சாலைப் பொருள்கள்
cālaip poruḷkaḷ
கல், மணல், சிமெண்ட், தார், பிட்டுமன் முதலிய இணைப்புப் பொருள்கள், சாலைப் பொருள்கள் (road materials) ஆகும்.
கல், மணல், சிமெண்ட், தார், பிட்டுமன் முதலிய இணைப்புப் பொருள்கள், சாலைப் பொருள்கள் (road materials) ஆகும். கல், மணல் ஆகியவை அடிப்படைப் பொருள்கள் ஆகும். இவை, சாலையில் ஏற்படும் தகைவுகள் அனைத்தையும் தாங்கக் கூடியவை; தேய்மானத்தைத் தடுக்கக் கூடியவை. இவை ஒன்றோடு ஒன்று இணைந்து, இறுக்கம் அடைந்த நிலையே சாலை அமைப்பைச் சிறப்படையச் செய்யும். ஊர்திகளின் பளு, உராய்வு, மழை, வெயில் ஆகியவற்றை எதிர் கொள்ளும்.
கல்லும், மணலும் பாறைகளிலிருந்தும், நிலங்களிலிருந்தும் இயற்கையாகக் கிடைக்கக் கூடியவை. குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார், மைக்கா, கால்சைட், டோலமைட் முதலிய மூலக் கூறுகள் இணைந்து பாறைகள் உருவாகின்றன. பாறைகளில் அனற் பாறை (igneous rocks), படிவுப் பாறை (sedimentary rocks), உருமாற்றப் பாறை (metamorphic rock) என மூன்று வகையுண்டு. முதல் வகை, புவிக்குக் கீழே மிகு வெப்பத்தில் இணைந்த மூலக் கூறுகள் படிப்படியாகக் குளிர்ந்து, இறுக்கம் அடைவதால் உருவாகிறது. இரண்டாம் வகை, முன்னரே இருந்த பாறைக் கற்களின் அரிப்பால் உதிர்ந்து, மீண்டும் வேறு இடங்களில் படிந்து, மணல் பாறையாக உருவாகும். மூன்றாம் வகை, மிகு வெப்பம், அழுத்தம், வெட்டுத் தகைவு, மின் அசைவு ஆகியவற்றால் இறுக்கமடைந்து உருவாகும்.
சரளை அல்லது உருளைக் கற்கள். இவை சிறிய சீரற்ற அளவுகளில், நீர்ப் பாதைகளில் காணப்படும். நீரோட்டத்தால் பல இடங்களிலிருந்தும், ஆற்றுப் படுகைகளுக்கு வந்து சேரும். ஒன்றோடு ஒன்று பிணையும் தன்மை குறைவானாலும் வேலை செய்ய ஏற்றவை. ஆகையால், கற்காரைக் கலவைக்கு இவை பயன்படும்.
மணல். நுண் கற்கள் எனப்படும் இவை, பாறைகளிலிருந்து உதிர்ந்தவை. ஆறு, கடற்கரைகளில்கிடைக்கும் நல்ல மணல், கூர்மையான கோணங்களுடன் ஒரே அளவில் தூசி, களிமண் இல்லாமல் நீடித்து உழைக்க ஏற்றது.
லேட்டரைட். இது இரும்புத் தாது மிகுதியும் கலந்த களிமண் கல்லாகும். மர நிறத்திலும், சிவப்பு நிறத்திலும் காணப்படும். எளிதாக வேலை செய்ய ஏற்றது. ஈரத் தன்மை உடையது. சில காலத்தில் கடினத் தன்மை அடையக் கூடியது.
கன்கர். இது களிமண், மணல் சேர்ந்த தூய்மையற்ற சுண்ணாம்புக் கல் ஆகும். சாம்பல் நிறத்தில் காணப்படும் இதில் மென்மையான, இறுக்கமான வகை உண்டு.
முர்ரம். இதில் இரும்புத் தாது, உருளைக் கல், சிவப்புக் களிமண் ஆகியவை இணைந்து காணப்படும். பெரும் பாறைகள் கால நிலை மாற்றங்களால் சிதறுவதால், இவை உருவாகின்றன.
கடினக் கற்கள். இவை சாலைகளின் மேற்பரப்பில் பயன்படுகின்றன.
மென்மையான கற்கள். முர்ரம், கன்கர், லேட்டரைட் போன்றவை மென்மையான கற்கள்; இவை சிக்கனச் செலவில் கட்டப்படும் சாலைகளின் அடிப்பரப்பில் நிரப்பப் பயன்படுகின்றன.
செயற்கைக் கற்கள். இரும்பை உருக்கும் கொதி கலனின் கழிவுப் பொருள்களிலிருந்து செயற்கைக் கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் அலுமினிய சிலிக்கேட்டும், மக்னீசியமும் மிகுந்து காணப்படும். நல்ல கற்கள் பின்வரும் குணங்களுடன் இருக்க வேண்டும். அவை கடினத் தன்மை, ஒன்றோடு ஒன்று உராயும் போது, உராய்வைத் தாங்கும் நிலை, பளுவைத் தாங்கும் வலிமை, நொறுங்கும் ஆற்றலைத் தாங்கும் வலிமை, சீரான நுண் பகுதிகளுடன் தேய்மானத்தை எதிர்க்கும் ஆற்றல், நெடுங்காலம் பயன்படும் தன்மை, மிகு ஒப்படர்த்தி, பிணைப்பு ஏற்படும் வகையில் கோணங்கள், உடைந்த போதும் தானே இறுக்கமடையக் கூடிய வலிமை முதலியன.
சிமெண்ட். கல், மணல் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்க, சிமெண்ட் பயன்படுகிறது. நீருடன் சேர்ந்து வேதி மாற்றம் ஏற்பட்டுக் கல், மணல், சிமெண்ட் இணைந்து ஒரே பொருளாக மாறிச் சாலையில் கற்காரைத் தளமாக அமையும். நீண்ட கால உழைப்பு, அதிக பளு தாங்கும் தன்மை, மிகக் குறைவான தேய்மானம் ஆகியவற்றைக் கொண்டது.
தார் மற்றும் பிட்டுமன். இந்த இணைப்புப் பொருள்கள், பிசுபிசுப்புத் தன்மை உடைய ஒட்டும் தன்மை மிகுந்த பெட்ரோலியக் கழிவுப் பொருள்களாகும். ரப்பர் பால் போன்று இளகி இருக்கும். நீர்ம நிலையிலும், திண்ம நிலையிலும் இருக்கக் கூடியது. ஹைட்ரோகார்பன் மிகுதியாக உள்ளது. கார்பன் டை சல்பைடில் கரையக் கூடியது. பெட்ரோலிய மூலப் பொருளில், எரி வளிம எண்ணெய், மசகு எண்ணெய் முதலியவற்றைப் பிரித்து எடுத்த பின்னர், எஞ்சிய பொருளிலிருந்து கிடைப்பதே பிட்டுமன் எனப்படுவது. இதனுடன், எளிதில் ஆவியாகக் கூடிய ஒரு கரைப்பான் கலக்கப்பட்டுச் சாலை அமைக்கும் போது பயன்படுத்தப்படுகிறது. கரைப்பானின் தன்மையால் பிட்டுமன்னுடன் இணைந்து இளகிப் பின்னர், ஆவியாகி விடுவதால் இறுக்கம் அதிகரித்து விடுகிறது.
பிட்டுமன் நீர்மம். இது பால் போல் இருக்கும்; பிட்டுமன், நீர் ஊக்குவிக்கும் நீர்மம் ஆகியவற்றை அதி வேகக் கலவை எந்திரத்தில் இட்டுத் தயாரிக்கப் படுகிறது. இது மூன்று வகைப்படும். முதல் வகை, குளிர் நிலையில் உடையக் கூடியது. இரண்டாம் வகை, ஓரளவு நீர்மம் சேர்ந்தது; பழைய சாலைகளைச் செப்பனிட இவ்வகை பயன்படுகிறது. மூன்றாம் வகை, வேதி, இயற்பியல் நிலைப்புத் தன்மை மிகுந்தது. குளிர் காலத்தில் சாலை அமைக்க இது ஏற்றது. ஏனெனில், குளிரிலும் உலர்ந்த பின்னரும் உடையாதது.
தார். இது கறுப்பு நிறமுடைய பிசுபிசுப்பான நீர்மம்; ஒட்டும் தன்மை மிகுந்தது. புவிக்கு அடியில், எரிந்த மரம், கரி, மென்மையான பாறை ஆகியவற்றின் கலப்பால் ஆனது. மிகுந்த வெப்பத்தைத் தாங்கக் கூடியது. இறுக்கமடைய நீண்ட நாள் எடுத்துக் கொள்ளும். நீண்ட நாள் உழைக்கக் கூடியது. நிலக்கரியிலிருந்து எண்ணெய், நாஃப்தலீன் போன்றவற்றைப் பிரித்த பின்னர், தார் உருவாகிறது.
ரப்பர் பிட்டுமன். நீர்ம நிலையில் உள்ள ரப்பர் பாலுடன் பிட்டுமன் இணைத்துத் தயாரிக்கப்படுகிறது. ஒட்டும் தன்மையும், நிலைப்புத் தன்மையும் மிகுதியாக உடையது. மென்மையும், அதிர்ச்சி தாங்கும் தன்மையும் உடையது. வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் குறைவாக உடையது. கீறல் விழுவதைத் தடுக்கக் கூடியது. —ஏ. எஸ். எஸ். சேகர் நூலோதி. Kenneth B. woods, Highway Engineering Hand Book, First Edition, McGraw Hill Book Company, New York, 1960.
<!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு முடிவுற்றது. அடுத்த பக்கத்தில் புதிய தலைப்பு ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 160)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f3utphr6/
தமிழ்“சாலைப் பொருள்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f3utphr6/APA
Oliyon Research. (2026). சாலைப் பொருள்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f3utphr6/MLA
"சாலைப் பொருள்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f3utphr6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment