இனக்குழு உயிரியல்
iṉakkuḻu uyiriyal
இருபதாம் நூற்றாண்டில் முகிழ்த்த புதிய அறிவியற் பிரிவுகளுள் ஒன்றே இனக்குழு உயிரியல், அறிவியல் முன்னேற்றம் கொண்டிராத ஆதிக்குடிகள், பழங்குடிகள், நாட்டுப்புற மக்கள் முதலானோர் தம்மைச் சூழ்ந்துள்ள உலக உயிரினங்களை வகைப்படுத்தி இந்த உயிரினங்களின் பால் அவர்கள் கொண்டிருக்கும் அறிவினையும் மதிப்புகளையும் பிணைப்புகளையும் அறிவதே இத்துறையின் கருவாகும். இனக்குழு உயிரியல் (Ethnobiology) மனித சமுதாயத்திற்கும் தாவரங்கள், விலங்குகள் முதலான உயிரினங்களுக்கும் இடையிலான தொடர்பினைக் குறித்து ஆராயும்பொருட்டு இனக்குழுத் தாவரவியல், இனக்குழுவிலங்கியல் ஆகிய இரு உட்பிரிவுகளைக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு சமூகமும் வெவ்வேறு முறைகளில் உயிரினங்களை வகைப்படுத்தி வைத்திருந்தாலும் அடிப்படையில் சில ஒற்றுமைகள் காணப் பெறுவதும் உண்டு. இந்த ஆய்வுகளை அறியும் இனஉயிரியலை ‘நாட்டார் உயிரியல்’ (Folk Biology) என்றும் இவர்கள் உயிரினங்களை வகைப்படுத்தும் முறையை ‘நாட்டார் வகைப்பாட்டியல்’ என்றும் மானிடவியலார் குறிப்பிடுவர்.
இனக்குழுத் தாவரவியல்
ஒரு சமூகம் தன் சுற்றுப்புறச் சூழலில் உள்ள தாவரங்களை வகைப்படுத்தி வைத்துள்ள முறைமைகளைப் பற்றி விளக்கி ஆய்வதை இனக்குழுத் தாவரவியல் எனக் கூறலாம். ‘இனக்குழுத் தாவரவியல்’ (Ethnobotany) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தியவர் அமெரிக்க நாட்டின் பொருளியல்சார் தாவரவியல் (Economic Botany) துறையில் சிறந்து விளங்கிய ஆர்சு பெர்கர் (Harsh Berger) என்பவர். ஒவ்வோர் இனக்குழுவின் (Ethnic Group) வாழிடச் சூழலில் காணப்படும் தாவரங்களையும், அவற்றின் வரலாற்றுக்கால நிலைபேற்றையும் (Historical Existence) பொருளாதாரப் பண்பாட்டையும், அச்சூழலின் மக்கள் அத்தாவரங்களின்பால் கொண்டிருக்கும் மதிப்புகளையும், மருத்துவப் பயன்பாடுகளையும், நாட்டின் பொருளாதாரத்தில் அவற்றின் பங்கினையும் பற்றி விவரமாக அறிந்து கொள்ள இனத்தாவரவியல் முற்படுகிறது. மருத்துவத்திற்கு உதவும் தாவரங்கள், நச்சுத் தன்மையுள்ள தாவரங்கள் எவையெவை என மக்கள் அறிந்து வைத்திருப்பதையும் இனக்குழுத் தாவரவியல், இன்று வரை சிறப்புப் பிரிவாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்துணைப்பிரிவு மருத்துவத் தாவரவியல் (Medical Botany) எனவும் சொல்லப்படுவதுண்டு. ஆராயப்படும் சமூகம் வேளாண்மைத் தொழிலைத் தனது வாழ்வுக்கு ஆதாரமாகக் கொண்டுள்ளது எனின், அவர்களின் உழவுமுறை, வேளாண்மை அறிவியல், தானியம், காய்கறி, கால்நடைத்தீவனம், மலர்ச்செடி வளர்ப்பு, நெசவு சார்ந்த விவசாயம், ஏதேனும் தனி வகை அல்லது சிறப்பு வகைப் பயிர்களை விளைவிக்கும் முறைகள் ஆகியவையும் இனக்குழுத் தாவரவியலின் பகுதிகளாகும். அவற்றோடு நெசவுக்குத் துணையான தாவர இழைகளின் பயன்கள் என்பது குறித்துப் பார்க்கும்போது, புறப்பட்டையின் மூலம் செய்யப்படும் பொருள்கள், கப்பல் கட்டுதலில் பயன்படும் பொருள்கள், முடிச்சுகள், பாய், கூடை பின்னுதல், நெசவு நெய்யப்பட்ட வகை, நெய்யப்படாத துணி வகை, காகிதத் தொழில் போன்றவை குறித்தும் ஆராயப்படும். முறைப்படுத்தப்பட்ட இனக்குழுத் தாவரவியல் ஆராய்ச்சி அண்மைக் காலத்தியதுதான் என்றாலும், இதற்கு முன் வந்துள்ள பல வெளியீடுகள் இனக்குழுத் தாவரவியலின் சிறப்புத் தன்மையை உணர்த்துவனவாய் அமைந்துள்ளன. ஆதிக்குடிகளோடு தொடர்புற்ற இனக்குழுவியலார், வனவிலங்குத் துறையினர், பயணிகள் முதவானோர் தரும் சில தரவுகள் இனக்குழுத் தாவரவியலுக்கு அடிப்படைத் தரவுகளாக அமைகின்றன. இனக்குழுத் தாவரவியல் ஆராய்ச்சியில் கள ஆய்வு சிறந்த இடம் பெறுகிறது. இவ்வாய்விற்குத் தகவல் கொடுப்பவர் மிக்க அறிவுள்ளவராகவும் நம்பத்தக்கவராகவும் மிகைப்படுத்தாதவராகவும் இருக்க வேண்டும். ஒரு தாவரத்தில் பயன்படும் பகுதிகள், அவற்றைச் சேகரித்தல், செப்பமிடல், மருந்துத் தயாரிப்பு, மருந்தளவு, மருந்து இடுதல் குறித்தும் தரவு சேகரிக்கப்படுகிறது. இனக்குழுவினர் தாவரங்களுக்குத் தங்கள் மொழியில் வழங்கி வரும் பெயர்களையும் பதிவு செய்து கொள்கின்றனர். தாவரங்களின் வட்டாரப் பெயர்களே (Local names) சில சமயங்களில் தாவர உருவமைப்பியல் (Morphology), வாழுமிடம் முதலானவற்றை விளக்குவனவாகவும் அமைவதுண்டு.
இத்துறைக்கான தரவு சேகரிக்க, வெளியிடப்படாத சில பண்டைய இலக்கியங்களும் ஓலைச் சுவடிகளும் உதவும். எடுத்துக் காட்டாக இந்தியாவில் வேதகால இலக்கியங்களில் இனக்குழுத் தாவரவியல் ஆராய்ச்சிக்குத் தேவையான பல செய்திகள் அடங்கியிருக்கின்றன. பழைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல தாவரங்களைப் பற்றி இன்றளவும் நன்றாகத் தெரிந்து கொள்ள முடியாதவையும் உண்டு (எ–டு. கற்பக மரம்). இனக்குழுத் தாவரவியலாராய்ச்சி, ஆராயப்படும் சமூகம் தாவரத்தைத் தொன்றுதொட்டு மருத்துவத்திற்குப் பயன்படுத்தும் முறையையும் அறியச் செய்கிறது. இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளாக இனக்குழுத் தாவரவியல் ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனினும், அது இன்னும் விரைவாகச் செயற்பட வேண்டும். இந்தியத் தாவரவியல் மதிப்பாய்வுத் துறை (Botanical Survey of India), இனக்குழுத் தாவரவியல் ஆராய்ச்சியில் மிகச் சிறந்த இடத்தைப் பெறுகின்றது. இனக்குழுத் தாவரவியல் என்னும் இப்புதிய ஆராய்ச்சிப் பிரிவு, முழுமையாகவும் முறைப்படியும் ஆராயப்படுமானால், அது இவ்வியலுக்கு மட்டுமன்றி, இனக்குழுவியல் (Ethnography), வரலாறு, தொல்லியல், மானிடவியல், தாவரப் புவியியல் (Plant Geography), தாவரவியல், மருத்துவத் தாவரவியல், மருந்தியல் (Pharmacology), தாவரக்கூறாய்வு வேதியியல் (Phytochemistry) போன்ற துறைகளிலும் பல பயன்மிக்க அறிவினைப் பெற இயலும்.
இனக்குழு விலங்கியல்
இத்துறை மனித சமுதாயத்திற்கும் விலங்குகளுக்குமிடையிலான தொடர்பு குறித்து அறியும் ஓர் அறிவியற் பிரிவாகும். இனக்குழு விலங்கியல் (Ethnozoology) என்னும் இப்பிரிவு நாட்டுப்புற விலங்கியல் (Folk zoology) என்னும் சொல்லப்படும்.
ஒவ்வொரு சமுதாயத்திலும் மக்கள் பாலூட்டிகள், பறவைகள், நீர்வாழ்வன, நிலத்தில் வாழ்வன, மீன்கள், பூச்சிகள் போன்ற விலங்குகளின்பால் வெவ்வேறு வகையான தொடர்பினைக் கொண்டிருப்பர். மனிதனின் சமூக, பொருளாதார, சமய வாழ்க்கையில் விலங்குகளின் பிணைப்பு இன்றியமையாததாகக் காணப்படுகிறது. இது, பொதுவாக ஆதிக்குடிகளிடையேயும் நாட்டுப்புற மக்களிடையேயும் அவர்கள் மரபுவழியில் கொண்டிருக்கும் பிணைப்பினை அவர்களின் ஒவ்வொரு செயற்பாட்டாலும் அறியலாம். அவர்கள் விலங்குகளைத் தெய்வத் தன்மையுற்றனவாகவும் குலக்குறிச் சின்னமாகவும், வழிபடும் மரபாகவும் கொண்டிருக்கின்றனர். விலங்குகள் பொருளாதாரச் செயற்பாடுகளில் முதன்மையாகப் பங்கேற்பதால் அவற்றைத் தம் நண்பராகவும், எண்ணிப் பாடல் புனைவதுமுண்டு. நூயர் (Nuer) பழங்குடியினர் தத்தம் பிரியமான பசுக்களுக்கும் எருதுகளுக்கும் பெயர்சூட்டி அப்பெயரையே தம்பால் அன்புடையவருக்கும் சூட்டுவதுண்டு. இவ்விலங்குகளிடமிருந்து பெறப்படும் கொம்பு, குளம்பு, உரோமம் முதலானவற்றிலிருந்து தம் வாழ்க்கைத் தொழிலுக்குத் தேவையான பொருள்களைச் செய்கின்றனர்.
இனக்குழு விலங்கியல் துறை, ஓர் இனக்குழுவினர் விலங்குகளைத் தம் வாழ்க்கையமைப்பிற்குப் பயன்படுத்தும் முறைகள், அவ்விலங்குகளின் மேல் கொண்டுள்ள உணர்வுகள், விலங்குகளை வீரியமுள்ளவை, வீரியங் குன்றியவை என வகைப்படுத்தும் முறைகள், விலங்குகளின் நோய்களைக் கவனிக்கும் முறைகள், விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் முறைகள் முதலானவற்றை ஆராய்கிறது.
நாட்டார் விலங்கியல், விலங்குகளின் நடத்தைக் கோலங்களை மக்கள் கண்டறியும் விதத்தினையும். அம்மக்கள் காட்டு மிருகங்களையும் தீங்கிழைக்கும் மிருகங்களையும் கட்டுப்படுத்தும் அறிவினையும், அவ்விலங்குகளை வேட்டையாடும் முறைகளையும் வேட்டைக்கு அவர்கள் பயன்படுத்தும் கருவிகளையும் அவர்கள் பண்பாட்டோடு ஒருங்கிணைத்து ஆய்வு செய்கிறது. காண்க: அறிதல்சார் மானிடவியல். ஆ.செ.
துணை நூல்கள்
Jain, S.K., Glimpses of Ethnobotany, Oxford & IBH Publishing Co., New Delhi, 1981.
Ackernecht. E., Medicine and Ethnology, John Hopkins, Baltimore, 1971.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 577)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f3349q79/
தமிழ்“இனக்குழு உயிரியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f3349q79/APA
Oliyon Research. (2026). இனக்குழு உயிரியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f3349q79/MLA
"இனக்குழு உயிரியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f3349q79/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment