உணர்ச்சி என்பது உயிரினத்தில் காணப்படும் தூண்டப்பட்ட அல்லது கிளர்ச்சிவசப்பட்ட நிலையினைக் குறிக்கிறது. மனிதன் உணர்ச்சி வசப்பட்டுக் கொந்தளித்திருக்கும் போது நிலைகுலைந்து விட்டதாக உணருகின்றான். உளவியலார் கருத்துப்படி, உணர்ச்சி என்பது புலனுணர்ச்சி (Sensation) யுடன் சேராத வேறுபட்ட நிலையைக் குறிக்கும். தவிர, அது செயல்களுக்கெல்லாம் ஒரு பின்னணியாகவும் இருந்து வருகிறது. உணர்ச்சியின் பொதுத் தன்மைகளைப் பற்றி உளவியலார் நன்கு ஆராய்ந்துள்ளனர். முதலில், அது ஒரு உட்புற நிகழ்ச்சியாகும். இந்த உள்ளுணர்ச்சி சுய நினைவுள்ளது. எடுத்துக்காட்டாக, தாய் தந்தையாரை மகிழ்ச்சியடையச் செய்வதற்கும் சலிப்படையச் செய்வதற்கும் அவர்தம் மகன் காரணம் அல்லன். அந்த மகனுடைய செயல்தான் மகிழ்ச்சியையோ சலிப்பையோ உருவாக்குகிறது. வாழ்க்கையில் மக்கள் பல்வகை உணர்ச்சிகளைப் பெறுகிறார்கள். மக்களின் செயல்களில் எல்லாம் முக்கிய நீரோட்டமாக உணர்ச்சிகள் இருப்பதால் அவை எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக் கூற இயலாது. குறிப்பிட்ட ஓர் உடற்பகுதியில் மகிழ்ச்சியையோ துன்பத்தையோ உணர்ந்ததாக எவரும் கூறுவதில்லை. ஆகவே, உணர்ச்சிகள் எப்போதும் உடலெங்கும் பரவிய நிலையில்தான் உணரப்படுகின்றன. வாழ்க்கை அனுபவங்கள் பெரும்பாலும் இருதரப்பட்ட அடிப்படையான உணர்ச்சிகளுள் எதையாவது ஒன்றைத் தழுவியவாறு காணப்படுகின்றன. அவை மகிழ்ச்சி கலந்தோ சோக உணர்வுகளைக் கொண்டோ இருக்கலாம். மேலும், உணர்ச்சித் தொனிகளைக் (Feeling Tone) கொண்டு ஓர் அனுபவம் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அல்லது சோகமாக இருக்கிறது என்பதை அறியலாம். எடுத்துக்காட்டாக, இனிப்புச் சுவையை இன்ப உணர்ச்சியும் கசப்புச் சுவையை அருவருப்பு உணர்ச்சியும் (Unpleasant Feeling) எப்போதும் பின்தொடர்வதால், இந்த இரண்டு சுவைகளுக்கும் மிகுதியான உணர்ச்சித் தொனிகள் உள்ளன. ஆனால், அதே சமயம் உப்புச் சுவைக்கு உள்ள உணர்ச்சித் தொனி அந்த அளவுக்கு இல்லை. காரணம், அது உணர்ச்சிகளைக் குறிப்பிடக்கூடிய அளவுக்குக் கிளறுவதில்லை என்பதேயாகும். உணர்ச்சிகளுக்கும் புலனுணர்வுகளுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்துவது நல்லது. புலனுணர்வுகளைப் (Sensation) போல வெளி உலகத் தன்மையைப் பற்றி உணர்ச்சிகள் (Feelings) எதுவும் கூறுவதில்லை. ஆனால், மனிதனின் அனுபவம் உணர்ச்சிகளின் பயனைப்பற்றி நன்கு கூறுகிறது. ஒருவன் புதிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று வாங்கியது குறித்து மகிழ்ச்சியடையும்போது, அந்த மகிழ்வுணர்ச்சி புதிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியதால் ஏற்படும் அனுபவத்தால் உருவாகிறது. இதில் புதியதாக உள்ளது தொலைக்காட்சிச் சாதனம். காட்சியைக் காண்பது புலனுணர்வு; அவ்வனுபவத்தால் ஏற்படுவது மகிழ்ச்சியடைவது. இதுபோன்ற சூழ்நிலையில் ஒருவருக்கு உண்டாகும் உணர்ச்சிகள் யாவை என்பதைப் பிறர் சரிவரக் கண்டுகொள்வது கடினமாக இருக்கலாம். அதற்காக உணர்ச்சிகள் போன்ற அனுபவங்களையே புறக்கணிக்க முடியாது. இராய்சு (Royce) என்பவரின் கருத்துப்படி, ஒவ்வோர் உணர்ச்சிக்கும் இருவகைத் தன்மைகள் உண்டு. அதாவது 1. இன்ப உணர்ச்சி அல்லது அருவருப்பு, 2. ஓய்வில்லாமை அல்லது அமைதி. உணர்ச்சியைப் (Feeling) போல மனவெழுச்சியும் (Emotion) கிளர்ச்சியடைந்த உயிரினத்தில் காணப்படும் நிலை எனக் கூறலாம். இரண்டிற்கும் ஒற்றுமை, வேற்றுமைகள் உள்ளன. இன்பதுன்பங்களை மக்கள் உடலெங்கும் உணருவதைப் போலவே பயம், கோபம், குதூகலம் (Amusement) போன்ற மனவெழுச்சிகளையும் உடலெங்கும் உணருகின்றனர். தவிர இரண்டிலும் உயிரினத்தின் சுய நினைவு கிளர்ச்சியடைந்த நிலையில் உள்ளது. இரண்டிற்குமுள்ள வேற்றுமைகளைக் காணும்போது உணர்ச்சியை ஒரு தென்றல் காற்று அல்லது அமைதியான நீரோட்டம் போன்றது என்றும், மனவெழுச்சியை ஒரு சூறாவளிக் காற்று அல்லது ஒரு காட்டாறு போன்றது என்றும் கூறலாம். செயல்களுக்கு எல்லாம் பின்னணியாக வெளிப்படும் உணர்ச்சி மணிக்கணக்கில் நீடித்து இருப்பதுண்டு. அது நீடித்திருக்கும் காலத்தில் பொதுத் தோற்றக்கிற்குப் பல வண்ணங்களைச் சேர்க்கிறது. நல்ல உணவிற்குப் பிறகு, பலர் நகைச் சுவையாகப் பேசிக் கொண்டிருப்பதை எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஆனால், உணர்ச்சிக்கு மாறாக மனவெழுச்சி மக்களைக் கவ்வி இழுத்துச் செல்கின்றது. அது சூழ்ந்துள்ளபோது மக்கள் அதன் ஆற்றலுக்கு உட்படுகின்றனர். ஆனால், நீண்டகாலம் அது சூழ்ந்திருப்பதில்லை. உடலெங்கும் மனவெழுச்சி உணரப்படுவதோடு, பலவித உள்ளுறுப்பு மாறுதல்களும் வெளி உறுப்பு மாறுதல்களும் ஏற்படுகின்றன. மனவெழுச்சியினால் ஏற்படும் மாறுதல்கள் தானியங்கு நரம்பு மண்டலத்தின் (Autonomic Nervous System) செயலாலும், உடலிலுள்ள சில நாணமில்லாச் சுரப்பிகளாலும் (Ductless Glands) உண்டாக்கப்படுவனவாகும். தவிர, அதனால் உண்டாகும் உடற்கூற்று மாறுதல்களின் பரப்பையும் வலுவையும் அளப்பதற்கு உளவியல் பரிசோதனைக் கூடத்தில் பலவகையான மின் இயக்க நுட்பக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. மனவெழுச்சி தெளிவான முறையில் வெளிப்படுவதால் அதை அடையாளம் கண்டு கொள்வது எளிது. உதடுகள் துடிப்பது, கண்கள், முகம் எல்லாம் சிவப்பது, மூக்கு புடைப்பது, தோலின் மேல் பரப்பில் வியர்வை, கை, கால் முட்டிகளை மடக்கி நீட்டுவது, கீழ் உதட்டை மடக்கிப் பற்களைக் கடிப்பது, புருவங்களை உயர்த்துவது, நெறிப்பது போன்ற வெளி உறுப்புச் செயல்களிலிருந்து, ஒருவன் கோபமாக இருக்கிறான் என்பது உணரப்படுகிறது. பெரும்பாலோர் மனவெழுச்சி, உணர்ச்சி இரண்டையும் ஒன்றாக நினைத்துத் தெளிவின்றிக் காணப்பட்டாலும், அதே காலத்தில் மனவெழுச்சியானது அதிலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதைத் தெரிந்து வைத்துள்ளனர். அறிவு மூளைக்குச் சொந்தமானது. ஆனால், மனவெழுச்சியோ இருதயத்துக்குச் சொந்தம். அன்றாட வாழ்க்கையில் அறிவுக்கும் மனவெழுச்சிக்கும் போராட்டம் வரும்போது, பெரும்பாலும் மனவெழுச்சியே அதிக வதுவைப் பெற்று ஒருவருடைய செயலைத் திசை திருப்பி விடுகிறது. ஆகவே, மனிதனை மனவெழுச்சிக்கு அடிமையானவன் எனக் கூறுவதுண்டு. பண்டைக் காலத் தத்துவ அறிஞர்களான அரிசுடாட்டில் (Aristotle), காண்ட்டு (Kant) போன்றோர் ‘மனவெழுச்சியை உள்ளத்தின் நோய்’ என்றார்கள். உளவியலார் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. உளப்பாகுபாட்டு முறையின் தந்தையான (Father of Psychoanalysis) சிக்மண்டு பிராய்டின் (Sigmund Freud) கருத்து மனவெழுச்சியை வெளிப்படுத்தாமல், சோடா பாட்டிலில் வாயுவைப் போல் கட்டுப்படுத்துவது பலவித மனக் கோளாறுகளுக்குக் காரணமாகிறது என்பதாகும். அறிவைப் பயன்படுத்தி மனவெழுச்சியைக் கட்டுப்படுத்துவது, வாழ்க்கைக்கு இன்றியமையாதது என அனுபவமிக்க சான்றோர்கள் கூறுவதை மக்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். மனவெழுச்சியை அளவுகடந்து கட்டுப்படுத்துவதோ அதற்கு அதிகமான சலுகை கொடுப்பதோ சீரான ஆளுமையைப் (Well Balanced Personality) பெறுவதற்கு எந்த வகையிலும் பயன்படாது. சீரான ஆளுமையைப் பெற ஒவ்வொருவரும் மனவெழுச்சிகளைத் திறம்படச் சமாளித்து, ஒழுங்குபடுத்திக் கட்டுப்பாட்டுடன் வாழவேண்டும். அதாவது, வாழ்க்கைத் திட்டத்தில் மனிதப் பண்புகள் ஒவ்வொன்றிற்கும் அதற்குரிய இடத்தை அளிக்கும் போது, மனிதன் சீரான ஆளுமையைப் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறதென உளவியலார் கூறுகின்றனர். எம்.சு. துணை நூல்கள் Hilgards, E.R., Atkinson, R.C. & Atkinson, R.L., Introduction to Psychology, Harcourt Brace Jovanovich, 1971. Kendler, H.H., Basic Psychology, Benjamin, W.H., Inc, California, 1975. Morgan, T., and King, R.A., Introduction to Psychology, Tata MC Graw Hill, Publishing Company Limited, Bombay, 1971.