அகப்பொருள் இலக்கண நூல்கள்
akapporuḷ ilakkaṇa nūlkaḷ
இலக்கிய இலக்கணங்கள் காலந்தோறும் வளர்ந்தும் புதுமை ஏற்றும் தேவையற்றவற்றை ஓரளவு விலக்கி வளம்பெறுவது இயல்பு.
இலக்கிய இலக்கணங்கள் காலந்தோறும் வளர்ந்தும் புதுமை ஏற்றும் தேவையற்றவற்றை ஓரளவு விலக்கி வளம்பெறுவது இயல்பு. தமிழ் மொழிக்குரிய ஐந்திலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியன தொல்காப்பியத்துள் கூறப்பட்டுள்ளன. அதன் பொருளதிகாரத்தில் பண்டைத் தமிழரின் கவிதை மரபும் வாழ்க்கை நெறியும் வகுத்துக் காட்டப்பட்டுள்ளன. அதனுள் கூறப்பட்ட யாப்பு, அணி ஆகியவை பிற்காலத்தில் தனித்தனி நூல்களாக விரிந்தமை போன்றே ஏனைய பொருட் பகுதிகளும் விரிந்து தனித்தனி நூல்களாய்ப் பெருகின. இவை தொல்காப்பியம் கூறியவற்றைப் பலவகையில் விரித்தும் விளக்கியும் காலத்திற்கேற்றவாறு சிற்சிலகருத்துகளைப் புதிதாக எடுத்தாண்டும் சிலவற்றை மாற்றியும் அமைந்துள்ளன. அகம், புறம் பற்றிய பிற்காலப் பொருளிலக்கண நூல்களுக்குத் தொல்காப்பியமே முன்னோடி ஆகும்.
தமிழ் மொழிக்கே உரிய பொருளிலக்கணத்துள் அகப்பொருள் தனிச்சிறப்புடையது, ‘இன்பமும் பொருளும் அறனும்’ என வரும் நூற்பாவில் தொல்காப்பியர், இன்பமாகிய அகப்பொருளை முதலில் வைத்துப் போற்றுவர். ஆரிய மன்னன் பிரகத்தனுக்குத் தமிழின் சிறப்பினை உணர்த்திய கபிலர் அகப்பொருள் துறை அமைய, குறிஞ்சிப் பாட்டினைப் பாடிக் காட்டினார். கம்பர், கோதாவரியையும் சான்றோர் கவியையும் ஒப்பிடுமிடத்து, ‘அவியகத் துறைகள் தாங்கி, ஐந்திணை நெறி அளாவி’ எனக் கூறிவது, தமிழில் உள்ள அகப்பொருளின் சிறப்புக் கருதியேயாம். ‘பூவில் மணமெனும் புனிதத் தமிழினுக்கு, ஆவியாகும் அகப்பொருளியல்பே’ என்று அறுவகை இலக்கணமும் அகப்பொருளின் சிறப்பைக் குறித்துள்ளது.
தமிழில் ஐந்திலக்கணங் கூறும் நூல்கலாகவும் ஐந்திலக்கணங்களில் ஒன்று மட்டும் கூறும் நூல்களாகவும் இலக்கண நூல்கள் சில பிற்காலத்தே தோன்றின. இவற்றிற்குத் தொல்காப்பியமே அடிப்படை. வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம், அறுவகை இலக்கணம் ஆகிய நூல்கள் தமிழில் ஐந்திலக்கணங்களையும் கூறும் நூல்களாகும். இவை அகப்பொருட் செய்திகளை நூலின் ஒரு பகுதியாகவே கூறுகின்றன. அகப்பொருளை மட்டுமே விரித்துரைக்கும் தனி நூல்கள், இறையனார் களவியல் என்னும் இறையனார் அகப்பொருள், அகப்பொருள் விளக்கம், களவியல் காரிகை, மாறன் அகப்பொருள் ஆகியவையாம். தொல்காப்பியம் கூறும் பொருளதிகாரச் சிந்தனைகளை ஏற்று, மற்ற இலக்கண நூல்கள் விரித்துரைப்பினும், மிகப் பெரிய வேறுபாடுகளை அவை கொண்டில. அகப்பொருள் மட்டுமே கூறும் தனித்த நூல்களுள் இறையனார் அகப்பொருள் முதலாவதாகும்.
அகப்பொருளைக் கூறும் ஐந்திலக்கண நூல்கள்
வீரசோழியம் (கி.பி, 11-ஆம் நூற்றாண்டு) புத்தமித்திரனார் எழுதியதாகும். இந்நூலுக்குப் பெருந்தேவனார் உரை எழுதியுள்ளார். அகப்பொருள் பற்றிய சில நூற்பாக்கள் இந்நூலில் உள்ளன. அகப்பொருள் பற்றிய பகுப்பை வீரசோழியம், அகம், அகப்புறம் என இரண்டாக அமைத்துள்ளது. இந்நூல் உரை வகையை இருபத்து ஏழாகக் கூறும். பொருட்பலத்தில் இவற்றைக் காணலாம்.
இலக்கண விளக்கம் (கி.பி.17-ஆம் நூற்.)
ஐந்திலக்கண நூல்களுள் ஒன்றாகிய இந்நூல் வைத்தியநாத தேசிகரால் எழுதப்பட்டது. அவரே இதற்கு உரையும் எழுதியுள்ளார். இதில் உள்ள அகப்பொருள் பற்றிய நூற்பாக்கள் இருநூற்று இருபத்தாறாகும். மாணாக்கர்களுக்கு அகப்பொருள் கற்றுத்தந்ததன் விளைவாக இந்நூல் எழுந்ததென இதன் முன்னுரை தெரிவிக்கிறது. அம்பிகாபதிக் கோவை, தஞ்சை வாணன் கோவை ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டப்பெற்றுள்ளன. இந்நூல் பெரும்பாலும் அகப்பொருள் விளக்கத்தைத் தழுவி அமைந்துள்ளது.
தொன்னூல் விளக்கம் (கி.பி. 18-ஆம் நூற்.)
வீரமாமுனிவரால் எழுதப்பெற்ற இந்நூல் சில பொருட் செய்திகளை எடுத்துக்காட்டுகிறது. இது பொருளதிகாரம் என்னும் பகுதியில் சில புதுமையான செய்திகளைத் தருகிறது. அகப்பொருளை உரிமை என்ற பகுப்பில் இடவுரிமை, கால உரிமை எனப் பகுத்துரைப்பர் இந்நூலாசிரியர். நூற்பயன் குறிக்கும் பொருளையே ‘பொருள்’ என்பதற்குப் பொருளாகக் கூறுவர் ஆசிரியர்.
முத்துவீரியம் (19-ஆம் நூற்.)
இந்நூல் முத்துவீரப்ப உபாத்தியாயர் எழுதிய ஐந்திலக்கண நூலாகும். இதன்கண் அகவொழுக்கவியல், களவொழுக்கவியல், கற்பொழுக்கவியல் எனப் பாகுபடுத்தி அகப்பொருளுரைத்துள்ளார்.
சுவாமிநாதம் (19-ஆம் நூற்.)
ஐந்திலக்கணமும் கூறும் இந்நூல் சாமிகவிராயர் என்னும் சாமிநாத பண்டிதரால் எழுதப் பெற்றது. அகத்திணை மரபு, களவு, கற்பு ஆகியன இடம் பெற்றுள்ளன. இந்நூல் பெரிதும், நம்பி அகப்பொருளைத் தழுவிச் செல்கிறது.
ஆறுவகை இலக்கணம் (20-ஆம் நூற்.)
இந்நூல் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால் எழுதப்பட்டதாகும். அகப்பொருட் செய்திகள், உறுப்பியல், குறிப்பியல், பழைமையியல்பு, துறையியல்பு, நிலத்தியல்பு, உழியியல்பு. வேற்றுயிர் இயல்பு முதலிய பகுதிகளில் இடம் பெற்றுள்ளன. இந்நூல் ஐவகை இலக்- கணங்களோடு வண்ண இலக்கணத்தை ஆறாவதாகச் சேர்த்து அறுவகை இலக்கணம் என வழங்கப்படுகிறது.
அகப்பொருள் மட்டும் கூறும் இலக்கண நூல்கள்
அகப்பொருள் மட்டும் கூறும் தனி இலக்கண நூல்களை அகப்பொருள் இலக்கண நூல்களாகக் கருதலாம்.
இறையனார் அகப்பொருள்
இஃது அகப்பொருள் மரபுகளைத் தனியே விரித்துரைக்கும் இலக்கண நூலாகும். இந்நூல் உக்கிரப் பெருவழுதி காலத்தில் வெளியிடப்பட்டதாக இதன் உரையிலிருந்து அறிய முடிகிறது. இந்நூலுக்கு உரை எழுந்த காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டாகும். பாண்டியனும் சங்கத்தாரும் பொருளிலக்கணம் இடர்ப்பட்டமை கண்டு, ஆலவாய்ப் பெருமானால் வெளிப்படுத்தப்பட்டது இந்நூல் என்பதனை இதன் உரை தெரிவிக்கிறது. நக்கீரர் இதற்கு உரை கண்டார். இவர் சங்க கால நக்கீரரினும் வேறுபட்டவர்.
ஒரு நூல் அது கூறும் பொருளாலும் பெயர் பெறும் என்பதற்கேற்ப, இது இறையனார் அகப்பொருள் என்னும் பெயர் கொண்டுள்ளது. களவின் வழிவந்த கற்பே சிறப்புடையது எனக் கொள்ளும் இந்நூல், இறையனார் களவியல் என்னும் பெயரையும் கொண்டது.
களவியல் 33 நூற்பாக்களும் கற்பியல் 27 நூற்பாக்களுமாக அறுபது நூற்பாக்களைக் கொண்டது இந்நூல். இந்நூல் அகப்பொருட் செய்திகளை விரிவாக எடுத்துரைக்கவில்லையெனினும் இன்றியமையாத பகுதிகளில் அகப்பொருளைச் சுருங்கக் சொல்லி விளங்க வைக்கிறது. அகமாந்தர் பண்பு நலன்கள் தொல்காப்பியம்போல விரித்துக் கூறப்பெறாவிடினும் தலைவன், தலைவி, தோழி ஆகியோர்க்கான தனித்த பண்புகள் ஓரளவு சுட்டிக்காட்டப் பெற்றுள்ளன. அகத்திணைப் பொருள்களின் அடிப்படையை விளக்கிச் செல்லும் நிலையை இந்நூலில் காணமுடியவில்லை.
இந்நூலின் உரையாசிரியர் அகப்பொருட் செய்திகளையெல்லாம் இனிய தமிழில் நாடகக் காட்சியாகத் தந்து, நிகழ்ச்சிகளை அகப் பின்னணியில் விளக்கிச் செல்வது கற்போருக்கு இன்பம் பயக்கும்.
இத்நூலின் உரை பொழிப்புரை, விளக்கம், விளக்கத்தின் விரி என்ற முறையில் அமைந்துள்ளது. தமிழ் உரைநடையின் செம்மாந்த செலவினை இதன் உரை வழி அறியலாம்.
தமிழ் நெறி விளக்கம் (கி.பி. 9-ஆம் நூற்.)
இந்நூலின்கண் அகப்பொருள் பற்றிய இருபத்தைந்து நூற்பாக்கள் உள்ளன. இதனை எழுதியோர் யார் என அறியப்படாவிடினும், இந்நூலின் உரை இதனை இயற்றியோராலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும் எனக்கருதப்படுகிறது. இந்நூல் அகப்பொருள் பகுப்புப் பற்றியும் அகத்திணை அடிப்படை பற்றியும் குறிப்பிடுகிறது. களவு, கற்பு பற்றிய செய்திகள் ஆறு நூற்பாக்களில் கூறப்பட்டுள்ளன. இந்நூல் சங்க இலக்கியத்தினின்றும் மேற்கோள்களைக் காட்டிச் செல்கிறது. இந்நூலை வெளியிட்ட பெருமை உ.வே. சாமிநாதையரைச் சாரும்.
அகப்பொருள் விளக்கம் (கி.பி. 13-ஆம் நூற்.)
தொல்காப்பியம் விரித்துரைத்த அகப்பொருட் செய்திகள் பலவும் இந்நூலில் ஓர் ஒழுங்கில் கூறப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர் நாற்கவிராச நம்பியாவார். நாற்கவி என்ற சிறப்புக் காரணமாக இவர் ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்ற நால்வகைக் கவியும் பாடும் திறமிக்கவர் எனலாம். வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவர் என்பதை இந்நூல் சிறப்புப் பாயிரவழி உணரலாம். இந்நூலுக்குப் பழைய உரை உண்டு. இப்பழைய உரையை ஆசிரியரே எழுதினார் என்பாரும் உளர். அதற்குத் தக்க சான்று இல்லை.
இந்நூல், தொல்காப்பியர் கூறிய அகப்பொருட் செய்திகளைச் சுருக்கியும், இறையனார் அகப்பொருள் கூறியிருக்கும் களவு, கற்பு பற்றிய செய்திகளை விரித்தும் எழுதப்பட்டதாகும், இது அகத் திணையியல், களவியல், வரைவியல், கற்பியல் ஒழிபியல் ஆகிய ஐந்து இயல்களைக் கொண்டது. இந்நூலில் உள்ள நூற்பாக்கள் 252 ஆகும்.
தொல்காப்பியமும் இறையனார் அகப்பொருளும் அகப்பொருளைக் களவியல், கற்பியல் என ஈரியலாகப் பகுத்திருக்க, அகப்பொருள் விளக்கம் இவற்றிற்கிடையே வரைவியல் என ஓரியல் அமைத்துக் கொண்டுள்ளது. இந்நூலுக்குப் பின்வந்த அகப்பொருள் இலக்கண நூலான மாறன் அகப்பொருளும், மற்றும் சில ஐந்திலக்கண நூல்களும் இந்நூல் கூறும் செய்திகளையே பெரிதும் தழுவி உரைக்கின்றன.
தொல்காப்பிய அகப்பொருள் மரபைப் பெரிதும் தழுவிச் செல்லும் இந்நூல், ஆங்காங்கே சில மாற்றங்களையும் கொண்டுள்ளது. கருப்பொருள் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறது இந்நூல், தொன்னூல் விளக்கம் போன்ற நூல்கள் கருப்பொருளில் பல்வகைக் கருப்பொருளையும் குறித்துச் செல்லுதற்கு இந்நூல் ஒருவகையில் காரணமாய் விளங்குகிறது. சாமிநாதம் காட்டும் அகப்பொருட் செய்திகள் பல அகப்பொருள் விளக்கத்தைப் படி எடுத்ததுபோல் உள்ளன.
இந்நூல் அகத்திணை இயல், அகப்பொருள் வகைகள், புணர்ச்சி வகை, அறத்தொடு நிற்றல், கற்பு, பிரிவு வகை முதலான செய்திகளைக் குறிப்பிடும். களவியலில், தொல்காப்பியர் குறித்த கூற்றுவகைகளை விரித்தும், தொகுத்தும் கூறுகிறது.
வரைவியல் என்னும் பகுதி இந்நூல் பகுத்துக் கொண்ட புதிய இயலாகும். கற்பெனும் கைகோளின் நிமித்தமாகிய வரைந்து கோடலின் இயல்பினைத் தனியே விரித்துரைக்கக் கருதி இவ்வியல் அமைக்கப்பட்டுள்ளது. கற்பியலில் இல்வாழ்வு நான்காகப் பகுத்துரைக்கப்படுகிறது. ஒழிபியலில் 34 செய்யுள் உறுப்புகள் கூறப்பட்டுள்ளன. திணை, கைகோள், கூற்று, கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை என்ற பன்னிரண்டு அகப்பாட்டு உறுப்புகளும் ஒழிபியலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
களவியல் காரிகை (கி.பி. 14-ஆம் நூற்.)
அகப்பொருள் துறைகளை இனிதின் விளக்கும் இந்நூல் இறையனார் அகப்பொருளைத் தழுவி எழுதப்பட்டதாகும்; நூலின் வடிவம் சிதைந்துள்ளது. கட்டளைக் கலித்துறையால் இதன் நூற்பாக்கள் அமைந்துள்ளன. தொடக்கத்தில் பத்துச் செய்யுளும் இறுதியில் ஆறு செய்யுளும் மறைந்து போயின. இப்போது பதினொன்று முதல் ஐம்பத்துநான்கு நூற்பாக்கள் உள்ளன. கலித்துறைப் பாடல்கள் அந்தாதியாக அமைந்துள்ளன. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. வையாபுரிப்பிள்ளை இந்நூலுக்குக் களவியல் காரிகை எனப் பெயரிட்டார்.
இறையனார் அகப்பொருள் உரையில் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட கலித்துறைச் செய்யுட்கள் இன்ன நூலைச் சார்ந்தவை என அறியப்படாமல் இருந்து, பின்னர் அவை பாண்டிக் கோவையிலிருந்து எடுக்கப்பட்டன என்பது புலனாயிற்று.
யாப்பருங்கலக் காரிகை யாப்புக்குரிய செய்திகளைக் கலித்துறைச் செய்யுட்களால் விளக்குவது போன்று, அகப்பொருட் செய்திகளை அந்தாதித் தொடையிலமைந்த கலித்துறைச் செய்யுட்களால் கருங்கவுரைக்கிறது இந்நூல். இஃது இறையனார் களவியல் நூற்பாக்களை அடிப்படையாகக் கொண்டமைந்து, பரந்துபட்ட அகப்பொருட் செய்திகட்கெல்லாம் அரிய மேற்கோள்காட்டிச் செல்கிறது.
இந்நூலில் அரையர் கோவை, வங்கர் கோவை, தில்லையந்தாதி, கோயிலந்தாதி, நறையூரந்தாதி, பொருளியல், கிளவிமாலை, கண்டனலங்காரம், பல்சந்தமாலை, கிளவித்தெளிவு, இன்னிசை மாலை, தமிழ்நெறி விளக்கம் முதலிய நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுத்தாளப்பெற்றுள்ளன. ஆசிரியரே இதற்கு உரை எழுதியுள்ளார். ஆயினும் உரை விளக்கம் விரிவாக எழுதப்பெறவில்லை.
இந்நூலின்கண் கருப்பொருட் செய்திகள் சில அரிதின் உரைக்கப்பட்டுள்ளன. பாலை நிலத்துக்குரியனவாக ஆதித்தன், பகவன் ஆகிய தெய்வங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. காதற் குறிப்புகளைக் கழிபடர் கிளவி, கையறு கிளவி, தன்னுட்கையாறெய்திடு கிளவி என வகுத்துக் காட்டியுள்ளது.
மாறனகப் பொருள் (கி.பி. 16-ஆம் நூற்.)
அகப்பொருளைத் தனியே கூறும் நூல்களுள் இறுதியில் தோன்றியது இந்நூல். திருக்குருகைப் பெருமான் இந்நூலை இயற்றியவர் ஆவார். திருப்பதிக் கோவைக்கு அகப்பொருட் கிளவியாக இந்நூல் எழுந்ததாகும். இந்நூல் பெரிதும் அகப்பொருள் விளக்கம் கூறியவற்றையே சற்று விரித்துரைக்கிறது. தொல்காப்பிய நூற்பாக்கள் சிலவற்றையும் பின்பற்றியுள்ளது. இவ்விரண்டு நூல்களிலிருந்தும் பிற அகப்பொருள் இலக்கணம் கூறும் நூல்களிலிருந்தும் தொகுத்தும் வேண்டும் வழி விரித்தும் புதியனவாய்ச் சிலவிடத்துக் கூட்டியும் இதன் ஆசிரியர் எழுதியுள்ளார்.
இந்நூலில் ஆசிரியப்பாவாலும் விருத்தப்பாவாலும் ஆன இருசிறப்புப் பாயிரங்கள் உள்ளன. இவை நூலின் காலத்தையும் ஆசிரியரைப் பற்றிய செய்தியையும் தருகின்றன.
363 நூற்பாக்களைக் கொண்ட இந்நூல் களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என்று பகுக்கப்பட்டுள்ளது. ஒழிபியல் இதுகாலும் கிடைக்கவில்லை. எனவே களவியலில் 62 நூற்பா; வரைவியலில் 34 நூற்பா; கற்பியலில் 10 நூற்பா ஆக 106 நூற்பாக்கள் கிடைத்துள்ளன. இதன் நூற்பாக்கள் ஓரடிச் சிறுமையும் 25 அடிப் பெருமையுமுடையன.
நம்பி அகப்பொருளில் கூறியவாறு கற்பின் இறுதி நிலை, துறவு என இந்நூலும் குறித்துச் செல்கிறது. பிரிவு வகைகளை விரிவுபடுத்திக் கூறுகிறது.
அகப்பொருளிலக்கணத்தின் வளர்ச்சியும் மாற்றமும்
தொல்காப்பியம் உரைத்த அகப்பொருட் செய்திகளுக்கும், பிற்காலத்தெழுந்த அகப்பொருள் இலக்கண நூல்களுக்கும் ஐந்திலக்கணம் கூறும் அகப்பொருள் செய்திகளுக்கும் இடையே நிலவும் வளர்ச்சி மாற்றங்களையும் வேறுபாடுகளையும் காண்பது அகப்பொருள் நூல்களின் வளர்ச்சியை அறிய உதவியாக அமையும்.
அகத்திணைக் கூறுகளான முதல், கரு, உரிப்பொருள்கள் பிற்காலத்திய நூல்களில் விரிந்துள்ளன. தெய்வமும் நிலமும் குறித்துவரும் தொல்காப்பிய நூற்பா, முல்லை நிலத்தை முதலில் சுட்டும், அந்நூற்பாவின் இறுடியில் வரும் ‘சொல்லிய முறையான் சொல்லவும் படும்’ என்பதனைப் ‘பிறவாறும் சொல்லப்படும்’ எனக் கொண்டு பிற்கால நூல்கள் பல குறிஞ்சியை முதன்மைப்படுத்தியுள்ளன. சிறுபொழுது பற்றிக் கூறுமிடத்துத் தொல்காப்பியர், நண்பகலின் பிற்பொழுதாக எற்பாடு என்பதனைக் கருதுவர். நாற்கவிராச நம்பி எற்பாட்டைக் காலைப் பொழுதாகக் கருதியுரைப்பர்.
கருப்பொருள் பற்றிய பரப்பு, தொல்காப்பியத்தைக் காட்டிலும் பிற்கால அகப்பொருள் கூறும் நூல்களில் மிகுதியும் விரிந்துள்ளது. கருப்பொருள் வகையை எட்டெனத் தொல்காப்பியம் கூற, அகப்பொருள் விளக்கம் பதினான்காக விரித்துள்ளது. உயர்ந்தோர், அல்லோர், ஊர், நீர், பூ, பண் ஆகிய ஆறும் தொல்காப்பியத்தில் கருப்பொருளாகக் கூறப்படவில்லை.
நானிலத் தெய்வங்களைத் தொல்காப்பியர் மாயோன், சேயோன், வேந்தன் (இந்திரன்), வருணன் எனக் குறிப்பார். பாலை நிலத்திற்குரிய தெய்வமாக இறையனார் அகப்பொருள் உரைகாரர், பகவதியையும் ஆத்தனையும் குறிப்பார். அகப்பொருள் விளக்கம், கன்னி (கொற்றவை)யைப் பாலை நியத்திற்குரிய தெய்வமாகக் கருதும். தமிழ்நெறி விளக்கத்தில் இரவி (சூரியன்), பகவதி ஆகியோர் குறிக்கப்பட்டுள்ளனர். களவியல் காரிகை இதனைப் பின்பற்றி மொழிந்துள்ளது.
அறுவகை இலக்கணம் முதற்பொருளை நிலத்தியல்பிலும், ஐந்திணை இருப்பிடங்களை உழியியல்பிலும், மா, புள் பற்றிய கருப்பொருட் செய்திகளை வேற்றுயிரியல்பிலும் குறிக்கிறது.
தொன்னூல் விளக்கம், பொழுது குறித்தும் கருப்பொருள் குறித்தும் கூறும் கருத்துகள் புதுமையாக உள்ளன. கருப்பொருட் செய்திகளில் இராகம், கானம் முதலானவை குறிக்கப்பட்டுள்ளன. சாமிநாதம் மருதத்திற்குரிய கருப்பொருளில் தமிழ், கல்வி பயிலல், பாடல், ஆடல் போன்றவை சுட்டப்பட்டமை வியப்பைத் தருவதாகும். இவை கால வகையால் விளைந்த மாற்றங்களாகும்.
தொல்காப்பியம் ஐவகை நிலத்துக்குரிய பெரும் பொழுது, சிறுபொழுது ஆகியவற்றை ஆறாகப் பகுத்துள்ளது. அகப்பொருள் விளக்கம், பெரும்பொழுது ஆறெனவும் சிறுபொழுது ஐந்தெனவும் கூறும். முத்து வீரியம், அகப்பொருள் விளக்கத்தைப் பின்பற்றியுள்ளது. ஆயினும் பெரும்பொழுது, சிறுபொழுது ஆகிய காலங்களில் நிகழும் இயற்கை நிகழ்ச்சியாக முத்துவீரியம் விரித்துரைப்பது, தொல்காப்பியம், அகப்பொருள் விளக்கம் ஆகியவற்றில் காணப்படாததாக உள்ளது. மக்கட் பெயர்களில் மருத நிலத்துக்குரியதாக மகுணன் என்ற பெயரைத் தொன்னூல் விளக்கம் உரைப்பது, வேறெந்நூலுள்ளும் காணப்படாத ஒன்று.
அகப்பொருட் பிரிவுகளை அகப்பொருள் நூல்கள் தத்தமக்குத் தோன்றியவாறு பகுத்துக் கொண்டுள்ளன. தொல்காப்பியம், அகப்பொருள் விளக்கம், சாமிநாதம், முத்துவீரியம் ஆகியன அகப்பொருட் பிரிவை ஏழு எனக் கூறும்.
தொல்காப்பியம் கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்ற ஏழினையும் குறிக்கும். இறையனார் அகப்பொருள் ஆசிரியர், ஐந்திணை மட்டுமே கருதி அன்பின் ஐந்திணைக்கே இலக்கணம் வகுத்தார். அகப்பொருள் விளக்கம் அகப்பொருள் ஏழெனக் கூறினும், கைக்கிளை, பெருந்திணை ஆகிய இருதிணைகளையும் அகத்திற்குரியது, புறத்திற்குரியது எனப்பகுத்துக் கொண்டுள்ளது. தமிழ்நெறி விளக்க ஆசிரியர் அகப்பொருளை அகம், அகப்புறம் எனப் பகுத்துள்ளார். இளம்பூரணர், ‘அடியோர் பாங்கினும்’ என்னும் தொல்காப்பிய நூற்பாவில் கைக்கிளை, பெருந்திணைகளைப் புறமாகக் கருதுவர். இலக்கண விளக்க ஆசிரியர் அகம், அகப்புறம் எனப் பகுத்து அகப்புறத்தில் கைக்கிளை பெருந்திணைகளை அடக்குவர். ஐந்திணைகளிலும் கைக்கிளை மயங்கும் எனச் சாமிநாதம் எடுத்துரைக்கும். அகப்பொருள் விளக்கம், கைக்கிளை, பெருந்திணைக்கு இலக்கணம் வகுத்துள்ளது.
தொல்காப்பிய அகத்திணை இயலில் கூற்றுவகையாகச் சொல்லப்பட்டன, பிற்கால இலக்கண நூல்களில் கிளவித் தொகையாகக் கூறப்பட்டுள்ளன.
தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் ஆகியன களவிற்குரிய இலக்கணத்தை வகுத்துள்ளனவேயன்றிக் கனவிற்குரிய கிளவித்தொகை இவை எனத் தொகுத்துச் சுட்டவில்லை. நாற்கவிராச நம்பி பதினேழு கிளவித் தொகைகளைச் சுட்டியுள்ளார். நம்பி கூறியவை தொல்காப்பியத்தில் கூற்றுவகையாக உள்ளன. நம்பி அவற்றை விரித்தும் தொகுத்தும் கூறியுள்ளார்.
களவுக்காலத்தில் தலைவிக்குக் கூற்று நிகழுமிடங்களில் இரவுக்குறியும் ஒன்று, இறையனார் அகப்பொருள் இதனை இலக்கணப்படுத்தவில்லை. அகப்பொருள் விளக்கம், இரவுக்குறி இடையீடு ஏழெனக் காட்டுவது பிற்காலத்திய வளர்ச்சி. இவற்றை இரவுக்குறியிடையீட்டின் வகையொன்றின் பிரிவுகளாகக் கூறியுள்ளமை நோக்கற்பாலது.
தொல்காப்பியம் குறித்துள்ள மடலேறுதல், உடன்போக்கு போன்ற அகப்பொருட் செய்திகள், இறையனார் அகப்பொருளில் காணப்படவில்லை. ஆயினும் அறத்தொடு நிற்றல் பற்றிய செய்திகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. பின்னர்த் தோன்றிய அகப்பொருள் இலக்கண நூல்களின் விரிவுக்கு இது வேண்டப்படுவதாயிற்று. ஆயின் அறத்தொடு நிற்றலைக் களவு, கற்பு இவற்றில் எவ்வியலில் அடக்குவது என்பதில் இலக்கண நூல்கள் மாறுபடுகின்றன. தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் ஆகியவை, அறத்தொடு நிற்றலைக் களவியலில் வைத்துக் கூறும். அறத்தொடு நிற்றலில் சிலவற்றை அகப்பொருள் விளக்கம், களவியலிலும், அறத்தொடு நிற்றல் வகை முதலான சிலவற்றை வரைவியலிலும் எடுத்துக் கூறும். களவியல் காரிகை கற்பியலில் அறத்தொடு நிற்றலைக் கூறும். அறத்தொடு நிற்றலை இந்நூல் வெளிப்படை நிலை எனச் சுட்டும்.
தொல்காப்பியம் வகைப்படுத்திக் கூறாத கற்பின் நிலைகளை அகப்பொருள் விளக்கம், களவு வழி வந்த கற்பு, களவு வழி வாராக் கற்பு என வகைப்படுத்தும். தலைமகனுக்குக் களவிற் புணர்ச்சியும் வதுவைப் புணர்ச்சியும் பொருந்துவனவாகும் எனக் கூறும் அகப்பொருள் விளக்கம், அவ்வொழுக்கத்திற்குரியவர் காதற் பரத்தையரும் காமக்கிழத்தியரும் பின்முறை வதுவைப் பெருங்குலக்கிழத்தியரும் என மூவகையினர் என்று சுட்டும்.
தொல்காப்பியம் குறிப்பிடும் களவிற்கும் கற்பிற்குமுரிய பிரிவுகள் அனைத்தையும், அகப்பொருள் விளக்கம் வகைப்படுத்திக் கூறும். வாயில்களாகத் தொல்காப்பியம் பன்னிருவரைக் குறிக்கும். பொருள் விளக்கம் பாகன், புதல்வன் ஆகிய இருவரையுங் கூட்டிப் பதினான்காகக் கூறும்.
இவ்வாறு தொல்காப்பியம் கூறிய அகப்பொருட் செய்திகள் பிற்காலத்து இலக்கண நூல்களில் காலச் சூழலுக்குத்தக விரிந்தும் சுருங்கியும் அமைந்துள்ளன. தேவையான இடங்களில் சமுதாய மாற்றங்களுக்கு ஏற்பவும் அக இலக்கியப் போக்கிற்கு ஏற்பவும் சிற்சிலவற்றைப் புதிதாகக் கருதியுள்ளதையும் அகப்பொருள் இலக்கண வளர்ச்சியில் காணமுடிகிறது. சிற்றிலக்கியங்களில் ஒன்றான கோவை இலக்கிய வளர்ச்சிக்கு அகப்பொருள் இலக்கண நூல்கள் உறுதுணையாகி அவற்றைத் தழைக்கச் செய்துள்ளன. அண்மைக் காலங்களில் அகப்பொருள் விளக்கம் பலரால் பயிலப்பட்டு வருகிறது. இது அதன் செல்வாக்கை உணர்த்தும். ஆர்.கு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 88)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ensufywm/
தமிழ்“அகப்பொருள் இலக்கண நூல்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ensufywm/APA
Oliyon Research. (2026). அகப்பொருள் இலக்கண நூல்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ensufywm/MLA
"அகப்பொருள் இலக்கண நூல்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ensufywm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment