அருங்காட்சியகம் என்பது கற்பதற்கு ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கலைக் கூடம்; வரலாற்றுச் சிறப்புடைய பொருள்களைப் பாதுகாத்து வைக்கும் ஓர் இடம், கலைத் தொடர்புடைய அரும் பொருள்கள் இங்குச் சேகரித்து வைக்கப்படும். அருங்காட்சியகத்தின் முதன்மையான பணிகள் அவை, (1) சேகரிப்பும் ஆவணப்படுத்துதலும், (2) பாதுகாப்பு, (3) காட்சிக்கு வைத்தலும் காட்சிப் பொருள்களைப் பற்றி ஆய்வு செய்தலும் ஆகிய மூன்றுமாகும். பொருள்கள் சேகரிப்பு எல்லா அருங்காட்சியகங்களுக்கும் மிக இன்றியமையாததாகும். நிறுவப்பட்ட குறிக்கோள்களைப் பொறுத்துச் சேகரிப்புகள், குறிப்பிட்ட பொருள்களை அல்லது பரந்த அளவில் சேகரிக்கப்பட்ட பொருள்களைக் கொண்டனவாக இது விளங்கும். வாழ்வியல் இயற்கையியல் ஆகியவற்றைத் தன்னுள் அடக்கிய பல்நோக்கு அருங்காட்சியகங்கள் உள்ளன. இவை வாழ்க்கையியல் இயற்கையியல் ஆகியவை பற்றிய பொருள்களை மிகப் பரந்த அளவில் சேகரித்து வைத்துள்ளன. ஒரு நெசவு அருங்காட்சியகம், பலதரப்பட்ட நெசவில் மட்டுமே ஆர்வமுடையதாக இருக்கும். புது தில்லியில் இருக்கும் ‘தொடர்வண்டி அருங்காட்சியகம்’, தொடர்வண்டிப் பொறியின் பழைய மாதிரிகள், பெட்டிகள் முதலியவற்றைக் கொண்டதாக அமைந்துள்ளது. இலண்டனிலுள்ள “அம்மை துசோன்சு அருங்காட்சியகம்” (Madam Tussands Museum) ஒரு வரலாற்று அருங்காட்சியகமாகும். இதில் புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புடையவர்களின் முழு உருவ மெழுகு மாதிரிகள் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகம், பொருள்களை வாங்கிச் சேகரித்தல், களப்பணி மூலம் சேகரித்தல், நன்கொடையாகப் பெறுதல், எதிர்பாராமல் கிடைக்கப் பெறும் புதைபொருள்களைச் சேகரித்தல் எனப் பல வழிகளில் பொருள்களைச் சேகரிக்கிறது. அருங்காட்சியகத்தில், பொருள்களைச் சேகரிப்பது மட்டும் போதாது. அப்பொருள்கள் பற்றிய விவரங்கள், அவை கிடைக்கப்பெற்ற இடம், அவற்றின் சிறப்பியல்புகள், கையாளப்பட்ட பாதுகாப்பு முறைகள், நிழற்படங்கள் முதலியவற்றைக் கொண்ட ஒரு பதிவேட்டினைக் கவனமாகக் கையாள வேண்டியது இன்றியமையாதது. இத்தகைய ஆவணம், பொருள்களைப் பற்றிக் கற்பதற்கும் முறையான ஒப்பாய்விற்கும் உதவியாக அமையும். பொருள்களைப் பாதுகாத்தல் அருங்காட்சியகத்தின் இரண்டாம் பணியாகும். இதுவும் சமஅளவு முதன்மை வாய்ந்தது. சில வேளைகளில், தொகுக்கப்பட்ட பொருள்கள் மிகவும் சிதைந்தோ உடைந்தோ இருக்கலாம். துணிகள், சித்திரங்கள், கையெழுத்துப் படிகள் போன்றவை பூச்சியினாலோ காளானாலோ பாதிக்கப்பட்டிருக்கலாம். எனவே, எப்பொருள் பெறப்பட்டாலும் அதனைக் காட்சியில் அல்லது சேமிப்புக் கிடங்கில் வைப்பதற்கு முன்பு, அதனைப் பாதித்த பூச்சியின் இளம்புழுக்கள் அல்லது காளான் முதலியன அதனுடன் வைக்கப்பட்டுள்ள மற்றப் பொருள்களைத் தாக்காத வகையில் முதனிலைப் பாதுகாப்பு அளிக்கப்படுவது எல்லா வகையிலும் ஏற்றதாகும். பாதுகாத்தல் எனப்படுவது, பொருள்களைத் தூசி, அழுக்கு, பூச்சி மற்றும் காளான் அரிப்பிலிருந்து பாதுகாக்கும் எளிய முறையிலிருந்து, முன்பு கூறப்பட்டவற்றால் வரும் சேதத்தைத் தவிர்ப்பதற்கும், அதனுடைய இயல்பான உருவத்தை அளிப்பதற்கும் செய்யப்படும் சிக்கலான வேதியியல் முறை வரையுள்ள எல்லா நிலைலையும் குறிக்கும். சில வேளைகளில் மட்பாண்டம், பீங்கான், உலோகப் பொருள்கள் ஆகியவற்றின் உடைந்த துண்டுகள் அருங்காட்சியகத்தில் பெறப்படும்போது அவற்றின் முந்தைய வடிவங்களை அளிப்பதற்காகக் காப்பாட்சியரால் அவை ஒன்றுபடுத்தப்படுகின்றன. பொது மக்களைக் கவர்வதற்கும் வரலாற்றுக் கலை அல்லது பொருள்களின் சுற்றுச் சூழல் தன்மைகளைக் கற்பதற்கும் இத்தகைய பொருள்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. காட்சி அமைப்பு என்பது, பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் பொருள்களை அமைப்பதாகும். ஒழுங்காக அமைக்கப்பட்ட காட்சிப் பொருள்களின் வாயிலாக, காப்பாட்சியர் அவற்றின் வரலாறு, கலை மற்றும் இயற்கையியலின் வளர்ச்சியினைக் காட்டுவதன் வாயிலாக, அருங்காட்சியகத்தைக் காணவரும் பொது மக்களின் அறிவை வளர்க்க முடிகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது சென்னை அரசு அருங்காட்சியகத்தின் முகப்பிலமைந்திருக்கும் சிற்பக் கூடமாகும். தென் இந்தியாவிலும் வட இந்தியாவிலும் வளர்ச்சியுற்றிருக்கும் சிற்பக் கலையினைப் பொது மக்களுக்குக் கூறும் வகையில் இக்கூடத்தில் இந்தியச் சிற்பங்கள் காலக்கிரமமாக அமைக்கப்பட்டுள்ளன. நியூயார்க்கில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்க இயற்கையியல் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள சூழ்நிலைத் கலைக் கண்காட்சி, இதற்கு மற்றுமொரு எடுத்துக் காட்டாகும். அருங்காட்சியகத்தின் அடுத்த பணி, பொருள்களின் ஆய்வு எனப்படுவது. இது வரலாறு, கலை, தொழில்முறை போன்ற பல கோணங்களிலிருந்து பொருள்களை ஆய்வு செய்து, அவற்றின் வாயிலாகப் பல துறைகளை வளர்ப்பதற்கு உதவும் வகையில் புதிய உண்மைகளைப் பெறுவதேயாகும். அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சேகரிப்பினை ஆய்வு செய்தே வரலாறு, இயற்கையியல், கலை, தொழில் துறை போன்றவை பெருமளவில் வளர்ச்சியுற்றன. அரசர்கள் ஆட்சி புரிந்த காலம், அவர்களின் பல்வேறு செயல்கள் ஆகியவை பற்றிய புதிய உண்மைகளை விளக்கும் நாணயங்களும் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள சின்னங்களும் பற்றிய ஆய்வு முறை இதற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். அருங்காட்சியகம் இச்செயல்களை வேறுபட்ட அளவில் உலகின் பல பகுதிகளிலும் நிறைவு செய்து வருகிறது. அண்மைக் காலத்தில் அருங்காட்சியகத்தின் எண்ணிக்கை மிகுதியாகி வரும் நிலையே, அருங்காட்சியகத்தின் சிறப்புத் தன்மையை நன்கு உணர்த்தும். அருங்காட்சியக வகைகள் அருங்காட்சியக வளர்ச்சி கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தொடக்க நிலையில் இருந்தது. சேகரிப்புகள் பரந்த நோக்கத்துடன் செய்யப்பட்டன. மனிதனின் தலைசிறந்த படைப்புகளையும் இயற்கை அரும்பொருள்களையும் எவ்வித வரையறையும் இல்லாமல் அருங்காட்சியகங்கள் சேகரித்து வந்தன. முதல் உலகப் போருக்குப் பின்னர் இந்த நூற்றாண்டில் நிறுவப்பட்ட அருங்காட்சியகங்களின் எண்ணிக்கை மிகுந்துள்ளது. கல்வி வளர்ச்சிக்கு அருங்காட்சியகங்கள் இன்றியமையாதவை என்னும் எண்ணமே இதற்குரிய முதற் காரணமெனலாம். தாய் நாட்டுச் சிறப்பு, அதன் பண்பாட்டுப் பெருமை ஆகியவற்றின் வாயிலாகத் தேசிய உணர்வினைப் பலப்படுத்துவதற்கு அருங்காட்சியகங்கள் துணை செய்கின்றன. மேலும் எவ்வாத் துறைகளிலும் அறிவு விரைந்து வளர்ச்சியடைந்ததால், அறிவியலறிஞர்கள் ஒரு துறையின் ஒரு பகுதியை அழுத்தமாக ஆராய்வது தேவையாகிறது. இத்தன்மை அருங்காட்சியகங்களுக்கும் பொருந்துவதாயிற்று. இதனால் சிறந்த அருங்காட்சியகங்கள் தோன்றத் தொடங்கின. இதில் ஒரு துறை அல்லது குறிப்பிட்ட பகுதியைப் பற்றிய ஆராய்வு தொடங்கியது. இதனால் பலதரப்பட்ட அருங்காட்சியகங்கள் உண்டாயின. அவற்றை, 1) பலதரப்பட்ட அருங்காட்சியகங்கள், 2) கலை மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகங்கள், 3) இயற்கையியல் அருங்காட்சியகங்கள், 4) அறிவியல் அருங்காட்சியகங்கள், 5) வரலாற்று அருங்காட்சியகங்கள், 6) மானிடவியல் அருங்காட்சியகங்கள், 7) குழந்தைகள் அருங்காட்சியகங்கள், 8) பெரியோர்களின் நினைவுச் சின்ன அருங்காட்சியகங்கள், 9) திறந்தவெளி அருங்காட்சியகங்கள், 10) இடத்தின் சிறப்பினைக் காட்டும் அருங்காட்சியகங்கள், 11) கோயில் அருங்காட்சியகங்கள் எனப் பலவாறாகப் பிரிக்கலாம். அருங்காட்சியகத்தின் பணியாட்கள் காப்பாட்சியர் குழு, தொழில் நுட்பக் குழு, நிருவாகக் குழு, காவற் பணியாளர்கள் குழு என நான்கு பிரிவினராகப் பகுக்கப்படுகின்றனர். அருங்காட்சியகத்தின் இயக்குநர் அல்லது தலைவர், பொறுப்பாளர் என்ற முறையில் இந்நான்கு பிரிவுப் பணியாளர்களையும் கண்காணித்து வருகிறார். அவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உதவி இயக்குநர்களால் உதவி செய்யப்படுகிறார். அவரது கடமை, திட்டத்தினைச் செயற்படுத்துதலும் புதியவற்றைக் கண்டுபிடித்தலும் அருங்காட்சியகத்தை விரிவுபடுத்தலுமேயாகும். இந்நான்கு பிரிவுப் பணியாளர்களின் செயல்களையும் இணைத்து, அருங்காட்சியகத்தின் முதற்கடமையான சேகரிப்பு, காட்சிக்கு அமைத்தல், ஆவணப்படுத்துதல், பொருள்களைப் பற்றிய அறிவினை விரிவாக்குதல் ஆகியவற்றை நிறைவு செய்கிறார். மக்களின் பண்பாட்டுப் பெருமை, வழி வழியாக வரும் இயற்கைச் சிறப்பு ஆகியவற்றின் அடையாளமாகத் திகழுவது அருங்காட்சியகம். இது ஒரு சிறந்த பொது நிறுவனமாக விரைவாக வளர்ச்சியடைந்து வந்து கொண்டிருக்கிறது. இது, சமுதாயத்தினர் பண்பாட்டையும் அறிவியலையும் அறியும் மையமாகும். தாய்நாட்டு மக்களும் அயல்நாட்டு மக்களும் பார்க்கும் பொது இடமாகவும் திகழ்கிறது. அருங்காட்சியகம், அமைந்திருக்கும் இடத்திலுள்ன மக்களின் பல்வேறு சாதனைகளைக் காட்டும் காட்சிச் சாளரமாக (Show Window) அமைகிறது. இவற்றையெல்லாம் ஆராயும் போது, அருங்காட்சியகக் கட்டடங்கள் மனத்தில் பதியத்தக்க வகையிலும் கவர்ச்சிகரமாகவும் பாராட்டுதலை வெளிக் கொணரத்தக்கவையாகவும் நினைவில் நிற்கும் வண்ணமுடையனவாகவும் அமைதல் இன்றியமையாததாகிறது. மேலும் அருங்காட்சியகப் பணிகளை நிறைவு செய்யத் துணையாகவும் இக்கட்டடங்கள் அமைதல் வேண்டும். அருங்காட்சியகக் கட்டட அமைப்புக்கு நினைவில் கொள்ள வேண்டிய சில கருத்துகள் உள்ளன. இவை அருங்காட்சியகத்தில் எந்தவிதமான பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட வேண்டும். என்பதிலிருந்து தொடங்குகின்றன. ஓர் அருங்காட்சியகம் அடிப்படை வசதிகளையும் திறந்த வெளியிடங்கள், காற்றோட்டமான நன்கு அமைக்கப்பட்ட காற்றுப் புழைகளுடைய கூடங்கள், இளைப்பாறும் இடங்கள் முதலானவற்றையும் கொண்டிருக்க வேண்டும். அருங்காட்சியகக் கட்- டடத்திற்கு வடிவமைக்கும்போது இவையனைத்தும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். தொடக்கக் காலங்களில் அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்களாகத் திகழ்ந்த மிகப் பெரிய அரண்மனைகளிலும் மாளிகைகளிலும் நிறுவப்பட்டிருந்தன. இவற்றிற்குப் புதிய கட்டடங்கள் கட்ட நேரிட்டபோது, அவற்றைப் போன்றே நினைவில் நிற்கக் கூடியதான கட்டடத்தில் இவற்றை நிறுவும் கொள்கை நடைமுறையாக்கப்பட்டது. பல அருங்காட்சியகங்கள் கி.பி. 18–19–ஆம் நூற்றாண்டுகளில் இத்தகைய சிறப்பினைக் கொண்டிருந்தன. இவற்றிற்கு எடுத்துக் காட்டாக இலண்டனிலுள்ள ‘பிரிட்டன் அருங்காட்சியகம்’ (1773), பாரிசிலுள்ள ‘பிரான்சு நாட்டின் நினைவுச் சின்ன அருங்காட்சியகம்’ (1793), கல்கத்தாவிலுள்ள ‘இந்திய அருங்காட்சியகம்’ (1814) ஆகியவற்றைக் கூறலாம். தொடக்கக் கால அருங்காட்சியகங்களில் காட்சிப் பொருள்களை அமைத்திருந்த கூடங்கள் நீளமான அமைப்பினைக் கொண்டிருந்தன. அவ்வாறு நிலவிய நீளமான கூடங்கள் பல சிறு அறைகளாகப் பகுக்கப்பட்டு அவற்றில் பல்வேறு பொருள்களைக் காட்சிக்கு வைத்திருந்தனர். இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது மியூனிச்சிலிருக்கும் ‘ஆல்ட்பினாகோதேக்’ (Altepina kothak) அருங்காட்சியமாகும். இத்தகைய வகைப்பாடு ஒரே மாதிரியான அல்லது சலிப்பைத் தருகின்ற உணர்வினை உண்டாக்குவதால், கட்டட வடிவமைப்பு வல்லுநர்கள், பார்வையாளர்கள் முதலானோரின் தேவைக்கேற்ப வடிவங்களை நுண்திறனுடன் அமைக்கும் வழி தேடினர். இத்தகைய வடிவமைப்பைக் கொண்டு ‘தோர்னை அருங்காட்சியகம்’ (Tournei Museum) திகழ்கிறது. பிரேசில் நாட்டில் 1947–ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கலை அருங்காட்சியகத்தில் 1000 அடி நீளமுள்ள பெரிய கூடமொன்று இரட்டை ‘டி’ (Double ‘T’) வடிவம் கொண்டுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள ஏலில் (Yale) 1953–ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஐந்து அடுக்குகளைக் கொண்ட முக்கோண வடிவக் கட்டடம், ஒரு நீண்ட சதுர அமைப்பிற்குள் உள்ளது. ‘பிராங்குலாய்டு ரைட்’ (Frank Lloyd Wright) என்பவரால் கட்டப்பட்டது, நியூயார்க்கிலுள்ள ‘குக்கன்கேய்ன் அருங்காட்சியகம்’ (Guggenhain Museum). இது ஆறு அடுக்குக் கொண்ட சுருள் வடிவுடைய கோபுரமாகும். இதில் மின் ஏற்றப் பொறி வழியாக (Elevator) மேலே சென்று, பின்னர்ப் படிப்படியாகச் சாய்வான தரையில் இறங்கி நடக்கலாம். இதனால் பார்வையாளர்கள் ஒவ்வொரு தளமாக ஏறிச் சோர்வடையாமல் கண்டுகளிக்கிறார்கள். சுருள் வடிவச் சுவரில் ஓவியங்கள் படிப்படியாகக் கீழ் மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளமையால் ஒவ்வொரு ஓவியமும் பிறவற்றிலிருந்து பிரிந்து தனியாக நிற்கிறது. இது ஒரு மேம்பட்ட கட்டட அமைப்பாகும். இது 1959–ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். மற்றுமொரு புதிய கட்டட அமைப்பினைக் கொண்டுள்ள அருங்காட்சியகம், மெக்சிகோவிலுள்ள மானிடவியல் அருங்காட்சியகமாகும். புது தில்லியில் அமைந்துள்ள தேசிய அருங்காட்சியகம் வட்ட வடிவமானது. இது நடுவிலுள்ள வட்ட வடிவத் திறந்த வெளியிலிருந்து தொடங்கும் கூடங்களைக் கொண்டுள்ளது. ஒரு பகுதியே இதில் முழுமை பெற்றிருந்த போதிலும், மனத்தில் பதியும் வண்ணம் அமைக்கப்பட்ட புதிய அருங்காட்சியகக் கட்டடமாக இது நிகழ்கிறது. அருங்காட்சியக வரலாறு அலெச்சாண்டிரியாவில் தாலமி (Ptolemy) என்பார் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் ஒரு கலைக் கூடத்தை நிறுவினார். இது நூலகம், வான ஆராய்ச்சி நிலையம், அரங்கம், விலங்குக் காட்சிச் சாலை, தாவரவியற் பூங்கா முதலான பலவற்றைத் தன்னுள் கொண்டு, கற்பதற்கும் கலையினைப் பற்றி அறிவதற்குமான சிறந்தமையமாகத் திகழ்ந்தது நம் நாட்டின் தொன்மையான இலக்கியங்களில் ‘சித்திரச்சாலைகள்’ குறிக்கப்பட்டுள்ளன. ஓர் இந்துக் கோயிலையே ஓவியக் கூடமாகக் கருதலாம். ஏனெனில் கருவறையைச் சுற்றி அமைந்துள்ள பல்வேறு மண்டபங்களில் ஆண் பெண் தெய்வங்களைப் பற்றிக் காப்பியங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டு வரும் கதைகளை நினைவு கூரும்வகையிலான சிற்பங்களும் ஓவியங்களும் உள்ளன. பண்டைய ஆட்சியாளர்கள் அவர்கள் கைப்பற்றிய நிலப்பகுதியிலிருந்தும் தம் அரசிலிருந்தும் கலைச் செல்வத்தைக் குவித்து வைத்திருந்தனர். உரோமானியர்கள் கிரேக்கர்களை வெற்றி கொண்டு கொள்ளையடித்தவற்றுள் பெரும்பாலானவை கலைச் சேகரிப்புகளாகும். இவ்வாறே சார்லிமான்யர் (Charlemagne) என்னும் பிரெஞ்சு ஆட்சியாளர், தாம் கைப்பற்றிய நிலப்பகுதியிலிருந்து விலையுயர்ந்த பொருள்களின் மாபெரும் சேகரிப்பினை உண்டாக்கினார். ஆயினும், இவையனைத்தும் போரின் விளைவுகளாகும். பொருள்களை உண்மையாகச் சேகரிக்க வேண்டும் என்ற உணர்வு ஐரோப்பாவில் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இக்காலத்தில் அரசர்களும் இளவரசர்களும் மட்டுமன்றிக் குடிமக்களும் கலைப் பொருள்களை முறையாகச் சேகரிக்கத் தொடங்கினர். ஆத்திரிய வேலாய்சு (Valois) மன்னர்களும் பூர்கோயின்யா (Bourgogne) கோமகன்களும் சேகரிக்கத் தொடங்கிய பொருள்கள் வியன்னாவிலும் பிரேசில் நாட்டிலும் அமைந்த அருங்காட்சியகங்களில் வைக்- கப்பட்டன. பிரான்சிலுள்ள ‘பெர்ரி’ (Berry) கோமகன் சேகரித்த கலைப் பொருள்கள் பதினேழு அரண்மனைகளில் வைக்கப்பட்டிருந்தன. இத்தாலியிலிருந்த பாலடின் (Palatin) கோமகன்கள் கைப்பிரதிகளைப் படி எடுப்பதற்காக முப்பது படியெடுப்பாளரைப் பணியமர்த்தி இருந்தனர். அவர்கள் எண்ணூறு கையெழுத்துப் படிகளை வைத்திருந்தனர். கத்தோலிக்கக் குருமார்களும் சிறந்த கலைப் பொருள் சேகரிப்பாளர்களாகத் திகழ்ந்தனர். உரோமாபுரியின் தலைநகரில் கி.பி. 1471–இல் ஒரு தொல் பொருளாராய்ச்சித் துறையை நிறுவி, அதில் சலவைக்கற் சிற்பங்களையும் படிமங்களையும் நிறுவினர். ஆசுத்திரியாவிலுள்ள ஏப்சுபர்க்குகளும் (Habsburgs) சிறந்த சேகரிப்பாளர்களாவர். அவர்கள் போர்க் கருவிகள், கையெழுத்துப் பிரதிகள், ஓவியங்கள், பதக்கங்கள், மட்பாண்டம், ஓவியத்திரை ஆகியவற்றைச் சேகரித்தனர். இவையே இறுதியில் வியன்னா அருங்காட்சியகப் பொருள்களாயின. இங்கிலாந்திலும் சிறந்த சேகரிப்பாளர்கள் இருந்தனர். அவர்களுள் ஒருவர் முதலாம் சார்லசு ஆவார். இவர் கலைப் பொருள்களைச் சிறந்த முறையில் சேகரித்தார். ஆனால், இவருக்குப் பின் வந்த ஆலிவர் குராம்வெல் (Oliver Cromwell) கலையினை மிகுதியாக வெறுத்தமையால் அப்பொருள்களை விற்றுவிட ஆணையிட்டார். மற்றுமொரு சேகரிப்பாளரான அருண்டேல் பிரபு அவரது மாளிகையில் பல சேகரிப்புகளை முறையாக அமைத்தார். இது கி.பி. 1578–ஆம் ஆண்டிலிருந்து பொது மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது. இங்கிலாந்தில்தான் புதிய அருங்காட்சியகத்தின் பிறப்பு ஒளிர்ந்தது. பிரான்சில் 14–ஆம் உலூயி (Louis xiv) கலையைப் பாதுகாக்கும் புரவலரானார். இவர், கார்டினல் மசாரின் (Cardinal Mazarin), சபாசு (Jabch) ஆகியோரின் கலைச் சேகரிப்புகளை வாங்கினார். இவற்றை அவர் ‘உலுவ்ரி (Louvre) அரண்மனையில்’ அப்போலோ என்ற பெயரில் அமைந்த கூட த்தில் கி.பி. 1681–ஆம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைத்தார். எனினும் இது நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை. இவரின் பின்தோன்றல்கள் ஒரே காலத்திற்குரிய கலைச் சேகரிப்பினைத் தொடர்ந்தார்கள். அரசர்களின் சேகரிப்பானது, மிகக் குறுகிய காலத்திலேயே பிரான்சின் மிகப்பெரிய சேகரிப்பாகிவிட்டது. இவற்றை நோக்கும் போது கி.பி. 15–ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 17–ஆம் நூற்றாண்டு வரை மறுமலர்ச்சியின் வேகத்தால், இடைக்காலப் பழைமை நிலை, புதிய காலத்தை நோக்கிச் செல்லத் தொடங்கிய சமயத்தில் தான் எல்லாவிதமான பொருள்களும் சேகரிக்கப்பட்டன என்பது புலனாகிறது. எனினும், இவையனைத்தையும் அருங்காட்சியகமாகக் கருதாமல் சேகரிப்புகளாக மட்டுமே கருத வேண்டும். ஏனெனில், இவை அருங்காட்சியகங்களாக நிறுவப்படாமல், பொது மக்கள் பார்வைக்கு அமைக்கப்படாமல் தனிப்பட்டவர்களின் இன்பத்திற்காகவே அமைந்தன. அருங்காட்சியகம் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் ஒரு துறையாக வளர்ச்சியடைந்தது. அவ்வேளையில் தான் மறுமலர்ச்சி உணர்வு, அறிவியல் உணர்வுடன் கலந்து, அறிவு அனைவரும் பெறுமளவில் இருத்தல் வேண்டும் என்ற கருத்து நிலவியது. இதற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்த்தது திதரோத் (Diderrot) என்னும் தத்துவஞானியால் உருவாக்கப்பட்ட கலைக் களஞ்சியம். இவர் அறிவினைப் பெருக்கிக் கொள்ளும் ஒரு வாயிலாக இக்கலைக்களஞ்சியத்தை உருவாக்கத் தொடங்கினார். பொது மக்களின் கல்வி அறிவிற்குக் கலைப் பொருள்களின் சேகரிப்புகளைக் கிடைக்கச் செய்வது இன்றியமையாததாயிற்று. இதன் விளைவாகக் கி.பி. 1751 ஆம் ஆண்டில் பிரிட்டன் அருங்காட்சியகம் நிறுவப்பட்டு வளர்ச்சியடையத் தொடங்கியது. பிரெஞ்சுப் புரட்சி (கி.பி. 1789) உலக வரலாற்றில் குறிப்பிடத் தக்க சிறந்த நிகழ்ச்சியாகும். அருங்காட்சியகங்களின் வரலாற்றிலும் இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பிரான்சு நாட்டு மன்னர்களின் சேகரிப்புகள் பொது மக்கள் சொத்தாக ஆக்கப்பட்டன. புரட்சி உச்சக் கட்டத்தில் இருந்தபோது, புரட்சியாளர்களின் குழு பின்வரும் நான்கு அருங்காட்சியகங்களை நிறுவியது: (1) கலை அருங்காட்சியகம், (2) இயற்கையியல் அருங்காட்சியகம், (3) பிரெஞ்சு நினைவுச் சின்ன அருங்காட்சியகம், (4) கைத்திறன் அருங்காட்சியகம். இலண்டனில் கி பி. 1824–ஆம் ஆண்டில் தேசியக் கூடம் தொடங்கப்பட்டது. மியூனிச்சில் (Munich) பண்டைய ஓவியங்களைக் கொண்டு “ஆல்ட்பனாகோதேக்” என அழைக்கப்படும் பண்டைய ஓவியக் கூடம் கி.பி. 1836–இல் தொடங்கப்பட்டது. பெர்லினில் கி.பி. 1828–ஆம் ஆண்டில் பிரடரிக்கு வில்லியம் மன்னர் கூடத்தைத் (Royal Gallery) திறந்து வைத்தார். நியூரம்பெர்கில் கி.பி. 1853-இல் செருமன் அருங்காட்சியகமும் திறக்கப்பட்டது. இன்று இலெனின் கிராடு என்று அழைக்கப்படும் பீடர்சுபர்கில் கி.பி. 1852–ஆம் ஆண்டில் எர்மிடேசு (Hermitage) என்னும் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. இதில் உருசிய மன்னர்களின் சேகரிப்புக்கள் வைக்கப்பட்டன. இவ்வாறு 19–ஆம் நூற்றாண்டில் அருங்காட்சியகம் தன்னைக் கலை, அறிவியல் பொருள்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் ஒரு சிறந்த துறையாக ஆக்கிக் கொண்டது. மேலும், ஐரோப்பாவில் பல நாடுகளிலும் அருங்காட்சியகங்களுக்கெனத் தனியாகப் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. அருங்காட்சியகக் கட்டடக் கலை, உட்புற அலங்காரம் ஆகியவற்றில் சிறந்த கவனம் செலுத்தப்பட்டது. காலப்போக்கில் தொல்பொருளியல் அகழ்வினால் வரலாற்றுக் காலத்திற்கு முந்திய பொருள்கள் பல அகழ்ந்தெடுக்கப்பட்டன. அருங்காட்சியகங்கள் அத்தகைய தொல்பொருளியல் சேகரிப்புகளால் மேலும் வளர்ந்தன. சுவீடன், நார்வே, தென்மார்க்கு (Denmark) ஆகியவற்றிலுள்ள அருங்காட்சியகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். ‘கோபன்கேகன் அருங்காட்சியகம்’ இத்தகைய வரலாற்றுக் காலத்திற்கு முந்திய பொருள்களின் மிகுதியான சேகரிப்புகளைக் கொண்டிருந்தது. பிரான்சிலுள்ள “செயின்ட்டுசெர்மா ஆன்லாயே” அருங்காட்சியகம் மற்றொரு தொல் பொருளியல் அருங்காட்சியகமாகும். இன்று அருங்காட்சியகச் சேகரிப்புகளில் தொல் பொருள் அகழ்வு வலிமையான ஆதரவு பெற்றுள்ளது. இதனால் அருங்காட்சியகம் என்பது, தொல் பொருள் சேகரிப்புகளே உடையது என்றே கருதப்படுவதாயிற்று. இனி, மற்றுமொரு வகையான அருங்காட்சியகம், ஒப்பனைக்கலை அருங்காட்சியகமாகும். கலைநயமற்ற பொருள்களின் பெரும்பான்மையான உற்பத்தியால் கலை உணர்வு அழிந்துவிடும் என்ற அச்சத்தால் எழுந்ததே இவ்வருங்காட்சியகம். இந்நோக்கத்தினைத் தடுப்பதற்கும் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் கலையுணர்வினை மீட்பதற்கும் அன்றாடப் பொருள்களைக் கொண்டு சில ஒப்பனைக் கலைப் பொருள்களின் கண்காட்சி ஒன்று இலண்டனில் கி.பி. 1851–ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கண்காட்சிக்காகத் திரட்டப்பட்ட பொருள்களைக் கொண்டு கி.பி. 1857–ஆம் ஆண்டில் விக்டோரியா, ஆல்பர்ட்டு அருங்காட்சியகம் ஆகியவை திறக்கப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து கி.பி. 1863–ஆம் ஆண்டில், பாரிசில் ஒப்பனைக் கலை அருங்காட்சியகமும் கி.பி. 1884–ஆம் ஆண்டில் புரூசெசில் “சாங்குவாண்டனேர்” (Cinquantenaire) அருங்காட்சியகமும் திறக்கப்பட்டன. ஒப்பனைக் கலை அருங்காட்சியகத்திலிருந்து கிராமியக் கலை அருங்காட்சியகம் மிக எளிதாக உருவாயிற்று. மக்கள் இன அமைப்பியல், கிராமிய அருங்காட்சியகங்கள், திறந்த வெளி அருங்காட்சியகங்கள் ஆகியவற்றை முதன் முதலில் இசுகாண்டினேவிய நாடுகள் (Scandinavia) தொடங்கின. சுவீடன் நாட்டுக் கிராமத்தை எல்லாவகையிலும் ஒத்திருக்குமாறு அமைந்த நார்டிக் (Nordic) அருங்காட்சியகத்தைக் கி.பி. 1873–ஆம் ஆண்டில் முதன் முதலாக இசுடாக்கோமில் (Stockholm) உருவாக்கினர். தென்மார்க்கு, ஆலந்து, பின்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள அருங்காட்சியகங்களை நார்வேயும் பின்பற்றி முன்னணி வரிசையில் நின்றது. இப்பொழுது திறந்த வெளி அருங்காட்சியகங்கள், கடந்த காலத்தின் கலைச் சுவைத் திறனை அன்றிருந்தது போலவே பாதுகாப்பதன் வாயிலாகப் புகழடைந்து வருகின்றன. பண்டைக்காலப் பொருள்களை அவற்றின் இயல்பான சூழ்நிலையில் பாதுகாத்து, அக்கால மக்களின் வரலாற்றினை எடுத்துக் காட்டுவதும் அருங்காட்சியகங்களின் ஒரு பணியாகும். அவ்வாறே தொன்மையான கட்டடத்தில் இடைக்காலப் பொருள்களைப் பாரிசிலுள்ள குளூனி அருங்காட்சியகம் முதன் முதலாக வைத்தது. வரலாற்றுக் காலத்தை நினைவுபடுத்தும் வகையில் அவ்வக் காலத்துப் பொருள்கள், அவ்வக்காலத்திற்குரியவாறு வெர்செல்சு, (Versailles) அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ளதுபோல் கால அளவினைக் காட்டும் அறைகள் பல தொன்மையான கட்டடங்களில் அமைக்கப்பட்டன. புகழ் பெற்ற சிறந்த மனிதர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய இடத்தில் பொருள்களைக் கொண்ட நினைவுச் சின்ன அருங்காட்சியகங்களும் வரலாற்று உணர்வினையுடையனவாகக் கருதப்படலாம். இத்தகைய நினைவுச் சின்ன அருங்காட்சியகங்களுக்கு எடுத்துக்காட்டுகள் நம் நாட்டிலுள்ள காந்தி நினைவுச் சின்ன அருங்காட்சியகங்கள், புது தில்லியிலுள்ள நேரு அருங்காட்சியகம், சென்னையிலுள்ள காமராசர் நினைவு இல்லம் ஆகியவையாகும். உலகில் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டவுடன் எல்லா இடங்களிலும் அறிவியல் அருங்காட்சியகங்கள் நிறுவப்பட்டன. அறிவியல் அருங்காட்சியகங்களின் சிறப்பியல்பு, பல காட்சிப் பொருள்கள் ஓர் அறிவியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மாதிரிகளாக இருப்பதேயாகும். இங்கு வரும் பார்வையாளர்கள் இம்மாதிரிகளைத் தாங்களே இயக்கி அதன் அறிவியல் தத்துவத்தைச் செயல் முறையால் அறிந்து கொள்ளலாம். இலண்டனிலுள்ள ‘அறிவியல் அருங்காட்சியகம்’, பாரிசிலுள்ள ‘பாலே தோலாதெகுவர்த்’ அருங்காட்சியகம், வாசிங்டனிலுள்ள சுமித்சோனிய அருங்காட்சியகம் ஆகியவை புகழ் பெற்ற சில அறிவியல் அருங்காட்சியகங்களாகும். இந்தியாவில் 1950–ஆம் ஆண்டில் முதன் முதலில் புது தில்லியிலுள்ள தேசிய இயற்பியல் ஆய்வுக் கூடத்தில் ஒரு சிறிய அறிவியல் அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. பின்னர் 1956–ஆம் ஆண்டில் கல்கத்தாவில் பிர்லா அறிவியல், தொழிலியல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. பெங்களூரில் விசுவேசுவரய்யா அறிவியல், தொழில்நுட்ப அருங்காட்சியகம் 1965–இல் அமைக்கப்பட்டது. பம்பாயிலுள்ள நேரு மையமே இப்போதுள்ள மிகப்பெரிய அறிவியல் அருங்காட்சியகமாகும். இக்காலத்தே நிறுவப்பட்டு வருகிற மற்றுமொரு வகையான அருங்காட்சியகம், குழந்தைகள் அருங்காட்சியகங்களாகும். இவ்வருங்காட்சியகம் ஒரு பொதுவான அருங்காட்சியகத்தில் சிறிய அளவிலமைந்த ஒன்றன்று. இது குழந்தைகளுக்கு அருங்காட்சியகத்தின் கலை, இயற்கையியல், மேலும் பல அறிவியல் சேகரிப்புகளின் பல்வேறு செயல்முறைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வாய்ப்பினை அளிக்கும் ஒரு செயல்முறை மையமாகும். இவ்வருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கும் சேகரிப்புகள் குழந்தைகள் எனிதாகக் கையாளத் தக்கனவாகும். அதாவது பெரிய வேலைப்பாடமைந்த கலை வண்ணங்கள் (Art Pieces) மிகுதியாகக் கிடைக்கும் பொருள்கள், எளிதாகத் திருப்பி வைக்கக் கூடிய பொருள்கள், அறிவியல் தத்துவத்தை விளக்கும்வண்ணம் அமைக்கப்பட்ட எளிய காட்சிப் பொருள்கள், பல வட்டாரங்களைச் சார்ந்த மக்களின் பண்பாட்டினை விளக்கும்வண்ணம் உள்ள பொருள்கள் போன்றவை இடம்பெறும். நியூயார்க்கிலுள்ள புருக்லினில் கி.பி. 1899–இல் முதன் முதல் குழந்தைகள் அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்பட்டது. பதினான்கு ஆண்டுகள் கழித்துப் “போசுடன் (Boston) குழந்தைகள் அருங்காட்சியகம்” நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து மற்ற இடங்களிலும் அருங்காட்சியகங்கள் நிறுவப்பட்டன. குழந்தைகள் அருங்காட்சியசம் அமைக்கும் கருத்து, மற்ற நாடுகளுக்கும் பரவியது, இந்தியாவில் குசராத்திலுள்ள அம்ரேலியில்தான் முதலில் குழந்தைகள் அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து புது தில்லியிலுள்ள தேசிய குழந்தைகள் அருங்காட்சியகமும் பாலர் பவனும் 1962–ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன. இப்போது இலட்சுமணபுரி, கல்கத்தா ஆகிய நகரங்களிலும் குழந்தைகள் அருங்காட்சியங்கள் உள்ளன. சென்னை அரசு அருங்காட்சியகம் போன்ற பல அருங்காட்சியகங்களில் குழந்தைகள் கூடங்கள் உள்ளன. இவ்வனைத்து அருங்காட்சியகங்களும் இரண்டு முதன்மையான கருத்தினை விளக்கும் சான்றாகத் திகழ்கின்றன. அவை, அன்றாடம் பயன்படுத்தும் எளிய பொருள்களையும் இச்சேகரிப்புகளில் சேர்த்து அருங்காட்சியகச் சேகரிப்புகளின் வாய்ப்பினைப் பெருக்குவது, கல்வியில் அருங்காட்சியகங்களின் பங்கு மேன்மேலும் சிறப்பு எய்தச் செய்வது ஆகியனவாகும். குழந்தைகள் அருங்காட்சியகங்களும் பொது மக்களுக்குக் கல்வியறிவு புகட்டும் அடிப்படையில் நிறுவப்பட்டன. கடந்த காலத்தின் நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல் என்பது அருங்காட்சியகத்தின் தலைசிறந்த நோக்கமாகத் தொடர்கிறது. எனினும், அவற்றை வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காகவும் பரப்புவதற்காகவும் பயன்படுத்துவது என்பது, அதைப்போன்றே அல்லது அதனினும் மிக்க சிறப்புத் தன்மை வாய்ந்ததாக அமைந்துள்ளது. மேலும், அருங்காட்சியகம் ஒரு நாட்டின் பண்பாட்டுச் செல்வத்தைக் காட்டும் களஞ்சியமாகத் திகழ்கிறது. ஒரு நாட்டின் கலை, நாகரிகம், பண்பாடு மரபுரிமையினையும் பெருமையினையும் காட்டும் சாளரமாகவும் இது வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் விளைவாக முந்தைய குடியேற்றத்திலிருந்த குடியேற்றச் சத்திகள் விலகி, தங்கள் பண்பாட்டினை அடையாளம் காட்டும் வகையில், தனிப்பட்ட தன்னம்பிக்கை வாய்ந்த நாடுகள் உருவாகத் தொடங்கின. அத்தகைய நாடுகளில் அம்மக்களின் வரலாற்றுக் காலப் பெருமை, பண்பாட்டின் புகழ் ஆகியன இன்றியமையாதனவாகத் திகழ்ந்தன. இப்போக்கே இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அருங்காட்சியகங்களின் மிக விரைந்த வளர்ச்சிக்குச் சிறப்பான காரணமாகத் திகழ்ந்தது. உலகப் போருக்குப் பின்னர் அறிவியல், தொழில் நுணுக்கங்கள் ஆகியன மிகவும் விரைவாக வளர்ச்சியடைந்தன. இதனால், நாடுகளுக்கிடையே தகவல் தொடர்பு முன்னேறி அறிவியல் வளர்ச்சியினை அறிந்துகொள்ளும் ஒரு வழியாகவும் அருங்காட்சியகம் திகழும் என்னும் கருத்துப் பரவி, சிறு நாடுகளிலும் அருங்காட்சியகங்கள் விரைந்து வளர்ச்சியடைந்தன. இங்ஙனம் நாடுகளும் தம்மை மாற்றிக்கொண்டு வந்தன. இதனால் அறிவியல் அருங்காட்சியகங்களின் எண்ணிக்கைகளும் குழந்தைகள் அருங்காட்சியகங்களின் மிகுதியாயின. அருங்காட்சியகங்களின் விரைவான வளர்ச்சி நிலை, ஆசியா ஆப்பிரிக்காவில் அண்மைக் காலத்தில் புதிதாக உரிமை பெற்ற நாடுகளில் நன்கு வெளிப்பட்டது. பல நாடுகளில் அவ்வப்போது இருந்த குடியேற்ற நாட்டு அரசாங்கத்தினரால் அருங்காட்சியகங்கள் நிறுவப்பட்டிருந்தன. இந்நாடுகள், உரிமைஏற்ற பிறகு தத்தம் பண்பாட்டின் தனிச்சிறப்பினை வெளிப்படுத்துவதில் ஆர்வம் கொண்டன. இதன் விளைவாக முன்னரே அமைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகங்களை மேம்படுத்தின. தேசியப் பண்பாடு, மரபுரிமை ஆகியவற்றைக் காட்டும் தொல்பொருளியல், கலை அருங்காட்சியகங்கள் நிறுவப்பட்டன. ஆசிய நாடுகளில் அருங்காட்சியக வளர்ச்சி ஒரே தன்மையாக இல்லை. ஐரோப்பா வடஅமெரிக்கா ஆகியவற்றிலுள்ள அருங்காட்சியகங்களின் வளர்ச்சியு- டனும் ஆசிய நாடுகளின் பழைமையுடனும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இதன் வளர்ச்சி போதுமானதாக இல்லை. முப்பத்திரண்டு ஆசிய நாடுகளில் 1977–ஆம் ஆண்டில் 1157 அருங்காட்சியகங்கள் இருந்தன. அதாவது, ஒவ்வொரு நாட்டிலும் ஏறத்தாழ 36 அருங்காட்சியகங்களிருந்தன. சில நாடுகள் மிகுதியான அருங்காட்சியகங்களைக் கொண்டிருந்தன. அவை: சப்பான் (415), இசுரேல் (148), இந்தியா (146) ஆகியவையாகும். இங்ஙனம் இம்மூன்று நாடுகளிலேயே 800க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களுள்ளன. எஞ்சியுள்ள பெரிய நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலான அருங்காட்சியகங்களே இருந்தன. எடுத்துக்காட்டாகச் சீனாவில் 42, பாகிசுத்தானில் 18, பங்களாதேசத்தில் 7 அருங்காட்சியகங்கள் மட்டுமேயிருந்தன. ஆசிய நாடுகளிலேயே மிகுதியான அருங்காட்சியகங்களைக் கொண்டிருப்பது சப்பான் (Japan) நாடே யாகும். மேலும், மேற்கு நாட்டவருடன் ஒப்பிட்டுப் பார்க்குமளவில், சப்பானிய அருங்காட்சியகங்கள் உயர்தரமான நிறுவனத்தினையும் செயல்முறையினையும் கொண்டுள்ளன. இவை, நாடுகளுக்கு இடையேயான பண்பாடுகளின் சேகரிப்புகளையும் கொண்டுள்ளன. தோக்கியோவிலுள்ள (Tokyo) தேசிய அருங்காட்சியகமே சப்பானிய அருங்காட்சியுகங்களிலேயே சிறந்ததொன்றாகும். மெய்சி (Meiji) புரட்சிக்குப் பின்னர் இவ்வருங்காட்சியகம், வரலாற்றுக் காலத்திற்கு முந்திய காலத்திலிருந்து புதிய காலம் வரையிலான 90,000 பொருள்களுக்கு மேலான சேகரிப்பினைக் கொண்டுள்ளது. இது தொல்பொருளியல், ஒப்பனைக் கலை, கவின்கலை ஆகிய துறைகளைக் கொண்டுள்ளது. இவ்வருங்காட்சியகத்தில் ஆரியாவின் தொன்மையான பிற பண்பாட்டினை எடுத்துக் காட்டும் டோயோசான் கூடம் உள்ளது. இவ்வருங்காட்சியகத்தின் மிகச் சிறந்த அமைப்புகளில் ஒன்று, மக்களிடையே பெருமளவில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து நாட்டுக் கண்காட்சியாகும். புதிய கலைகளைக் கொண்ட கூடங்களையும் சப்பான் கொண்டுள்ளது. அவை தோக்கியோவிலுள்ள பிரிட்டிசுடோன் கூடம் (Bridgstone Gallery) டோக்கியோ, கியோடோவில் உள்ள புதிய கலைகளைக்கொண்ட “தேசிய அருங்காட்சியகம்”, காமிக்குராவிலுள்ள ‘கனகாவா பிரிபெக்சுரல் புதிய கலை அருங்காட்சியகம்’ ஆசி ஆகியவையாகும். தலைசிறந்ததும் உள்நாட்டுச் சுற்றுப்புறச் சூழலை வலியுறுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டதுமான இயற்கையியல் அருங்காட்சியகத்தை ஒசாகா (Osaka) நகரம் கொண்டுள்ளது. வில்லியம் சோன்சு (William Jones) போன்ற புகழ்பெற்ற ஆாய்ச்சியாளர்களின் முயற்சியினால் இந்தியாவில் அருங்காட்சியகங்களின் இயக்கம், மிகவும் முன்னரே தொடங்கியது. கல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகம் கி.பி. 1814–ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அடுத்த ஐம்பது ஆண்டுகளில் முதன்மையான நகரங்களில் பல அருங்காட்சியகங்கள் தோன்றி வளரலாயின. அவை “சென்னை அரசு அருங்காட்சியகம்” (கி.பி. 1851), திருவனந்தபுரம் “நேப்பியர் அருங்காட்சியகம்” (கி.பி. 1955), இலட்சுமணபுரி “மாநில அருங்காட்சியகம்” (கி.பி. 1863), “நாக்பூர் மைய அருங்காட்சியகம்” (கி.பி. 1864), பெங்களூர் “கருநாடக அரசு அருங்காட்சியகம்” (கி.பி. 1866) ஆகியவையாகும். இவ்வருங்காட்சியகங்கள் எல்லாம் கலை, இயற்கையியல் சேகரிப்புகளைக் கொண்டுள்ளன. நாடு உரிமை பெற்ற பின்னரே தேசிய அருங்காட்சியகங்கள் நிறுவப்பட்டன. புது தில்லியில் 1949–ஆம் ஆண்டில் “தேசிய அருங்காட்சியகம்”, 1954-ஆம் ஆண்டில் “புதிய கலை தேசியக் கூடங்கள்”, 1962-ஆம் ஆண்டில் “தேசிய குழந்தைகள் அருங்காட்சியகம்”, 1973–ஆம் ஆண்டில் “இயற்கையியல் தேசிய அருங்காட்சியகம்” ஆகியவை நிறுவப்பட்டன. போபாலில் “மனித ஆய்வு தேசிய அருங்காட்சியகம்” நிறுவப்பட்டு வருகிறது. அறிவியல், தொழில்நுட்ப அருங்காட்சியகங்கள் கல்கத்தா, பெங்களூர், பிலானி, பம்பாய் ஆகிய நகரங்களில் சிறப்புற அமைக்கப்பட்டன. “சாரநாத் அருங்காட்சியகம்”, “நாகார்ச்சுன கொண்டா அருங்காட்சியகம்”, “சீரங்கப்பட்டணம் அருங்காட்சியகம்” போன்ற அருங்காட்சியகங்களுடன் மேலும் சில சிறந்த அருங்காட்சியகங்களை இந்தியத் தொல் பொருளியல் ஆய்வுத் துறையினர் நிறுவியுள்ளனர். இப்போது அருங்காட்சியக உணர்வினை மேலும் பரப்புவதற்காக மாவட்டத் தலைநகரங்களில் அருங்காட்சியகங்கள் நிறுவப்படுவதற்கான திட்டம் செயற்பட்டு வருகிறது. இத்தகைய மாவட்ட அருங்காட்சியகத் திட்டம் தமிழ்நாடு, கருநாடகம், குசராத்து, இராசசுத்தான், மத்தியப் பிரதேசம், ஒரிசா போன்ற மாநிலங்களில் வலிமையுற்று வருகிறது. நாட்டிலேயே பழமையான மாநில அருங்காட்சியகத்தைக் கொண்டுள்ள பெருமை தமிழ்நாட்டினையே சாரும். கல்கத்தாவிலுள்ள இந்திய அருங்காட்சியகத்திற்கு அடுத்தபடியாக நாட்டில் இதுவே பழைமையான அருங்காட்சியகமுமாகும். இதன் வரலாறு நிலையான வளர்ச்சியுடையதாகும். இதன் சேகரிப்புகளுடன் இதன் செயல்முறைகளும் மிகுதியாகிக் கொண்டு வருகின்றன. இதன் வெளியீடுகள் பல தலைப்புகளைப் பற்றியனவாகும். இதில் பல புத்தகங்கள் அந்தந்தத் துறைகளில் தகுதி மிக்க நூல்களாக விளங்குகின்றன. புதுக்கோட்டை, சேலம், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் அருங்காட்சியங்கள் செயற்படுகின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளிடையே அருங்காட்சியக வளர்ச்சியில் தாய்லாந்து மிகவும் திறம்படச் செயற்படுகின்றது. பாங்காக்கிலுள்ள (Bangkok) தேசிய அருங்காட்சியகம், கி.பி. 1874–ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இவ்வருங்காட்சியகம் தொன்மைக் காலத்திலிருந்து கி.பி. 19–ஆம் நூற்றாண்டு வரையிலான தாய்லாந்து நாட்டுக் கலையின் வளர்ச்சியினைச் சித்திரித்துள்ளது. ஆடையணிகள், அரச ஆடை அணிகலன்கள், இசைக் கருவிகள் போன்ற ஒப்பனைக் கலைப்பொருள்களும் இங்குக் காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. பாங்காக்கில் 1978–ஆம் ஆண்டில் அறிவியல் தேசிய அருங்காட்சியகம் ஒன்று நிறுவப்பட்டது. இந்தோனேசியாவில் கி.பி. 1778–ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஆசியாவிலேயே மிகப் பழைமையான அருங்காட்சியகமான “புராத் அருங்காட்சியகம்” உள்ளது. இது, இப்பொழுது “சகர்த்தா (Djakarta) தேசிய அருங்காட்சியகம்”, எனப்படுகிறது. பிலிப்பைன்சின் தேசிய அருங்காட்சியகம் மணிலாவில் உள்ளது. இது பல பொருள்களைக் கொண்ட பல்நோக்கு அருங்காட்சியகமாகத் திகழ்கிறது. அருங்காட்சியகச் செயல்முறைகளோடு இது நினைவுச் சின்னத்தைப் பாதுகாத்தல், பொருள்களின் பண்பாட்டுப் பெருமையினைப் பாதுகாத்தல் ஆகியவற்றைப் பேணும் பொறுப்பையும் ஏற்றுள்ளது. மலேசியாவின் தேசிய அருங்காட்சியகம் கோலாலம்பூரில் உள்ளது. கொழும்பில் கி.பி. 1877–ஆம் ஆண்டில் கொழும்பு அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. இதுவே இலங்கையின் முதன்மையான அருங்காட்சியகமாகும். சியோல் நகரில் கொரியாவின் “தேசிய அருங்காட்சியகம்” உள்ளது. இவ்வருங்காட்சியகம், கல், பஞ்சலோகம், இரும்பு ஆகியவற்றால் ஆன சிற்பங்களையும் அழகுமிக்க மட்பாண்டங்களையும் கொண்டுள்ளது. முன்னர் அரசர்கள் தங்குமிடமாக இருந்த “சாங்க் டூக் அரண்மனை” இப்போது அரசர்களின் பழக்க வழக்கங்களை விளக்கும் அருங்காட்சியகமாகத் திகழ்கிறது. பாகிசுதானின் தேசிய அருங்காட்சியகம் 1970–ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. காந்தாரச் சிற்பங்களுக்குப் புகழ் பெற்ற இலாகூர் அருங்காட்சியகமே பாகிசுதானின் பழைமையான அருங்காட்சியகமாகும். இதனைப் போன்றே காந்தாரச் சிற்பங்களின் மிகுதியான சேகரிப்பினைக் கொண்டது “பெசாவர் (Pehawar) அருங்காட்சியகமாகும்”. இன்றைய பங்களாதேசத்திலுள்ள “தாக்கா அருங்காட்சியகம்”, 1913–ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது தொல்பொருளியல், போர்க்கருவிகள், ஓவியங்கள், ஒப்பனைக் கலைகள் ஆகியவற்றின் தலை சிறந்த சேகரிப்புகனைக் கொண்டுள்ளது. சிட்டகாங்கில் சிறந்ததொரு இன ஒப்பாய்வியல் (Ethnology) அருங்காட்சியகமும், சோனார்க்கானில் கிராமியக் கலை அருங்காட்சியகமும் உள்ளன. பர்மாவின் தேசிய அருங்காட்சியகம் இரங்கூனில் உள்ளது. இதில் சமகால ஓவியங்கள், கைத்திறன் மிக்க தொழிற்பொருள்கள், தொல்பொருளியல் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைக் கொண்ட கூடங்களுள்ளன. இவ்வருங்காட்சியகத்தின் மையக்கூடத்தில் அமைக்கப்பட்டதும் மாண்டலேயிலிருந்து கொணரப்பட்டதுமான சிங்க வடிவ அரசிருக்கை (Lion Throne), மனத்தில் பதியத்தக்க வண்ணத்தையும் காட்சிச் சிறப்பையும் கொண்டுள்ளது. “பாகன் அருங்காட்சியகம்”, ஒரு சிறந்த தொல்பொருளியல் அருங்காட்சியகமாகும். காட்மண்டுவிலுள்ள (Katmandu) சிறந்த கலைச் சேகரிப்புகளைக் கொண்ட நேபாள் அருங்காட்சியகம் “நேபாளத்தின் தேசிய அருங்காட்சியகமாகும்”. திரிபுவன மன்னரின் நினைவாகக் கட்டப்பட்ட அருங்காட்சியகம் ஆர்வத்தைத் தூண்டும் மற்றுமொரு அருங்காட்சியகமாகும். வட்டார அருங்காட்சியகங்கள் நேபாளத்து அருங்காட்சியக வளர்ச்சியில் கவனிக்கத்தக்கனவாகும். இனஒப்பாய்வியல் அருங்காட்சியகம், கலை மற்றும் பண்பாட்டு மையம், மனமகிழ் பூங்கா ஆகியவற்றை வட்டார அருங்காட்சியகங்கள் கொண்டுள்ளன. சீனாவில் இப்போதுள்ள அருங்காட்சியகங்கள் பின்வரும் இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன; அவை, வரலாற்று அருங்காட்சியகங்கள், கலை அருங்காட்சியகங்கள், சீன தேசத்து நாட்டுரிமை இயக்க அருங்காட்சியகங்கள், அறிவியல் அருங்காட்சியகங்கள், உற்பத்தித் திறன், தொழில்நுட்ப அருங்காட்சியகங்கள் ஆகியவையாகும். நேன்டாங்கில் 1905–ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இயற்கையியல் மையமே பழைமையான அருங்காட்சியகமாகும். சீன மக்கள் குடியரசு அமைப்பின்போது, 21 அருங்காட்சியகங்களேயிருந்தன. புதிதாக வந்த அரசாங்கம், பழைய அருங்காட்சியகங்களைப் புதுப்பித்ததோடு புதிய அருங்காட்சியகங்களையும் நிறுவியது. பெய்சிங் (Beijing) அரண்மனையில் உள்ள சீன வரலாற்று அருங்காட்சியகம், ‘யான்–மு’ (Yan–Mu) எனும் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய மனிதனின் வளர்ச்சிக் காலத்திலிருந்து 1919–ஆம் ஆண்டு மே நான்காம் நாள் இயக்கம் வரையிலான பரந்த காட்சியினைக் கொண்டுள்ளது. அதே அரண்மனையிலுள்ள சீனப் புரட்சியினைப் பற்றிய அருங்காட்சியகத்தில் 1949–ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் குடியரசு வரையிலான வரலாறு காணப்படுகிறது. பெய்சிங் அரண்மனை அருங்காட்சியகமே நாட்டின் பெரிய கலை அருங்காட்சியகமாகும். இது 1925–ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது கிட்டத்தட்டப் பத்து நூறாயிரம் பொருள்களைக் கொண்டதொரு பரந்த பகுதியாகும். சீன நாட்டுரிமை இயக்கத்தின் முதல் அருங்காட்சியகம் 1954–ஆம் ஆண்டில் நானிங்கில் தொடங்கப்பட்டது. இயற்கையியலின் சிறப்பான அருங்காட்சியகங்கள் பெய்சிங், சங்காய், தியான்சின், இத்தாலியன் மற்றும் கியூங்டா ஆகிய இடங்களில் உள்ளன. மாகாணப்பகுதி, தன்னாட்சிப் பகுதி ஆகியவற்றைச் சார்ந்த மாநில அருங்காட்சியகங்கள், பல் நோக்கு அருங்காட்சியகங்களாகும். பெருந்தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்களான மா–சே–துங், சூ என்லாய், புரட்சி எழுத்தாளரான லுயூசன் மற்றும் கி.பி. 8–ஆம் நூற்றாண்டின் கவிஞரான தியூசு ஆகியோரின் நினைவாகப் பல நினைவு அருங்காட்சியகங்களுள்ளன. ஆப்பிரிக்காவில் நடந்த அருங்காட்சியகப் புரட்சி, ஆசியாவைக் காட்டிலும் குறைந்த ஊக்கத்தினையே கொண்டிருந்தது. இப்பெரிய கண்டத்தின் 47 நாடுகளில் 447 அருங்காட்சியகங்களே உள்ளன. தென் ஆப்பிரிக்கா, எகிப்து, அல்சீரியா, துனீசியா ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே ஆப்பிரிக்காவிலுள்ள அருங்காட்சியகங்களில் பாதிக்கு மேலான எண்ணிக்கையைக் கொண்டுள்ளன. அருங்காட்சியகச் சேகரிப்பிற்கான பொருள்களின் வளம்மிகப் பெரியதாக உள்ளது. அருங்காட்சியக அமைப்பு முறைகள் உலகத்திலுள்ள அருங்காட்சியகங்கள் எல்லாவற்றின் வளர்ச்சியும் மனித குலத்தின் பெருமையை அறிந்துகொள்ள உதவும் ஓர் வாயிலாக விளங்குகிறது. இத்துறையில் நாடுகளிடைப்பட்ட மிகச் சிறந்த தொழில் நிறுவனம் அனைத்துலக அருங்காட்சியகங்கள் கழகம் (International Council of Museums) ஆகும். இதன் சுருக்கம் ‘ஐகாம்’ (ICOM) என வழங்கப்படுகிறது. இது அரசாங்கத்தினைச் சாராமல் தொழில் நிறுவனமாக இயங்குகிறது. ஐகாம் அவை, ‘யுனசுகோவுடன்’ (UNESCO) கலந்தாலோசனை செய்யும் தகுதி பெற்றுள்ளது. இது 1948–ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஒவ்வொரு நாடும் தேசியக் குழுவின் வழியாகவே இந்த ஐகாமில் உறுப்பினராகிறது. இதில் மூன்று வகையான உறுப்பினர் பதவியுள்ளது. அவை தனிப்பட்டோர், நிறுவனத்தினர், ஆதரவாளர் பதவியாகும். அருங்காட்சியக அலுவலர், அருங்காட்சியகங்கள் மற்றும் அருங்காட்சியகப் பணிகளில் ஆர்வமுள்ளவர்கள் இதில் உறுப்பினர் ஆவதற்குத் தகுதியுடையவராவர். இதன் உறுப்பினர் ஐகாமில் ஏற்பாடு செய்யப்படும் மாநாடு மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளவும், அவ்வப்போது அதன் வெளியீட்டைப் பெறவும், அதன் கூட்டங்களில் வாக்களிக்கவும் உரிமையுடையவராவர். பலநாட்டுக் குழுக்களின் வழியாக ‘ஐகாம்’ தன் பணிகளைச் செய்து வருகிறது. தொல்பொருளியல் வரலாறு, கட்டடக்கலை, அருங்காட்சியகத் தொழில்முறை, செயல்முறைக்கலை, புதிய கலை, பாதுகாப்பு, உடை, ஆவணப்படுத்துதல், கல்வி இன ஒப்பாய்வியல், நாடுகளிடைப்பட்ட கலை, கண்காட்சிகள், பணியாளர்களுக்குப் பயிற்சி, இசைக் கருவிகள், வட்டார அருங்காட்சியகங்கள், இயற்கையியல், அறிவியல், தொழில் நுட்பம், அருங்காட்சியகப் பாதுகாப்பு ஆகியவை ஐகாம் செய்து வரும் பணிகளாகும். ‘ஐகாமின்’ தலைநகரம் பாரிசிலுள்ளது. ‘ஐகாமின்’ தேசியக் குழு, இப்போது அதன் அலுவலகத்தைக் கல்கத்தாவிலுள்ள இந்திய அருங்காட்சியகத்தில் கொண்டுள்ளது. 1946–ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அருங்காட்சியகப் பிரிவொன்றினை ‘யூனெசுகோ’ (UNESCO) கொண்டுள்ளது. அரசாங்கங்களுக்கு இடையே அமைந்துள்ள குழுவாகும் இது. அருங்காட்சியகத்தைச் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் கருத்தரங்குகளை அவ்வப்போது அமைத்தல், மேலும் அருங்காட்சியகத் தொழில்துறையினைப் பற்றிய புத்தகம் வெளியிடல், ‘ஐகாமின்’ பணிக்குப் பண உதவியளித்தல், உறுப்பு நாடுகளுக்குத் தூதுக் குழுவினை அமைத்து அதன் மூலம் இக்கழகத்தை முன்கொணர்தல் ஆகியவற்றைச் செய்வதன் வாயிலாக இது அருங்காட்சியகங்களின் வளர்ச்சிக்குத் துணை செய்கிறது. பாரிசிலுள்ள இப்பணியகத்தில் ஆவண மையத்திற்கு (Documentation Centre) ஐகாம் துணை செய்கிறது. ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல் அருங்காட்சியகப் பிரிவு, அருங்காட்சியகம் எனும் காலாண்டு இதழினை வெளியிடுகிறது. மற்றுமொரு, நாட்டிடைப்பட்ட உலக அமைப்பு முறையே, ‘பொதுநல நாடுகளின் அருங்காட்சியகச்’ சங்கம் (Common Wealth Association of Museums). இது 1975–ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இதன் உறுப்பினர் பதவி பொதுநல நாடுகளிலுள்ள அருங்காட்சியகங்களுக்கு மட்டுமே உரியதாகும். அருங்காட்சியகங்களின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தின் பொது முயற்சியில், இவ்வனைத்து அருங்காட்சியகங்களையும் இணைக்கவேண்டுமென்பதே இதன் நோக்கமாகும். இதன் தலைமை அலுவலகம் இலண்டனிலுள்ளது. பல தொழில்முறைச் சங்கங்கள் அருங்காட்சியகப் பணியாளர்களுக்குப் பொதுமன்றத்தினை அளிக்கின்றன. இவற்றுள் பழைமையானது இலண்டனில் தலைமையகம் கொண்டுள்ள அருங்காட்சியகச் சங்கமாகும். இது தனிப்பட்டவரையும் நிறுவன உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்கிறது. இது அருங்காட்சியகம் இதழினை வெளியிடுகிறது. இது அருங்காட்சியகத்தினர் தங்கள் துறையினைப் பற்றிப் பேச ஓர் இடத்தினை அளித்துள்ளது. அருங்காட்சியகத் துறைக்குத் தேவையான பட்டயப் படிப்பில் (Diploma Course) தேர்வு ஒன்றினையும் நடத்தி வருகிறது. இந்தியாவிலிருக்கும் அருங்காட்சியகத் துறையினரை ஒன்று சேர்க்கும் எண்ணத்தோடு 1943–ஆம் ஆண்டில் இந்திய அருங்காட்சியகச் சங்கம் நிறுவப்பட்டது. இதன் இப்போதைய அலுவலகம் புது தில்லியிலுள்ள தேசீய ஆவணக் காப்பகத்திலுள்ளது (National Archives). அருங்காட்சியக அலுவலரும், இந்திய அருங்காட்சியகங்களும் இதில் உறுப்பினராகலாம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் இதன் ஆண்டுக் கூட்டம், அருங்காட்சியகத் தலைப்பினைப் பற்றிய கருத்தரங்குகள் நடத்த நல்லதொரு வாய்ப்பினை அளிக்கிறது. இக்கருத்தரங்கில் பேசப்படும் தலைப்புகள், ஆண்டு வெளியீடான “இந்திய அருங்காட்சியகங்களின் இதழில்” (Journal of Indian Museums) வெளியிடப்படுகின்றன. இங்ஙனம் கருத்தரங்கத் தலைப்பினை வெளியிடாதபோது இந்திய அருங்காட்சியகப் பணிகளைப் பற்றிய கட்டுரைகளை வெளியிடுகிறது. இந்தியாவிலுள்ள அருங்காட்சியகங்களைப் பற்றிய சுருக்கமான விவரத் தொகுதியினை அருங்காட்சியகச் சங்கம் வெளியிடுகிறது. இது இன்று வரையிலான செய்திகளை வெளியிடுகிறது. சில மாநிலங்களில் அருங்காட்சியகப் பணியாளர்களால் இத்தகைய சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. எனினும், இம்மாநில அருங்காட்சியகங்கள் ஒரே மாதிரியான செயல் புரிவதில்லை. இத்தகைய மாநிலச் சங்கங்களுக்கு எடுத்துக் காட்டு, மேற்கு வங்காள அருங்காட்சியகங்கள் சங்கம், குசராத்து அருங்காட்சியகங்களின் சங்கம் ஆகியவையாகும். கலைப்பொருள்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் நிறுவனங்களும் கூட அருங்காட்சியகப் பணியில் இன்றியமையாத ஆர்வம் கொண்ட நிறுவனங்களாக உள்ளன. பல அருங்காட்சியகங்களில் பணி புரியும் பலரும் அத்தகைய சங்கங்களின் உறுப்பினராக உள்ளார்கள். பாதுகாப்பகப் பிரிவிற்கான அனைத்து நாடுகளின் சங்கமே உலகப் பாதுகாப்பு நிறுவனம் (International Institute for Conservation) ஆகும். இதனைச் சுருக்கமாக ‘ஐஐசி’ என அழைக்கின்றனர். இதன் தலைமையகம் இலண்டனிலுள்ளது. பாதுகாத்தலில் ஆர்வமுள்ள தனிப்பட்டவர்களும் மற்றும் நிறுவனத்தார்களும் இதில் உறுப்பினராகச் சேரலாம். இது அவ்வப்போது மாநாடுகளை நடத்துகிறது. மேலும் இரண்டு முதன்மையான பருவ இதழ்களான ‘பாதுகாத்தலின் ஆய்வு’ (Studies in Conservation) ‘கலை மற்றும் தொல்பொருளியல் தொழில்நுட்பச் சுருக்கக் குறிப்பு’ (Art and Archaeology Technical Abstracts) ஆகியவற்றையும் வெளியிடுகிறது. “உரோம் மையம்” என அழைக்கப்படும் மையம் உடைமைகளைப் பாதுகாத்தல் மற்றும் புதுப்பித்தல் பற்றி ஆய்வு செய்யும் உலக அரசுகளால் அமைக்கப்பட்ட நிறுவனமாகும். இது 1959–ஆம் ஆண்டில் ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல், பண்பாட்டுக் கழகத்தாரால் தொடங்கப்பட்டது. இது ஓர் நூலகத்தையும் ஆவணத் துறையினையும் பாதுகாத்து வருகிறது. இது, “பணி மற்றும் வெளியீடுகள்”, “தொழில்நுட்பக் குறிப்புகள்” எனும் இரு தொடர் வெளியீடுகளை வெளியிடுகிறது. ஒவ்வோர் ஆண்டும் பொருள்களைப் பேணுதல் பற்றிய பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்கிறது. உறுப்பு நாடுகளுக்குப் பேணுதலிற் சிறந்த உதவியினை அளிக்கிறது. “பண்பாட்டு உடைமைகள் பேணுதல் ஆய்வு இந்தியச் சங்கம்” எனப்படுவது பேணுதல் பணியாளர்களுக்காக அமைக்கப்பட்ட தொழில் துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் புதுதில்லியில் இயங்குகிறது. இது நிறுவனத்தைச் சார்ந்தோர், கூட்டு உறுப்பினர் என்னும் இருவகை உறுப்பினரைக் கொண்டுள்ளது. இது ஆண்டுதோறும் கருத்தரங்கு ஒன்றினை நிறுவி “இந்தியாவில் பண்பாட்டு உடைமைகளைப் பேணுதல்” என்னும் இதழினையும் வெளியிடுகிறது. அருங்காட்சியகச் செயல்களில் விருப்பமுள்ள பொதுமக்களை அருங்காட்சியகச் செயல்முறைகளில் ஈடுபடச் செய்யும் ஒரு நிறுவனம் “அருங்காட்சியகத்தின் நண்பர்கள்” என்னும் பெயரில் இயங்கி வருகிறது. இந்தச் சங்கங்கள், மேலைநாடுகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. இவை அருங்காட்சியகப் பணியாளர்களையும் அருங்காட்சியகத்தில் ஆர்வமுள்ள பார்வையாளர்களையும் கொண்டு, அருங்காட்சியகத்தினைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில், இத்தகைய சங்கம் பம்பாயில், “பிரின்சு ஆப் வேல்சு அருங்காட்சியகத்துடன்” இணைந்து திறம்படச் செயற்பட்டு வருகிறது. இது “பிரின்சு ஆம் வேல்சு அருங்காட்சியகத்தின் நண்பர்கள்” என்று அழைக்கப்படுகிறது. இதன் உறுப்பினருக்கு அருங்காட்சியகத்தில் சலுகைகள் உண்டு. இவர்கள் சொற்பொழிவுகள், கண்காட்சிகளை நிறுவுதல் மற்றும் தாங்களாகவே விளக்கிக் கூனும் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய- வற்றின் வாயிலாக அருங்காட்சியகச் செயல் முறைகளில் பங்கேற்கின்றனர். அரசு உயர்குடியினர் ஆகியோரின் சேகரிப்புகளிலிருந்து அருங்காட்சியகம் கி.பி. 16, 17–ஆம் நூற்றாண்டுகளில் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. இதன் முதல் மாற்றம் பொருள்களின் சேகரிப்புகளின் அணுகுமுறையில் ஏற்பட்டது. முதலில், இது தனியார் மகிழ்ச்சிக்காகவும் அவரவர் விருப்பத்திற்கேற்றவாறும் அமைந்தது. பின்னர்ப் பொதுமக்கள் இன்பத்திற்காகவும் கல்வியுணர்விற்காகவும் சேகரிக்கப்பட்டன. இதன் பின்னரே தேசியப் பெருமை மற்றும் சிறப்பினை எடுத்துக் காட்டும் இடமாக அருங்காட்சியகத்தைக் கருதும் எண்ணம் வந்தது. ஒரு தேசத்தின் கடந்த காலச் சாதனைகளைக் குறிக்கும் பொருள்களைக் காட்சிக்கு அமைக்கும் இடமாகவும் இது அமைந்தது. பல்வேறு நாடுகள், தத்தம் நாட்டு மக்களின் பண்பாடு மற்றும் கலையினைக் காட்டும் பொருள்களைச் சேகரித்து வைத்தன. இத்தகைய சேகரிப்புகள், ஒருவன் தான் கொண்டுள்ள தேசிய மரபுரிமையின் பெருமையினைப் பரப்புவதற்காகப் பயன்பட்டன. இதுவே தேசிய உணர்வுகளுக்கும் வழி கோலியது. மேலும் பரம்பரைப் பழக்கம் முதல் புதியகாலம் வரையிலும், நாட்டுப்புறத்திலிருந்து பழம்பெரும் கலைகள் வரை தேசிய மரபுரிமையில் பல நிலைகள் உள்ளமையால், இவ்வனைத்தினையும் ஒரே வகை அருங்காட்சியகங்கள் போதுமான அளவு காட்ட இயலா. எனவே அவை தேசிய மரபுரிமையின் சில குறிப்பிட்ட கூறுகளில் அதாவது நாட்டுப்புறக் கலை, பழம்பெரும் கலை, புதிய ஓவியங்கள் போன்றவற்றில் சிறந்த ஈடுபாடு செலுத்தின. இதனால் அருங்காட்சியகங்கள் பலவகைகளாக விரிவடைந்தன. தேசிய மரபுரிமை என்பது பண்பாட்டு வளத்தினை மட்டுமே கொண்டுள்ளது என்ற கருத்து முன்னர் நிலவி வந்தது. இப்போது ஒரு நாட்டின் இயற்கை வளமும் தேசிய மரபுரிமையின் பெருமையினை நிலை நிறுத்தும் என்ற பரந்த எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக இயற்கையியல் ஆய்வு, இயற்கையியல் அருங்காட்சியகங்கள் ஆகியவற்றில் மிகுதியான ஆர்வம் உண்டாகியது. இந்த நாட்களில் இயற்பியல் அறிவியல்கள் பற்றி விளக்கும் அருங்காட்சியகங்களும் பொதுவாகக் காணப்படுகின்றன. இங்ஙனம் அருங்காட்சியகங்களின் வகைகள் மிகுந்ததுடன், அருங்காட்சியகங்களின் கல்விப் பங்கும் இப்போது முதன்மை பெற்று வருகிறது. திங்கள் சொற்பொழிவுகள், சிறப்புக் கண்காட்சிகள், திரைப்படக் காட்சிகள், கருத்தரங்குகள் ஆகியவை வழக்கமான கூறுகளாகத் திகழ்கின்றன. சமுதாயத்தின் பண்பாடு, கல்வி ஆகியவற்றின் மையமாக அருங்காட்சியகம் விரைந்து வளர்ந்து வருகிறது. இது பண்பாட்டிலும் இயற்கையியலிலும் ஆர்வமுள்ள பொருள்களைப் பாதுகாக்கும் முயற்சியோடு இத்துறைகள் தொடர்பான செய்திகள் குறித்த விழிப்புணர்ச்சியினையும் பரப்புகிறது. இப்பண்பின் முதன்மை உணரப்பட்டதனாலேயே அண்மைக் காலத்தில் அருங்காட்சியகங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.என்.அ. துணை நூல்கள் Agrawal Usha, “Brief Directory of Museums in India”, Museums Association of India, New Delhi, 1980. Baxi, Smit. J. and Dwivedi Vinod P., “Modern Museum”, Abhinav Publications, New Delhi, 1973. Morely, Grace, “Museums Today”, Department of Museology, M. S. University, Baroda, 1981. Morely Grace, “Museums in China Today”, in “Museum” Vol. XXXII, No, 4, 1980.