இராமசரித மானசம் என்பது ஒரு நூல், இந்தியில் இதை எழுதியவர் துளசிதாசர். இவர் கி.பி. 1532 முதல் 1623 வரை வாரணாசியில் வாழ்ந்த முதன்மைக் கவிஞர்; ஆன்மிக நெறியைப் பிறருக்குப் போதித்த அனுபூதிமான்; வடமொழியில் இயற்றப்பட்ட வால்மீகி இராமாயணத்தை இந்தி மொழியில் இராமசரித மானசம் என்னும் பெயரில் எழுதியவர். இந்நூல் இந்துக்களால் புனித நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பேரிலக்கியமாகும். இது துளசிதாசரால் சமசுகிருதம் கலந்த அவதீ (Awadhi) மொழியில் கி.பி. 1584–ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கி, ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளில் நிறைவு செய்யப் பெற்றது. தோகா, சௌபாயி, செவட்டா என்னும் விருத்தப்பாக்களில் இந்நூல் யாக்கப் பெற்றுள்ளது. இராமசரித மானசம், ஞானத்தையும் பக்தியையும் எடுத்தியம்புகிறது. சாதுக்களின் பண்புகள், இல்வாழ்வானின் கடமைகள் போன்ற- வற்றை விரிவாகக் குறிக்கின்றது. இக்காப்பியம் பரதனின் வரலாற்றைச் சிறப்பாகச் சுட்டுகிறது. இதன் அயோத்தியாகாண்டம் மற்றக் காண்டங்களைவிடச் சிறந்ததெனக் கருதப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் தொழிலதிபர் பிர்லா அவர்களின் பொருட் செலவில் மானசமந்திரம் (Manasa Mandir) என்னும் கோயிலில் ‘இராமசரித மானசம்’ முழுவதும் பளிங்குக்கற்களில் பொறிக்கப்பட்டு நாற்சுவர்களிலும் பதிக்கப்பட்டுள்ளது.