திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு வட்டத்தின் பெயர். அம்பாசமுத்திரம் என்னும் பெயரில் நகரம் ஒன்றும் உள்ளது. கைத்தறி நெசவாளர்கள் மிகுதியாக வாழும் இவ்வூரில் பஞ்சாலை ஒன்றுமுண்டு. இது குற்றாலத்திற்கு அருகிலுள்ள ஊர். இதனை அம்பை என்றும் கூறுவர். அம்பை வட்டத்தில்தான் பொதிகை மலை அமைந்துள்ளது. இம்மலையிலிருந்து தாமிர வருணியும் அதன் துணையாறுகளும் உற்பத்தியாகின்றன. இவ்வூரைச் செழிப்பான கழனிகள் சூழ்ந்துள்ளன. நெல்லைக்கும் தென்காசிக்குமிடையே ஓடும் இருப்புப் பாதைத் தொடர், அம்பாசமுத்திரம் வழியாகச் செல்வதால் இங்கு ஓர் இரயில் நிலையமும் இருக்கிறது. பாபநாசத் தலத்துக்குச் செல்லும் பயணிகள் இங்கு இறங்கியே போவர். நல்ல கருங்கல் கிடைக்கும். இவ்வூரிலிருந்து, கற்கள் வெளியிடங்களுக்கு ஏற்றுமதியாகின்றன. கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவுச்சின்ன மண்டபத்திற்கு அம்பாசமுத்திரக் கற்சுரங்கங்களிலிருந்து கற்கள் சென்றன. இவ்வூருக்கு அருகிலுள்ள பத்தமடையில் கோரைப்பாய்கள் நெய்கிறார்கள். இவ்வூரின் மக்கள் தொகை 1981-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 29,736 ஆகும்.