தெற்குப் பசிபிக்கில் இந்தோனேசியாவில் வாழும் ஒரு பழங்குடியினர். இம்மக்களிடையே (Alorse) தங்கள் குழந்தைகளைச் சீராகக் கவனித்து வளர்க்கும் பழக்கம் கிடையாது. குழந்தைகளைப் பேசப் பழக்குவதுகூட இல்லை. பெரியவர்கள் குழந்தைகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் பாடுவது உண்டு. ஆனால், ஒரு சொல்லும் பேசுவது கிடையாது. குழந்தையை எப்போதாவது பெயர் சொல்லி அழைப்பர். உடலைத் தூய்மை செய்து கொள்ளும் முறைகளையும் குழந்தைகட்குச் சொல்லித் தருவதில்லை. குழந்தைகளைத் தூக்கி வைத்திருக்கும் போது, தாம் அணிந்துள்ள ஆடையின் மீதே மலம், சிறுநீர் கழித்து விட்டாலும் அது குறித்து வெறுப்படைவதோ சினமடைவதோ மாறுதல் கொள்வதோ இல்லை. அதைச் சில தழை, துகள்கள் அல்லது மூங்கில் பட்டையினால் துடைத்து விடுவார்கள். மேலும் அலோர்சு மக்கள் குழந்தைகளை நடக்கப் பழக்குவதும் இல்லை. தாய் தன் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதிலோ ஏனைய பணிவிடைகளிலோ மிக்க அக்கறை எடுத்துக்கொள்ளுவது கிடையாது. மகப்பேற்றையே இத்தாய்மார்கள் வெறுப்பாக எண்ணுகின்றனர். பிறந்து சற்று நேரமே ஆன குழந்தைக்குக் கூட எவ்வித அடிப்படைக் கடமைகளையும் இவர்கள் மேற்கொள்வதில்லை. ஆனால் அலோர்சுப் பெண்கள் ஆண் குழந்தை பெறுவதை விரும்புகின்றனர். இவர்களிடையே குழந்தை வளர்ப்பில் கவனமின்மை இருந்த போதிலும் தங்கள் குழந்தைகள் மிக்க ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளனர். உடல்சார்ந்த தண்டனைகளைப் பெற்றோரே கொடுக்க வேண்டும் எனும் ஒழுங்கு இருந்தபோதிலும், நடைமுறையில் இது மீறப்படுகிறது. உறவினர்களும் நெருங்கியோர் அல்லாதாரும் கூடப், பெற்றோரைப் போலவே குழந்தைகளைத் தலைமேல் அடிப்பதையும் காதைப் பிடித்து இழுப்பதையும் வாயைத் திருகுவதையும் கட்டிப் போடுவதையும் செய்கின்றனர். ஏளனஞ் செய்தலும் குறைகூறுதலும் ஏமாற்றுதலும் இவர்களிடையே காணப்படுகின்றன.ஆ.செ.