இந்தியாவின் ஐந்தாம் குடியரசுத் தலைவர். இவர் 1905-ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் தில்லியில் பிறந்தார். இவர் தந்தை அகமது, அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்; இந்திய மருத்துவத்துறையில் பணியாற்றியவர். இவர் தாய் உருக்கியா சுல்தானா தில்லியைச் சேர்ந்தவர். பக்ருதீன் (Fakhruddin) அலி அகமது உத்தரப் பிரதேசத்திலுள்ள கோண்டா என்ற இடத்திலும் தில்லியிலும் உள்ள பள்ளிகளில் பயின்ற பின், இசுடீபன் கல்லூரியில் சேர்ந்தார். பின்பு இங்கிலாந்து சென்று அங்குள்ள கேம்பிரிட்சுப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த காத்தரைன் கல்லூரியில் வரலாற்றைச் சிறப்புப் பாடமாகப் பயின்றார். பின்னர் அந்நாட்டிலுள்ள டெம்பிள் என்னுமிடத்திலுள்ள புகழ்பெற்ற சட்டக் கல்லூரியில் பயின்று வழக்குரைஞர் ஆனார். இங்கிலாந்திலிருந்து இவர் தாய் நாடு திரும்பும்பொழுது இவரது வயது 28. இவர், பஞ்சாப் மாநிலத்திலும் அசாம் மாநிலத்திலும் வழக்குரைஞராகப் பணியாற்றினார். காந்தி அடிகளின் அகிம்சைக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடும் நோக்கத்தோடு 1931–ஆம் ஆண்டு காங்கிரசுக் கட்சியில் சேர்ந்தார். சத்தியாக்கிரகத்தில் பங்கு கொண்டதற்காகக் கைது செய்யப்பட்டுச் சிறைத் தண்டனைப் பெற்றார். அசாம் மாநிலச் சட்டப் பேரவையின் உறுப்பினராக 1935–ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1938–ஆம் ஆண்டு அசாம் மாநில நிதி வருவாய்த் துறையில் இவர் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. நில வரியைக் குறைத்து வேளாண்மை வருமானத்திற்கு ஒரு புதிய வரியைக் கொண்டுவந்தார். பொது மக்களைப் பாதிக்காமல் மாநிலத்தின் வருவாயைப் பெருக்கினார். திருமணத்திற்கு முன்பே அமைச்சராகப் பணியாற்றிப் புகழ்பெற்ற பக்ருதீன் அலி அகமது 1945–ஆம் ஆண்டு ஆபிதா அய்தர் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண்மக்களும் ஒரு பெண்ணும் பிறந்தனர். திருமதி ஆபிதா அகமது அலிகார் முசுலிம் பல்கலைக்கழகத்தில் படித்தவர்; தம் கணவரின் அரசியல் வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்டவர். திருமணமான மறு ஆண்டே இவர் அசாம் மாநிலத்தின் அட்வகேட் செனரலாக நியமனம் பெற்றார். நாட்டு விடுதலைக்குப்பின் பக்ருத்தீன் அலி அகமது அசாம் மாநிலச் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பல்வேறு நிலைகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். 1955–ஆம் ஆண்டு நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகப் பணிமேற்கொண்டார். அவ்வாண்டு இந்தியாவிலிருந்து சோவியத்து உருசியாவிற்குச் சென்ற வழக்கறிஞர்களின் குழுத்தலைவராகச் சென்றார். இந்திய அரசு, ஐக்கிய நாடுகளின் அவைக்கு அனுப்பிய குழுவின் உறுப்பினராகப் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1958–66–ஆம் ஆண்டுகளில் சமூக நலம், சட்டம், பஞ்சாயத்து ஆகிய துறைகளில் இந்திய அரசின் அமைச்சராகப் பணியாற்றினார். அசாம் மாநிலத்திலுள்ள பர்பீட்டா என்ற நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து 1967–ஆம் ஆண்டு பக்ருதீன் அலி அகமது தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அரசில் அவர் பல்வேறு துறைகளில் பணியாற்றினார். 1966–ஆம் ஆண்டு மத்திய அரசின் மின்துறை, நீர்ப்பாசனத்துறைகளிலும், 1967–ஆம் ஆண்டு கல்வித் துறையிலும், 1967–69 ஆம் ஆண்டுகளில் தொழில் துறை, முசுலிம் அறக்கட்டளைத்துறைகளிலும், 1969-70–ஆம் ஆண்டுகளில் தொழில், உள்நாட்டுவாணிகம், ஆகிய துறைகளிலும், 1971–72–ஆம் ஆண்டுகளில் உணவு, வேளாண்மை ஆகிய துறைகளிலும் அமைச்சராகப் பணியாற்றினார். இவர் மத்திய அரசில் அமைச்சராகப் பணியாற்றியபொழுது இங்கிலாந்து, பிரான்சு, மேற்குச் செருமனி, உருசியா, இத்தாலி, அங்கேரி, பல்கேரியா, இலங்கை முதலிய நாடுகளுக்குப் பயணம் சென்று வந்தார். 1970–71 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் அவையில் உணவு, வேளாண்மை அமைப்பின் சார்பாக ஆசுத்திரேலியாவிலும் இத்தாலியிலும் நடைபெற்ற மாநாடுகளில் கலந்து கொண்டார். மொராக்கோ என்னும் நாட்டிலுள்ள இரபாத்து என்னுமிடத்தில் 1969–ஆம் ஆண்டு நடந்த இசுலாமிய நாடுகளின் உறுப்பினர்கள் கூட்டத்தில் கோடிக்கணக்கான முசுலிம்கள் வாழும் இந்தியாவின் உறுப்பினராகச் சென்றார். இந்திய நாட்டின் உறுப்பினராக 1971–ஆம் ஆண்டு அரபு நாடுகளுக்குச் சென்று அவற்றுடன் நட்புறவு ஏற்பட வழிகோலினார். காசுமீரின் தலைவர் சேக் அப்துல்லாவிற்கும் இந்திய அரசுக்குமிடையே நல்லுறவு ஏற்படப் பெரிதும் உதவினார். இவரது முயற்சியால் சேக் அப்துல்லா தமது ‘தனி காசுமீரம்’ என்னும் கொள்கையை ஓரளவு மாற்றிக் கொண்டு இந்திய அரசுடன் உடன்பாடு கொண்டார். இவர் மத்திய அரசில் அமைச்சராகப் பணியாற்றிய காலங்களில் முசுலிம் அறக்கட்டளைக் குழுவின் தலைவராகவும் இருந்து வந்தார், முசுலிம் அறக்கட்டளையில் இருந்த சில ஊழல்களை உணர்த்த இவர் அவற்றை நீக்கப் பெரிதும் பாடுபட்டார். அறக்கட்டளைகளை உருவாக்கியவர்களின் நோக்கங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் கூறினார். முசுலிம் சமூகத்தவர்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதை உணர்ந்து இவர் முசுலீம் சமூகத்தவர்களால் நிறுவப்பட்ட கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டினார். சிறந்த தேசியவாதியான பக்ருதீன் அலி அகமது இந்துக்களையும், முசுலிம்களையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்கினார். அலிகார் முசுலிம் பல்கலைக்கழகம் 1965-67–ஆம் ஆண்டுகளில் வகுப்புவாதத் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளால் தொல்லைப்பட்ட போது, இவர் தமது விருப்பு வெறுப்பற்ற நடுநிலைக் கொள்கையைக் கடைப்பிடித்து அமைதியை நிலை நாட்டினார். இவர் குடியரசுத் தலைவரான பின்பு 1976–ஆம் ஆண்டு அலிகார் முசுலிம் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும்பொழுது, அப்பல்கலைக்கழகம் வகுப்புவாதத்திற்கு அப்பாற்பட்டதென்றும், வளர்த்து வரும் இந்தியாவில் எல்லா வகுப்பினரும் சேர்ந்து வளர்வதே சிறப்பு என்றும் கூறினார். இந்திய அரசியல் வரலாற்றில் 1969–ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க குடியரசுத் தலைவரின் தேர்தலில் அப்போது பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தியின் ஆதரவு பெற்ற வி.வி. கிரியைத் தாமும் ஆதரித்துப் பிரதமரின் நல்லெண்ணத்தைப் பெற்றார். அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினராகவும், காங்கிரசுக் கட்சியின் செயற்குழுவில் உறுப்பினராகவும், கட்சியின் செயற்குழுவில் உறுப்பினராகவும், கட்சியின் மேலிடமென்று கூறப்படும் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். காங்கிரசுக் கட்சியின் சார்பில் 1974–ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுப் பெருவாரியான வாக்குகளுடன் வெற்றிபெற்று அவ்வாண்டு ஆகசுடு மாதம் 24–ஆம் நாள் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். இவர் இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த இரண்டாவது முசுலிம் ஆவார். இவர் பதவியேற்றபின் தாம் ஆற்றிய உரையில், நாட்டுத் தந்தை காந்தியடிகள், சவகர்லால்நேரு, சர்தார் பட்டேல், மவுலானா அபுல்கலாம் ஆசாத் போன்ற பெரும் தலைவர்களின் கோட்பாடுகளால் தாம் உருவாக்கப்பட்டவர் என்று கூறினார். இவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் இந்தியாவிற்கும் மேற்காசிய நாடுகளுக்குமிடையே இருந்த நல்லுறவு இன்னும் வலுப்பெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அரபு அமீர்களின் ஐக்கிய நாட்டுத் தலைவரான சேக்சையீது, இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதினுடைய முயற்சியாலும் தூண்டுதலாலும் 1975–ஆம் ஆண்டு இருபது இலட்ச ரூபாய்களைப் பெட்ரோலியம் பற்றிய ஆராய்ச்சிக்கென்று அலிகார் முசுலிம் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாகக் கொடுத்தார். இவரது குடியரசுத் தலைமைக்காலத்தில் இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மற்றொரு நிகழ்ச்சி 1975 ஆம் ஆண்டு சூன் மாதம் 26–ஆம் நாள் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதாகும். நெருக்கடி நிலைக்காலத்தில் குடும்பக் கட்டுப்பாடு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. அப்பொழுது பக்ருதீன் அலி அகமதும் அவர் மனைவியாரும் குடும்பக் கட்டுப்பாடு இசுலாம் சமயக் கோட்பாடுகளுக்குப் புறம்பானதன்று என்பதைப் பல மேடைகளில் முசுலிம் மக்களுக்கு எடுத்துக் கூறினர். நெருக்கடி நிலைக்காலத்திலும், இவர் பல நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் செய்து அந்நாடுகளுக்கும் இந்தியாவிற்குமிடையே நல்லுறவை வளர்த்தார். அவ்வாறு இவர் மலேசியாவிற்குச் சென்று அதன் தலைநகரான கோலாலம்பூரில் தங்கியிருக்கும் பொழுது இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இவர் தம் மற்ற சுற்றுப் பயணங்களை எல்லாம் தள்ளிவைத்து விட்டு, விரைவாக இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பியவுடன் மறுமடியும் மாரடைப்பு ஏற்பட்டு 1977–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 11–ஆம் நாள் காலமானர். இவரது பூத உடல் புது தில்லியில் நாடாளுமன்றச் சாலையிலுள்ள சும்மா மசூதியில் அடக்கம் செய்யப்பட்டது.மு.ர.