இப்பிரிவைச் சேர்ந்த பறவைகள், வெப்ப மண்டலப் பகுதி, அமேசான் காடுகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன. இப்பிரிவில் கிளிகள் அடங்கும். கிளி இனங்கள், முதன்முதலாக ஆஸ்திரேலியப் பகுதிகளில் தோன்றின என்றாலும், 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட கிளிகளின் சட்டகப் பதிவுகள் பிரான்ஸ் நாட்டில் காணப்பட்டுள்ளன. கிளி இனங்கள் அனைத்துமே ஒன்றுக்கொன்று நெருங்கிய அடிப்படைத் தோற்ற ஒற்றுமையும், பிறவற்றி- லிருந்து அவற்றை எளிதில் பிரித்து இனங்கண்டு கொள்ளத் தக்க தனித் தன்மையும் கொண்டவை. இவற்றின் கால்களிலுள்ள முதல், நான்காம் விரல்கள் பின்னோக்கியும், இவற்றிற்கிடையேயுள்ள இரு விரல்கள் முன்னோக்கியும் அமைந்துள்ளமையால், கிளைகளை வலிமையாகப் பற்றிக் கொள்ளவும், தேவைப்படும் போது, மரத்தில் ஏறவும் இவை ஏற்றவாறு அமைந்துள்ளன. அப்போது அலகும் பயன்படுகிறது. கீழ் அலகை விடப் பெரியதும், வளைந்து, கூரானதுமான மேல் அலகின் உட்புறம் குழிவுடையது. கிளிகளின் பெரும்பாலான இனங்கள் தானியம், பழம், கொட்டை ஆகியவற்றை உண்கின்றன. இவற்றின் நாக்கு, சதைப்பிடிப்பாக அமைந்துள்ளது. சில இனங்கள், மலர்களிலுள்ள தேனைக் குடிக்கும். மஞ்சள் வால் கறுப்புக் கிளிகள் மரங்களைத் துளைக்கும் வண்டுகளையும், குள்ளக் கிளிகள் கறையான்களையும், கியா கிளிகள் விலங்குகளின் குறிப்பாக, செம்மறி ஆட்டின் சிறு நீர்ப் படிவான கொழுப்பையும் உண்பதுண்டு. நியூசீலாந்து நாட்டுக் கக்கபோ, ஆஸ்திரேலிய நாட்டுத் தரைக் கிளி ஆகியன தவிரப் பிற இனங்கள் அனைத்துமே விரைவாகவும், வலிமையாகவும் பறக்கும் இயல்பைக் கொண்டவை. சிட்டாசிஃபார்மிஸ் பிரிவில் 3 அல்லது 5 அங்குல நீளம் கொண்ட குள்ளக் கிளிகள் முதலாக 32 அங்குல நீளமுள்ள பனைக் கிளிகள் வரை அடங்கும். பெரும்பாலும் கூட்டமாகவே வாழும் இவை அனைத்தும், சமவெளிக் காடு, புல்வெளி, மலைப் பகுதி ஆகிய மாறுபட்ட வாழ்விடங்களில் காணப்படுகின்றன. மரக் கிளைகளில் அமர்ந்திருக்கும் போது, புலப்படா விட்டாலும், எடுப்பான வண்ணங்களைக் கொண்ட கிளி இனங்களின் அழகிய தோற்றம், எளிதில் பேசக் கற்றுக் கொள்ளும் இயல்பு, அடைபட்டுள்ள போது, ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் தன்மை, நீண்ட வாழ்நாள் ஆகிய பல காரணங்களால், கிளி இனங்களே பெரும்பாலும் வளர்ப்புப் பறவைகளாக விரும்பப்படுகின்றன. அவற்றுள் தென்னிந்தியப் பச்சைக் கிளி, தென் அமெரிக்க அமேசான், ஆஃப்ரிக்க நாட்டுக் கருஞ்சாம்பல் நிறக் கிளி, ஆஸ்திரேலிய நாட்டு மஞ்சள் கொண்டைக் கிளி, பஞ்ச வர்ணக் கிளி, பட்ஜெரிகர் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> ஓரளவுக்கு ஆண்-பெண் தோற்ற வேறுபாடுகள் கிளி இனங்களுள் காணப்படுகின்றன. இணைகளாக நிலைத்துக் கூடி வாழும் கிளி இனங்கள், பெரும்பாலும் மரப் பொந்துகளிலேயே முட்டையிடுகின்றன. துளைக்கும் கிளி, கியா, ஆந்தைக் கிளி ஆகியவை மண் மேடு அல்லது மலையிலுள்ள இடுக்குகளில் முட்டையிடுகின்றன. குள்ளக் கிளி, ஆரஞ்சு மார்புக் கிளி ஆகிய இனங்கள், கறையான் புற்றைக் குடைந்து முட்டையிடுகின்றன. இவை அனைத்திலிருந்தும் மாறுபட்ட வகையில், தென் அமெரிக்காவில் வாழும் துறவிக் கிளிகள் (monk parakeets) பெரும் சமுதாயக் கூட்டமாகக் கூடி, ஒவ்வோர் இணையும் தனித்த பகுதியைக் கொண்ட, பல மாடிக் கட்டடம் போன்ற சமுதாயக் கூட்டைக் கட்டிக் கொள்கின்றன. ஆனால் தரைக் கிளி, ஆந்தைக் கிளி ஆகியவை தரையில் முட்டையிடுவதுண்டு. சிட்டாசிஃபார்மிஸ் பறவை இனங்களின் இனப் பெருக்க காலம் ஒன்றுக்கொன்று மாறுபட்டது. 3—6 முட்டைகள் இட்டு, அவற்றை 21 நாள் அடை காப்பதும், பின்னர் குஞ்சுகளைப் பேணுவதை ஆணும், பெண்ணும் பகிர்ந்து கொள்ளுவதும் கிளி இனங்களின் பொதுவான இயல்புகள். ஆனாலும், தென்னிந்தியப் பகுதிகளில் காணப்படும் செந்தலைக் கிளி இனத்தில், ஆண் பறவைகள் இப்பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதில்லை. பொருளாதார நோக்கில், சிட்டாசிஃபார்மிஸ் பிரிவுப் பறவைகளால் பெரும் பயன் விளைவதில்லை. ஆனாலும், சில இனங்கள் தாவரங்களின் அயல் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவிப்பதில் பங்கேற்கின்றன. தானியங்களையும், பழங்களையும் உண்ணும் கிளி இனங்களால் பேரழிவு விளையும். பறவைச் சீக்கு என்னும் நோயை விளைவிக்கும் நுண்ணுயிர்களைக் கிளி 'இனங்கள் பரப்புவதால் மனிதர்கள் பாதிப்படைவது அமெரிக்காவில் அறிய வந்த போது, கிளிகளின் இறக்குமதியும், அவற்றின் விற்பனையும் 1930 ஆம் ஆண்டிலேயே கட்டுப் படுத்தப்பட்டன. பாகுபாடு. இப்பறவை வரிசையில் 82 பேரினங்களையும், 317 இனங்களையும் உள்ளடக்கிய சிட்டாசிடி என்னும் ஒரே குடும்பம், ஆறு துணைக் குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. துணைக் குடும்பம், ஸ்ட்ரிகோபினி இனம். ஆந்தைக் கிளி அல்லது கக்கபோ எனப்படும் ஸ்ட்ரிகோப்ஸ் ஹப்ராப்டிலஸ், நியூசிலாந்துப் பகுதியில் மட்டுமே காணப்படுகின்றது. தரையிலேயே வாழ்ந்ததால், பறக்கும் ஆற்றலை இழந்த இவ்வினம், அதை ஈடு செய்யும் வகையில் விரைவாக மரங்களில் ஏறும். கிளி இனத்தில் இது மட்டும் ஓர் இரவு நேரப் பறவையாகும். நெஸ்ட்டோ இனத்தின் நெஸ்ட்டோர் நோடாபிலிஸ் (கியா) எனப்படும் பறவைகள் நியுசிலாந்துப் பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. உணவோடு, பூச்சிகள் உட்பட்ட முதுகெலும்பற்ற பல விலங்குகளையும் இரையாகக் கொள்ளும் இவை, செம்மறியாடுகளைத் தாக்கி, அவற்றின் சிறுநீரகங்களில் படிந்துள்ள கொழுப்பை மிக விரும்பி உண்ணும். குளிர் காலத்தில் தோன்றும் உணவுப் பற்றாக்குறையை ஈடு செய்யச் சிறு உயிரிகளையும் இவை இரையாக ஏற்றுக் கொள்வதுண்டு. நெஸ்ட்டோர் மெரிடியோனாலிஸ் (சுகா) எனப்படும் கிளி இனம் நியுசிலாந்தில் மட்டுமே காணப்படுகின்றது. அந்நாட்டு மோரி இனப் பழங்குடியினர் இவற்றின் இறைச்சியையே பஞ்ச கால உணவாகக் கொள்வர். எளிதில் பழக்கப்படத் தக்க இப்பறவைகளின் இறகுகள், நாணயங்களுக்குச் சமமாகப் பயன்பட்டுள்ளன. லோரினி. லோரிஸ், லோரி கீட்ஸ் மற்றும் தூரிகை போன்ற நாக்குடைய நடுத்தரமும் சிறியதுமான 15 இனங்கள் இதில் அடங்கும். இவற்றுள், அபோப்சிட்டா, சிட்டகுலிரோஸ்ட்ரிஸ் ஆகியவை நீங்க, பிற இனங்கள் அனைத்தும் மலர்களை அலகால் நசுக்கித் தேன் குடிக்கும். சால்காப்சிட்டா, இயோஸ், டிரைக்கோக்ளோஸஸ், சிட்யூடெல்ஸ், சூடியஸ், டொமிசெல்லா, ஃபிகிஸ், வினி, கிளோஸாப்சிட்டா, சார்மோசினா, ஓரியாப்சிட்டகஸ், நியோசிட்டகஸ், சிட்டகுலிரோஸ்ட்ரிஸ், அபோப்சிட்டா, லதாமஸ் ஆகியவையும் பேரினங்களாக உள்ளன. மைக்ராப்சிட்டா பேரினத்தில், குள்ளக் கிளிகள் எனப்படும் 6 இனங்கள் நியுகினியாப் பகுதிகளில் காணப்படுகின்றன. 3—5 அங்குல நீளமுள்ள இவை மரங்கொத்திகளைப் போன்ற உணவுப் பழக்கமும், ஏற்ற கால் அமைப்பும் பெற்றுள்ளன. கறையான், பூச்சி ஆகியவற்றோடு காளான்களையும் இவை இரையாகக் கொள்ளும். கருநீல இறகுகளைக் கொண்ட பனைக் கிளி, பிற இனங்களை விடப் பெரியது. இதன் நீளம் 80 செ.மீ. வரை இருக்கும். மஞ்சள் கொண்டைக் கிளி எனப்படும் வெண்மையான பறவைகள் மத்திய ஆஸ்திரேலியாவின் பாலைவனப் பகுதி, வறண்ட கிழக்குப் பகுதி தவிர பிற பகுதிகள், நியுகினியா, இந்தோனேஷியாவின் அரு, செராம் ஆகிய தீவுகள், பிஸ்மார்க் துணைக் கண்டத்தின் பிற தீவுப் பகுதிகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன. விரும்பும் போது, கொண்டை இறகுகளை உயர்த்தவோ, தாழ்த்தவோ இவற்றால் இயலும். அறிவாற்றல் மிக்க இவற்றை எளிதில் பழக்க முடிவதால், சர்க்கசிலும், விலங்குக் காட்சியகங்களிலும் இவை இடம் பெறுகின்றன. அனடோரிங்க்ஸ் என்னும் பேரினம் பஞ்ச வர்ணக் கிளி எனப்படும். இதில், மூன்று இனங்கள் காணப்படுகின்றன. அவை அனடோரிங்க்ஸ் ஹயசிந்த்தினஸ், அனடோரிங்க்ஸ் லீயரி, அனடோரிங்க்ஸ் கிளாக்கஸ் ஆகியவையாகும். அரா பேரினத்தில் அடங்கிய 22 இனங்களில் அழிந்த 8 இனங்கள் நீங்க, எஞ்சியவை 21 துணை இனங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. இப்பேரினத்தைச் சார்ந்த 14 இனங்கள் இந்தியாவிலும், அவற்றுள் சிட்டகுலா யூபாட்ரியா யூபாட்ரியா என்னும் பெரிய பச்சைக் கிளி, சிட்டகுலா கிரமேரி மனிலென்சிஸ் என்னும் பச்சைக் கிளி, சிட்டகுலா சயனோசிஃபாலா சயனோசிஃபாலா என்னும் செந்தலைக் கிளி, சிட்டகுலா ஹிமாலயோனா என்னும் கருந்தலைக் கிளி, சிட்டகுலா கொலம்பாயிடஸ் என்னும் நீல இறக்கைக் கிளி ஆகிய 5 இனங்கள் தென் இந்தியப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. மெலாப்சிட்டகஸ் அன்டுலேடஸ் என்னும் ஒரே இனத்தைக் கொண்ட இப்பேரினம் நியோஃபெமா, பெஸோபோரஸ் ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்டது என்று வல்லுநரான ஃபோர்ஷா கருதுகிறார். புற்கிளி என்றும், சிப்பிக் கிளி என்றும் குறிப்பிடப் படும் இவ்வினம் பட்ஜெரிகர் என்றே வழங்கப்படும். ஒவ்வொரு தலைமுறையிலும் மாறுபட்டு வரும் அழகிய பல வண்ணக் கலவைகளைக் கொண்ட இவ்வினப் பறவைகளைப் பெரும்பாலான விலங்குக் காட்சியகங்களிலும், வீடுகளிலும் காணலாம். ஒன்றோடொன்று நெருங்கி அமர்ந்தவாறு, கொஞ்சிக் கொண்டிருக்கும் இவற்றைக் காதற்பறவை எனவும் கூறுவதுண்டு. —எஸ்.ஏ. செல்லப்பா