செருமானிய நாட்டவரான இவர் உலகிலேயே முதன் முதல் செயற்பட்ட கூட்டுறவு இயக்கத்தை கி.பி. 1818–ஆம் ஆண்டில் தோற்றுவித்தார். பல செருமானிய நகரங்களில் நகரத் தந்தையாகக் (Mayor) கி.பி. 1845 முதல் 1865 வரை பணியாற்றினார். செருமானிய வேளாண்மைத் துறையில் கி.பி. 1846–47–ஆம் ஆண்டுகளில் பெரும் இழப்புகள் ஏற்பட்டு மந்தநிலை காணப்பட்டது. இந்நெருக்கடி நிலையை இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம் (Raiffeisen Friedrich Wilhelm), கூட்டுறவு முறையில் வேளாண்மையினருக்குக் கடன் வழங்குவதன் மூலம் சீர் செய்யலாம் எனக் கருதி, அதைச் செயற்படுத்தியும் காட்டினார். இத்திட்டத்தை நிறைவேற்ற முதலில் தன் சொந்த நிலத்தையும் அதனுடன் சார்ந்த சொத்துகளையும் பயன்படுத்தினார். அவ்வாறு இரெய்பீசனின் தனிப்பட்ட முயற்சியில் தொடங்கப்பட்ட கூட்டுறவுக் கடன் வங்கி நாளடைவில் வளர்ச்சி பெற்று கி.பி. 1872–ஆம் ஆண்டில் வட்டாரக் கூட்டுறவுக் கடன் வங்கியாக (Regional Co–operative Credit Bank) உருவானது. தொடர்ந்து வளர்ச்சியடைந்த பல சிறு கூட்டுறவுக் கடன் வழங்கும் இயக்கங்களை ஒருங்கிணைத்து கி.பி. 1877–ஆம் ஆண்டில் கூட்டுறவுக் கடன் ஒன்றியத்தை (Co–operative Credit Union) நிறுவினார்.