சென்னா
ceṉṉā
இதன் தாவரவியல் பெயர் கேசியா சென்னா (Cassia senna) ஆகும்.
இதன் தாவரவியல் பெயர் கேசியா சென்னா (Cassia senna) ஆகும். இது சீசல்பினேசி என்ற இரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. பெருவாரியான அண்மைக் கால நூல்களில் சென்னாவின் தாவரவியல் பெயர் கேசியா ஆங்கஸ்டிஃபோலியா (Cassia angustifolia) என்று குறிப்பிடப்பட்டுள்ள போதும், அதன் பெயர் கே. சென்னாவே ஆகும். இப்பெயர் முதலிலேயே 1753இல் லின்னேயஸ்ஸால் சூட்டப் பட்டதாகும். இதற்குப் பல வட்டாரப் பெயர்களுண்டு. திருநெல்வேலி–சென்னா, நில ஆவாரை, இந்தியன் சென்னா என்பன அவற்றில் சிலவாம்.
தாயகம். ஆப்ஃரிக்காவைச் சேர்ந்த சோமேலியாவையும், அரேபியாவையும் தாயகமாகக் கொண்ட சென்னாவை, இன்றும் காசியா சிற்றினமாக அரேபிய வறள் பகுதிகளில் காணலாம். மேலும் கே. ஆகுடிஃபோலியா (C. acutifolia) எனப்படும் அலெக்சாண்ட்ரியன் சென்னாவும், திருநெல்வேலி–சென்னாவும் தென்னிந்தியாவில் பயிரிடப் படுகின்றன.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> வளரியல்பு. சென்னா 1.5 மீ. வரை வளரக் கூடிய செடியாகும்.
இலைகள். மாற்றிலையடுக்கு அமைப்பு, சிறகுக் கூட்டிலைகள், 4–7 இணைச் சிற்றிலைகள். இலை எதிரெதிர் அமைப்புக் கொண்டவை. 3 X 0.5 செ.மீ. அளவுடையவை. சொர சொரப்பானவை. தோல் போன்று, இலைக் காம்பில் சுரப்பி இல்லை. இலையடிச் செதில்கள் இரண்டு; மிகச் சிறியவை.
மஞ்சரி. நுனி அல்லது இலைக் கோண ரெசீம் ஆகும். மஞ்சரிக் காம்பு கிளைத்தோ, கிளைக்காமலோ இருக்கும். ஏறக் குறைய, 8 செ.மீ. நீளமிருக்கும். பூவடிச் செதில்கள் 2 மி.மீ. நீளமுடையவை. முட்டை வடிவம்.
மலர். முழுமையான இரு பால் மலர்கள்; ஒழுங்கற்றவை. 1.5 செ.மீ. குறுக்களவு கொண்டவை.
புல்லி வட்டம். 5 புல்லிகள் தனித்தவை; கரண்டி போன்றவை.
அல்லி வட்டம். 5 அல்லிகள், தனித்தவை; மஞ்சள் வண்ணமும், வட்ட வடிவமும், சிறிய காம்பும் கொண்டவை.
மகரந்தத் தாள்கள். 10. அவற்றில் மேலுள்ள மூன்றும் மலட்டுத் தாள்கள், ஏனைய ஏழும் மகரந்தப் பை கொண்டவை. அவற்றில் 2 பெரியவை, 5 நடுத் தரமானவை. மகரந்தப் பைகளின் நுனி துளைகளைக் கொண்டிருக்கும்.
சூலகம். சூலிலை 1, சூலறை 1, மேல் மட்டம். பல சூல்கள், விளிம்பு ஒட்டு முறை, சூலகம் சிறிய காம்பு கொண்டது. சூலகத் தண்டு 1 செ.மீ. நீளமிருக்கும். சூலகம் புறத்தே மஞ்சள் தூவிகள் கொண்டிருக்கும்.
கனி. உலர் வெடி கனி (legume); தட்டையாக 5 X 2 செ.மீ. அளவு கொண்டது, விதைகள் ஏறக் குறைய 8, முட்டை வடிவம். சவ்வு போன்றவை.
சூழ்நிலை. வளமான கரிசல் மண்ணிலும், வளம் குறைந்த செம்புரை மண்ணிலும் சென்னா பயிராகும்.
சாகுபடி. சென்னா செடிகள் மூலம் இனப் பெருக்கமடைகின்றது. மானாவாரி விதைப்பிற்கு ஏக்கருக்கு 10–12 கிலோவும், பாசனப் பயிருக்கு 6 கிலோவும் தேவைப் படும். விதைகளை வீசி விதைத்து, உழுது, மூடி, பாத்தி வெட்டி வாய்க்கால் அமைக்கலாம். விதைத்தவுடன் நீர் பாய்ச்சி, மூன்றாம் நாள் உயிர் நீர் விட வேண்டும். பின்னர் 15–20 நாளுக்கு ஒரு முறை பாசனம் தேவை. மொத்தத்தில் 5–8 முறை நீர் தேவை. சில பகுதிகளில் சென்னாவைப் பாத்திகளில் விதைத்து, நாற்றுத் தயாரித்து, பறித்து நடுவர். டிசம்பரில் விதைத்து, பிப்ரவரி மாதத்தில் நாற்றுகள் நன்கு வளர்ந்தவுடன் பறித்து நட வேண்டும். செடிக்குச் செடி 1 X 1 மீ. இடைவெளி இருக்க வேண்டும். மானாவாரியில் ஜுன்–ஜூலையில் விதைப்பர். வறட்சியான ஏப்ரல், மே மாதங்களில் மிகுதியான பாசனம் தேவை. ஆனால், செடிகளுக்கு நிழலிடத் தேவையில்லை. சென்னா, லெகுமினேசி எனப்படும் பெரும் குடும்பத்தைச் சேர்ந்ததால், அதன் வேரில் வளி மண்டல நைட்ரஜனை நிலைப் படுத்தும் பாக்டீரியா வேர் முடிச்சுகள் காணப் படுகின்றன. இதனால், பொதுவாக இப்பயிருக்கு உரமிடத் தேவையில்லை. இருந்த போதிலும், ஏக்கருக்கு முதலுரமாக 8–10 வண்டி எரு இடுவதுண்டு.
சென்னாச் சாகுபடியில் பல வகைகளுண்டு. நெல் வயல்களில், அறுவடையான பின் விதைக்கப் படுவது ஒரு வகை. சில இடங்களில், கலப்புப் பயிராகச் சாகுபடி செய்வதுண்டு. தோட்டக்கால் நிலங்களில் மிளகாய், எள் இவற்றுடன் ஊடு பயிராகச் சாகுபடி செய்யப் படுகிறது. கரிசல் நிலத்தில் பருத்தியுடன் விதைப்பர்.
அறுவடை. சென்னா 5–7 மாதப் பயிராகும். ஏப்ரல்–மே மாதத்தில் செடிகள் பூக்கத் தொடங்கும். இவ்வாறு தொடக்கத்தில், தோன்றும் பூக்களைக் கொய்து விட வேண்டும். இவ்விதம் செய்யா விடில், செடிகள் விரைவில் காய்ந்து விடும். பூக்களை நீக்குவதால், புதுக் குருத்துக்கள் தோன்றிச் செடிகள் விரிந்து படரும்.
பாசனப் பயிரில் விதைத்த 90 நாளில், மே மாதத்தில் முதல் முறை இலைகளை உருவலாம். முதிர்ந்த, தடித்த, நீலப் பசுமை இலைகளைக் கையால் உருவ வேண்டும். ஒரு மாதத்திற்குப் பின், இரண்டாம் முறை இலைகளை உருவலாம். இறுதியில் இலைகளும், காய்களும் சேர்ந்து உருவி எடுக்கப் படும். இவ்வாறு, ஒரு பருவத்தில் செடியிலுள்ள இலைகள் மூன்று முறை உருவப் படுகின்றன. காய்கள் முற்றிலும் முதிரு முன், கொய்ய வேண்டும். இவ்விதம் செய்தால்தான், காயின் பசுமை நிறம் நிலைத்திருக்கும். ஒரு முறை, காய்களைக் கொய்த பின், செடிகளை நீக்கி விடுவர், இலை பறிக்கும் பயிரில் காய்கள் குறைவாகயிருக்கும்.
உருவிய இலைகளை மர நிழல் அல்லது ஓலைப் பந்தலின் கீழ் 3–4 நாள் உலர விட வேண்டும். பசுமை நிறம் மாறாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இலைகளின் வண்ணத்தைப் பொறுத்து, சென்னா இலைகளின் தரம் அறுதியிடப் படும். காய்களைக் கொத்துக் கொத்தாகப் பறித்துக் காற்றோட்டமான கொட்டகைகளில் 10–12 நாள் கட்டித் தொங்க விட வேண்டும். வெயிலில் உலர்த்தினால், பசுமை நிறம் மாறி விடும். உலர்ந்த நெற்றுகளை அடித்து, விதைகளை எடுக்க வேண்டும்.
விளைச்சல். பாசனப் பயிர் ஹெக்டேருக்கு 250–300 கி.கி. உலர்ந்த இலைகளும், 25–30 கி.கி. நெற்றும் கொடுக்கும். மானாவாரியில் 100–125 கி.கி. இலைகளும், 15–30 கி.கி. நெற்றும் கிடைக்கும். சென்னா மருந்தாக இந்திய மேற்கத்திய மருத்துவத்தில் பயன்படுவதால், இது அயல் நாடுகளில் சிறப்புப் பெற்றுள்ளது.
மருத்துவப் பயன். இச்செடியின் இலைகள், காய்களில் காணப்படும் மருந்துப் பொருள்கள் வயிற்றைத் தூய்மையாக்கும் பண்பு கொண்டவை, இவை சிறந்த மலச் சிக்கல் நீக்கியாகும், பாலூட்டும் தாய்மார்கள் இம்மருந்தை உட்கொண்டால் அவர்களிடம் சுரக்கும் பாலிலும், மலமிளக்கும் பண்பு காணப்படுவ- தாக அறியப் பட்டுள்ளது. மலமிளக்குவதற்குக் காரணம், ஆந்த்ரோகியூனோன் எனும் துணைப் பொருளேயாகும். இது பெருங்குடல் வளையத் தசை நார்களின் சுருங்கி விரியும் தன்மையை, அலைகள் போல் தூண்டி விடுவதால், குடலிலுள்ள பொருள்கள் வெளியேற்றப் படுகின்றன. சென்னா ஓர் உடல் வளர்ச்சி மருந்தும் ஆகும். அலெக்சாண்ட்ரியன் சென்னா, திருநெல்வேலி சென்னாவைப் போன்று, தென்னிந்தியாவில் பயிரிடப்படுவதில்லை. மேலும், அலெக்சாண்ட்ரிடியன் சென்னா இலைகள் தன்னிச்சையாக வளரும் காட்டுச் செடிகளிலிருந்து எடுக்கப் படுகின்றன. —தி. ஸ்ரீகணேசன் நூலோதி. S.L. Kochhar, Economic Botany in the Tropics, Macmillan Indian Ltd., Madras, 1981; S.C. Datta, Medicinal Plants, NCERT, New Delhi, 1973.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 925)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eqzhtxqk/
தமிழ்“சென்னா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/eqzhtxqk/APA
Oliyon Research. (2026). சென்னா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eqzhtxqk/MLA
"சென்னா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/eqzhtxqk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment