உமாயூன்
umāyūṉ
மொகலாயர் ஆட்சியை இந்தியாவில் நிறுவியவர் பாபர்.
மொகலாயர் ஆட்சியை இந்தியாவில் நிறுவியவர் பாபர். அவர்தம் மூத்த புதல்வர் உமாயூன். பாபர் நாற்பத்தேழு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்தமையால் மொகலாயர் ஆட்சி இந்தியாவில் நன்றாக வேரூன்றவில்லை. பாபர் பெற்ற வெற்றிகள் எல்லாம் போரில் அடைந்த வெற்றிகளாகவே இருந்தன. ஆட்சிமுறை அமைப்புகளும் வலுவாக அமைக்கப்படவில்லை.
ஆப்கானியர்கள் வட இந்தியாவின் கிழக்குப் பகுதியில் தங்கள் உரிமைப் போரைத் தொடங்குவதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். உமாயூனுடைய தம்பியர் இவர்பால் அழுக்காறு கொண்டிருந்தனர். அவர்களுள் மூத்தவரான காம்ரான் காபூல், ஆப்கானிசுத்தான், இலாகூர் முதலிய மாவட்டங்களைத் தம்வசமாக்கிக் கொண்டார். இதனால், அப்பகுதிகளிலிருந்து தமக்குத் தேவையான அளவிற்கு வீரர்களைத் திரட்டித் தம் படைப்பலத்தைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பினை உமாயூன் இழந்தார்.
இவர் தம் தந்தையுடன் பல்வேறு போர்களில் பங்கு பெற்றிருந்தபோதிலும், அவர் போன்று விடாமுயற்சி உடையவரல்லர்; சிற்றின்பத்தில் பேரீடுபாடும், மிகுதியாக அபின் உண்ணும் பழக்கமும் பெற்றிருந்தார். இதனால், விரைவில் முடிவு எடுக்கும் சிந்தனை ஆற்றலை இழந்திருந்தார். மனப்போக்கைப் புரிந்து, அதற்கேற்பச் செயலாற்றும் திறமையும் இவரிடம் இல்லை. ‘கண்டதே காட்சி; கொண்டதே கோலம்’ என்னும் மனப்போக்கும், ‘எடுப்பார் கைப்பிள்ளையாக’ மாறும் இயல்பும் இவரிடம் முனைப்பாக இருந்தன.
போர்கள்
முதலில் பீகாரிலிருந்து உமாயூனுக்கு எதிர்ப்புக் கிளம்பியது. உலோடி மரபைச் சேர்ந்த தலைவன் ஒருவன், ‘தானே இந்தியாவின் அரசன்’ என்று, இவருக்குப் போட்டியாகத் தோன்றினான். அப்போது களிஞ்சர்க் கோட்டையை இவர் முற்றுகையிட்டிருந்தார். இவர் அம்முற்றுகையை விட்டுவிட்டுத் தம் புதிய பகைவனை எதிர்த்துப் போரிட்டு வென்றார்.
சில நாட்களுக்குப்பின் தில்லியின்மீது படையெடுத்து வந்த கூர்ச்சரத்தின் சுல்தானான பகதூர்சாவை இவர் மாளவத்தில் எதிர்த்துத் தோற்கடித்து, அவனைக் கூர்ச்சரத்திற்குப் புறமுதுகிட்டு ஓடுமாறு செய்தார். பகதூர்சா நாட்டை இழந்து, மேற்குக் கரையில் இருந்த போர்ச்சுகீசியரின் தையூப்பட்டினத்திற்கு ஓடி, அவர்களிடம் அடைக்கலம் புகுந்தான்.
ஆனால், கூர்ச்சரத்தின்மீது தம்முடைய ஆதிக்கத்தை நிலைநாட்டித் தம் ஆட்சியை வலுப்படுத்திக் கொள்ளுவதில் உமாயூன் ஆர்வம் காட்டவில்லை. பல நாட்களைச் சிற்றின்பத்திலேயே வீணாகக் கழித்தார். இந்நிலையில், தோல்வியுற்று ஓடிய பகதூர்சா புதிதாகப் படையைத் திரட்டிக் கொண்டு வந்து, கூர்ச்சரத்திலிருந்த மொகலாயப் படைகளை விரட்டி அடித்துத் தன்னுடைய இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொண்டான்.
அந்தச் சமயத்திலேயே ஆக்ராவிலும் மொகலாயய் பிரபுக்கள் சிலர் கலகம் செய்தனர். இதற்கிடையே திறமைமிக்க ஆப்கானிய வீரனான செர்சா என்பவன் வங்காளத்திற்கும் பீகாருக்கும் தன்னை ஆட்சித்தலைவன் என்று அறிவித்தான்.
இத்தகைய இன்னல்களுக்கும் இடர்ப்பாடுகளுக்குமிடையே, தாம் மாளவத்தில் கைப்பற்றிய நாட்டுப் பகுதிகளை உமாயூன் கைவிடலானார். பின்னர், செர்சாவை இவர் எதிர்க்கத் தொடங்கினார். செர்சா பீகாரில் வாழ்ந்த சூர் மரபைச் சேர்ந்த ஆப்கானியன், தன்னுடைய மூதாதையரின் வழிவந்த சாகீரைச் செர்சா கருத்தாகக் காத்துவந்தான். இப்ராகீம் லோடியிடமும் பாபரிடமும் அவன் பணிபுரிந்தவனாகையால் அவன் தன் படைகளைச் சீர்படுத்தி, ஆற்றல் மிக்கதாக அமைத்துக்கொண்டான்.
பாபர் இறந்த பிறகு, பீகாரில் உள்ள ஆப்கானியக் கலகக்காரர்களுடன் செர்சா சேர்ந்து கொண்டான். படிப்படியாகப் பீகார் மாநிலத்தையும் பிறகு கங்கைக் கரையில் இருந்த சூனார் கோட்டையையும் செர்சா கி.பி. 1531–இல் கைப்பற்றிக் கொண்டான். அதன்பின்னர், வங்காளத்தை ஆண்ட திறமையற்ற அரசனிடமிருந்து, அந்த இராச்சியத்தையும் அவன் கைப்பற்றிக் கொண்டான்.
இதையறிந்த உமாயூன் வங்காளத்திமீது படையெடுத்துச் சென்றார். மொகலாய அரசரைப் பீகாரில் எதிர்த்துப் போரிடாமல் செர்சா பின்வாங்கினான். அந்தச்சமயத்தில், பீகாரிலிருந்து வங்காளத்திற்குப் போகும் வழியில் இருந்த இராசமகால் கணவாயைப் பலப்படுத்திக்கொண்டு மொகலாயப் படையை வங்காளத்தில் நுழையுமாறு செய்தான். அதற்குள் மழைக்காலம் வந்துவிட்டது. தன் தலைநகருடன் போக்குவரத்துத் தொடர்பு வைத்துக்கொள்ள இயலாதவாறு உமாயூனைச் செர்சா தடைசெய்து விட்டுக் காசி, கான்பூர் முதலிய நகரங்களையும் தாக்கினான்.
இறுதியாக, கி.பி. 1539-இல் மிகுந்த தொல்லைகளுக்கும் துன்பங்களுக்குமிடையே உமாயூன் பீகாருக்குத் திரும்பினார். பக்சாருக்கு அருகில் உள்ள சாசா என்னுமிடத்தில் அவரைச் செர்சா முறியடித்தான். தப்பிப் பிழைத்தால் போதும் என்று ஆக்ராவிற்கு உமாயூன் திரும்பி ஓடினார்.
இவ்வெற்றிக்குப் பிறகு, ‘சுல்தான்’ என்னும் பட்டத்துடன் பேரரசர் பதவியையும் செர்சா வகித்தான். பின்னர் நடைபெற்ற போரில் உமாயூன் செர்சாவினால் தோற்கடிக்கப்பட்டார். வெற்றி வீரனான செர்சா ஆக்ராவிற்குச் சென்று அதையும் கைப்பற்றிக் கொண்டான்.
பஞ்சாபில் உமாயூன்
இனிமேல், செர்சாவை எதிர்ப்பதால் பயனில்லை என இவர் உணர்ந்தார். தம்மைச் சார்ந்தவர்களை அழைத்துக் கொண்டு, தம் தம்பி காம்ரான் ஆட்சிபுரிந்துவந்த இலாகூருக்குச் சென்றார். இத்தகைய துன்பம் நிறைந்த சோதனைக் காலத்திலும், தன் அண்ணன் மீது இருந்துவந்த பொறாமையினால், எத்தகைய உதவியும் செய்ய இயலாது என்று காம்ராயன் கைவிரித்து விட்டான்.
இலாகூரை நோக்கிச் செர்சா படையெடுத்து வருவதாக உமாயூன் கேள்விப்பட்டார்; உடனே, பஞ்சாபிலிருந்து சிந்து மாநிலத்திற்குச் சென்றார். இவ்வாறு சிந்து மாநிலத்தில் இவர் அலைந்து கொண்டிருந்தபொழுது, கி.பி. 1542 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், உமாயூனுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையே, பிற்காலத்தில் பேரரசர் அக்பர் என்னும் புகழைப் பெற்றது.
ஆப்கானிசுத்தானத்தில் உமாயூன்
தம்முடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்காகச் சிறிது காலத்திற்கெல்லாம் உமாயூன் பலுச்சிசுத்தானத்திற்குச் சென்றார்; அங்கிருந்து பாரசீகத்தினை அடைந்தார். அந்த நாட்டின் அரசன் இவருக்கு உதவிபுரிய முன்வந்தான். அந்த அரசனுடைய படையுதவியைப் பெற்றுத் தன் தம்பியிடம் இருந்த காந்தகாரையும் காபூலையும் கி.பி. 1548–இல் உமாயூன் கைப்பற்றினார்.
செர்சாவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தோரிடம் மோதி மீண்டும் இந்தியாவில் தம்முடைய ஆட்சியை நிலைநாட்ட உமாயூன் முயன்றார். இந்த நோக்கத்தோடு இவர் பெசாவரைக் கைப்பற்றினார். அந்நிலையில் இவர் தம் தம்பியரின் தொல்லைகள் ஓய்ந்தன. இதனால் பஞ்சாபு மாநிலத்தை இவர் தாக்கினார். சிந்து ஆற்றைக் கடந்து, கி.பி. 1555-இல் ஆப்கானியரின் படையைச் சிர்கிந்து என்னுமிடத்தில் படு தோல்வி அடையுமாறு செய்தார்.
இறுதி நாட்கள்
இப்போரின் விளைவாகத் தில்லியைத் திரும்ப இவர் கைப்பற்றிக் கொண்டார். எனினும், இவருடைய இராச்சியம் சிறியதாகவே இருந்தது. இவர் அரசு கட்டிலேறிய சிறிதுகாலத்திற்குள் (கி.பி. 1556) மாடியிலிருந்து தவறி விழுந்து காலமானார்.
பண்பு நலன்
உமாயூனிடம் சிறப்புமிகு தலைமைப் பண்புகள் சில இருந்தன. உள்ளவுரம் வாய்ந்த படைத்தலைவராக இவர் விளங்கினார். தம்முடைய ஆதரவாளர்களைப் போற்றிக் காப்பதிலும் ஊக்கம் அளிப்பதிலும் இவர் வல்லவர். அதேகாலத்தில், எத்தகைய இடப்பாடுகளையும் இன்னல்களையும் தாங்கிக்கொள்ளும் இதயம் பெற்றவராகவும் இவர் வாழ்ந்தார்.
கலைகளில் பயிற்சியும் தேர்ச்சியும் வாய்ந்தவராக உமாயூன் திகழ்ந்தார். கலையுணர்வு மிகு கலைஞராகவே விளங்கினார். பாரசீகப் பாணியில் சிறப்புற்று விளங்கிய பண்பாளர் என்று இவரை அறிஞர்கள் போற்றுகின்றனர். இவருடைய நடத்தை நாகரிகமானது; இவருடைய கல்வியறிவு மதிப்புமிக்கது. நல்ல நகைச்சுவை உணர்வும் பற்றும் பாசமும் மிக்கவராக இவர் வாழ்ந்தார்.
ஆனால், இந்தப் பண்புகளோடு சில தீய பழக்க வழக்கங்களும் இவரிடம் மிகுந்திருந்தன. சிற்றின்பத்தில் இவர் கொண்டிருந்த நாட்டம் இவருடைய இயல்புகளையும் நல்லறிவையும் மழுங்கச் செய்தது. அபினிப் பழக்கம் நெருக்கடி நேரத்தில் முடிவு எடுக்கும் அறிவுத்திறனை அடியோடு அழித்து விட்டது. இவற்றோடு, எவரையும் எளிதில் நம்பிவிடும் இயல்பு பல வேளைகளில் நயவஞ்சகர்களை நம்பி, இன்னல்களுக்கு ஆளாகுமாறு செய்துவிட்டது. பாசத்தின் மிகுதியால் தம்பிமார்களின் பேராசைகளையும் உட்பகையுணர்வுகளையும் அறிந்துகொள்ள இவரால் இயலவில்லை. உலகத்தில் துன்பப்படுவதற்காகவே பிறந்த மனிதர்களுள் உமாயூனும் ஒருவராவார். க.த.தி.
உமாயூன் (பாமினி அரசர்)
தென்னிந்தியாவில் கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் நிறுவப் பெற்ற பாமினி அரசு சுமார் இருநூறாண்டுகள் தக்காணத்தில் ஆட்சி புரிந்து வந்தது. இதை ஆண்ட மன்னர்களுள் உமாயூன் ஒருவராவர். கி.பி. 1458 முதல் 1461 வரை ஆட்சிபுரிந்த இவருடைய முழுப்பெயர் அலாவுதீன் உமாயூன். இவருடைய தந்தை இரண்டாம் அலாவுதீன் அகமது. அவர் 1458–இல் இறந்தவுடன், உமாயூன் பட்டத்திற்கு வருவதைத் தடுக்கச் சில பிரபுக்கள் சூழ்ச்சி செய்து அவர்கள் விரும்பிய உமாயூனின் இளவலை அரசு கட்டிலிலேற்றினர். வெகுண்டெழுந்த உமாயூன் பகைவர்களை ஈவு இரக்கமின்றிக் கொன்று தள்ளிவிட்டு, தம் இளவலை விரட்டிவிட்டு அரியணையில் அமர்ந்தார். தொடக்க காலத்தில் நல்ல மனிதராக இருந்த இவர், பிறகு மனம் மாறி ஒரு கொடுங்கோலராகி விட்டார். சிறு தவறுகளுக்கும் பயங்கரமான தண்டனைகள் விதித்துவந்தார். இதனால் இவருக்கு ‘சாலிம்’ (Zalim) என்ற சாட்டுப்பெயர் கிடைத்தது. சாலிம் என்ற வார்த்தைக்குக் கொடுஞ்செயல் புரிவோன் என்பது பொருள். அரியணையில் ஏறியதற்காகத் தம் இளவலின் கண்களைக் குருடாக்கினார். அவருக்கு உதவிசெய்தவர்கள் பழிக்குப் பழிவாங்கப் பெற்றனர். நாட்டில் கலகங்கள் மூண்டன. முக்கியமாக, நளகொண்டா ஆளுநர் நாட்டை இரு பிரிவுகளாக்க வேண்டிக் கலகம் செய்தார். சிக்கந்தர் கான் என்ற அவர்தம் மகன் மிகவும் தீவிரமாகப் போரிட ஆயத்தமானார். உமாயூன் இப்பெரிய கலகத்தைத் தமது படை வலிமையால் அடக்கி வெற்றிக் கொடி நாட்டினார். கலகத் தலைவரின் செல்வத்தைத் தமது கருவூலத்திற் சேர்த்துக் கொண்டார். கண்களை இழந்த ஆசன்கான், தக்க தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார். சுல்தான் உமாயூனின் பகைவர்கள் யாவரும் ஆசனின் பக்கம் சேர்ந்தனர். தந்திரமாக விடுதலை பெற்ற சுமார் 7000 கைதிகளும் அவர்களுடன் சேர்ந்தனர். மற்றொரு பெரிய கலகம் நாட்டிலேற்பட்டது. அரசியலாரால் அதை அடக்க முடியவில்லை. பிசப்பூர் ஆளுநர் உதவி செய்திராவிடின் நிலைமை வேறுவிதமாக மாறியிருக்கக்கூடும். இறுதியில், கலகத் தலைவர் ஆசன் புலிக்கு இரையாக்கப் பெற்றார். அவருக்கு உதவி புரிந்தவர்கள் பல விலங்குகளுக்கு இரையாக்கப் பெற்றனர்.
உமாயூனைப் பற்றி மதிப்பீடு செய்வதில் வரலாற்றறிஞர்களிடையே மிகுந்த கருத்து வேறுபாடுகள் உள. ஈசுவரி பிரசாது, பெரிசுட்டா (Ferishta) முதலிய பல ஆசிரியர்கள் உமாயூனைக் கொடுமையின் உருவம் என்றே கூறுகின்றனர். ஆனால், செர்வானி (Sherwani) போன்ற சில வரலாற்றறிஞர்கள் இவரை நல்ல பண்புடையவர் என்றும், இவரைச் சூழ்நிலை கொடுங்கோலராக மாற்றிவிட்டது என்றும் இவரைப் புகழ்ந்துரைக்கின்றனர். ஆகவே, உமாயூனைப் பற்றித் தீவிர ஆய்வு செய்தே முடிவான மதிப்புரையை வழங்க இயலும். கி.பி. 1461-இல் இவர் இறப்பிற்குப் பிறகு இவர் தம் மகன் பட்டமேற்றார். உமாயூனின் இறப்பு இயற்கையானதா அல்லது இவர் கொல்லப்பட்டாரா என்பது ஆய்வுக்குரிய செய்தி ஆகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 940)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ezenhbhk/
தமிழ்“உமாயூன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ezenhbhk/APA
Oliyon Research. (2026). உமாயூன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ezenhbhk/MLA
"உமாயூன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ezenhbhk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment