இது சிறுநீர்ப் பையினின்று சிறுநீரை வெளியேற்றப் பயன்படும் குழல் போன்ற உறுப்பாகும். சிறுநீர்ப் புறக்குழலின் (urethra) அமைப்பு, அளவு, சுற்றியுள்ள பிறப்புறுப்புப் போன்றவை ஆணுக்கும், பெண்ணுக்கும் மாறுபடுகின்றன. ஆண் புறக்குழல். ஏறக்குறைய 18—20 செ. மீ. நீளமுள்ள ஆண் புறக்குழல், சிறுநீர்ப் பையின் புறக்குழல் உட்புழையில் தொடங்கி, கோச முகையிலுள்ள (glans penis) புறக்குழல் வெளிப் புழையில் முடிவடைகிறது. அது அமைந்துள்ள இடங்களுக்கு ஏற்ப, புறக் குழலை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை, விந்தகப் பகுதி (prostatic part), படலப் பகுதி (membranous part), கோசப் பகுதி (penial part) என்பவையாம். சிறுநீர் பாயும் போது, விரிந்து வழி கொடுக்கும் இக்குழலின் உள்ளிடம், பிற சமயத்தில் ஒரு சிறு கீற்றளவே இருக்கும். குறுக்குவெட்டுத் தோற்றத்தில், விந்தகப் பகுதிகளில் குறுக்கு வளைக் கீற்றாகவும், படலப் பகுதியில் ஒரு விண்மீன் போலவும், கோசப் பகுதியில் மீண்டும் குறுக்குக் கீற்றாகவும் இவ்வுள்ளிடம் காணப்படும். வெளிப் புழையில் இதுவே ஒரு நீள் கீற்றாகத் தோன்றும். விந்தகப் புறக் குழல். புறக் குழலின் அகன்ற, மிக விரியக் கூடிய விந்தகப் பகுதி ஏறத்தாழ 3 செ.மீ. நீளமுடையது. சிறுநீர்ப் பைக் கழுத்தில் புறக்குழல் உட்புழையிலிருந்து தொடங்கும் இது, மேலிருந்து கீழாக, விந்தகச் சுரப்பியின் உள்ளே பாய்ந்து, உள் குதக் குழியத்தை (deep perineal pouch) அடையும். இதன் உள்ளிடம், குமிழ்ப் பையை முன்புறமாகக் கொண்ட பிறை வடிவானதாகும். விந்தகப் புறக் குழலின் முன் சுவரை வெட்டிப் பிளந்து உள் நோக்கினால், இத்தோற்றத்திற்கான காரணம் புரியும். முன் சுவரும். பக்கச் சுவர்களும், சாதாரணமாக இருப்பினும், பின் சுவரில், ஒரு நீண்ட மேல் வரம்பு (ridge) காணப்படும். சிலேட்டுமப் படலமும், அதற்கடியிலுள்ள திசுக்களும் வரம்பாக உயர்ந்திருப்பதால் உண்டாகும் இதற்குப் புறக் குழல் முகடு எனப் பெயர். முகட்டின் இரு புறத்தும் காணப்படும் சிறு பள்ளங்களான விந்தகப் பைக் குழிவுகளில் விந்தகச் சுரப்பித் திசுவிலிருந்து வரும் நாளங்கள் திறக்கின்றன. விந்தக முகட்டின் நடுவில் விந்தியத்துங்கம் (colliculus seminalis) என்னும் மேடு உண்டு. இம்மேட்டில் விந்தக யுட்ரிக்கிளின் (prostatic utricle) சிறு புழை திறக்கிறது. இப்புழையின் இருபுறத்திலும் அவ்வப்பக்கத்தின் விந்து பீச்சு நாளம் (ejaculatory duct) சிறு துளை வாயிலாகத் திறக்கிறது. இங்கு நீர், சிறுநீர்ப் புறக் குழலை வந்தடைகின்றது. விந்தக யுட்ரிக்கிள் என்பது ஏறத்தாழ 6 மி. மீ. நீளம் கொண்ட சிறு பை போன்ற அமைப்பாகும். அதன் புழையில் தொடங்கி, விந்தகத் திசுவிற்குள் மேல் புறமாகவும் பின் புறமாகவும் எழுகின்ற இவ்வுறுப்பில் நார்த் திசு, தசைத் திசு, சிலேட்டுமத் திசு ஆகியன உள்ளன. இது ஆண் யோனி (vagina—masculina) எனச் சிலரால் குறிப்பிடப்படும். பெண்ணின் கருவகத்திற்கு ஈடாகத் தோன்றி, ஆண்களில் செயலற்று வடிவற்றுப் போன உறுப்பெனவும் வேறு சிலர் இதைக் கருதுகின்றனர். படலப் புறக் குழல். இது ஆண் புறக் குழலின் மூன்று பகுதிகளிலும், சின்னஞ் சிறியதும், விரிக்கவே முடியாததுமாகும். விந்தகச் சுரப்பி முனையிலிருந்து கோச முனை வரை இப்பகுதி செல்கிறது. விந்தகச் சுரப்பி முனையினின்று வெளிப்பட்டு உள் குதக் குழியத்தே உள்ளோடுகிறது; பின், குதப் படலத்தைத் துளைத்துக் கொண்டு கோச முனைக்குள் நுழைகிறது. உள் குதக் குழியத்தில் புறக் குழலைச் சுற்றிக் குதக் குறுக்கிழை உள் தசையும், புறக் குழல் சுருக்குத் தசையும் உள்ளன. உடன், படலப் புறக் குழலின் இரு பக்கத்திலும், ஒவ்வொரு முனைப் புறக் குழல் சுரப்பியும், அதன் நாளமும் உள்ளன. இச்சுரப்பிகள் உள் குதக் குழியத்தில் இருந்தாலும், அவற்றின் நாளங்கள் குதப் படலத்தைத் துளைத்துக் கொண்டு சென்று, முனையில் புறக் குழல் பகுதியிலேயே திறக்கின்றன. கோசப் புறக் குழல். திரைவு புறக் குழலென்றும் (spongiose urethra) கோசப் புறக் குழலென்றும் (penile urethra) குறிப்பிடப்படும் மூன்றாம் பகுதி கோச முனைத் திரைவகத்தினுள் (bulbus spongiosum penis) இருக்கும். ஏறக்குறைய, 15 செ.மீ. நீளமுடைய இப்பகுதி, குதப் படலத்தின் கீழாக, கோச முனையில் தொடங்கி, முனைத் திரைவகத்தின் வழியோடி, கோச முனையிலுள்ள புறக் குழல் வெளிப் புழையில் முடிவடைகிறது. 15 செ.மீ. நீள முழுதும் சீரான 6 மி.மீ. விட்டமுடைய கோசப் புறக் குழல், இரண்டே இடங்களில் மட்டும் சற்றே விரிந்திருக்கும். தொடக்கத்தில், முனையின் உள்ளோடுகையில் காணப்படும் விரிவே உள்முனைப் பள்ளம் (intrabulbar fossa) எனப்படும். மீண்டும் இறுதிப் பகுதியில், கோச முனையில் விரிந்திருக்கும் இடமே நாவாய்ப் பள்ளம் (navicular fossa) ஆகும். உள் குதக் குழியிலிருந்து வரும் முனைப் புறக் குழல் நாளங்கள், குதப் படலத்தைத் துளைத்துக் கொண்டு, கோசப் புறக் குழலில் திறக்கின்றன. இவை தவிர, புறக் குழலின் மொத்த நீளத்திலும் புறச் சிலேட்டுமத்தில் பல புறக் குழல் சுரப்பிகள் (Urethral glands) உள்ளன. இவை ஆங்காங்கே சிறு சிறு துளைகள் மூலமாகப் புரைக் குழலில்திறக்கும். புறக் குழல் சுருக்கிகள் (urethral sphincters). சிறுகுநீர் புறக் குழலைச் சுற்றி இரு சுருக்கித் தசைகள் உள்ளன. நீர்த் துளைச் சுருக்கி (sphincter vesica) எனப்படுவது நீர்ப்பைக் கழுத்தினின்றும் தொடங்கும் விந்தகப் புறக் குழலின் தொடக்கப் பகுதியைச் சுற்றியிருக்கக் கூடிய சுருக்கித் தசையாகும். வழுக்குந் தசை நார்களாலாகிய நீர்த் துளைச் சுருக்கி, மனிதனின் கட்டுப்பாட்டிற்கு அடங்காதது. புறக் குழல் சுருக்கி உள் குதக் குழியத்தில் படலப் புறக் குழல் பகுதியைச் சுற்றியிருப்பது; இது வரித் தசையால் ஆனது. சிறு குழவிகளைத் தவிர, ஏனையோரில் இது விருப்பசைவுகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. புறக் குழல் நுண்ணமைவு (urethral microstructure). புறக் குழலின் உள்ளகச் சிலேட்டுமப் படலம் காணப்படுகிறது. இது மேற்புறத்தில், நீர்ப்பைச் சிலேட்டுமத்தோடு தொடர்புடையது; கீழாக, கோச முகையை மூடியிருக்கும் தோலோடு தொடர்புடையது. புறக் குழல் சுரப்பிகள், விந்தகச் சுரப்பிகள், முனைப் புறக் குழல் சுரப்பிகளின் படுக்கையத்தோடும் இச்சிலேட்டுமப் படலம் தொடர்பு கொண்டுள்ளமையால், ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு நோய் பரவும் வாய்ப்புகள் உள்ளன. சிலேட்டுமத்தை அடுத்துள்ள புறச் சிலேட்டுமம், குருதி நாளங்கள் நிறைந்த விறைப்புத் திசுவால் (brectile tissue) ஆனது. அதற்கு வெளிப்புறமாக, வழுக்குந் தசை நார்கள் காணப்படுகின்றன. இவ்வழுக்குந் தசை நார்கள் விந்தகப் படலப் புறக் குழல் பகுதிகளில் பெரியவாசு உள்ளன. பெண் புறக் குழல் (female urethra). இது சுமார் 4 செ.மீ. நீளமும், 6 மி.மீ. விட்டமும் கொண்டது. இது சிறுநீர்ப் பையின் புறக் குழல் உட்புழையில் தொடங்கி அகட்டிணையத்தின் பின்புறமாக, முன் கீழ்த் திசை நோக்கிப் பாய்கிறது. பின், குதப் படலத்தைத் துளைத்துக் கொண்டு, புறக் குழல் வெளிப்புழையில் முடிவடைகிறது. முன் பின் நீளப் போக்கில் அமைந்திருக்கும் வெளிப் புழை, யோனிப் புழைக்கு முன்பாகவும் கந்துமுகைக்குப் பின்பாகவும் அமைந்துள்ளது. புறக் குழலைச் சுற்றிப் பல புறக் குழல் சுரப்பிகள் உள்ளன. இவை சிறு, சிறு நாளங்கள் வழியே புறக் குழலில் திறக்கின்றன. பெண் புறக் குழலின் இறுதிப் பகுதியைச் சுற்றியுள்ள பல புறக் குழல் சுரப்பிகள் ஒன்றிணைந்து, புறக் குழல் பக்க நாளத்தில் திறக்கின்றன. ஒவ்வொரு பக்கத்தின் புறக் குழல் பக்க நாளமும், புறக் குழலுக்கு இணையாக ஓடிப் புறக் குழல் வெளிப் புழைக்குச் சற்று முன்பாகத் திறக்கிறது. பெண் புறக் குழல் சுரப்பிகளை, ஆணின் விந்தகச் சுரப்பிக்கு இணையானவை எனக் கருதுவோருண்டு. ஆண் புறக் குழலில் காணப்படும் சிறப்புக் கூறுகள் எதுவும் பெண் புறக் குழலில் இருப்பதில்லை. புறக் குழல் அளவுகளை ஒப்பிட்டு நோக்கினால், பெண் புறக் குழலை விட ஆண் புறக் குழல் மிகு நீளமானது. ஆய்வின் படி, ஒரு பெண் புறக் குழலின் மொத்த நீளம் ஆணின் விந்தகப் புறக் குழல் பகுதியை ஒத்ததாகக் சுருதப்படுகிறது ஆண் புறக் குழலைப் போலவே, பெண் புறக் குழலிலும் மூன்று அடுக்குகள் உள்ளன. இவையே, உள்ளிருந்து வெளியாகச் சிலேட்டுமம் (mucosa), புறச் சிலேட்டுமம், தசையடுக்கு ஆகியனவாகும். புறக் குழல் சிலேட்டுமம் மேலாக நீர்ப் பைச் சிலேட்டுமத்தோடும், கீழாகப் புறச் சிலேட்டும விறைப்புத் திசுவோடும் கூடியது. இதில் சிரைகள் வலையாகப் பின்னிக் கிடக்கின்றன. சிரைகளுக்கு இடையில் இணைத் திசுவும், வழுக்குந் தசை நார்களும் விரவிக் கிடக்கின்றன. வெளிப் புறமாகவுள்ள தசையுறை, புறக் குழல் நீளம் முழுதும் காணப்படுகிறது. உள்ளடுக்கு நீளத் தசை நார்களாலும், வெளியடுக்கு வட்டத் தசை நார்களாலும் ஆனவை. —சுதா சேஷய்யன் நூலோதி. B.D. Chaurasia, Human Anatomy, Regional and Applied, First Edition, CBS Publishers, New Delhi, 1981.