அருணகிரிநாதர் தத்துவம்
aruṇakirinātar tattuvam
அருணகிரிநாதர் பதினைந்தாம் நூற்றாண்டில் திருவருணையில் தோன்றியவர்.
அருணகிரிநாதர் பதினைந்தாம் நூற்றாண்டில் திருவருணையில் தோன்றியவர். முருகப் பெருமானிடம் பிரணவத்தைப் பற்றிக் கேட்டறிந்தவர்கள் மூவர். அவர் சிவபெருமான், அகத்தியர், அருணகிரிநாதர் ஆகியோராவர்.
அருணகிரிநாதர் மூவர்க்குந் தேவர்க்குந் தனிப் பெருந்தலைவராகிய முருகப் பெருமான் ஒருவனையே பாடி ‘பரமபதவிரதநிலை’யை உலகுக்கு உணர்த்தியவர்.
அருணகிரிநாதர் பாடிய நூல்கள் ஆறு: (1) திருப்புகழ், (2) திருவகுப்பு, (3) கந்தரந்தாதி, (4) கந்தரலங்காரம், (5) கந்தரநுபூதி, (6) வேல்–மயில்–சேவல் விருத்தங்கள்.
திருப்புகழ் பதினாயிரம் பாடல்கள் கொண்டது என்பது திரிவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழால் அறியப்படும். பதி, பசு, பாசம் என்ற முப்பொருள் உண்மையை உணர்ந்து உலகுக்கு உணர்த்தியவர் அருணகிரியார். மெய்கண்டாரின் கொள்கையாகிய சைவ சித்தாந்தக் கொள்கையை உடையவர்.
“பதியினைப் போல் பசுபாசம் அநாதி” என்கிறார் திருமூலர். உயிர்கள் இறைவனால் படைக்கப்பட்டவையல்ல. இறைவன் என்றோ அன்றே உயிர்களும் உண்டு. “என்று நீ அன்று நான்” என்பது தாயுமானவர் திருவாக்கு. சற்காரியவாதம் என்பது சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான தத்துவம். “இல்லது தோன்றாது; உள்ளது அழியாது;” இதுதான் சற்காரியவாதம். இந்த உலகம் மாயையிலிருந்து தோன்றியது. இந்த உலகுக்கு முதற்காரணம் மாயை; துணைக்காரணம்–சக்தி; நிமித்தகாரணம்–சிவன். ஒரு பானைக்கு முதற்காரணம் மண்; துணைக்காரணம் – தண்டசக்கரம்; நிமித்தகாரணம் – குயவன். மண்ணில் இருந்து பானை வருவதுபோல் மாயையிலிருந்து உலகம் தோன்றியது.
இந்த உலகத்துக்குப் பிரபஞ்சம் என்ற ஒரு பெயருண்டு. “பிரபஞ்சமென்னும் சேற்றைக் கழிய வழி வட்டவா” என்று கந்தரலங்காரத்தில் கூறுகிறார். அருணகிரிநாதர், பஞ்சம் என்ற சொல்லுக்கு விரிவு என்பது பொருள். பஞ்ச பாத்திரம் என்றால் வாய் விரிந்த பாத்திரம் என்று பொருள்படும். “ப்ர” என்ற உபசர்க்கத்துக்கு நன்றாக என்பது பொருள். ஆகவே பிரபஞ்சம் என்பது நன்றாக விரிந்தது எனப் பொருள்படும்.
சுருட்டியுள்ள பாயை விரித்துப் போடுவதுபோல மாயையில் சூட்சுமமாக இருந்த உலகை இறைவன் விரிவு செய்து தூலத்தில் படைத்தான். இந்த உலகுக்கு இறைவன் முதற்காரணம் என்று கூறிச் சிலர் இடர்ப்படுவர்.
இறைவன் – சித்துப் பொருள்; உலகம்– அசித்துப் பொருள்; சித்திலிருந்து அசித்து தோன்றாது. மாயை – அசித்து; உலகம்–அசித்து. ஆகவே மாயையாகிய அசித்தினின்றும் உலகமாகிய அசித்து தோன்றியது. இந்த விவரங்களைச் சிவாகமங்கள் விரிவாகப் பேசுகின்றன. ஆகமத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்கள் கூறப்படுகின்றன. ஆகமங்கள் இருபத்தெட்டு, இந்த ஆகமநெறியில் தமக்கு முக்தி நலம் வேண்டும் என்று அருணகிரிநாதர் முருகப் பெருமானை வேண்டுகிறார்.
எனவே அருணகிரிநாதர் சைவசித்தாந்தச் செந்நெறியை உலகுக்கு உணர்த்தவந்த பரமகுருநாதராவார்.கி.வா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 810)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ex49z6mk/
தமிழ்“அருணகிரிநாதர் தத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ex49z6mk/APA
Oliyon Research. (2026). அருணகிரிநாதர் தத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ex49z6mk/MLA
"அருணகிரிநாதர் தத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ex49z6mk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment