அதியமான்கள்
atiyamāṉkaḷ
தமிழகக் குறுநில மன்னர்கள், இவர்கள் தகடூரைத் தலைநகராகக் கொண்டு, அதனைச் சூழ்ந்த பகுதிகளை ஆண்டு வந்தார்கள்.
தமிழகக் குறுநில மன்னர்கள், இவர்கள் தகடூரைத் தலைநகராகக் கொண்டு, அதனைச் சூழ்ந்த பகுதிகளை ஆண்டு வந்தார்கள். இன்றைய தருமபுரியே அன்றைய தகடூர். இவர்கள் அதியன், அதிகள், அதிகமான், அதிகைமான், அதியேந்திரன் முதலான பெயர்களாலும் அழைக்கப் பெற்றார்கள். இவர்கள் சேரர் மரபைச் சார்ந்தவர்கள். இவர்கள் சங்காலம் முதல் கி.பி. 13–ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தார்கள். கொங்கு நாட்டின் ஒரு பகுதியை இவர்கள் ஆண்டார்கள். இது தகடூர் நாடு என்று குறிக்கப்பட்டது. சங்க காலத்தில் அதியமான் நெடுமிடல், அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான் பொருட்டெழினி, அதியமான் அஞ்சி, அதியமான் எழினி முதலானோர் ஆண்டனர்.
சங்கத் தொகை நூல்கள் அதியமான் நெடுமான் அஞ்சியின் பெருமையைக் கூறுகின்றன. அதியமான் நெடுமான் அஞ்சி, மலையமான் திருமுடிக்காரியை வென்று, திருக்கோவலூரைக் கைப்பற்றினான் என்று ஔவையாரும் பரணரும் பாடியுள்ளனர். இதனைத் திருக்கோவலூர்ப் பகுதியில் கிடைக்கும் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன மாமன்னன் அசோகனின் கல்வெட்டில் இவர்கள் குறிக்கப் பெறுவதால், இவர்களின் கீர்த்தி புலனாகும்.
சங்க காலத்தை அடுத்து, புகழ்ச்சோழனின் ஆட்சிக் காலத்தில் ஒருவன் தகடூர்ப் பகுதியை ஆண்டதாகப் பெரியபுராணம் கூறும். அதியமான்கள் கி.பி 6–ஆம் நூற்றாண்டளவில், பல்லவரது மேலாண்மையை ஏற்றுக் கொண்டார்கள். இறுதியில் மேலைக்கங்க வேந்தனான துர்விநீதன் கி.பி. 6–ஆம் நூற்றாண்டின் இறுதியில் தகடூர்ப் பகுதியை வென்றான். கி.பி. 7–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதியமான்கள் மீண்டும் பல்லவரின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. தகடூர் நாட்டில் கி.பி. 9–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நுளம்ப பல்லவரின் ஆட்சி ஏற்பட்டது. முதலாம் இராசராசனின் ஆட்சிக்காலம் முதல் இவர்கள் சோழரது ஆதிக்கத்திற்கு உட்பட்டார்கள்.
அதியமான் மன்னருள் அதியேந்திரன் என்று குறிக்கப் பெறும் குணசீலன், ஒரு புகழ்மிக்க அரசன். இவனைப்பற்றி நாமக்கல் குகைக்கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அதியேந்திர விட்டுணுக்கிரகம் என்னும் குடைவரைக் கோயிலை நாமக்கல்லில் குடைவித்தவன் இவனேயாவான். தெளிணியார் என்னும் அதியர் தலைவன் மேலைக்கங்க வேந்தனான சிரீபுருசனுடன் போரிட்டுள்ளான். வலிமதுரன் என்பான், தகடூர் நாட்டின் தலைவனாக மேலைக் கங்க வேந்தனான கோவிசய நரசிம்மவர்மனது கீழ்முட்டுகூர் கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளான்.
அதியர், நெடுங்காலம் சோழருக்கு அடங்கியிருந்து, அவர்தம் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதில் உதவிவந்தனர், படைத்தலைவன் வீரராசேந்திர அதிகைமான் என்பான், முதலாம் குலோத்துங்கனது ஆட்சிக்காலத்தில் போற்றத் தக்கவனாகத் திகழ்ந்தான். இவன் இவ்வேந்தனது இரண்டாம் கலிங்கப் படையெடுப்பில் கலந்துகொண்டு வடகலிங்க வேந்தரை வெற்றி கொண்டான். இப்படைத்தலைவன் விக்கிரம சோழனது காலத்திலும் பணிபுரிந்தான். பொன்பற்றி உடையான் சேந்தன் கோணம்பியான அதியமானும் முதலாம் குலோத்துங்கனது நம்பிக்கைக்குப் பாத்திரமான அரசியல் தலைவன் ஆவான்.ம.இரா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 362)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fjrd2b63/
தமிழ்“அதியமான்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fjrd2b63/APA
Oliyon Research. (2026). அதியமான்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fjrd2b63/MLA
"அதியமான்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fjrd2b63/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment