17–9–1879–இல் கோயம்புத்தூர் மாவட்டம் ஈரோடு நகரில் பிறந்தார். இவர் தந்தையார் வெங்கட்ட நாயக்கர்; தாயார் சின்னத்தாயி. இராமசாமி, ஈ.வெ. இவர் குழந்தைப் பருவத்தில் 5 ஆண்டுகளே ஆரம்பப் பள்ளியில் படித்தார். இவரது இயற்கை அறிவை நோக்கி இவர் தந்தையார் இவரை மண்டிக்கடையில் இருக்கச் செய்தார். மூட்டைகளுக்குக் குறிப்பு எழுதுதல், ஏலம் கூறுதல், சரக்குகளை உயர்ந்த விலைக்கு விற்றல், வாடிக்கையாளர்களிடம் அன்புடன் பழகுதல் ஆகிய எல்லாச் செயல்களாலும் இவர் புகழ்பெற்ற வணிகராய்த் தந்தையை மிஞ்சும் வகையில் உயர்ந்தார். இவர் நாகம்மை என்ற பெண்ணைத் தமது 13 ஆம் ஆண்டில் மணந்து கொண்டார். வாணிகத்தில் ஈடுபட்டிருந்தவர் திடீரெனத் துறவு பூண நினைத்துக் காசி வரை சென்று அங்கு நடந்தவற்றைப் பார்த்து, வெறுத்து மீண்டும் வாணிகத்திற்கே திரும்பினார். புகழ்பெற்ற வணிகராக மட்டுமல்லாமல் பொதுப் பணியில் மிகவும் நாட்டம் கொண்டு, பிளேக்கு ஒழிப்புக் கமிட்டித் தலைவர், தேவத்தானக் குழுத் தலைவர், வருமானவரி தீர்ப்பாயக் குழு உறுப்பினர் முதலிய பதவிகளை ஏற்றுச் சிறப்பாகப் பணிபுரிந்தார். நகரசபைத் தலைவர் ஆனார். சேலத்தில் சி. இராசகோபாலாச்சாரியார் அப்போது சேலம் நகர சபைத் தலைவராக இருந்தார். நகரசபைத் தலைவர்களாக இருவரும் இருந்ததால் ஏற்பட்ட நட்புக் காரணமாக சி. இராசகோபாலாச்சாரியார் (டாக்டர் வரதராசலு நாயுடு வழக்கில் வாதாட) மதுரைக்குச் செல்லும் வழியில் ஈரோட்டில் ஈ.வெ.ரா, வீட்டில் தங்கினார். அப்போது அவர் ஈ.வெ.ரா.வைக் காங்கிரசில் சேர வற்புறுத்தி அதில் வெற்றியும் பெற்றார். ஈ.வெ.ரா. 1919–இல் காங்கிரசில் சேர்ந்தார். தாம் வகித்த பல பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு, காங்கிரசில் சேர்ந்து, பட்டாடையையும் ஆடம்பரத்தையும் நீக்கி, முரட்டுக் கதர் கட்டும் தேசியவாதியானார். இவர் 1920–இல் காந்தியாரால் தொடங்கப்பெற்ற ‘ஒத்துழையாமை இயக்கத்தில்’ தீவிரமாக ஈடுபட்டுத் தமிழ்நாடு முழுவதும் அதம் கொள்கையைப் பரப்பினார். கதர் இயக்கத்தினைப் பலரும் அறியச் செய்தார். தீண்டாமை விலக்கு, நீதிமன்றப் புறக்கணிப்பு, பள்ளிகளை விடுதல், மது விலக்கு முதலியன இவரால் தீவிரமடைத்தன. கள்ளுக்கடை மறியலைக் காங்கிரசு அறிவித்த போது (1921) இவர் தங்கை கண்ணம்மாளும் துணைவி நாகம்மையாரும் தலைமை தாங்கி நடத்தி 144 தடைச் சட்டத்தை மீறினார்கள். கள்ளுக்கடை மறியலை நிறுத்தி வேறு நடவடிக்கையில் ஈடுபடலாமா என்று காந்தியாரிடம் கேட்கப்பட்டபோது, ‘மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை; ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்மணிகள் கையில் தான் உள்ளது’, அவர்களைத் (கண்ணம்மாள், நாகம்மையார்) தான் கேட்க வேண்டும் என்று காந்தியார் பதிலளித்தார். கேரளத்தில் 1924–இல் வைக்கம் என்ற ஊரில் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் நடக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்ததை எதிர்த்து, சார்சு சோசபு கிளர்ச்சி ஒன்றைத் தொடங்கினார். தொடங்கியவர்களைத் திருவிதாங்கூர் அரசு கைது செய்துவிட்டது. ‘சத்தியாக்கிரகம்’ நிறுத்தப்படும் நிலையில், சிறையிலிருந்தே அவர் ஈ.வெ. இராமசாமிக்கு மடல் எழுதினார். இவர் அதை ஏற்று உடனே சென்று, தம் குடும்பத்தினரையும் அக்கிளர்ச்சியில் ஈடுபடவைத்தார். ஓராண்டுக் காலம் தொடர்ந்து போராட்டம் நடத்தினார். இரு முறை சிறை சென்று அப்போராட்டத்தினை வெற்றியோடு முடித்தார். ‘வைக்கம் வீரர்’ எனப் பெயர் பெற்றார். ஆங்கிலேய அரசினை எதிர்த்துப் பேசிய பேச்சுகளுக்காக ‘அரசு வெறுப்புத் தூண்டல்’ குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு, இவர் எதிர் வழக்காடாமல் தண்டனை பெற்றார். இப்படிப் பலமுறை சிறை சென்று ‘சிறைப் பறவை’ ஆனார். தமிழ்நாடு காங்கிரசுக் குழுவின் தலைவராகப் பொறுப்பு வகித்த இவர், தேசிய உணர்வினை ஏற்படுத்துவதற்காகத் தமிழ்நாட்டுக் குருகுலம் என்ற பெயரால் காங்கிரசுக் குழுவின் நிதி உதவியுடன், வ.வெ. சுப்பிரமணிய ஐயரால் சேரன்மா தேவியில் தொடங்கப்பட்ட குருகுலத்தில் சாதி அடிப்படையில் காட்டப்பட்ட வேறுபாடுகளைக் கண்டித்தார். அதன் காரணமாகக் காங்கிரசுடன் இவருக்குக் கருத்து வேறுபாடு தோன்றியது. இவர் காங்கிரசிலிருந்து விலகி மனித உரிமை சமத்துவக் கொள்கை பரப்ப 1925–இல் ‘சுயமரியாதை இயக்கம்’ கண்டார். பிறவியை அடிப்படையாகக் கொண்ட சாதிமுறை, பெண்ணடிமை, ஆண்டான்–அடிமை, ஏழை–பணக்காரன், என்ற பொருளாதாரப் பேதைமை ஆகியவற்றைக் கொண்ட சமூக அமைப்பினை மாற்றி, தற்சிந்தனையும், பகுத்தறிவும் மானமும் உள்ள மக்களாகத் திகழும் நிலையை உருவாக்குவதே அதன் குறிக்கோள் என்றார். இந்தக் குறிக்கோளுக்குத் தடையாக உள்ள கடவுள், மதம், சாத்திரம், புராணம், இலக்கியம், சட்டம் எல்லாவற்றையும் எதிர்த்து, மக்கள் மத்தியில் சொற்பொழிவின் மூலமும் கிளர்ச்சியின் வாயிலாகவும் மாபெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதைத் தமது சிறந்த தொண்டாகக் கருதி, பதவி நோக்காது, புகழ் விரும்பாது, எதிர்ப்புக் கண்டஞ்சாது, பெருமை–சிறுமை பற்றிக் கவலைப்படாது, நன்றியை எதிர்பராது, முழுநேரப் பொதுப்பணியாளராகத் தம்மை மாற்றிக் கொண்டார். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதன் தேவையை இவர் வலியுறுத்தினார். குடும்ப நலத் திட்டத்திற்கு இவரே முன்னோடியாவார். கட்சிக் கண்ணோட்டமின்றி அப்போது நடைபெற்ற ஆட்சிகளின் போக்குகளைத் துணிவுடன் கண்டித்தார். மலேயாவிற்கும் (1929) சிங்கப்பூருக்கும் நாகம்மையாருடனும் இயக்க நண்பர்களுடனும் சென்று, அங்கும் தம் கொள்கைகளையும் இயக்கத்தினையும் பரப்பித் திரும்பினார். பின்னர் எகிப்து, கிரீசு, துருக்கி, சோவியத் உருசியா, இங்கிலாந்து, இசுபெயின், போர்ச்சுக்கல், இத்தாலி, செருமனி, பிரான்சு ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இலங்கை வழியாகத் திரும்பினார். சோவியத் உருசியாவில் நிலவிய புதிய சமூக அமைப்பு இவரை மிகவும் கவர்ந்தது. இவர் பொது உடைமைக் கருத்துகளைப் பரப்பினார் என்பதற்காகச் சிறையில் இருக்க நேரிட்டது. இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி நிறுவன முறையில் 1932–இல் தான் தோன்றியது என்றாலும், இதற்கு முன்பே பொதுவுடைமைக் கருத்துகளைத் தமிழ் நாட்டில் விதைத்தவர் பெரியார் இராமசாமி. இவர் 1933–இல் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து எழுதியதற்காகத் தண்டிக்கப்பட்டு 9 மாதத்தண்டனை பெற்றுக் கோவைச் சிறைக்கு அனுப்பப்பட்டார். பிரதமர் சி. இராசகோபாலாச்சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கியவுடன் அதை எதிர்த்து இவர் ஒரு மாபெரும் போராட்டத்தினைத் தொடங்கினார். இதன் காரணமாக 1940–இல் கட்டாய இந்தி கைவிடப்பட்டது. இவரது தன்னலமற்ற பொதுத் தொண்டால் ஈர்க்கப்பட்ட தமிழ்நாட்டுப் பெண்கள் அவர்கள் சென்னையில் நடத்திய மாநாட்டில் 13.11.1938–இல் ‘பெரியார்’ என்ற சிறப்புப் பெயர் வழங்கும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்கள். இவர் 1939–இல் நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தலைமையில் 1940–இல் திருவாரூரில் ‘நீதிக்கட்சி’ மாநாடு நடைபெற்றது. அதில்தான் முதன் முறையாகத் திராவிட நாடு பிரிவினைத் தீர்மானம் நிறைவேற்றினார். இவர் 1940 முதல் 1944 வரை நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் என்ற இரண்டுக்கும் தலைவராக இருந்து தொண்டாற்றிய நிலையில், அவை இரண்டையும் இணைத்து மேலும் தீவிரமாக இயங்க வைக்க எண்ணி 1944–இல் சேலத்தில் ஒரு மாபெரும் மாநாடு கூட்டி நீதிக்கட்சியைத் ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் மாற்றி, பட்டம் பதவிகளைக் கட்சியில் உள்ளோர் நாடக்கூடாது என்றும், முன்னரே இருப்பனவற்றைத் துறக்கவேண்டும் என்றும் புரட்சியான முடிவு செய்தார். தம் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய மணியம்மையை 1949–இல் பதிவுத் திருமணம் சட்ட முறைக்கேற்பச் செய்துகொண்டார். பெரியார் இராமசாமி 1959–இல் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், தில்லி ஆகிய வட மாநிலங்களில் நடைபெற்ற மாநாடுகளில் கலந்துகொண்டு சமூக நீதிக் கொள்கையினைப் பரப்பினார். இவர் 1970–இல் ‘உண்மை’ என்ற மாத ஏட்டினைத் துவக்கி அறிவுப் புரட்சிக் கருத்துகளை வழங்கினார். ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) இவருக்கு ‘புதுயுகத்தின் தீர்க்கதரிசி, தென்கிழக்காசியாவின் சாக்ரடீசு, சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, மூட நம்பிக்கைகளின் முழுவைரி’ என்று வருணித்துச் சிறப்பு விருது ஒன்றினை மத்திய அரசின் கல்வி அமைச்சர் மூலம் வழங்கியது. இவரது நூற்றாண்டு விழாவின் போது (1978) இந்தியப் பேரரசு இவருக்குச் சிறப்பு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது. எதிர்ப்பு, ஏளனம், இருட்டடிப்பு, அவமானம் இவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் 60 ஆண்டுகளுக்கு மேல் இடையறாது மக்களுடன் தொடர்பு கொண்டு, நாள் தவறாமல் 100, 200 மைல் சுற்றுப் பயணம் செய்து பேசியும், எழுதியும், போராடியும் சமூகத் தொண்டாற்றிய தலைவர்களுள் பெரியார் தனிச்சிறப்புக்குரியவர். எனவே, தமிழ் மக்கள் அனைவரும் இவரைத் ‘தந்தை’ என்றே அன்புடன் அழைத்தனர். இவர் தமது 95–ஆம் வயதில் 24–12–1973–இல் காலமானார். கி.வீ.