இது ஹீலியாந்தஸ் என்னும் பேரினத்தைச் சேர்ந்ததாகும். சூரிய காந்தி இனத்தில் 110 சிற்றினங்கள் உண்டு. ஹீலியாந்தஸ் அன்னுஸ் (Helianthus annus) என்பது சூரிய காந்தியின் தாவரவியல் பெயராகும். சூரிய காந்தி, அஸட்டரேசி எனப்படும் இரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். வீட்டுத் தோட்டங்களில் அழகுக்காகப் பயிரிடப்படும் ஒரு பருவ அல்லது பல பருவ இனமான இது நெடுங்காலமாகப் பயிரிடப் பட்டுள்ளது. மஞ்சரியில் மஞ்சட் பூக்களைத் தவிர, பொன் மற்றும் சிவப்பு வண்ணச் சிறு மலர்களும் காணப்படும். தோற்றம். தற்சமயம் சூரிய காந்தியைத் தன்னிச்சையாக வளரும் நிலையில் காண முடியாது. இது மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலிருந்து பிற நாடுகளுக்குப் புகுத்தப்பட்டது. மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஹீ. லெண்டிகுலேரிஸ் (H. Lenticularis) என்ற காட்டு இனத்திலிருந்து சூரிய காந்தி தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. விதை எண்ணெய்க்காக 19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், இது சோவியத் ஒன்றியக் குடியரசில் முதன் முதலாகப் பெருவாரியாகப் பயிரிடப்பட்டது. இரண்டாம் உலகப் போரில், உணவு எண்ணெய்ப் பற்றாக் குறையை ஈடு செய்ய, இதன் சாகுபடி மிகுதியாக்கப்பட்டது. உலகச் சாகுபடியில் 66% சோவியத் ஒன்றியக் குடியரசின் பங்காகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> வளரியல்பு. சூரிய காந்தி நேராக வளரக் கூடிய ஒரு பருவச் செடியாகும். தண்டு, இலைத் தூவிகளோடு கூடியது. செடி 5 மீ. வரை வளரும். இலைகள் தனித்தவை; மாற்றிலையடுக்கமைப்பு; இலையடிச் செதில்கள் இல்லை. இலைக் காம்பு 10–30 செ.மீ. நீளமிருக்கும். இலைப் பரப்பு முட்டை வடிவம் கொண்டது. விளிம்பு பற்கள் போன்றது. மஞ்சரி, தலை (capitulan–head) எனப்படும் ரெசீம் வகையைச் சேர்ந்ததாகும். மஞ்சரியின் குறுக்களவு 8–15 செ.மீ. இருக்கும். ஆனால், பயிரிடப்படும் வகைகளில் 30 செ. மீ. வளர்ச்சியடைவதுண்டு. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பொதுவாக, சூரிய காந்திப் பூ என்பது மஞ்சரியையே குறிக்கும். அதில், நூற்றுக் கணக்கான சிறு மலர்களுண்டு. அவை, தட்டுச் சிறு மலர் (disc floret) கதிர்ச் சிறு மலர் (ray floret) என இரு வகைப்படும். தட்டுச் சிறு மலர்கள் இரு பால், ஒழுங்கானவை, விதை கொடுப்பவை; மஞ்சரி விளிம்பில் காணப்படும் கதிர்ச் சிறு மலர்கள் ஒரு பால் பெண் பூக்களாகவும் ஒழுங்- கற்றவையாகவும் காணப்படும். பெரும்பாலும் இவை மலட்டுப் பூக்களாகவே இருக்கும். ஆனால், இச்சிறு மலர்களாலேயே மஞ்சரி பகட்டாகக் காணப்படுகிறது. அதனால், மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. பூவடிச் செதில்களுண்டு. புல்லி வட்டம் 2 அல்லது 3 மெல்லிய சவ்வு போன்ற உறுப்புகளாகக் காணப்படும். அல்லி வட்டத்தில் 5 அல்லிகள் இணைந்திருக்கும். ஒழுங்கான குழல் அல்லது ஒழுங்கற்ற நாக்குப் போன்று இருக்கும். மகரந்தத் தாள்கள் 5, அல்லி ஒட்டியவை. மேலும், மகரந்தப் பைகள் இணைந்து, குழல் போல் இருக்கும். மகரந்தக் காம்புகள் தனித்திருக்கும். சூலகம், ஈரிலை, ஓரறை கொண்டது. கீழ் மட்டம் ஒரேயொரு சூல் அடி ஒட்டு முறை; சூலகத் தண்டு நீண்டு, மகரந்தப் பைகள் குழல் மூலம் செல்லும். சூலக முடி இரண்டு; சிப்செலா (cypsela) என்னும் உலர் கனியைப் பொதுவாக விதை என்று கூறுவர். சூரிய காந்தி மலர்கள் தன்மலடானவை; எனவே, பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கைக்குட்பட்டு, இனப் பெருக்கம் நடைபெறும். கிழக்கு ஆஃப்ரிக்காவில், மகரந்தச் சேர்க்கை நடத்தும் பூச்சிகள் அரிதாகையால், அங்கு விதைகள் பெரும்பாலும் பதர்களாகவே இருக்கும். வட்டத் தட்டுப் போன்ற ஆனால், தோட்டப் பயிர்களில் இரட்டை அல்லது உருளை வடிவ மஞ்சரிகளுமுண்டு. வகைப்பாடு. சூரிய காந்தியின் வகைப்பாடு செடியின் உயரம், மஞ்சரியின் குறுக்களவு, வண்ணம், உருவமைப்பு, விதையின் அளவு, எண்ணெய்ச் சத்து முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக, இது மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மிகப் பெரியவை, நடு நிலையானவை, குட்டை என்பனவாகும். மிகப் பெரியவற்றில் 2–5 மீ. உயரமும், 30–50 செ.மீ. மஞ்சரிக் குறுக்களவும், பெரிய பின் பருவ விதையும், கறுப்பு நிற நீர்க் கோடுகளும் காணப்படும். எண்ணெய்ச் சத்துக் குறைவு. நடு நிலை வகை 1.5–2.மீ. உயரமுடையது. மஞ்சரியின் குறுக்களவு 15–20 செ.மீ; விதைகள் சிறியவை; கறுப்பு அல்லது பழுப்பு நிறம் கொண்டவை. எண்ணெய் மிகுதி; குட்டை வகையின் உயரம் 0.75–1.5 மீ. மஞ்சரி 7–15 செ.மீ. குறுக்களவுடையது. முன் பருவ வகையில் எண்ணெய்ச் சத்து மிகுதி. ரஷிய பூதாகாரம் (Russian giant), பூதாகார வெள்ளை, நடு நிலை வகை, துருவ நட்சத்திரம், தென் சிலுவை, வியாழன், செவ்வாய், குட்டை, உதய சூரியன், மென்னோனைட் (mennonite), அம்பு நுனி முதலியன தற்போது சாகுபடியாகின்றன. அண்மை ஆராய்ச்சி மூலம் தமிழ்நாட்டில் கோ.2 என்னும் புதிய வகை வெளியாகியுள்ளது. இது வெளிநாடுகளைச் சேர்ந்த 7 வீரிய வகைகளைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இது 87 நாளில் பயனும், உயர் விளைச்சலும் தர வல்லது. ஆய்வுத் திடல்களில், ஹெக்டேருக்கு ஏறத்தாழ 550 கி.கி. வரை விளைகிறது. இவ்வகை 37.4% எண்ணெய்ச் சத்துக் கொண்டுள்ளது. சூழ்நிலை. உலக நடுக் கோட்டிலிருந்து வடக்கே 55° வரையுள்ள அனைத்து நாடுகளிலும் வளருந் தன்மை பெற்றது. மேலும், வெப்ப மண்டல நாடுகளிலும், உயரமான மலைப் பகுதிகளிலும் வளரக்கூடியது. நன்கு வளர மித வெப்பமும், மிக மழையும் தேவை. இதன் வேர் 4 மீ. ஆழமாகவும், பரவலாகவும் வளரக் கூடியதால், வறண்ட நிலங்களிலும் இதைப் பயிரிட முடியும். எந்த மண்ணிலும், வளருந் தன்மையுடைய இதற்குத் தனியாக உரமிடத் தேவையில்லை. அமிலத் தன்மை, அதிக நீர்த் தேக்கம் கொண்ட சரிவு நிலங்களில் சரியாக வளர்வதில்லை. இச்சூழ்நிலைகளில் வளரும் செடிகள் உயரமாக வளர்ந்தாலும், சரி வரப் பயன் தருவதில்லை. பெரும்பாலான விதைகள் பதராகவே காணப்படுகின்றன. பயிரின் தொடக்க நிலையில், மிகு மழையும், ஈரம், குளிர் ஆகிய சூழ்நிலையும், பூஞ்சைகளின் தாக்கத்திற்குக் காரணமாகலாம். சாகுபடி. ஒரு பருவ விதைகளை எண்ணெய்க்காக விதைக்கும் போது, ஹெக்டேருக்கு 15 கி.கி. தெளிக்க வேண்டும். வயலைத் தயார் செய்யும் போது, குறுகிய வகைகளுக்குச் சாலுக்கு சால் 30–60 செ.மீ. பயிருக்குப் பயிர் 15 செ.மீ. இருக்குமாறு இடைவெளி தர வேண்டும். விதைத்த 15–20 நாளுக்குள் நன்றாக வளர்ந்த ஒரு செடியை விட்டு விட்டு, மற்றவற்றைக் கலைத்து விட வேண்டும். விதைத்த 45 நாள் வரை, களைகள் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். மானாவாரிப் பயிருக்கு அடியுரமாக நைட்ரஜன் (N), பொட்டாசியம் (P), பாஸ்ஃபரஸ் (K) ஆகியவை முறையே 16:8:8 கிலோ எனப் பரிந்துரைக்கப்படுகிறது. இறைவைப் பயிருக்கு அடியுரமாக ஹெக்டேருக்கு NPK முறையே 8:8:8 கிலோ அளவும், மேலுரமாக விதைத்து, 25 அல்லது 30 ஆம் நாள் 8 கிலோ நைட்ரஜன் சத்தும் இட வேண்டும். மொட்டுகள் உருவாகும் போதும், செடியில் மலர்கள் தோன்றும் போதும், மணிகள் முற்றும் போதும், மண்ணில் போதிய ஈரம் இருக்குமாறு, நீர் பாய்ச்சுவது விளைச்சலைப் பெருக்கும். பூ மலர்ந்த பிறகு, காலை 9–11 மணி வரை தொடர்ந்து, 10 நாளுக்குப் பூக்களை மெல்லிய துணியால் தடவி, அயல் மகரந்தச் சேர்க்கையை அதிகப்படுத்துதல், சூரிய காந்தி உற்பத்தியைப் பெருக்கும். செடிகள் 2–2.5 மீ. வளர்ந்து, மலர் மொட்டுகள் தோன்றியவுடன், தரம் குறைந்த மஞ்சரிகளை நீக்கி விடுவர். அறுவடை. கோ.1 போன்ற உயர் விளைச்சல் வகை 65 நாளில் விளைச்சலைத் தரும். மஞ்சரியின் பிற்பகுதி மஞ்சள் நிறமாக மாறியதும், அறுவடை செய்யலாம். அந்நிலையில், விதைகள் ஒன்றை விட்டு ஒன்று தனித்து விடும். அவை மஞ்சரியிலிருந்து உதிர்வதற்கு முன்பு, மஞ்சரியை அறுவடை செய்ய வேண்டும். சில இடங்களில், முழுச் செடியையும் பிடுங்கியெடுப்பதுண்டு. பொதுவாக, மஞ்சரிகள் வெட்டுச் சால்களின் இடைப் பகுதியில் விதைப் பகுதி மேல் நோக்கி இருக்கும் வண்ணம் தரையில் உலர்த்தப் படும். மஞ்சரி நன்கு காய்ந்த பின், களத்து மேட்டில் மஞ்சரிகளைத் தலை கீழாக வைத்துக் குச்சி மூலம் அடித்தோ, கம்பி வலை கொண்ட பலகையில் தேய்த்தோ, விதைகள் பிரித்தெடுக்கப்படும். பயன்கள். அமெரிக்காவில் செவ்விந்தியர்களின் முக்கிய உணவாகக் காட்டுச் சூரிய காந்திச் செடியும், மக்காச் சோளமும் பயன்பட்டன. சோவியத் ஒன்றியக் குடியரசு, அர்ஜென்டினா, கனடா ஆகிய நாடுகளில் இது முக்கிய எண்ணெய் வித்துப் பயிராகப் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அமெரிக்கா, ரொடீஷியா, கனடா ஆகிய நாடுகளில், கால்நடைத் தீவனமாகப் பச்சையாகவோ, உலர்த்தியோ பயன் படுத்தப் படுகிறது. எண்ணெய்க்குப் பயன்படுத்தினாலும் பச்சையாகவோ, வறுத்தோ, உப்பிட்டோ உண்ணலாம். அமெரிக்காவில் வறுத்து உப்பிட்ட விதைகளைப் பொட்டலங்களாக விற்பதுண்டு. இதற்காகப் பெரிய விதைகளைத் தேர்ந்தெடுப்பர். எண்ணெய் அல்லது கால்நடைத் தீவனத்தைப் பொறுத்து வகையைத் தேர்வு செய்ய வேண்டும். உண்ணும் வகையைத் தேர்வு செய்து உமி நீக்கி வறுப்பர். உமி நீக்கிய பருப்பை மாவு செய்து, ரொட்டி தயாரிக்கலாம். வறுத்த விதைகளைப் பொடி செய்து, காஃபிப் பொடிக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். இது கால் நடை வளர்ப்புப் பறவைகளுக்கு நல்ல சத்துள்ள உணவாகும். விதையெண்ணெய். விதையின் எண்ணெய் அளவு 22–36% இருக்க, உமி நீககிய பருப்பின் எண்ணெய் அளவு 45–55% ஆகும். குளிர் அழுத்தமும், வெப்ப அழுத்தமும் கொடுத்து, விதையிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுப்பர். தூய சூரிய காந்தி எண்ணெய், இளம் மஞ்சள் வண்ணமும், நறுமணமும் கொண்டது. இந்த எண்ணெயில் வைட்டமின் A,B, E ஆகியவை காணப் படுகின்றன. இதன் ஊட்டப் பொருள், ஆலிவ் எண்ணெய்க்குச் சமமாகவும், மலிவானதாகவும் உள்ளமையால், இதை ஆலிவ் எண்ணெயில் கலப்படம் செய்வதுண்டு. எண்ணெய் சமையலுக்கு மட்டுமின்றி, எண்ணெய் தொடர்புடைய பிற தொழில்களிலும் பயன்படும். எண்ணெயில் லினோலிக் அமிலம் குறைவாக உள்ளமையால், ரொட்டி தயாரிப்பில் பயனாகிறது. மேலும், இது பகுதி–உலர் (semidrying) எண்ணெய் வகையைச் சேர்ந்தது. இதனால், வண்ணப் பூச்சுத் தயாரிப்பிலும் பயன்படுகிறது. டீ.சல் ஊர்திகளில் எரி பொருளாகவும் பயன்படுகிறது. எண்ணெய் நீக்கிய பிண்ணாக்கு அதிக புரதச் சத்துக் கொண்டதால், நல்ல தரமுள்ள கால் நடைத் தீவனமாகிறது. கால்சியம், தயாமின், நியாசின் போன்ற வேதிப் பொருள்களைப் பெருமளவில் தயாரிக்க, இதை மூலப் பொருளாகப் பயன்படுத்துவர். மேலும், இதைப் பொடி செய்து ரொட்டி தயாரிக்கவும் செய்யலாம். சூரிய காந்தி உமி எரி பொருளாகவும், எரித்த சாம்பல் அதிக பொட்டாசியம் கொண்டுள்ளமையால், சிறந்த உரமாகவும் பயன்படும். உமியைப் பயன்படுத்தி, வெப்பத் தடுப்பு அட்டைகள், பலகைகள் தயாரிக்கலாம். விதைகள் நீக்கிய மஞ்சரித் தட்டு கால் நடைத் தீவனமாகும். அது ஊட்டச் சத்தில், கோதுமைத் தவிட்டிற்குச் சமம் ஆகும். இதில், பெக்டின் ஜெல்லி தயாரிக்கின்றனர். மேலும், மஞ்சரிக் காம்பை எரிபொருளாகவும் பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்துகின்றனர். இதில் மிகுந்துள்ள (35%) செல்லுலோஸ், காகிதம், நெகிழி தயாரிப்பில் பயன்படுகிறது. சூரிய காந்தி இலைகள் பிற தீவனங்களோடு கால் நடைகளுக்குத் தரப் படுகின்றன. மக்காச் சோளத்திற்கு ஈடாக, ஊட்டச் சத்துப் பெற்றுள்ளமையால், இதைக் கறவை மாடுகளுக்குத் தரும் போது, பாலும், வெண்ணையும் மிகுதியாகக் கிடைக்கும். சூரிய காந்தி மருத்துவத்திலும் பயன்படுகிறது. சூரிய காந்தி எண்ணெய்க்குப் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கும் பண்புள்ளமையால், இதைக் கொண்டு பூச்சிக் கொல்லி நீர்மங்களைத் தயாரிக்கின்றனர். இலைக்குப் பாக்டீரியாவைக் கொல்லும் ஆற்றல் உண்டு என்று கண்டறிந்துள்ளனர். அதனால், காகசன் பகுதியில் மலேரியாக் காய்ச்சலைக் குணப்படுத்த, இலைகள் பயன்படுகின்றன. மேலும் சுவாச நோயைத் தீர்க்கும் பண்புடையது. சீனாவில், வயிற்றுப் போக்கைத் தடுப்பதற்கு விதைகளைப் பயன் படுத்துகின்றனர். மலர்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, ஆஸ்துமா போன்ற நோய்களைக் குணப்படுத்தும். சிறு பூக்களில் தேன் மிகுந்துள்ளமையால், தேனீப் பண்ணைக்குத் தகுந்த தாவரமாகும். மேலும், மலர்களிலிருந்து மஞ்சள் சாயப் பொருள் எடுக்கின்றனர். நோய். பாட்ரிடிஸ் சினீரா (Botrytis cinerea). என்னும் பூசணம் இளம் தண்டு, இலை, இளம் மஞ்சரிகளை ஈரச் சூழ்நிலையில் தாக்கும். பக்சினியா ஹீலியான்தி என்னும் பூசணம் துரு நோயைத் தோற்றுவிக்கும். தண்டு அழுகல் நோய்க்கு ஸ்க்லிரோடினியா ஸ்க்லீரோஷியோரம் என்னும் பூசணம் காரணமாகிறது. இவற்றைத் தவிர, வெட்டுப் புழு, அசுவிணி, இராப் பூச்சி, வண்டு ஆகியவை சூரிய காந்தியைத் தாக்கி அழிக்கும். ஒரபேங்கி (orobanche) என்னும் வேர் ஒட்டுண்ணி சூரிய காந்திச் செடியைத் தாக்கி அழிக்கலாம். பயிர்ப் பெருக்கம். வேரைத் தவிர ஏனைய பகுதிகளும் பயன்படக் கூடிய சூரிய காந்தி வகைகளை மேம்படுத்தப் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. குட்டையான வகைகள், அறுவடை செய்ய மிகவும் ஏற்றவை ஆகையால், அந்த வகைகளைத் தேர்வு மூலம் அறிமுகப்படுத்தியுள்ளனர். உண்பதற்கு ஏற்ப மென் தோலும் அடர்த்தியான பருப்பும் கொண்ட வகைகளைக் காட்டு இனத்தோடு கலப்புச் செய்வதால், விதைகள் கவசத் தோல் பெற்று இராப் பூச்சித் தாக்காத வகைகளாக வெளி வருகின்றன. கொக்கி போன்ற வளைந்த மஞ்சரிக் காம்பு உள்ள வகைகள் மூலம் பறவைகள் ஏற்படுத்தும் அழிவைத் தடுக்கின்றனர். அண்மையில் ஜெருசலம் ஆர்டிசோக் என்ற சிற்றினத்துடன் சூரிய காந்தியை ஒட்டுச் செய்து வீரிய வகைகளைத் தோற்றுவித்துள்ளனர். இந்த வகைகள் கூடிய வளர்ச்சி, குறைந்த உமியளவு, அதிக எண்ணெய்ச் சத்துக் கொண்டவையாக இருக்கும். மேலும், இவற்றில் ஆர்டிசோக்கின் தீவிர வளர்ச்சியும், சூரிய காந்தியின் முன் பருவம், மஞ்சரியைக் கொடுக்கும் தன்மையும் சேர்ந்துள்ளமையைக் காணலாம். ஆனால், ஆர்டிசோக் போன்று வேரில் கிழங்குகள் தோன்றுவதில்லை. மேலும், சூரிய காந்தியை டாலியாவுடன் கலப்பினம் செய்து, புது வகையை அறிமுகப்படுத்தியுள்ளனர். —தி. ஸ்ரீகணேசன் நூலோதி. J.W. Purseglove, Tropical Crops, Dicotyledons, ELBS, London, 1969. சூரிய காந்தியில் மகரந்தச் சேர்க்கை. சூரிய காந்தி பெரும்பாலும் அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் கருவுறும் தன்மை உடையது. வேறு செடியிலிருந்து, மகரந்தம் கிடைக்கவில்லையென்றால், கருவுறுதல் சரி வர நடைபெறாது. தன் மகரந்தச் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்றுக் கருவுற நேர்ந்தால், செடியின் வீரியம் குறைந்து, விளைச்சல் பாதிக்கப்படும். ஆனால், இயற்கையாகவே சூரிய காந்தியில் தன் மகரந்தச் சேர்க்கை ஏற்படுவதைத் தடுக்க, தன் இயலாச் சேர்க்கை (self incompatibility) மூலம், விதை வளர்ச்சி தடுக்கப்பட்டு, பதரான விதைகளே மிகுதியாக உண்டாகின்றன. சூரிய காந்திப் பூவின் அமைப்பு ஒரே வகையாக இல்லாமல், சில பூக்கள் தட்டையாகவும், சில பூக்கள் குழியாகவும், வேறு சில பூக்கள் குவிந்தும் உள்ளமையால், மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்பட்டு, விதை முதிர்ச்சி அனைத்துப் பூக்களிலும் ஒரே வகையாக இருப்பதில்லை. பூக்கும் காலம் மழைக் காலமாக இருந்தால், மகரந்தத் தூள்கள் கழுவப்பட்டு, கருவுறுதல் பாதிக்கப்பட்டு, விதை முதிர்ச்சி உண்டாவதில்லை. முக்கியமாகப் பூக்களில், மகரந்தச் சேர்க்கை சரி வர நடைபெறாத காரணத்தால், பதரான விதைகள் பெருமளவில் உண்டாக, விளைச்சல் மிகுதியாகப் பாதிக்கப்படுகிறது. இக்குறைகளைப் போக்கி, அதிக அளவில் விதைகளை உண்டாக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வு முடிவுகள் மூலம் சூரிய காந்தி பயிரிடப்படும் இடங்களில் ஹெக்டேருக்கு இரண்டு தேன் கூடுகள் வைத்து, தேனீக்கள் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கையை மிகுதிப்படுத்தி, உயர் விளைச்சலைப் பெருக்கலாம். மேலும், கை மகரந்தச் சேர்க்கை (hand pollinatin) எனும் எளிய முறைப்படியும், அயல் மகரந்தச் சேர்க்கையை அதிகப்படுத்தி, விளைச்சலைப் பெருக்கலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சூரிய காந்திக் குடும்பத்தில் ஒரு செடியில் மிகுதியான பூக்கள் கொண்ட வகையுண்டு. ஆனால், சாகுபடி செய்ய, பொதுவாக ஒரு பூவுடைய சூரிய காந்தி வகையே ஏற்றது. ஏனெனில், ஒரு பூ கொண்ட வகையில், அனைத்துப் பூக்களும் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடையும். மேலும், கொண்டை பெரியதாக அமைந்து, அதிக அளவில் விதைகளைக் கொண்டிருக்கும். சூரிய காந்திக் கொண்டை 4–50 செ.மீ. வரை குறுக்களவு கொண்டது. பூவின் வெளிப் பகுதியில், பூவைச் சுற்றி மஞ்சள் நிறமான இதழ்களைக் கொண்ட, சிறு சிறு பூக்கள் இருக்கும். இவற்றிற்குக் கதிர்ச் சிறு பூக்கள் (ray florets) என்று பெயர். இவற்றில் ஆண் பகுதியோ, பெண் பகுதியோ இல்லாமல், மலட்டுத் தன்மையுடையனவாக இருக்கும். இவற்றிலிருந்து விதைகள் கிடைப்பதில்லை. ஆனால், இப்பூக்கள் பெரிய பகட்டான இதழ்களைக் கொண்டுள்ளமையால், அவை தேனீ, வண்டு முதலியவற்றைக் கவர்ந்திழுத்து, அயல் மகரந்தச் சேர்கைக்குத் துணை புரிகின்றன. இப்பூக்களுக்கு அடுத்து உட்புறத்தில் ஏறத் தாழ 1000–4000 வட்டத் தட்டுச் சிறு பூக்கள் (disc florets) சூரிய காந்தியின் பஞ்சு போன்ற இடத்தில் அடுக்காக வட்டமாக அமைந்திருக்கும். இப்பூக்களில், ஆண் பகுதியும், பெண் பகுதியும் சேர்ந்து உள்ளமையால், அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் கருச் சேர்க்கை ஏற்பட்டு விதைகள் உருவாகின்றன. இவ்வகையான வட்டத் தட்டுச் சிறு பூக்களில் ஐந்து சுருமை நிற மகரந்தப் பைகள் உள்ளன. இவை ஒன்றோடொன்று இணைந்து காணப்பட்டாலும், இவற்றின் ஐந்து காம்புகளும் தனித் தனியே இருக்கும். இவையே பூவின் ஆண் பகுதியாகும். சூரிய காந்திப் பூக்களின் மகரந்தப் பை முதிர்ச்சி அடைந்ததும், அதன் மேல் பகுதியில் உள்ள துளை வழியாக மகரந்தத் தூள்களைச் சிந்தும். இவ்வாறு ஆண் பகுதி முதலில் முதிர்ச்சியடைவதால், பூக்களில் 75–100% வரை அயல் மகரந்தச் சேர்க்கை நடை பெறுகிறது. மகரந்தப் பை முதிர்ச்சியடைவதும், மகரந்தத் தூள்கள் சிந்துவதும் சூரிய ஒளியைப் பொறுத்திருக்கும். நல்ல சூரிய ஒளி இருக்கும் போது, காலை 7–11 மணி வரை தொடர்ந்து மகரந்தத் தூள் சிந்திக் கொண்டிருக்கும். காலை வேளையில் சூரிய ஒளி குறைவாக மந்தாரமாகவோ, மழைக் காலமாகவோ இருந்தால், மகரந்தம் தாமதமாக வெளிப்படும். சூரிய ஒளி வந்த பிறகே, மகரந்தத் தூள்கள் விரைவாக வெளிப்படும். சூரிய காந்திப் பூவின் பெண் பகுதியான இளம் சூலகத் தண்டு மகரந்தப் பைக்குள் பதிந்து இருக்கும். இத்தண்டின் நுனியிலுள்ள சூலக முடி இரண்டாகப் பிளவு பட்டிருக்கும். ஆனால், மகரந்தப் பையின் வழியாக வெளி வருவதற்கு முன் இரண்டு சூலக முடிகளும் ஒன்றோடொன்று இணைந்து கை வடிவில் குவிந்து இருக்கும். சிறிது சிறிதாக வளர்ந்து, மகரந்தப் பையைத் துளைத்துக் கொண்டு, காலை 9 மணிக்கு மேல் மகரந்தப் பைக்கு மேலாக இவை வெளி வரத் தொடங்கும். இவ்வாறு வெளி வரும் போது, இரண்டு சூலக முடிகளும் இணைந்துள்ளமையால், மகரந்தத் தூள் சூலக முடியின் உட்புறத்தில் படாமல், தன் மகரந்தச் சேர்க்கை தவிர்க்கப் படுகிறது. சூல் முடி வெளியே வந்து, மெதுவாகப் பிரிந்து மசுரந்தத் தூளைப் பெற முயல்கிறது. இவ்விரு சூலக முடிகளும் வெளிப்புறமாக விரிந்து, கீழ் நோக்கி வளைந்து சுருண்டு கொள்ளும். இந்நிலையில், சூலக முடிகள் 2,3 நாள் வரை மகரந்தத் தூள்களைப் பெறுவதற்கு ஆயத்தமாக இருக்கும். அதற்குப் பின், அவை காய்ந்து லிடும். மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு, சூலகத் தண்டும் காய்ந்து, கருப்பையிலிருந்து விடுபட்டு விழுந்து விடும். பூவின் வளர்ச்சி. சூரிய காந்தியின் பூ மொட்டுகள் 10 நாளில் பெரிதாகி விடும். பிறகு, இதில் சிறு பூக்கள் விரியத் தொடங்கி, அதன் பின் வட்டத் தட்டுச் சிறு பூக்கள் அனைத்தும் விரிவதற்கு 7–10 நாள் ஆகும். பிறகு, வட்டத் தட்டுச் சிறு பூக்கள் அனைத்தும் கருவுற்று, முதிர்ச்சி அடைய 10–15 நாள் ஆகும். ஆகவே, பூக்கத் தொடங்கி, விதைகள் முற்றுவதற்கு ஏறத் தாழ 30–35 நாள் ஆகும். இயற்கையிலேயே பூ எந்த அளவில் இருந்தாலும், 7–10 நாளுக்குள் இவை விரிய, மகரந்தச் சேர்க்கை முடிந்து விடும். சூரிய காந்தியில் வட்டமாக அடுக்கடுக்காக அமைந்திருக்கும் வட்டத் தட்டுச் சிறு பூக்கள் வரிசை, வரிசையாக விரியத் தொடங்கும். வெளிப் புறத்தி லுள்ள பூக்கள், முதலில் உள் நோக்கி விரியத் தொடங்கும். சிறிய பூவாக இருந்தால், விரியத் தொடங்கிய நாளிலிருந்து, நாள் ஒன்றுக்கு ஓரிரு வரிசைகளே விரியும். பெரிய பூவாக இருந்தால், நாள் ஒன்றுக்கு 3–5 வரிசை வட்டத் தட்டுப் பூக்கள் விரிகின்றன. சூரிய காந்தி வயலில் அனைத்துச் செடிகளும் ஒரே நாளில் பூக்கத் தொடங்கா. முதல் செடி பூக்கத் தொடங்கியதிலிருந்து, இறுதிச் செடி பூப்பதற்கு ஏறத் தாழ 15–20 நாள் ஆகும். பூக்கும் செடிகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே சென்று, 10–12 நாளில் அதிக பூக்கள் மலரும். பின்னர், மீண்டும் பூக்கும் செடிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். பூக்கத் தொடங்கிய 15–20 நாளுக்குப் பிறகு பூக்கத் தொடங்கும் தட்டுப் பூக்களுக்கு மகரந்தம் கிடைக்க வாய்ப்பில்லாமல் போய் விடுவதால், பதரான விதைகளே மிகுதியாகும். ஆகவே, சூரிய காந்தியில் மகரந்தச் சேர்க்கையை அதிகப்படுத்த, பூக்கள் விரியத் தொடங்கிய நாளிலிருந்து, மகரந்தச் சேர்க்கை செய்ய வேண்டும். இதற்கான பணியாளர்கள், கையில் மெல்லிய வெள்ளைத் துணியைச் சுற்றிக் கொண்டு, சூரிய காந்திப் பூவின் மேல் பகுதியை மெதுவாக ஒற்றி எடுக்க வேண்டும். இதனால், சூலக முடி விரிந்து மகரந்தத்தைப் பெறுவதற்கு ஆயத்தமாகி விடும். இங்ஙனம் காலை 9–11 மணி வரை செய்ய வேண்டும். ஒவ்வொரு பூவும் விரிந்து கருவுறுதலுக்கு 7–10 நாள் ஆவதால், மகரந்தச் சேர்க்கையைத் தொடர்ந்து ஒவ்வொரு பூவிலும் 7–10 நாள் வரை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது, சூலக முடி உடைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொடக்கத்தில், பூக்கள் குறைவாக மலர்வதால், ஹெக்டேருக்கு 3 அல்லது 5 பணியாளரே போதும். பின்னர் அதிகமான பூக்கள் மலர்வதால், 15–25 பணியாளர் ஏறத் தாழ, 2 மணி நேரம் நாளும் தேவைப் படுவர். நாளடைவில், தொடர்ந்து மலரும் பூக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமையால், பணியாளர் குறைவாகவே தேவைப்படுவர். இங்ஙனம், இறுதியாக மலரும் பூ முற்றிலும் விரிந்து, முழுதுமாக மகரந்தச் சேர்க்கை நடை பெறும் வரை பணியாளரைக் கொண்டு, மகரந்தச் சேர்க்கையைத் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒவ்வொரு பூவையும் இவ்வாறு மெல்லிய துணி மூலம் கையால் ஒற்றி எடுப்பதால், சூரிய காந்தியில் அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுகிறது. இதனால், பெரும் எண்ணிக்கையில் கருவுறுதல் நடந்து, மிகுதியான விதைப் பிடிப்பு ஏற்பட்டு, ஏறத்தாழ 25–30% உயர் விளைச்சலும் கிடைக்கும். —இராபின்சன் தாமஸ் சூரிய காந்திக் குடும்பம். பூக்கும் தாவரப்பெருங் குடும்பங்களில் ஒன்றான அஸ்ட்டரேசியில் சூரிய காந்திக் குடும்பம் அடங்கும். பொதுவாக, இரு வித்திலைக் குடும்பங்களில் அஸ்ட்டரேசியையும், ஒரு வித்திலைக் குடும்பங்களில் ஆர்கிடேசியையும் பெருங் குடும்பங்கள் என்பர். இக்குடும்பம், இரு வித்திலைப் பிரிவில் கேமோபெட்டேலே (gamopetalae) எனப் படும். துணை வகுப்பில், இன்ஃபெரே (inferae) என்னும் வரிசையில் அமைந்துள்ளது. இக்குடும்பத்தில் 950 பேரினங்களும், 20,000 சிற்றினங்களும் அடங்கியுள்ளன. வளர் சூழ்நிலை. உலகில் எங்கெல்லாம் தாவரங்கள் வளரக் கூடிய சூழ்நிலை உள்ளதோ, அங்கெல்லாம் இக்குடும்ப இனங்களைக் காணலாம். ரவூலியா (Rawolia), ஹேஸ்டியா (Haastia), சின்க்ளேரி (Sinclari) என்னும் நியூஸிலாந்து செடிகளைத் தாவர ஆடுகள் (Vegetable sheep) என்பர். கம்பளி போன்ற மயிருடைய இத்தாவரங்கள், பார்வைக்கு உருண்டையாக, படுத்திருக்கும் ஆடு போலக் காணப்படும். சில சிற்றினங்கள் வறண்ட பாலை நிலங்களிலும், காய்ந்த பாறைகளின் மீதும் வளர்வதுண்டு. படிமலர்ச்சியில் அஸ்ட்டரேசியை மிக உயர்ந்த குடும்பமாகக் கருதுவதற்குக் காரணம், அதிலுள்ள மிகு எண்ணிக்கை கொண்ட சிற்றினங்கள் மட்டுமல்லாமல், அவை எவ்விதத் தட்ப வெப்ப நிலையிலும் வளரும் தக அமைப்பைக் கொண்டுள்ளமையுமாகும். பெரும்பான்மையானவை நில வாழ் செடிகளாகக் காணப்பட்டாலும், எரிஜிரான் (erigeron), பைடென்ஸ் (bidens), கொட்டூலா (cotula) போன்ற இனங்களின் சில சிற்றினங்கள் நீர் வாழ் செடிகளாக உள்ளன. பக்கேரிஸ் (baccharis) என்பது வறள் நிலச் செடியாகும். இது இலையற்றது. தண்டு தட்டையாக இறக்கை போல் பசுமையாக இருக்கும். பிரவுஸ்டியா (proustia) என்னும் வறள் தாவரத்தில் தண்டு, முள்களாக மாறி, நீராவிப் போக்கைக் கட்டுப்படுத்துகிறது. வளரியல்பு. இக்குடும்பச் சிற்றினங்கள் பல வகை வளரியல்புகளைக் கொண்டவையாகும். ஒரே இனத்தில் சிறு செடிகள், மரங்கள், கொடிகள் முதலியவற்றைக் காணலாம். சான்றாக, வெர்னோனியா (Vernonia) குடும்பத்தில், மரச் சிற்றினங்கள் மிகக் குறைவு. கிளைனியா (Kleinia), வெர்னோனியா, ட்ரவேன்கோரிகா (V. trivancorica) வெ. ஷேர்வராயன்சிஸ் (V. shervarayansis) என்பவை 10–15 மீ. வளரக் கூடிய மென்மையான தண்டுடைய மரங்களாகும். சில கொடிகள் பற்றுக் கம்பிகள் மூலம் படர்பவை. எ-டு: மடிசியா (Mutisia); சுற்றிப் படரும் கொடிகளுமுண்டு; எ-டு: மைகேனியா (Mikania). சோகோட்ரா தீவைச் சேர்ந்த வெர்னோனியா வீட்டராலிஸ் (Vernonia littoralis) என்பது ஒரு பெரிய காட்டுக் கொடியாகும். உட்புறத் தோற்றம். தண்டுகளில் பால் (latex) குழாய்கள் பொதுவாகக் காணப்படும். பெரும்பாலும், அவற்றில் வண்ணமற்ற நீர்மம் இருக்கும். இலைகள், தனி அல்லது கூட்டிலைகள். இலைப் பரப்பு முழுமையாகவோ, பிளவுபட்டோ இருக்கும். வறள் நிலத் தாவரங்களில் முழு இலையோ, இலையின் நுனியோ, இலையின் விளிம்புகளோ முள்ளாக மாறுவதுண்டு. ஹோப்லோஃபில்லம் (hoplophyllum) என்ற செடியில் முழு இலைகளே முள்களாக மாறி விடுகின்றன. பொதுவாக மாற்றிலையடுக்கு அமைப்பும், சில சிற்றினங்களில் எதிரிலையடுக்கும் காணலாம். லானியா (launiea), டேராக்சகம் (taraxacum) செடிகளில் தண்டு இல்லை. இவற்றின் இலைகள் நில மட்டத்தில் அமைந்திருக்கும். பொதுவாகச் சிறகின் போக்கு வலை நரம்பு (pinnately reticulate) அமைப்பாகக் காணப் படும். காரிம்பியம் (corymbium) என்ற செடியின் இலைகள் இணை நரம்பு அமைப்பைப் பெற்றுள்ளமையால், பார்வைக்கு ஒரு வித்திலைத் தாவரம் போல் காணப்படும். ‘தலை’ என்னும் சிறப்பு வகை மஞ்சரி கொண்டது. ஜவந்தி, டாலியா, ஜினியா மலர்கள் என்று குறிப்பிடப் படுபவை, சூரிய காந்தியின் மஞ்சரிகளாகும். மஞ்சரியின் சிறு மலர்கள் (florets) நெருக்கமாக அமைந்திருக்கும். மஞ்சரிக் காம்பின் நுனி, வட்டமாகத் தட்டுப் போன்றிருக்கும். இதை மஞ்சரித் தளம் (receptacle) என்பர். இத்தளத்தின் அடிப் பகுதியில் பசுமையான இலைகள் போன்ற பல உறுப்புகளைக் காணலாம். ஹெலிக்ரைசம் (helichrysum) என்ற இனத்தின் மஞ்சரி, வெண்மை, ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் போன்ற வண்ணத்துடன் வாடாமல் உள்ளமையால், இதை என்றும் நிலைத்தவை (everlasting) என்பர். மஞ்சரியின் தளத்திலுள்ள சிறு மலர்களை இரு வகையாகக் குறிப்பிடலாம். அவை தளத்தின் நடுவிலுள்ள வட்டத் தட்டுச் (disc) சிறு மலர்களும், ஓரத்திலுள்ள கதிர்ச் (ray) சிறு மலர்களும் ஆகும். மேலும், சிறு மலர்களின் அல்லி வட்டத்தைப் பொறுத்தும், அவற்றை இரண்டாகப் பிரிக்கலாம், குழல் சிறு மலர்கள் (tubular) குழல் வடிவ அல்லி வட்டத்தையும், நா வடிவச் சிறு மலர்கள் (ligulate), நா வடிவ அல்லி வட்டத்தையும் கொண்டிருக்கும். மஞ்சரியில் காணப்படும் சிறு மலர்கள் எண்ணிக்கையிலும், அமைப்பிலும் வேறுபட்டவை. பார்த்தீனியம் அர்ஜென்டேடம் (Parthenium argentatum) என்ற மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த செடி, கூட்டு மஞ்சரி உடையது. மஞ்சரியில், பல சிறு மஞ்சரிகளுண்டு. ஒவ்வொரு சிறு மஞ்சரியிலும் 3 சிறு மலர்களுண்டு. இவற்றை அணைத்தவாறு, பூவடிச் செதில் ஒன்றுண்டு. 3 மலர்கள் நடுவில் பெண் மலரும், இரு பக்கத்திலும் ஆண் மலர்களும் இருக்கும் அமைப்பை ‘இரு காதலர்களிடையே ஒரு பெண்மணி’ என்பர். லிகுலேரியா செடியின் மஞ்சரி ஏறத் தாழ 1 மீ. நீளமிருக்கும். இது உருளையாக 300–400 மஞ்சரிகளையும், ஒவ்வொரு சிறு மஞ்சரியிலும் 5 சிறு மலர்களையும் கொண்டிருக்கும். அவற்றில், மூன்று குழல் வடிவ, இரு பால், ஒழுங்கானவை. ஏனைய இரண்டு நா வடிவ, ஒழுங்கற்ற, சிறு மலர்களாகும். எகைனாப்ஸ் (echinops), வெர்னோனியா யூனிஃப்ளோரா (Vernonia uniflora), ஸ்பெராந்தஸ் (Sphaeranthus) போன்ற இனங்களில், மஞ்சரிகள் ஒற்றை மலர் கொண்டவையாகும். இவ்வகை ஒற்றை மலர் மஞ்சரிகள் சேர்ந்து, கூட்டுத் தலை (compound–head) மஞ்சரியைத் தோற்றுவிக்கும். சாந்தியம் என்ற செடியில் ஆண் மஞ்சரியும், பெண் மஞ்சரியும் தனித்துக் காணப்படும். பெண் மஞ்சரி இரு மலர்களை மட்டுமே கொண்டது. அஸ்ட்டரேசி மலர்களின் பால் தன்மையின் அடிப்படையில், மஞ்சரியை இரண்டாகக் கொள்ளலாம். பால் தன்மையைப் பொறுத்து, மலர்களை ஒரு தரப்பட்ட பாலின மஞ்சரி (homogamous head) என்பர். எ-டு: வெர்னோனியா, ஜவந்தி, யூபடோரியம். பெருவாரியான சிற்றினங்களின் மஞ்சரியில், பாலினத்தைப் பொறுத்து, இரு வகை மலர்கள் காணப் படலாம். சூரிய காந்தி ஜினியா மஞ்சரிகளில், வட்டத் தட்டு மலர்கள் இரு பால் மலர்களாகவும், கதிர் மலர்கள், பெண் அல்லது மலட்டு மலர்களாகவும் இருக்கும். இவ்வகை மஞ்சரியைப் பல தரப்பட்ட பாலின (heterogamous) மஞ்சரி என்பர். புல்லி வட்டம், செதில்களாகவோ நீண்ட தூவிகள் போன்றோ உருமாறிக் காணப்படும். இவை நிலைத்தவை: கனிகள் காற்று மூலம் பரவப் பயன்படுகின்றன. அல்லி வட்டம், ஐந்து இதழ்கள் கொண்டது; இணைந்தது; ஒழுங்கானது அல்லது ஒழுங்கற்றது. பல தரப்பட்ட பாலின மஞ்சரிகளில் வட்டத் தட்டுச் சிறு மலர்கள், குழல் வடிவ அல்லி வட்டத்தையும், கதிர்ச் சிறு மலர்கள் ஒழுங்கற்ற நா வடிவ அல்லி வட்டத்தையும் பெற்றிருக்கும், சில இனங்களில் இரண்டு உதட்டு (bilabiate) அல்லியமைப்பையும் காணலாம். மகரந்தத் தாள் வட்டம். ஐந்து மகரந்தத் தாள்களைக் கொண்டது. அல்லி இணைந்தும், அல்லி இதழ்களுடன் மாறி அமைந்துமிருக்கும். மகரந்தக் கம்பிகள் தனித்தும், மகரந்தப் பைகள் ஒன்றோடொன்று இணைந்தும் காணப்படும் (syngenesious). சில சிற்றினங்களில் மகரந்தத் தாள்கள், ஒரு கற்றையமைப்பாகக் காணப்படும். மகரந்தப் பைகளின் அடிப்புறத்தில் வால் போன்ற நீட்சிகளும் உண்டு. மகரந்தப் பை இணைப்புகள் மேல் நோக்கியமைந்து மகரந்தச் சேர்க்கையில் பங்கு கொள்ளும். சூலகம். இரு சூலிலைகள்; ஒரு சூலறை கொண்டது. கீழ் மட்டச் சூல் பை, சூல் ஒன்று, கீழ் ஒட்டு முறையில் இருக்கும். சூலகத் தண்டு நீண்டு மகரந்தப் பைகளின் குழல் மூலம் வெளிப்படும். சூலக முடி இரண்டாகப் பிளவு பட்டிருக்கும். சூலகத் தண்டைச் சுற்றி, அடியில் வளையம் போன்ற தேன் சுரப்பிகள் காணப்படும். கனி. சிப்செல்லா (eypsela) என்னும் உலர் வெடியாக் கனியாகும். கனி மிகச் சிறியதாக உள்ளதால், அதையே விதைகள் என்று குறிப்பிடுவதுண்டு. கனிகளில் பல வித நீட்சிகள், தூவிகள், இறகுகள் போன்ற அமைப்புகள் காணப்படுவதால், அவை காற்று அல்லது விலங்குகள் மூலம் பரவ உதவுகின்றன. மகரந்தச் சேர்க்கை. அஸ்ட்டரேசி குடும்பம் அனைத்து இடங்களிலும் பரவிக் காணப்படுவதற்குக் காரணம், அவ்வின மலர்களின் சிறந்த அயல் மகரந்தச் சேர்க்கையும், கனி பரவும் முறையுமேயாகும். மலர்கள் மிகச் சிறியவையாக இருந்த போதும், அவை ஒன்றாகச் சேர்ந்து மஞ்சரியைத் தோற்றுவிப்பதால், பூச்சி ஒரு முறை வரும் போது, அனைத்து மலர்களிலும், மகரந்தச் சேர்க்கை நடக்கும். கதிர்ச் சிறு மலர்கள் பகட்டான அல்லி வட்டத்தாலும், வட்டத் தட்டு மலர்கள் தேன் மூலமாகவும், பூச்சிகளை ஈர்த்து, அவை இனப் பெருக்கத்தில் பங்கு கொள்கின்றன. சூலகத் தண்டின் நுனிக்குச் சற்றுக் கீழே தூவிகள் வட்டமாக அமைந்திருக்கும். அவை மகரந்தத் தூள்களை மேல் நோக்கிக் கொண்டு செல்வதில் பங்கு கொள்கின்றன. சில இனங்களில் காற்று நாட்டம் ஏற்படுவதுண்டு. வகைப்பாடு. அஸ்ட்டரேசி குடும்பம் இரு தொகுப்புகளாகவும், 13 பிரிவுகளாகவும் பிரிக்கப் பட்டுள்ளது. முதல் தொகுப்பை டியூபிஃப்ளோரா (tubiflorae) என்றும், இரண்டாம் தொகுப்பை லிகுலிஃப்ளோரே (liguliflorae) என்றும் பிரித்துள்ளனர். டியூபிஃப்ளோரே தொகுப்பில் 12 பிரிவுகள் உண்டு. இவை பால் குழாய்கள் அற்றவையானாலும், எண்ணெய்க் குழாய்களைக் கொண்டவை. வட்டத் தட்டுச் சிறு மலர்கள் குழல் வடிவ அல்லி கொண்டவை. லிகுலிஃப்ளோரே பிரிவு கொண்ட இவ்வினத்தில் குழாய் உண்டு. அல்லிகள் நா வடிவம் கொண்டவை. இக்குடும்ப இனங்கள் பொருளாதாரச் சிறப்புகளையும் பெற்றுள்ளன. கார்த்தமஸ் டிங்டோரியஸ் (Carthamus tinctorius) இதன் மலர்களிலிருந்து சிவப்பு அல்லது மஞ்சள் சாயம் கிடைக்கிறது. விதைகளிலிருந்து கிடைக்கும் எண்ணெயைக் கொண்டு மெருகுவணம், சவர்க்காரம் போன்றவற்றைத் தயாரிப்பர். சிக்கோரியம் இன்டிபஸ் (Chicorium intypus). இது சமைத்து உண்ணக் கூடிய இலைகளுக்காகவும், வேர்களுக்காகவும் பயிரிடப்படுகிறது. வேரைக் காய வைத்துப் பொடி செய்து, காஃபி பொடியுடன் மணம், சுவைக்காகச் சேர்ப்பர். இதுவே சிக்கரி ஆகும். லாக்டூகா சடைவா (Lactuca sativa). லெட்டூஸ் என்பது வட்டாரப் பெயர். இலைகளில் வைட்டமின், இரும்புச் சத்து ஆகியன மிகுந்து காணப்படுவதால், கீரையைப் போல் சமைத்து உண்ணலாம். கிரைசாந்திமம் சினிரேரிஃபோலியம் (Chrysanthemum cinerarifolium). இது, பைரீத்ரம் என்னும் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கப் பயன்படும் செடியாகும். இது மலேரியா கொசுக்களைக் கட்டுப் படுத்தும். மஞ்சரிகளைப் பொடி செய்தோ, நீர்மம் தயாரித்தோ பயன்படுத்துவர். இதன் நச்சுத் தன்மை, மூட்டைப் பூச்சி, கரப்பான், கொசு முதலியவற்றை ஒழிக்கப் பயன்படுகிறது. ஜப்பான், செக்கோஸ்லோவாகியா ஆகிய இரு நாடுகளின் சாகுபடியில் இது முதலிடம் பெறுகிறது. சென்ட்ராந்தீரம் ஆந்தெல்மின்டிகம் (Centrantherum anthelminticum). இதை, காட்டுச் சீரகம் என்பர். பூச்சி, புழுக்களை ஒழிக்க வல்லது. அனசைக்ளஸ் பைரீத்ரம்(Anacyclus pyrethrum). இதை அக்கிரகாரம் என்பர். இதன் வேரில், பெல்லிடோரின் என்ற வேதிப் பொருள் உள்ளது. இதையே சிலர் பைரீத்ரின் என்பர். பெல்லிடோரின் ஒரு நச்சுப் பொருளாகும். பொதுவாக, மீன், நத்தை முதலியவற்றைப் பாதிக்கும். ஆர்டெமீசியா மேரிடைமா (Artemisia maritima). இது சான்டோனைன் என்ற மருந்து தயாரிக்க உதவும் சிறந்த மணம் கொண்ட செடியாகும். இதைக் கொண்டு வயிற்றிலுள்ள பூச்சிகளை நீக்க முடியும். ஆ. ஆப்சின்தியம் (A. Absinthium). காஷ்மீர், லடாக் பள்ளத்தாக்குகளில் பாதை ஓரங்களில் பெருவாரியாகக் காணப்படும். இப்பாதைகளில் செல்லும் பயணிகளுக்கு நரம்புத் தொடர்பான குறைகள் மற்றும் தலைவலி தோன்றுவதுண்டு. அதற்கு இச்செடியிலிருந்து வரும் எண்ணெயே காரணமாகும். ஆ. வல்கரிஸ் (A.vulgaris). மாசிப் பத்திரி அல்லது மாசிப் பச்சை எனப்படும் இது மருந்தாகப் பயன்படுகிறது. யூபடோரியம் அர்டிசிஃபோலியம் (Eupatorium urticifolium). இந்த அமெரிக்கச் செடியை, பாம்பு வேர்ச் செடி என்பர். இச்செடியை உண்ணும் போது, கால்நடைகளுக்கு நடுக்க நோய் (trembles) தோன்றுவதுண்டு. செடியின் இலைகளை உண்ட கால்நடைகளின் பால் அல்லது இறைச்சியை உட்கொள்ளும் மனிதனுக்கும், பால் நோய் (milk sickness) தோன்றும். இதற்குக் காரணம் பாலிலுள்ள நச்சுப் பொருள்களேயாகும். காய்ச்சினாலும், பாலிலுள்ள நச்சுத் தன்மை மறைவதில்லை. சீனிஷியோ (senicio). இவ்வினச் செடிகள் நச்சுத் தன்மை கொண்டுள்ளமையால், மனிதருக்கும், கால்நடைகளுக்கும் தீமை செய்யும். ஸ்பெரான்தஸ் இண்டிகஸ் (Sphaeronthus indicus) என்ற கொட்டைக் கரந்தை, எக்லிப்டா இண்டிகா (Eclipta indica) என்ற கரிசலாங்கண்ணி, டிரைடாக்ஸ் ப்ரகூம்பன்ஸ் (Tridax procumbens) என்ற நற்றையிலைக் கையாந்தரை. லானியா பின்னேடிஃபிடா (Launiea pinnatifida) என்ற எழுத்தாணிப் பூண்டு, சசூரியா லப்பா (Sussurea lappa) என்ற கோட்டம் முதலியவை சித்த, ஆயுர்வேத, நாட்டு மருத்துவத்தில் பெரிதும் பயன்படும். சாந்தியம் ஸ்ட்ரூமாரியம்(Xanthium strumarium) என்ற மருள் ஊமத்தைச் செடியிலிருந்து மஞ்சள் சாயம் காய்ச்சுவர். இக்குடும்பத்தைச் சேர்ந்த பெருவாரியான இனங்கள் தோட்டங்களில், அழகுக்காக வளர்க்கப் படும். ஹீலியான்தஸ் அனூஸ் (Helianthus annus) என்னும் சூரிய காந்தி, ஆஸ்டர் (aster) என்னும் டெய்சி, டாஜடிஸ் (tegatis) என்னும் மேரி கோல்ட் அல்லது துளுக்காத சாமந்தி, ஜினியா (zinae), செவ்வந்தி (chrysanthemum) முதலியவை தோட்டங்களிலும், பூங்காக்களிலும் வண்ண மலர்களுக்காக வளர்க்கப்படுகின்றன. —தி. ஸ்ரீ கணேசன் நூலோதி. கே.கே. ராமமூர்த்தி, தமிழ்நாட்டுத் தாவரங்கள், தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம், சென்னை, 1979; J. Hutchinson, Evolution and Phylogeny of Flowering Plants, Academic Press, London, 1969; H. M. Lawrence, Taxonomy of Vascular Plants, Oxford, & IBH Publishing Co., New Delhi, 1969.