தென்துருவக் கண்டமாகும். உலகில் இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு நடத்தப் பெறும் பெரும் பரப்பு இது. பனிக்கட்டி நிரம்பிய இக்கண்டத்தைப் பற்றிய விவரங்கள் அண்மையில்தான் வெளிவரத் தொடங்கியுள்ளன. உலக உருண்டையின் கிழக்குப் பாதியின் தென்கோடியில் அமைந்துள்ள பனிக்கட்டிக் கண்டம் இது. எனவே இங்கு மக்கள் ஒருவரும் நிலையாக வாழவில்லை. அண்டார்க்டிகாவின் (Antarctica) வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் கிழக்கில் இந்தியப் பெருங்கடலும் தெற்கில் பசிபிக் பெருங்கடலும் அமைந்துள்ளன. கி.பி. 20–ஆம் நூற்றாண்டில் உலக வரைபடங்கள், தென் துருவத்தில் வெறும் பொட்டல் நிலம் இருக்கிறதென்றும் அங்கு அண்டார்க்டிகா பனிக்கட்டி மண்டிக் கிடக்கிறதென்றும் தெரிவித்தன. ஆய்வாளர் ஆய்வு நடத்துவதுகூட இயலாதென எண்ணினர். அக்கண்டத்தை அணுகவிருந்த கப்பல்கள் கொடும் பனிப்புயல்களால் தாக்குற்றமையால் அதன் அருகே செல்லவும் துணியவில்லை. அண்டார்க்டிகாவின் உள்ளே நுழைந்த பெருமை ஆங்கிலப் புவியாய்வாளர் காப்டன் இராபர்ட்டு எப். இசுகாட்டு (Robert F. Scott) என்பாரைச் சாரும். 1902–ஆம் ஆண்டில் இதை அவர் செய்தார். அவருக்கு முன்னோடிகளாகப் பலரிருந்தனர். கி.பி. 1772–75 ஆம் ஆண்டுகளில் சேம்சு குக் (James Cook) என்பார் தம் இரண்டாம் பயணத்திற்குப்பின் அண்டார்க்டிகாவைப் பற்றிக் குறிப்பிட்டார். ஆனால் அக்குறிப்புகள் அண்டார்க்டிகாவின் உண்மையான நிலையை அண்டார்க்டிகா அறியப் பயன்படவில்லை. ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர்த் திமிங்கில வேட்டையாளர்களும் சீல் என்னும் கடல் நாய் வேட்டையாளர்களும் அடிக்கடி அண்டார்க்டிகாவின் அருகு வரை சென்று வந்தார்கள். எப். வான் பெல்லிங்சவுசன் (F. Von Bellingshausen) என்னும் உருசியரும் நாத்தானியல் பாமர் (Nathaniel Palmer) என்னும் அமெரிக்கரும் தாம் அண்டார்க்டிகா நிலப் பகுதியை முதன்முதலாகக் கி.பி. 1820–ஆம் ஆண்டில் கண்டார்கள். கி.பி. 1822–24–இல் சேம்சு லெட்டல் (James Weddell) என்பாரும் கி.பி. 1834–43–இல் இசுகாட் சேம்சு இராசு (Scot James Ross) என்பாரும் கண்டுபிடித்த கடற்பகுதிகள் அந்த இருவர் பெயரால் தனித்தனியே பெயரிடப்பட்டன. அவ்விருவரும் ஆங்கில மாலுமிகள். கி.பி. 1838–42 இல் அமெரிக்கரான சார்லசு வில்கீசு (Charles Wilkes) கண்டுபிடித்த நிலப்பரப்பு, வில்கே நிலம் என்று பெயரிடப்பட்டது. கி.பி. 1850–ஆம் ஆண்டளவில் அண்டார்க்டிகாவைப் பற்றிய சிறப்புக் கூறுகள் படம் பிடிக்கப்பட்டன. அதன் பின்னர்ப் பல்லாண்டுகள் அண்டார்க்டிகாவைப் பற்றி யாரும் ஆய்வு நடத்தாமல் விட்டனர். கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறிவியல் ஆய்வுகள் நடந்தன. அதில் பங்கு கொண்டவர்கள் எர்னசுட்டு சாக்கில்டன் (Earnest Shackleton), இராபர்ட்டு இசுகாட் என்னும் இரு ஆங்கிலேயராவார்கள். மக் மருதோ சவுண்டு (Mc-Murdo Sound) என்பார் இராசு பனிக்கட்டித் திட்டின் கிழக்குக் கோடியிலிருந்து கப்பல் வழியாக உள்ளே நுழைந்தார். அதுவே பின்னர் ஆய்வு நடத்திய பலருக்கு அடித்தளமாக அமைந்தது. மக் மருதோ சவுண்டு கண்டுபிடித்த இடம் அவர் பெயராலேயே வழங்கலாயிற்று. மக் மருதோ சவுண்டிலிருந்து இசுகாட்டும் சாக்கில்டனும் இராசு பனிக்கட்டித் திட்டின் மேற்குப் பகுதியை ஆய்ந்தார்கள். 1908–9–இல் சாக்கில்டனும், 1911–12–இல் இசுகாட்டும் பியர்டுமூர் (Beard more) பனிமலையின் மீது ஏறினார்கள், 1909 சனவரி மாதத்தில் சாக்கில்டன் தென்துருவத்திற்கு 400 கிலோமீட்டர் தொலைவுவரை சென்றார். இசுகாட்டும் அவருடைய துணைவர்கள் நால்வரும் 1912–இல் தென்துருவத்திலிருந்து திரும்பும் வழியில் மாண்டுபோனார்கள். அவர்கள் தென் துருவத்தினை அடைவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்னர் 1911 திசம்பர் மாதம் 14-ஆம் நாள், ஆமுன்சன் (Amundsen) என்னும் நார்வேக்காரர் தென்துருவத்தை அடைந்துவிட்டார். முதலாம், இரண்டாம் உலகப் பெரும்போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில், பன்னாட்டு ஆய்வுக் குழுக்கள் அண்டார்க்டிகா ஆய்வினைத் தொடர்ந்தன. அமெரிக்கர்களான இலிங்கன் எல்சுவர்த் (Lincoln Ellsworth) என்பாரும் இரிச்சர்டு பைர்டு (Richard Byrd) என்பாரும் இதில் குறிப்பிடத்தக்கவர்கள், அவர்களுடன் சார்சு வில்கின்சு, (George Wilkins) தக்லசு மவுசன் (Douglas Mowson) போன்ற ஆசுதிரேலியர்களும் வேறுபலரும் இவ்வாய்வுகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் இராசு கடல் எல்லையைக் கடந்து பிற இடங்களிலும் ஆய்வாளர்களின் கவனம் திரும்பியது. இயந்திரப் போக்குவரத்துச் சாதனங்களும் வானவூர்திகளும் பெருமளவில் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்கர்கள் இத்தகைய போக்குவரத்தில் முதலிடம் பெற்றார்கள். 1929–இல் பைர்டும் 1936–இல் எல்சுவர்த்தும் வானவூர்திகளைப் பயன்படுத்திப் பெருமை பெற்றனர். இரண்டாம் உலகப் பெரும்போருக்குப் பின்னர் மீண்டும் அண்டார்க்டிகா ஆய்வுப்பணி தொடங்கியது. அமெரிக்கர்கள், ஆங்கிலேயர்கள், உருசியர்கள் இப்பணியில் மிக்க தீவிரம் காட்டினர். பன்னாட்டு நில உலக இயற்பியல் ஆண்டையொட்டிப் (International Geo-physical year) பல ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. இதில் கண்டம் கடக்கும் வானவூர்தியின் மூலம் அண்டார்க்டிகா வந்தடைந்தது விவியன் பாக்சு (Vivian Fuchs) தலைமையில் வந்த ஆங்கிலக் குழுவாகும். வெட்டல் கடலிலிருந்து தொடங்கிய 3520 கிலோ மீட்டர் தொலைவுள்ள பயணம் 99 நாள்களில் முழுமைபெற்றது. எட்மண்டு இல்லரி (Edmund Hillary) என்னும் நியூசிலாந்துக்காரர் ஆங்கிலேயருக்கு உறுதுணை நின்றார். அண்டார்க்டிகா பயணத்தில் இந்தியாவும் ஈடுபட்டு வருகிறது. இந்தியர் 1984–ஆம் ஆண்டில் நான்காம் பயணத்தை மேற்கொண்டனர். 1981–ஆம் ஆண்டு திசம்பர் மாத முதல் வாரத்தில் கோவாவிலிருக்கும் மர்மகோவாத் துறைமுகத்திலிருந்து முதல் ஆய்வுக்குழு புறப்பட்டது. இந்தியப் பயணிகள், அண்டார்க்டிகாவில் ‘தட்சிண’ கங்கோத்திரி என்னுமிடத்தில் தங்கள் முகாமை அமைத்து ஆய்வுகளை நடத்தினர். இந்திய அரசின் பெருங்கடல் வளர்ச்சித்துறையினர் 1982–83–ஆம் ஆண்டுகளில் இரண்டாம் பயணத்திற்கு ஏற்பாடுகள் செய்தனர். அதன் தலைவராக வி.கே. இரெய்னா (V.K. Raina) என்பார் தேர்ந்தெடுக்கப் பெற்றார். 1983–84–ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாம் பயணம் மேற்கொள்ளப்பட்டது. அங்கு நிலையானதொரு ஆய்வு நிலையத்தைக் கட்டி, ஆண்டு முழுவதும் இந்திய அறிவியல் வல்லுநர்கள் ஆய்வு நடந்த வேண்டுமென்பது உறுதியாயிற்று. ஊர்விலிக் கடல் வானிலை ஆய்வு நிலையம் டாக்டர் பி.பி. பட்டாச்சாரியா என்பாரின் தலைமையில் ஒருகுழு 1984–ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 3–ஆம் நாள் மர்மகோவாவிலிருந்து 82 பேர்களுடன் புறப்பட்டுச் சென்றது. இதில் பங்கு பெற்றவர்களில் பெரும்பாலோர் முப்படைகளைச் சார்ந்தவர்கள். இப்பயணக் குழுவினர் தட்சிண கங்கோத்திரிக்குத் தெற்கே 100 கி.மீ. தொலைவில் மூன்று குடிசைகளைக் கட்டி அவற்றிற்கு ‘மைத்ரி’ என்று பெயரிட்டார்கள். இப்பயணத்தை மேற்கொண்டவர்களில் பெரும்பாலோர் தாயகம் திரும்பிவிட்டார்கள். இந்திய அரசின் பெருங்கடல் வளர்ச்சித் துறையின் செயலாளரான டாக்டர் எசு. இசர்டு. காசீம் (Dr. S.Z. Kasim) என்பார், அண்டார்க்டிகா ஆய்வுக்காக இந்திய அறிவியல் வல்லுநர்கள் பத்தாண்டுத் திட்டமொன்றைத் தீட்டியுள்ளதாக அறிவித்துள்ளார். அண்டார்க்டிகாவின் மொத்தப் பரப்பளவு 1,42,00,000 சதுரக் கிலோ மீட்டர்களாகும். தென் துருவத்தைச் சுற்றிச் சுற்றிப் பரவியுள்ள அண்டார்க்டிகாவின் நிலப்பரப்பு முழுதும் பனிக்கட்டி படர்ந்துள்ளது. பனிக்கட்டியின் பருமன் 3000 மீட்டர் ஆகும். அண்டார்க்டிகாவை இரு துணைக்கண்டங்களாகப் பிரிக்கலாம். பரப்பில் பெரிதான பகுதியைக் கிழக்கு அண்டார்க்டிகாவென்றும் மற்றதை மேற்கு அண்டார்க்டிகா என்றும் கூறலாம். கிழக்கு அண்டார்க்டிகா உயர்ந்த மேட்டு நிலங்களைக் கொண்டுள்ளது. மேற்கு அண்டார்க்டிகா பனி உறைந்த தீவுக் கூட்டங்களைக் கொண்டது. அண்டார்க்டிகாவில் திமிங்கிலங்களும் கடல்நாய்களும் உள்ளன. இக்கடல் நாய்களைச் சீல்கள் (Seals) என்பர். பென்குவின் (Penguin) என்னும் பறவைகள் இங்கு மிகுதியாக உள்ளன. அண்டார்க்டிகாவில் உறைந்து கிடக்கும் பனி உருகுமாயின் கடல்நீர் மட்டம் ஏறத்தாழ 67 மீட்டர் உயர்ந்துவிடும், அதனால் உலகத் துறைமுகங்களும் கடற்கரைத் தாழ்நிலங்களும் மூழ்கிவிடலாம்.