இரட்டணை என்னும் ஊரில் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவராவார். இவர் தந்தையார் பெருமாளையர். இவருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தது. சில ஆண்டுகளில் கணவனை இழந்ததால், கல்வி கற்க விழைந்து இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். அதனால், இவர் பண்டிதை அசலாம்பிகை அம்மையார் எனப்பட்டார். தம் இறுதிக் காலத்தில் வடலூரில் வாழ்க்கை நடத்தினார். இவர் திரு.வி. கலியாணசுந்தரனாரிடம் தோழமைகொண்டு அவருடன் பல மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் பங்கு பெற்றுச் சொற்பொழிவாற்றியுள்ளார். இதழ்களில் அப்போதைக்கப்போது பல கட்டுரைகள் எழுதியுள்ளார். காந்தியடிகள், திலகர் ஆகியோர் மீது நூல் பாடியுள்ளமை இவர்தம் தேசிய நாட்டத்தினைக் காட்டுகிறது. இவர் காந்திபுராணம், இராமலிங்கசுவாமிகள் வரலாற்றுப் பாடல்கள், குழந்தை சுவாமிகள் பதிகம், ஆத்திசூடி வெண்பா, திலகர் புராணம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். திருவிடையூர்த் தல புராண முதற் காண்டத்தைப் பாடியுள்ளார். அதன் இரண்டாம் காண்டம் குழந்தைவேலுப் பிள்ளை என்பவரால் பாடப்பட்டது.