இரும்பல் காஞ்சி
irumpal kāñci
புறத்திரட்டு என்னும் தொகை நூலால் பெயரளவில் அறியப் பெற்ற ஒரு தமிழ் நூலாகும்.
புறத்திரட்டு என்னும் தொகை நூலால் பெயரளவில் அறியப் பெற்ற ஒரு தமிழ் நூலாகும். இந்நூலைச் சார்ந்தன என்று அத்தொகை நூலால் அறியப்படும் மூன்று பாடல்களும் (5,601,1475), தக்கயாகப் பரணி உரையால் அறியப்படும் இரண்டு செய்யுட்பகுதிகளும் தவிர வேறொன்றும் இப்போது கிடைக்காமையால், இந்நூல், இதன் ஆசிரியர் பற்றிய செய்திகளை அறிய இயலவில்லை. புறத்திரட்டின் கடவுள் வாழ்த்துப் பகுதியில் ‘நீல நெடுங் கொண்மூ’ எனத் தொடங்கும் ஒரு வெண்பா உள்ளது. இது முருகக் கடவுள் வாழ்த்தாக அமைவதனால், இந்நூலாசிரியர் முருக வழிபாட்டினராதல் வேண்டுமெனக் கருதலாம். புறத்திரட்டில் உள்ள பாடல்கள் வெண்பாக்களாகவும், தக்கயாகப் பரணி உரையில் காணப்படும் பகுதிகள் ஆசிரியமாகவும் இருப்பதால் இந்நூல் ஒரே வகைப்பாவால் அமையாது பல்வகைப் பாக்களால் ஆகியது என்பது தெரிகிறது, புறத்திரட்டுப் பாடல்களுள் ஒன்று ‘வலியறிதல்’ கூறுவதாகவும் (601), மற்றொன்று (1475) தொண்டையர்கோனைப் புகழ்வதாகவும் உள்ளன. இவை புறப்பொருள் தொடர்பினவாக அமைந்துள்ளமையால் இந்நூல் புறப்பொருள் பற்றியதாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
காஞ்சி என்னும் புறத்திணை நிலையாமை உணர்த்துவது என்றும், உட்காது எதிரூன்றுவதனைக் கூறுவது என்றும் இலக்கண நூல்கள் குறிப்பிட்டுள்ளன. காஞ்சித் திணையிலமைந்த பல்வேறு துறைப் பொருளின் மாட்சியினை விளக்குவதாக இந்நூல் அமைந்திருக்க வேண்டும். நூலின் பெயரிலுள்ள இரும், பல் என்றும் சொற்கள் இந்நூலின் பெருமையையும் விரிவையும் உணர்த்துவனவாக உள்ளன. கிடைத்துள்ள பாடலில் தொண்டையர் பற்றிய குறிப்புள்ளமையால், தமிழக அரசியல் வரலாற்றில் இவர்கள் சிறப்புப் பெற்றிருந்த காலத்தில் இந்நூல் தோன்றியிருக்கலாம், சிறந்த கேள்வி ஞானம் பெறாநவர்களுடைய செவித்துளைகள், ‘எய்த அம்பு விழுந்தமையால் ஏற்பட்ட துணைகளேயாகும்’ என்று கேள்விச் செல்வத்தின் சிறப்பினை இந்நூற்பாடலொன்று குறிப்பிடுகிறது. வலியறிந்து செயற்படும் வேந்தன் கடல் நடுவே சென்று போர்செய்தும் வெற்றி கொண்டு, புகழெய்துவான் என்று இந்நூல் இயம்புகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 225)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fpdrfbmw/
தமிழ்“இரும்பல் காஞ்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fpdrfbmw/APA
Oliyon Research. (2026). இரும்பல் காஞ்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fpdrfbmw/MLA
"இரும்பல் காஞ்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fpdrfbmw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment