இசுலாமியத் தமிழ் இலக்கிய வகைகள் ஐந்தனுள் ஒன்றாகிய நாமா இலக்கிய வகையைச் சார்ந்த ஒரு நூல் ஆகும். காயற்பட்டினம் சுலைமான் இலெப்பை அவர்களின் மகனாகிய சாமுனா இலெப்பை அவர்களால் இயற்றப்பட்டது இந்நூல். இதனைக் காயற்பட்டினம் கண்ணகுமது மகுதூ முகம்மதுப் புலவர் பார்வையிட்டுச் சென்னை சாகுல் அமீதிய்யா அச்சகத்தில் 1912–ஆம் ஆண்டு பதிப்பித்தார். நூலின் மூன்றாம் செய்யுள் ஆசிரியர் பெயரையும் அவர் இந்நாமாவை இயற்றுவதற்கான காரணத்தையும் கூறுகிறது. சாமுனா இலெப்பை இருசாது நாமா வாயிலாக இசுலாத்தின அடிப்படைக் கொள்கை விளக்கங்களை அளித்துள்ளார். இருசாது என்பது அரபு மொழியில் உள்ள ஒரு நூலின் பெயராகும். அதனை அடியொற்றியே சாமுனா இலெப்பையும் இருசாது நாமா என்ற பெயரில் இவ்விலக்கியத்தை 187 செய்யுட்களில் விரித்துரைத்துள்ளார். இருசாது நாமாவினைப் பயின்று பின்பற்றுபவர்கள் அடையும் நன்மையை, நூலின் இறுதியில் எடுத்துக்காட்டியுள்ளார். இருசாது நாமாவில் அரபுச்சொற் கலப்பு செய்யுள்தோறும் இடம்பெற்றுள்ளது. சி.ந.