என்பார் பிரான்சு நாட்டைச் சார்ந்த அரசியல் வல்லுநர்; சூயசுக் கால்வாய்த் திட்டத்தை உருவாக்கியவர். இவர் கி.பி. 1805–ஆம் ஆண்டு வெர்சேயில் (Versailles) பிறந்தார். தம் தந்தையார் செய்துவந்த தொழிலினைப் பின்பற்றி இவரும் தூதரகப் பணித் துறையில் அலுவலராக 1928–ஆம் ஆண்டு சேர்ந்தார். இலெசப்சு (Lesseps), எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் பிரெஞ்சுத் தூதராக கி.பி. 1833 முதல் 1838 வரை பணியாற்றினார். அந்நாட்டில் இருந்தபோது செங்கடலையும் மத்திய தரைக்கடலையும் இணைக்கும் கால்வாய் அமைக்கும் கருத்தைப் பிரெஞ்சுப் பொறியியல் வல்லுநர்கள் வெளியிட்டதை அறிந்து, அதில் ஆர்வம் காட்டினார். இதனிடையில் கி.பி. 1849–ஆம் ஆண்டு இலெசப்சு தூதரகப் பதவியிலிருந்து ஓய்வு பெறுமாறு வற்புறுத்தப்பட்டார். உரோமானியக் குடியரசினைப் பிரெஞ்சுப் படைவீரர்களுக்குச் சரணடையுமாறு இவர் நடத்திய பேச்சு வார்த்தைகள் தோல்வியுற்றதே இவர் பதவி துறக்கக் காரணமாயிற்று. தம் பழைய நண்பரும் எகிப்திற்கு வருகை புரிந்திருந்த புதிய தூதருமான சையது பாட்சா என்பாரைத் தூண்டி, சூயசுக் கால்வாய்க் குழுவிற்கு நிதி உதவியளிக்க வேண்டுமென கி.பி. 1854–ஆம் ஆண்டில் கேட்டுக்கொண்டார். இக்குழு கி.பி. 1858–ஆம் ஆண்டில் இவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. சூயசுக் கால்வாயைத் தோண்டும் பணியும் கி.பி. 1859–இல் தொடங்கப்பட்டது. ஆனால், இப்பணி இடையில் கி.பி. 1863 வரை தடைப்பட்டது. சையது பாட்சாவை அடுத்து, அப்பதவிக்கு வந்தவர் அதை நிறுத்திவிட்டார். ஆனால் பிரான்சு நாட்டின் பேரரசராக இருந்த மூன்றாம் நெப்போலியன் கால்வாய் வெட்டும் பணியைத் தொடங்கி முடிக்க வேண்டுமென வற்புறுத்தியதன் பேரில் மீண்டும் அப்பணி தொடங்கியது. சூயசுக் கால்வாய் கி.பி. 1869–ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அதன் விளைவாகக் கீழை நாடுகளிலிருந்து கப்பற் பயணம் செய்வோரின் பயணத் தூரம் பெரிதும் குறைந்தது. இலெசப்சை அனைவரும் போற்றினர் இவருக்குப் பல விருதுகள் வழங்கப்பட்டன. இலெசப்சு கி.பி. 1873–ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல புதுத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். புதிய உலகமான வட, தென் அமெரிக்கக் கண்டங்களுக்குக் குறுக்காகப் பனாமாவில் ஒரு கால்வாயை வெட்ட, கி.பி. 1879–இல் ஒரு திட்டம் தீட்டினார். அத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பிருந்தது. எனினும், இவர் அனைத்து எதிர்ப்புகளையும் தாங்கி நின்றார். இலெசப்சு பெருங்கடல் கால்வாய்க் குழு என்னும் நிறுவனத்தை கி.பி. 1881–இல் நிலைநாட்டினார். அதன் தொடர்பாக, கி.பி. 1885–இல் பெருந்தொல்லைகள் எழுந்தன. போதுமான நிதி வசதியின்மையாலும், பொறியியல் தொடர்பான தொல்லைகளாலும், அலுவலகக் கண்காணிப்பு ஆய்வுத் தொல்லைகளாலும் கி.பி. 1889–இல் இக்குழு வழக்குக்குட்பட்ட சொத்தாகக் கருதப்படலாயிற்று. இக்குழுலின் தலைவரான இலெசப்சும் இவர்தம் மகன் சார்லசு என்பாரும் வங்கியை மோசடி செய்த குற்றத்திற்காக கி.பி. 1893–இல் ஐந்தாண்டுத் தண்டிக்கப் பெற்றுச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், மேல் முறையீட்டு நீதிமன்றம் அத்தண்டனையை நீக்கிவிட்டது. இவர் கி.பி. 1894–இல் காலமானார்.