அரபிச் சங்கம் என்பது மேற்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள நாடுகளையும், பாலத்தீன விடுதலை நிறுவனத்தையும் உள்ளிட்ட 22 உறுப்பினர் அடங்கிய ஒரு சங்கம் ஆகும். அராபிய நாடுகளிடையே அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூக உறவுகளை நெருக்கமாக்க வேண்டுமென்பதே இச்சங்கத்தின் தலையாய குறிக்கோள். அதன் அடிப்படையில் எழுந்த ஒப்பந்தம் இதனை வலியுறுத்திக் கூறுகிறது. உறுப்பு நாடுகளின் பேராளர்களைக் கொண்ட செயற்குழுவும் நிலைநாட்டப் பெற்றுள்ளது. ஒவ்வோர் உறுப்பினருக்கும் ஒரு வாக்கு என்ற முறை நடைமுறையில் உள்ளது. சிக்கல்களை அமைதியான முறையிலேயே தீர்க்க இக்குழு பாடுபட வேண்டும். சங்க உறுப்பு நாட்டின் மீது எழும் வலுத்தாக்கலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை ஒருமனப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் இக்குழு முடிவு செய்கிறது. பொதுச் செயலாளர் ஒருவரையும் ஏனைய அலுவலக உறுப்பினர்களையும் கொண்டு சங்கச் செயலகம் பணியாற்றுகிறது. இருப்பினும் அராபிய நாடுகளிடையே பொல்லாங்கும் பொறாமையும் குறைந்தபாடில்லை. பாலத்தீனத்தில் இருக்கும் யூதர்கள், இசுரேலியர் ஆகியோருக்கு எதிராகவே இச்சங்கம் செயலாற்றுகின்றது. அரபிச் சங்கம் (Arab League) 1945–இல் உருவாக்கப்பெற்றது. தொடக்கத்தில் ஏழு அராபிய நாடுகள் உறுப்பு நாடுகளாய் இருந்தன. அவை ஈராக்கு, சவுதி அரேபியா, இலெபனான் குடியரசு, ஏமன் (சனா), திரான்சு சோர்டான் (இக்காலத்தில் சோர்டான்), எகிப்து, சிரியா என்பன. 1945-க்குப் பின்னர் மேலும் பதினைந்து நாடுகள் சேர்ந்துள்ளன. அவை இலிபியா (1953), சூடான் (1956), மொராக்கோ (1958), துனீசியா (1958), குவைத்து (1961), அல்சீரியா (1962), ஏமன் (ஏடன்) (1968), பகரெய்ன் (1971), ஓமன் (1971), கட்டார் (1971), ஐக்கிய அராபிய எமரேட்டுகள் (1971), மாரிடானியா (1973), சோமாலியா (1974), பாலத்தீன விடுதலை நிறுவனம் (P.L.O.) (1976), சிபோத்தி (1977) என்பனவாகும். அரபிச் சங்கம் 1979–இல் எகிப்தைத் தள்ளி வைத்தது. அதன் விளைவாக அச்சங்கத்தின் தலைநகரும் கெய்ரோ (Cairo) (எகிப்து) விலிருந்து துனீசு (Tunis) (துனீசியா) நகருக்கு மாற்றப்பட்டது. இப்போது மீண்டும் எகிப்து அரபிச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.