அத்தியாத்ம ராமாயணம் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள வேதாந்தக் கருத்தமைந்த ஒரு சிறிய நூலாகும். கீதா என்னுஞ்சொல் ‘பாடப்பட்டது’ எனப் பொருள்படும். மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கண்ணன் – அருச்சுனன் உரையாடலாக அமைந்த ‘பகவத் கீதை’ மக்களிடையே பெற்றுள்ள செல்வாக்கினால் வடமொழியில் பல கீதைகள் உருவாயின. அவ்வகையில் அமைந்த இராம கீதை வேதவியாசரால் இயற்றப்பட்ட அத்தியாத்ம இராமாயணத்தில் உத்தரகாண்டத்தின் ஐந்தாம் சருக்கமாக விளங்குகிறது. உமாமகேசுவர சம்வாதமாகச் செய்யப்பட்டுள்ள இந்நூல், உலகப் பழிப்புக் காரணமாகச் சீதையைக் காட்டிற்கனுப்பித் தனியேயிருக்குங்கால், இராமன் இலக்குவனுக்கு அறிவுறுத்தியதாக அமைந்துள்ளது. இதிலமைந்துள்ள சுலோகங்கள் வேதப்பொருளையும் வேதாந்த சமயக் கருத்துகளையும் எளிதாக விளக்குவனவாக உள்ளன. வடநாட்டில் இதன் சுலோகங்களை நாள்தோறும் பாராயணம் செய்துவரும் மரபு இன்றும் இருந்து வருகிறது. வடமொழியில் அமைந்துள்ள இச்சிறுநூலிற்குத் தஞ்சை வே. குப்புசாமிராசு தமிழில் குறிப்புரையோடு கூடிய விரிவுரை வரைந்து வெளியிட்டுள்ளார். இது கீதைக் கொத்து என்னும் நூலின் இரண்டாம் புத்தகமாக உள்ளது. இந்த நூலைப் பாராயணம் செய்வோரைப் பிரமகத்தி தோடம் முதலிய தோடங்கள் அடையா என்பது கூறப்படுகிறது. ‘சிரீராமகீதா மகாத்மியம்’ என்னும் நூல் இந்த நூலைப் பாராட்டி அமைந்ததாகும். தமிழில் விரிவுரை இயற்றிய ஆசிரியர், ‘ஐங்கரன் நற்றாள் அடைந்தவர்கள் எஞ்ஞான்றும், பங்கமிலராவர் பரிந்து’ என்னும் விநாயக வணக்கங் கூறித் தொடங்கியுள்ளார். ஆசாரியன் வணக்கமாக இவர், ‘சங்கரபகவத் பாதன் சர்வஞ்ஞன் அடிபோற்றி’ என்று ஆதி சங்கரரைத் துதித்துள்ளார். உரையாசிரியர், ‘வாழி இராகவன், வாழி இலக்குமணன், வாழி நல வாதராயண மாமுனி, வாழியிக்கீதை மாநிலத்தென்றுமே, வாழியோதுவார், வாழி வாழியே’ என்னும் வாழ்த்தொடு தம் உரைநூலினை நிறைவு செய்துள்ளார்.