரியும். பாலிஎஸ்ட்டா ரெசின் இழைகளிலிருந்து அகன்று சுருங்குவதால், இத்தோற்றம் ஏற்படுகிறது. களிப் பூச்சு இத்தோற்றத்தைத் தவிர்க்கிறது. குறைந்த பாகுத் தன்மை உள்ள பாலிஎஸ்ட்டர் ரெசினில், கனிம நிரப்பிகளான கால்சியம் கார்பனேட், அலுமினியம் சிலிக்கேட், உலோகத் தூள் போன்ற பொருள்களை மிகுந்த அளவில் நிரப்பும் போது, களிப் பூச்சுக் கிடைக்கிறது. இப்பூச்சில், நிறமிகளும், கெட்டித் தன்மையைத் தரும் பொருள்களும் இடம் பெறும். களிப் பூச்சு செருகு வலிவூட்டிய நெகிழியில் சுருக்கம் ஏற்படுவதைத் தடுப்பதோடு, கீறல்கள் தோன்றாமலும் காக்கும். கறை ஏறாமல் தடுத்து, நெகிழியின் மேற்பரப்பில் பளபளப்பைக் கொடுக்கும். —என். அய்யாசாமி நூலோதி. Seymours Schwartz and Sidney H. Goodman, Plastics Materials and Processes, Van Nostrand Reinhold Co., New York, 1982.