தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. இது திருவதிகை வீரட்டானம் எனவும் வழங்கப்படும். இது தென்னார்க்காடு மாவட்டம் பண்ணுருட்டிக்கு அருகில் ஒருகல் தொலைவில் கெடில ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. மூவர் தேவாரமும் பெற்ற இத்தலம், சிவபெருமான் தன் வீரம் விளங்குமாறு செயற்பட்டுத் திகழ்ந்த அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. இங்கிருந்து அவர் முப்புரங்களையும் எரித்தருளினார் என்பது கூறப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு நாயனாருடைய தமக்கையாராகிய திலகவதியார் சிவபெருமானை வழிபட்டிருந்ததும், திருநாவுக்கரசர் “கூற்றாயினவாறு விலக்ககிலீர்” என்னுந் திருப்பதிகம் பாடித் தாமுற்ற சூலைநோய் தீரப் பெற்றதும் இத்திருநகரிலாகும். அவர் தாம் மேற்கொண்ட உழவாரத் தொண்டினை இங்குத் தொடங்கினார். மகேந்திரவர்மன் காலத்தில் இங்கே சமணப் பள்ளிகளும் பாழிகளும் இருந்தன. இங்குள்ள திருக்கோயிலின் கருவறை மேலுள்ள கோபுரம் தேர்போல, நிழல் தரையில் சாயாதவாறு அமைக்கப் பெற்றுள்ளது. இங்குத் திருநாவுக்கரசர் திலகவதியார் ஆகியோர் திருவுருவச் சிலைகள் உள்ளன. இறைவன் – வீரட்டேசுரர்; இறைவி – திரிபுரசுந்தரி. இவ்வூர் அதி அரையமங்கலம், அதிராச மங்கலம், அதிராச மங்களியபுரம் என்னும் பெயர்களால் வழங்கப்பட்டமை கல்வெட்டுகளால் தெரியவருகிறது. மணவிற் கூத்தனான காலிங்கராயன் இவ்வூர்க் கோயிலுக்குப் பொன்வேய்ந்து, நூற்றுக்கால் மண்டபம், மடைப் பள்ளி போன்றவற்றை அமைத்துத் திருப்பணி புரிந்த செய்தியினையும் கல்வெட்டுகள் கூறுகின்றன. உண்மை விளக்கம் என்னும் சைவ சித்தாந்த சாத்திர நூலாசிரியராகிய மனவாசகம் கடந்தார் இவ்வூரில் பிறந்தார்.