அசோகர் கல்வெட்டுகள்
acōkar kalveṭṭukaḷ
இந்தியாவில் கிடைக்கும் கல்வெட்டுகளுள் மிகத் தொன்மையானவை.
இந்தியாவில் கிடைக்கும் கல்வெட்டுகளுள் மிகத் தொன்மையானவை. இவரால் வெளியிடப்பட்ட இக்கல்வெட்டுகள் இவர் கால வரலாற்றை அறியப் பெரிதும் உதவிபுரிவன. தாம் தழுவிய புத்த சமயக் கொள்கைகளை மக்களுக்கு அறிவிக்கப் பேரரசின் பல்வேறு பகுதிகளில் பாறைகளிலும் தூண்களிலும் அறக்கட்டளைகளாக வெட்டுவித்தார். இக்கல்வெட்டுகள் பிரா- கிருதம் (Prakrit), கிரேக்கம், அராமிய (Aramic) மொழிகளில் வரையப்பட்டன. பிராகிருத மொழிக்கு, பிராமி (Brahmi) எழுத்துகளும், அராமிய மொழிக்கு கரோத்தி (Kharoshthi) எழுத்துகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிரேக்க, அராமிய மொழிக் கல்வெட்டுகள் இன்றைய பாகிசுத்தான், ஆப்கானித்தான் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. ஆங்காங்கே வழக்கிலுள்ள மொழியும் எழுத்துகளும் பயன்படுத்தப்பட்டமை தனிச் சிறப்பாகும். கி.பி. 1958–ஆம் ஆண்டு அசோகரின் இரு மொழிக் (Bilingual) கல்வெட்டொன்று, ஆப்கானித்தானத்தில் காந்தகாருக்கருகில் சார்-இ-குனா (Shat–i–Kuna) என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டு கிரேக்க, அராமிய மொழிகளில் எழுதப்பட்டது. 1963-ஆம் ஆண்டு காந்தகாரில், அசோகரின் கிரேக்கமொழிக் கல்வெட்டுப் பகுதி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
அசோகரின் கல்வெட்டுகளைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. பாறைக்கல்வெட்டுகள், 2. கற்றூண் கல்வெட்டுகள், பாறைக் கல்வெட்டுகனை (அ) சிறுபாறை ஆணைகள் (Minor Rock Edicts), (ஆ) பாறை ஆணைகள் (Rock Edicts) (இ) குகைக் கல்வெட்டுகள் (Cave Inscriptions) என்று மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். கற்றூண் கல்வெட்டுகளையும் (அ) சிறுதூண் ஆணைகள் (Minor Pillar Edicts), (ஆ) தூண் ஆணைகள் (Pillar Edicts), (இ) தூண் கல்வெட்டுகள் (Pillar Inscriptions) என்று மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவற்றுள் சிறுபாறை ஆணைகளையே முதன் முதலாக வெட்டினார். இக்கல்வெட்டுகள் ‘தேவானாம்பிய’ என்றும் ‘பியதசி’ என்றும் பிராகிருத மொழியில் இம்மன்னனின் பெயரைக் குறிப்பிடுகின்றன. மாசுகி, குச்சரா சிறுபாறை ஆணைகள் (Minor Rock Edicts) மட்டுமே அசோகர் என்ற பெயரைப் பொறிக்கின்றன.
அசோகர் கல்வெட்டுகள் கீழ்க்கண்ட இடங்களில் காணப்படுகின்றன. ஆப்கானித்தானத்தில் பழைய காந்தகார் (Old Kandahar) அருகில்; பாகிசுத்தானத்தில் மான்சகேரா (Mansehra), சாபசுகார் (Shabar-garhi); நேபாளத்தில் பராரியா (Parariya), நிக்லிவா (Nigliva); இராசசுத்தானத்தில் பைரட் (Bairat); உத்தரப்பிரதேசத்தில் பகாபூர் (Bahapur), அக்ராரா (Ahrmum), கால்சி (Kalsi), அலகாபாத்து, மீரத்து, சாரநாத்து; குசராத்தில் கிரீநார் (Girnar); மத்தியப் பிரதேசத்தில் குசரா (Gujarra), உரூப்நாத் (Rupnath), சாஞ்சி; பீகாரில் சசாரம் (Sahasram) பராபர் குன்றுகள் (Barabar Hills), உலூரியா நந்தன்கர் (Lauriya Nandagarh); ஒரிசாவில் செளகதா (Jaugada), தௌலி (Dhauli); கருநாடகத்தில் கவிமாத்து (Gavimath)-மசுகி (Maski), பிரமகிரி (Bramagiri), சடிங்க இராமேசுவரம் (Jadinga Rameswaram), சித்தபுரம்; ஆந்திரப் பிரதேசத்தில் இராசுல மாந்தகிரி (Rojula Mandagiri), எர்ரகுடி (Erragudi).
அசோகரின் கல்வெட்டுகளிலிருந்து புத்தரின் கொள்கைகள், சமய அலுவலர், அரசு அலுவலர், ஆட்சிச் சிறப்பு, அண்டை அரசுகள், நகரங்கள், வெளிநாட்டு அரசர்கள் போன்ற பல விவரங்களைத்
அசோகரின் முதலாம் கற்றூண் கட்டளை-உலூரியா நந்தன்கர் தெரிந்துகொள்ளலாம். அசோகரின் அலுவலர் மகாமாத்திரர் எனவும், சமயப் பரப்பாளர் தர்ம மகாமாத்திரர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். பிரதேசிகர், இராசுகர் (Rajukar), இராசுட்டிரிகர் (Rashtrika) போன்றவர்கள் ஆளுநர்கள் என்பதும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படும் செய்தியாம். இக்கல்வெட்டுகளில் மகதம், உச்சயினி, தட்சசீலம், சுவர்ணகிரி, தோசாலி (தெளலி), சமாபா, ஈசாலம் (சித்தபுரம்) ஆகிய நகரங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. ஆப்கானித்தான் பகுதியில் வாழ்ந்த யவனர்கள், காம்போசர்கள், விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த போசர்கள், இராசுட்டிரிகர்கள், (Rashtrikas) ஆந்திரர்கள், புலிந்தர்கள், நாபகர்கள் (Nubhakos) போன்ற மக்களையும் இக்கல்வெட்டுகள் குறிக்கின்றன. அசோகரது ஆட்சிக்குட்படாத அரசர்களாகச் சோழர், பாண்டியர், கேரளபுத்திரர், சத்தியபுத்திரர் ஆகியோர் குறிக்கப்படுவதாகக் கருதுகின்றனர். மேலும், வெளிநாட்டு அரசர்களாகக் கிரேக்கநாட்டு இரண்டாம் ஆண்டியோகசு தியோசு (கி.மு. 261–246), எகிப்தின் இரண்டாம் தாலமி பிலடெல்பசு (கி.மு. 285–247), மாசிடோனியாவின் ஆண்டிகோனசு கோநாடசு (கி.மு. 277–239), கிரேக்கநாட்டு அலெக்சாந்தர் (கி.மு. 272–255) முதலியோர் குறிக்கப்பட்டுள்ளனர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 195)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fr9sbuey/
தமிழ்“அசோகர் கல்வெட்டுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fr9sbuey/APA
Oliyon Research. (2026). அசோகர் கல்வெட்டுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fr9sbuey/MLA
"அசோகர் கல்வெட்டுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fr9sbuey/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment