அண்மை உறுப்புப் பகுப்பாய்வு
aṇmai uṟuppup pakuppāyvu
அண்மை உறுப்புப் பகுப்பாய்வு என்பது (Immediate Constituent Analysis) மொழியியலார் மேற்கொள்ளும் சொற்றொடராய்வு பற்றியதாகும்.
அண்மை உறுப்புப் பகுப்பாய்வு என்பது (Immediate Constituent Analysis) மொழியியலார் மேற்கொள்ளும் சொற்றொடராய்வு பற்றியதாகும். மொழி ஆய்வில் உருபன் நிலையில் ஏற்பட்டிருந்த வளர்ச்சி, சொற்றொடர் நிலையில் நீண்ட காலமாக இல்லாமலே இருந்தது எனலாம். எனினும், உருபன்களை வகைப்படுத்தி, வரிசையாக அடுக்கினால் மட்டும் உருபுக் கட்டுமானத்தைப் புரிந்து கொள்ள முடியாது. இதனை உணர்ந்த பலரும், சொற்றொடர் ஆய்விற்கான முயற்சியில் ஈடுபட்டனர். உருபன்களை இனங்காண்பதன் மூலம் மட்டுமே, ஒரு மொழியின் கட்டமைப்பைப் புரிந்து கொள்ள முடியுமானால், அகராதியின் துணைகொண்டே ஒரு மொழியைப் புரிந்து கொள்ளலாம். ஆயின், உண்மை அஃதன்று.
புளும்பீல்டு (Bloomfield) என்பார் சொற்றொடர் ஆய்வு முறையாக, அண்மை உறுப்புகள் பற்றிய கோட்பாட்டை 1933–இல் வகுத்துத் தந்தார். எனினும், இக்கோட்பாட்டை இன்னும் தெளிவாகவும் விரிவாகவும் ஆக்கித் தந்தவர்கள், அவருக்குப் பின்னர் வந்த கட்டமைப்பு (Structural) மொழியியல் கோட்பாட்டைச் சார்ந்த அறிஞர்களே ஆவர்.
இக்கோட்பாட்டை விளக்கப் புகுந்த புளும்பீல்டு, ஒரு சொற்றொடரை இரண்டாகப் பிரித்து, அவற்றை, மேலும் இரண்டிரண்டாகப் பிரித்துக் காட்டி, அவற்றுக்கிடையே காணப்படும் தொடர் முறை உறவை விளக்கியுள்ளார். எடுத்துக்காட்டாக, “வெள்ளைப் புறா வேகமாகப் பறந்தது” என்னும் சொற்றொடரை, “வெள்ளைப்புறா” என ஒரு தொடராகவும், “புறா பறந்தது” என மற்றொரு தொடராகவும் பிரிக்கலாம். மீண்டும், இவற்றை, “வெள்ளை” “புறா” எனவும், “வேகமாக” “பறந்தது” எனவும், இரண்டிரண்டாகப் பிரிக்கலாம். கொடிவழி முறையில் இதனைக் கீழ்க்கண்டவாறு விளக்குதல் கூடும்.
இங்ஙனம் பிரிக்கும்போது, எவரும் “வெள்ளை புறா வேகமாக பறந்தது” எனப் பிரிப்பதில்லை. ‘வெள்ளை’ என்னும் உருபு ‘புறா’ என்பதன் அடையாகவே செயற்படுகிறதென்பதும், அவை இரண்டும் சேர்ந்த தொடரே இங்கு எழுவாயாகச் செயற்படுகிறது என்பதும் தாய் மொழியாளர் எவரும் உள்ளுணர்வின் மூலம் அறிந்த செய்தியாகும். எனவே, உருபன்களை வரிசையாக, ஒரு சங்கிலித் தொடர்போலக் கட்டுவதனால் மட்டுமே பொருள் பொதிந்த ஒரு சொற்றொடர் ஆக்கப்படுவதில்லை என்பதும், தொடர் முறை உறவே இதற்குக் காரணம் என்பதும் இதனால் புலப்படுத்தப்படுகின்றன.
‘வெள்ளைச் சட்டை அணிந்த அந்தப் பையன் வேகமாகக் கல்லூரிக்குப் போகிறாள்’ என்ற மற்றொரு சொற்றொடர், இதே அடிப்படையில் ‘வெள்ளைச் சட்டை அணிந்த அந்தப் பையன்’, ‘வேகமாகக் கல்லூரிக்குப் போகிறான்’ என இரண்டாகப் பிரிக்கப்படலாம். இங்ஙனம், இதுவரையிலும் ஒருவர் பேசியறியாத அல்லது கேள்விப்பட்டிராத சொற்றொடர் ஒன்றை ஒரு தாய் மொழியாளர் புதிதாகக் கேட்டாலும், அவரால் அதனைத் தொடர்முறை உறவின் அடிப்படையில் இரண்டிரண்டாகப் பிரிக்க முடியும். இதற்குக் காரணமாக அமைவது, ஒவ்வொரு மொழியிலும் காணப்படும் சில அடிப்படையான சொற்றொடர் வாய்பாடுகளே ஆகும். இவ்வடிப்படை வாய்பாடுகளின் மூலம் எந்தப் புதிய சொற்றொடரையும் புரிந்து கொள்ள முடியும். உண்மையில், புதிய சொற்றொடர்கள் எல்லாமே அடிப்படை வாய்பாடுகளின் ‘விரித்தல்’ அல்லது ‘மாற்று’களேயாகும். இவ்‘விரித்தல்’ அல்லது ‘மாற்று’ என்பதும், அண்மை உறுப்புகள் ஆய்வின் மற்றொரு அடிப்படைக் கோட்பாடாகும்.
சொற்றொடர்கள் தம் தொடர் முறை உறவின் அடிப்படையில் இரண்டிரண்டாகவே பிரிக்கப்படுவது நோக்கத்தக்கது. இதனை ‘இருமைப் பகுப்பு’ என இவ்வாய்வு குறிப்பிடுகிறது. தொடர்முறை உறவு இவ்வாறு இரண்டிரண்டாகவே அமையமுடியும் என்பதனை இது வலியுறுத்துகிறது. மேலும் பிரிக்கப்படும் உருபுகள் அனைத்தும் அடுத்தடுத்தே அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது அவற்றின் ‘அண்மை’க் கோட்பாட்டைச் சுட்டுகிறது.
தொடர்முறை உறவு, இருமைப்பகுப்பு, விரித்தல் அல்லது மாற்று மற்றும் அண்மைநிலை என்பவை அண்மை உறுப்பாய்வின் அடிப்படைக் கோட்பாடுகளாகக் கருதப்படுகின்றன. பிரிக்கப்படுகின்ற உருபன்களுக்கோ தொடர்களுக்கோ எந்தப் பெயரும் தரப்படுவதில்லை என்பதும் குறிக்கத்தக்கது.
இவ்வடிப்படையில் பிரிக்கப்படும் அண்மை உறுப்புகள், மயக்க அண்மை உறுப்பு, பன்மை அண்மை உறுப்பு, தொடரா அண்மை உறுப்பு, ஒத்தியல் அண்மை உறுப்பு எனப் பலவாறாக வகை செய்யப்பட்டுள்ளன. இவ்வகைப்பாடுகளே இவ்வாய்வின் குறை நிறைகளையும் தெளிவாகச் சுட்டுகின்றன.
மயக்கம் தரும் சொற்றொடர்களை இவ்வாய்வின் மூலம் வேறுபடுத்திக் காண்பது எளிது. எடுத்துக்காட்டாக, ‘பழைய புத்தகக்கடை’ எனும் சொற்றொடரில் காணப்படும் மயக்கத்தினைக் கீழ்க் கண்டவாறு பிரிப்பதன் மூலம் தவிர்க்கலாம்.
எனினும், ஒரே பகுப்பின் மூலம் இம்மயக்கம் தவிர்க்கப்பட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘பழைய’ என்னும் உருபன் எப்பெயருக்கு அடையாக வந்துள்ளது என்ற இலக்கண உறவு தெரிந்தாலன்றி, இத்தீர்வு இயலாத ஒன்றாகிவிடும். ஆனால், புளூம்பீல்டு முதலில் வகுத்துத் தந்த கோட்பாட்டின்படி இலக்கண உறவுகள் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. உருபன்கள் மட்டுமே பிரிக்கப்படுகின்றன. ‘இருமைப் பகுப்பு’ என்ற கோட்பாடும் அனைத்து நேரங்களிலும் செயல் பட முடியாது என்பதனைப் பன்மை அண்மை உறுப்பு உணர்த்துகிறது. ‘சேர, சோழ, பாண்டியர்’ வந்தனர் என்னும் தொடரைப் பின்வருமாறு மட்டுமே பிரிக்க முடியும்.
சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்றுமே இங்கு, தலைப் பெயர்களாகும். ஒத்த நிலையிலேயே அவை எழுவாயாகச் செயற்படுகின்றன. இருமைப் பகுப்பு இங்குச் செயல்படவில்லை.
தொடரா அண்மை உறுப்பும் ஒரு வகையில் இவ்வாய்வில் சிக்கலைத் தருவதாகும். எடுத்துக் காட்டாக, ‘எல்லாப் பையன்களும் வந்தார்கள்’ என்ற தொடரில் ‘எல்லா’ என்பதும், ‘உம்’ என்பதும் அண்மை உறவுகள் கொண்டிருப்பினும் அவை அண்மை உறுப்புகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இருமை அல்லது பன்மை நிலையில் சொற்றொடரைப் பகுப்பதன் மூலம் மட்டுமே அதனைப் பற்றிய முழு உண்மைகளையும் பெற முடியாது. இத்தகு ஆய்வின் மூலம் வெளிக் கொணர முடியாத பல இலக்கண உறவுகள் இல்லாமல் இல்லை. எடுத்துக்காட்டாக, செய்வினை – செயப்பாட்டு வினைத் தொடர்களுக்கு இடையே உள்ள உறவு ஒரு போதும் இவ்வாய்வின் மூலம் புலப்படாது. ஏனெனில் இவ்வாய்வு ஒரு நேரத்தில் ஒரு சொற்றொடரையே பகுப்பிற்கு எடுத்துக் கொண்டு, அதனுடைய உறுப்புக்களுக்கிடையே காணப்படும் உறவை மட்டுமே வெளிக் கொணர்கிறது. ஆனால், ‘நான் பால் குடித்தேன்’ எனும் தொடரும் ‘பால் என்னால் குடிக்கப்பட்டது’ எனும் தொடரும் அடிப்படையில் ஒன்றேயாகும். புறநிலையில் காணப்படும் இவ்வேறுபாடுகளையும் அவற்றிற்கிடையே காணப்படும் உறவுகளையும் அண்மை உறுப்புகள் ஆய்வு, புலப்படுத்த முடியாது, இது போன்ற உறவுகள் தாய் மொழியாளரது உள்ளுணர்வின் மூலம் தெரியவந்துவிடும் என இவ்வாய்வு ஊகித்துக் கொள்கிறது. ஆனால் அப்படிப்பட்ட ஊகங்கள் அறிவியல் சார்ந்த ஓர் அணுகு முறைக்கு ஒத்துவரா.
இத்தகைய ஆய்வு, ஒரு சொற்றொடரின் உறுப்புகளை இனம் காண்பதிலும் வகைப்படுத்துவதிலுமே தன்னுடைய முழுக்கவனத்தையும் செலுத்துகிறது. ஆனால் அவற்றின் செயற்பாடுகளைக் கவனத்தில் கொள்வதில்லை. இப்படிப்பட்ட ஓர் அணுகுமுறை புளும்பீல்டுக்குப் பிற்பட்ட காலத்தில், அதாவது சோம்சுகியின் (N. Chomsky) காலம் வரையிலும் மேலோங்கி இருந்தது. இவ்வாய்வின் இரண்டாம் கட்டமாக, அடைப்புக் குறியாக்கம், (Bracketting) பெயரிட்ட அடைப்புக் குறியாக்கம் (Labelled-bracketting) என்ற வேறுபாடு வளர்ந்தது. சொற்றொடரை வெறும் அண்மை உறுப்புகளாக மட்டுமே பிரிப்பதை நோக்கமாகக் கொண்ட முதல் வகையினால் பயன் ஏதும் இல்லை என்பதனால், அவற்றின் இலக்கண உறவுகளை விளக்கும் இரண்டாம் வகையான ‘பெயரிட்ட அடைப்புக் குறியாக்கம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் முதலில் குறிப்பிட்ட சொற்றொடர் பின் வருமாறு பிரிக்கப்படும்.
மொழி ஆய்வில் உறுப்புகளைப் பிரிப்பது, அவற்றை இனம் கண்டு வகைப்படுத்தும் எந்த முயற்சிக்கும் முன்னரே நிகழவேண்டும் என்பது கூட்டமைப்பு மொழியியலின் ஓர் அடிப்படைப் போக்காக அமைந்திருந்ததாலேயே, அடைப்புக் குறியாக்கம் என்ற முதல் வகை, தொடக்கக் கட்டத்தில் மேலோங்கி இருந்தது என்பதனையும் நினைவிற் கொள்ள வேண்டும்.
பிரிக்கப்பட்ட உறுப்புகளுக்குப் பெயரிட்டுவிட்டோமானால் முதல்வகைப் பகுப்பான எளிய பிரிப்பாய்விலிலிருந்து அது வேறுபட்டுவிடும் என்பது மட்டுமல்லாமல், அத்தகைய ஆய்வு மரபாகப் பின்பற்றப்படும் ‘இலக்கணக் குறிப்புகள்’ கூறும் ஆய்விற்கு மிகவும் நெருங்கியதாகவும் ஆகிவிடும். இத்தகைய ஆய்வு, ‘தொடர் அமைப்பு இலக்கணம்’ என இன்று குறிக்கப்படுகிறது. இவ்வாய்வு எல்லா உறுப்புகளுக்கும் அவை பிரிந்து வரும் கணுக்களுக்கும் (Nodes) பெயரிட்டு இலக்கண உறவைப் புலப்படுத்த முடியும் என்று நம்பினாலும், பெயரிட முடியாத சில கணுக்கள் இவ்வாய்வுப் பகுப்பிலும் இல்லாமலில்லை. இத்‘தொடர் அமைப்பு’ இலக்கணத்தின் பல வடிவங்கள், இன்று நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை, ஆலிடே (Holiday) பைக் (Pike), இலாம்பு (Lamb) ஆகியோரின் இலக்கணங்களாகும். இவை அனைத்தும், மொழி உறுப்புகள் பெரும்பாலும் ஒரு சங்கிலித் தொடராக அமைந்திருப்பதாகவே எண்ணுவதனால் இவற்றை அண்மை உறுப்புகள் ஆய்வின் வளர்ச்சியாகவே கருதலாம். சோம்சுகியின் மாற்றிலக்கணக் கோட்பாடே மிகுந்த வேறுபாட்டைக் கொண்டது எனலாம்.ஜெ.நீ.
துணை நூல்கள்
Bloomfield, L., Language, New York, 1933. Crystal, David, Linguistics, Pelican, Harmondis-worth, 1971.
Hockett, C.F., “A Course in Modern Linguistics,” The Macmillan Company, New York, 1958.
Lyons, John., “An Introduction to Theoretical Linguistics”, Cambridge University Press, 1968.
Palmer, Frank Grammer, Pelican, Harmonds worth, 1971.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 302)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f76k5sd7/
தமிழ்“அண்மை உறுப்புப் பகுப்பாய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f76k5sd7/APA
Oliyon Research. (2026). அண்மை உறுப்புப் பகுப்பாய்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f76k5sd7/MLA
"அண்மை உறுப்புப் பகுப்பாய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f76k5sd7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment