உருவில் பெரியதான சிலந்திக் குரங்கு நீளமான கை, கால்களையும், இடப் பெயர்ச்சிக்கு ஏற்றவாறு மடக்கக் கூடிய பெரிய வாலையும், மரங்களின் மேல் வாழ்வதற்கேற்ற தகவமைப்புகளையும் கொண்டுள்ளது. இது மயிர்த் தோல் சிலந்திக் குரங்கு, சாதாரண சிலந்திக் குரங்கு என இரு வகைப்படும். இது மரக் கிளைகளைக் கை, கால், வால் இவற்றால் பற்றியவாறு, மரத்திற்கு மரம் தாவிச் செல்லும் திறம் வாய்ந்தது. அரிதாக நிலத்தின் மேல் நடக்கவும், ஓடவும் வல்ல இது, கூட்டமாக வாழும். பழம், பூச்சி, பறவை முட்டை ஆகியவற்றை உண்கின்றது. கூச்ச இயல்புடைய மயிர்த் தோல் சிலந்திக் குரங்கு தட்டையான முகத்துடனும், இளஞ்சிவப்பு வண்ணத்துடனும், மேல், அடிப் பரப்பு மயிர் அடர்த்தியுடனும், பிரேசில் நாட்டுக் காடுகளில் காணப்படுகின்றது. சாதாரண சிலந்திக் குரங்குக்கு அடிப் பரப்பில் மயிர் அடர்த்தி இல்லை. பெண் சிலந்திக் குரங்கின் கலவி உறுப்பு நீண்டிருக்க, ஆண் சிலந்திக் குரங்கின் கலவி உறுப்பு கண்ணுக்குத் தெரியாதவாறு சிறியதாக இருக்கிறது. இவற்றின் பேறு காலம் 139 நாளாகும். இதன் கைகள், வடிவ அமைப்பில் கிப்பன் மனிதக் குரங்கின் கைகளை ஒத்துள்ளன. விரிந்த தோள்களிலிருந்து கைகள் மிகவும் நீண்டுள்ளன. கைகளில் காணப்படும் பெரு விரல்கள் சிறிய வடிவில் அமைந்துள்ளமையால் ,சிலந்திக் குரங்கால் பொருள்களைப் பற்றிக் கொள்ள முடிவதில்லை. இதன் முதுகுத் தண்டு, அளவில் குறைந்திருந்தாலும் வலிமையாக உள்ளது. விரிந்து, அகன்ற மார்பையும், தகவமைப்புக்கேற்ப மாற்றமடைந்துள்ள இடுப்பையும், இது பெற்றுள்ளது. கைகளால் நடப்பதற்கு வால் மிகவும் தடையாக இருந்தமையால், கிப்பன் மனிதக் குரங்கு நாளடைவில் வாலை இழந்து விட்டது. ஆனால், சிலந்திக் குரங்கின் வளையக் கூடிய நீளமான வால், இடப் பெயர்ச்சிக்கு ஏற்ற உறுப்பாக அமைந்து விட்டது. கிப்பன் மனிதக் குரங்கு வால் இல்லாமையால், குறைந்த எடையுடன் எளிதாக இயங்குகிறது. ஆனால், சிலந்திக் குரங்கோ மிகு எடையுடன் துன்பமுறுகிறது. சிலந்திக் குரங்கு வகைகள். மயிர்த் தோல் சிலந்திக் குரங்கும் இதன் உறவு முறையாகும். மயிர்த் தோல் சிலந்திக் குரங்கு உருவில் பெருத்தும், நீண்ட நகங்களைப் பெற்றும் காணப்படுவதால், புறத் தோற்றத்தில் பிற குரங்குகளை விட மாறுபட்டுத் தோன்றுகின்றது. மயிர்த் தோல் சிலந்திக் குரங்கைப் பிராக்கிலைட்டிஸ் இனத்திலும், பிற சிலந்திக் குரங்கை அட்டிலிஸ் இனத்திலும் சேர்த்துள்ளனர். மயிர்த் தோல் சிலந்திக் குரங்கு. இக்குரங்கு 46—63 செ.மீ. உயரமும், 65—80 செ.மீ. நீளமும், 10 கி. கிராமுக்கு மேற்பட்ட உடல் எடையும் கொண்டுள்ளது. தட்டையாகவும், மயிரில்லாமலும் அமைந்த முகம் இளஞ்சிவப்பு, கறுப்பு நிறமாக இருக்கும். புருவங்களில் கறுப்பு நிறக் கோடுகள் இருக்கும். உடல் மயிர் மஞ்சள், சாம்பல், பழுப்பு வண்ணங்களின் கலவையில் பளிச்சிடும். பயனற்ற உறுப்பாக மாறிவிட்ட பெருவிரல்கள் அளவில் குறைந்தோ, முற்றிலும் மறைந்தோ உள்ளன. இரண்டு, ஐந்தாம் விரல்களின் நகங்கள் அகலமாக இல்லாமல், பக்கவாட்டில் ஒடுங்கி, உருண்டு பறவையின் நகங்களைப் போல் நீண்டிருக்கும். மரங்களில் இவ்வகைக் குரங்கின் இயக்கம் சலனமின்றி நடைபெறுகிறது. இது வாழ்கின்ற அடர்ந்த காடுகளை வேளாண்மைக்காக அழித்து வருவதால், எண்ணிக்கையில் மிகவும் குறைந்து விட்டது. பிரேசில் நாட்டு விலங்குக் காட்சியகங்களில் வளர்க்கப்படும் இதை, அந்நாட்டினர் அரியதாகக் கருதிப் பாதுகாக்கின்றனர். சாதாரண சிலந்திக் குரங்கு. இது 34—59 செ.மீ. உயரமும், 61—92 செ.மீ. நீளமும் உடையது. முகத்தில் மயிரில்லை. ஆனால், உடலில் மயிர் உண்டு. இரண்டு, ஐந்தாம் கை விரல் நகங்கள் தட்டையாக உள்ளன. பிற சிலந்திக் குரங்குகள் நான்கு வகைப்படும். அவை, மத்திய அமெரிக்கச் சிலந்திக் குரங்கு, பழுப்புத் தலைச் சிலந்திக் குரங்கு, நீண்ட மயிர்ச் சிலந்திக் குரங்கு, கறுப்பு நிறச் சிலந்திக் குரங்கு என்பன. இவை மரக் கிளைகளைக் கை, கால், வாலால் பற்றிக் கொண்டு ஊஞ்சலாடுவது போல் தாவித் தாவிப் பத்து மீ. தொலைவு வரை செல்லக் கூடியவை. தேவைப்படும் போது, இவை நிலத்தின் மேல் வேகமாக ஓடுகின்றன. கிப்பன் மனிதக் குரங்குகளைப் போல், இவை நடந்தாலும் நேராக நின்றவாறு, நடக்கும் போது மட்டும் தம் வாலால் ஒன்றைப் பற்றிக் கொண்டு சம நிலை பெறுகின்றன. இவை அரிதாகவே மரங்களிலிருந்து தரைக்கு இறங்கி வருகின்றன. பல்வேறு இனங்களைச் சேர்ந்த சிலந்திக் குரங்குகள் ஒரே சூழலில் வாழ நேரிடும் போது, அவை தத்தம் இனங்களின் தனித் தன்மைகளை இழக்காமலும், பிறிதோர் இனத்துடன் கலக்காமலும் வாழ்கின்றன. ஒவ்வோர் இனமும் தனக்கென மேய்ச்சல் காடுகளை வரையறை செய்து கொண்டு, வரையறுக்கப்பட்ட பாதைகளிலேயே அம்மேய்ச்சல் காடுகளுக்குச் செல்கின்றன. அவை வேறொரு மேய்ச்சல் காட்டுக்குள் நுழைவதில்லை. வேறொரு மேய்ச்சல் காட்டுக்குள் திசை மாறிச் செல்கின்ற கறுப்புக் கைச் சிலந்திக் குரங்கு விரைவில் தன் தவற்றை உணர்ந்து, தன் எல்லைக் காட்டின் திசையைக் கண்டறிந்து, அங்கே போய்ச் சேர்கின்றது என்றும் குறிப்பிடப்படுகிறது. தம் வாழிட எல்லைக்குள் வரும் மனிதனையோ, வேறு எதிரியையோ கண்ணுறும் சிலந்திக் குரங்கு குரைத்தும், உறுமியும் மேல் கிளைகளிலிருந்து வேகமாக இறங்கி வருகின்றது. தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருக்கும் இது, மெதுவாகப் பேசுவது போல் இரைச்சலும் இடும். ஆண் சிலந்திக் குரங்கும், பெண் சிலந்திக் குரங்கும் ஒன்று கூடி உறுமியவாறு மரக் கிளைகளை வேகமாக அசைத்துக் குலுக்கி, எதிரிகளுக்கு அச்சமூட்டுகின்றன. அப்பொழுது, இவை தம் உடலைக் கை, கால் விரல்களால் வேகமாகச் சொறிந்து கொள்கின்றன. காய்ந்த விறகுக் குச்சிகளை ஒடித்து, எதிரிகளின் மேல் வேகமாக வீசி எறிகின்றன. அச்சமூட்டும் வண்ணமாக முரட்டுத் தனமாக இயங்கிய போதும், உண்மையில் சிலந்திக் குரங்கு வீரமற்றதேயாகும். இதன் அச்சமூட்டும் நடவடிக்கைகளெல்லாம் வெறும் நடிப்பேயாகும். எதிரியை அச்சுறுத்தி, அகன்றோடச் செய்வதற்காகவே போலியான தாக்குதலைத் தொடர்கின்றது. இது சிறிய குழுக்களாகப் பிரிந்து, காட்டிற்குள் விரைந்தோடி மறைகின்றது. முதன் முதலாக, ஒரு மனிதனைச் சந்திக்கும் போதே தாக்க முற்படுகின்றது. புதிய தற்காப்புக் கருவிகளால் தாக்க வரும் மனிதரைக் கண்டவுடன் விலகியோடி விடுமென்றும், மறு முறை அவரைச் சந்திக்க நேரிடும் போது, எச்சரிக்கைக் குரல் எழுப்பியவாறு அகன்று செல்லுமென்றும் குறிப்பிடப்படுகிறது. சிலந்திக் குரங்கு பழம், பூச்சி, பூச்சிகளின் இளவுயிரி, பறவைகளின் முட்டை, இளஞ்செடி, மலர் ஆகியவற்றை உண்கின்றது. பெருவிரல் இல்லா விடினும் கைகளாலும், கால்களாலும் தம் உடலைச் சொறிந்து, மயிர்க் கற்றைகளை நீவி அழகுபடுத்திக் கொள்கின்றது. தாய்ச் சிலந்திக் குரங்கு தன் சேய்களின் உடல் மயிரை விரல்களால் கோதி விடுகின்றது. சிலந்திக் குரங்கின் இல்லற வாழ்க்கை, காதல் ஆகியன பற்றிச் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. வட அமெரிக்கப் பழங்குடியினரான ஒரு வகை இந்தியர் நஞ்சு தடவிய ஈட்டிகளையும், அம்புகளை யும் பயன்படுத்திச் சிலந்திக் குரங்கை வேட்டையாடுகின்றனர். வேட்டைக்காரர் குறி தப்பாமல் அம்பெய்தாலும், காயப்படுத்தினாலும், இது கை, கால், வால் ஆகியவற்றால் கிளைகளை வலிவாகப் பற்றிக் கொண்டு கீழே விழாமல் மரக்கிளைகளிலேயே தங்கி விடுகின்றது. இந்நிலையில் உயிர் பிழைத்துத் தப்பி விடுவதும் உண்டு. —துரை, சுந்தரமூர்த்தி நூலோதி. S.H. Prater, The Book of Indian Animals, Bombay Natural History Society, Bombay, 1948.